யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

சமூக ஒற்றுமைக்கு ஆப்பு வைக்கும் சமகாலக் குத்பாக்கள்...!

குத்பாக்கள் அன்று தொட்டு முஸ்லிம் சமூகத்திற்கு வாய்க்கப் பெற்றுள்ள மிகவும் மகத்தானதும், வினைத்திறன் மிக்கதுமான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. ரசூல் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்தை வழிப்படுத்தவும், வினைத்திறனான முறையில் சமூகத்துடனான தொடர்பாடலை பேணவும் அதனைப் பயன்படுத்திக் கொண்டார்கள். கலீபாக்களும் கூட இதே வழி முறையையே பின்பற்றினார்கள்.

ஆரம்ப காலக் குத்பாக்கள் மிகவும் சுருக்கமானதானவே அமைந்திருந்தன. சொற்சுருக்கமும், பொருட் செறிவும் மிக்கனவாக அவை இருந்தன. இன்றிருப்பது போல் சமூகத்தை கீறிக் கிழித்து சபையோரை அவமதிக்கும் விதத்தில் அவை ஒரு போதும் அமைந்திருக்கவில்லை. ரசூல் (ஸல்) அவர்கள் மிகவும் கைதேர்ந்த ஒரு பயிற்றுவிப்பாளர். அவர்களது பயிற்றுவிக்கும் பாணியில் ஒரு வித நேர் அணுகுமுறையை அவதானிக்க முடியும். எதிர்மறைப் பாணி அவர்களது பாணியாக இருக்கவில்லை. இதையே அனஸ் (றழி) அவர்கள் ரசூல் அவர்கள் சீ என்று சொன்னதையோ, ஏன் இதை செய்தாய்? ஏன் இதை செய்யவில்லை? போன்ற வசனப் பிரயோகங்களையோ பயன்படுத்தியதில்லை என்று சொல்வதில் இருந்து புரிந்து கொள்கிறோம். குத்பாக்களிலும் இதே பாணியே பின்பற்றப்பட்டது. அன்றைய குத்பாக்கள் மிகவும் பிரயோசனம் தந்தமைக்கான பிரதான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

பிற்பட்ட காலப் பகுதியில் குத்பாக்கள் அவற்றின் உயிரோட்டத்தை இழந்து போயின. அரசியல் இலாபங்களுக்காக குத்பா மேடைகள் பயன்படுத்தப் பட்டன. காலத்திற்கு பிரயோசனம் அற்ற, போதிய தயாரிப்பில்லாத, அறைகுறை தயாரிப்போடு, இரண்டு தலைமுறைகள் பழைய கர்ண கடூர மொழி நடையில், தூரனோக்கற்ற மேற்போக்கான குத்பாக்களையே இன்று அதிகம் செவிமடுக்கிறோம். மிம்பர் மேடைகள் உயிர் துடிப்போடு இயங்கும் பாக்கியத்தை காணும் பேற்றை எமது தலை முறை இளைஞ்ர்கள் இழந்தே போய் விட்டார்கள்.

இஸ்லாம் என்பது சில சம்பிரதாயங்களின் தொகுப்பல்ல. அது மாக்ஸிஸம், முதலாளித்துவம் உள்ளிட்ட மேற்கத்தேய கருத்தியல் முகாம்களுக்கு மாற்றீடான ஒரு கருத்தியல் முகாமாகும். அரசியல், பொருளாதாரம், சமூகவியல், உளவியல், கலை  என விரிந்த எல்லா அறிவுத் துறையிலும் தனக்கேயுரிய சிந்தனகளை அது கொண்டுள்ளது. எமது புதிய சந்ததிக்கு இவற்றில் பரிச்சயம் ஏற்படுத்தப்பட வேண்டும். இவற்றிற்கு எமது குத்பாக்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த பேறறிஞ்ர்களில் ஒருவரான அபுல் ஹசன் அலி நத்வி (றஹ்) அவர்கள் றித்தத்தை காண்கிறோம்; அபூபக்கர்களை” காணவில்லை என்ற நூலில் சொல்வதைப் போல் இன்று எமது புத்திசீவிகள் இஸ்லாத்தை விட்டும் தூரச் சென்று விட்டமைக்கு கருத்தியல் ரீதியில் இஸ்லாம் குறித்த சிந்தனைகள் அவர்களுக்கு தெளிவுற முனவைக்கப்படாமையும் ஒரு காரணமாகும். எமது பாரம்பரிய முஸ்லிம் கிராமங்களை பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினை இது வரை முனைப்பாக தெரியாவிட்டாலும், கிட்டிய எதிர்காலத்தில் இது ஒரு பூதாகரமான பிரச்சினையாக உருவெடுக்கும் வாய்ப்பு மிகவும் அதிகமாவே உள்ளது.  இஸ்மாயில் பாரூக்கி முன்வைத்த அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல் என்ற சிந்தனை மிக அதிகமாக பேசப்பட வேண்டிய காலம் இதுவாகும். இதற்கு எமது குத்பாக்கள் உரிய முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியமானது என்பதில் சந்தேகமில்லை.

குத்பாக்களை நிகழ்த்துவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பாகும். ஆரம்பத்தில் அல்லாஹ்வின் தூதர் அவர்களாலும், பிறகு இஸ்லாமிய ஆட்சியின் தலைவர்கள், ஆளுனர்களாலுமே அவை மேற்கொள்ளப்பட்டு வந்தன. இன்று குத்பாக்களை நிகழ்த்துபவர்கள் தாம் மிகவும் முக்கியமான ஒரு பொறுப்பில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். சமூகத்தின் எல்லாத் தரப்பினரையும் கருத்தில் கொள்ளும் வித்த்தில் அவை அமைய வேண்டும்.

இஸ்லாம் பன்மைத்துவத்தை ஏற்றுக்கொள்கிறது. இஸ்லாத்தில் இருக்கும் பல கருத்துகளுக்கு இடம்பாடான அம்சங்கள்தான், முஸ்லிம் உலகில் இருக்கும் கலாசார, புவியியல் உள்ளிட்ட பௌதீக மற்றும் பண்பாட்டு ரீதியான வேற்றுமைகளைத் தாண்டி அனைவராலும் பின்பற்ற இயலுமான ஒரு கொள்கையாக இஸ்லாத்தை பரிணாமம் அடையச் செய்கிறது. கருத்து வேறுபாடுகள் என்பது மனித வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மனித இயல்போடு ஒன்றிச் செல்லும் ஒரு கருத்தியல் என்ற வகையில் இஸ்லாமிய சட்டத் துறை பல சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றுவதற்கு வாய்ப்பை வழங்கும் வண்ணமே இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்கள் அமைந்துள்ளன.

இந்த வேற்றுமைகளின் போது எமது முன்னோர் நடந்து கொண்டது போன்று “கருத்து வேறுபாடுகளுக்கு உரிய ஒழுக்கம்” பேணி நடந்து கொள்வதே மிகவும் முக்கியமான ஒன்றாகும். “நான் சொல்வது சரியானது; அது தவறாக இருக்க இடம் உண்டு. மற்றவர்கள் சொல்வது தவறானது; அது சரியாக இருக்க இடம் உண்டு” என்பதே அவர்களின் நிலைப்பாடாக இருந்தது. துரதிஷ்ட வசமாக இன்று குத்பாக்கள் தமது நிலைப்பாட்டுக்கு முரணான நிலைப்பாடு கொண்டவர்களை அவமதிக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. பல போது கதீப்கள், தாம் முழு சமூகத்திற்கும் உரை நிகழ்த்துவதையும், பல்வேறு கருத்து முகாம்களை சேர்ந்தவர்களும் தாம் பேசுவதை கேட்டுக் கொண்டு இருப்பதை மறந்து விடுகின்றனர். இது மனக்கசப்புகளுக்கும், குரோதங்களுக்குமே வழி வகுக்கின்றது. முதல் படியாக, பல இஸ்லாமிய அமைப்புக்களும், இயக்கங்களும் எமது சமூகத்தில் இருக்கின்றன என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்கு ஏற்ற விதத்தில் குத்பாக்கள் பொதுவான தலைப்புக்களில் அமைய வேண்டும். நாம் மிக அதிகமாகக் கதைக்கும் சமூக ஒற்றுமை என்ற அம்சம் மலர்வதற்கு இது ஒரு அடிப்படைத் தேவையாகும்.

ஒரு உதாரணத்தைச் சொல்லலாம். பெண்கள் முகத்தை மூட வேண்டுமா? அல்லது திறக்க வேண்டுமா? என்ற விடயத்தை எடுத்துக்கொள்வோம். இதில் எது சரி என்ற சர்ச்சைக்குள் நுழைய விரும்பவில்லை.  இது குறித்த கருத்து வேறுபாடு இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய உலகின் மிகவும் கண்ணியமான அறிஞர்கள் மத்தியில் இன்றுவரை இது ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இதைக் கையாள்வதற்கு மிகவும் சிறந்த முறை எமது முன்னூர்களின் வழிமுறைதான். இந்த பிரச்சினையை குத்பாக்களில் பேசுவதில் பயனில்லை. இன்றைய குத்பா மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை கண்டணம் செய்வது மட்டுமன்றி, அவர்களை குர்- ஆனையும், சுன்னாவையும் புறக்கணித்தவர்களாகவும் சித்தரிக்க முனைகிறது. குறிப்பாக, முகத்திறை அணியாத பெண்களை ஒழுக்கமற்றவர்கள் என்று முத்திரை குத்த முனைகிறது. மாற்று கருத்துக் கொண்டவர்களின் வாதத்தில் குறைந்தபட்ச நியாயமாவது உண்டு எனபதை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை. இந்தகைய கண்டனக் கனைகள் மிகப் பெரிய அநியாயமாகும்.

அதிலும் குறிப்பாக, இத்தகைய கருத்து வேறுபாட்டுக்குட்பட்ட அம்சங்கள் குறித்து அறுதியிட்டு குத்பாக்களில் பேசுவது எந்தளவு பொருத்தமானது என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும். இவை சாதகமான விளைவுகளை ஏற்படுத்துமா? அல்லது இன்னும் இன்னும் எமது சமூக ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்குமா என்பதையும் சிந்திக்க வேண்டும். இந்த விடயம் குறித்து ஜம்இய்யதுல் உலமா உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள், சமூகத் தலைவர்கள்,புத்தி ஜீவிகள், மற்றும் பொது மக்கள் அனைவரும் மிகவும் சீரியசாக சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்.  

சுருக்கமாகச் சொன்னால், குத்பா என்பது மிகவும் முக்கியமான ஊடகம் என்பதோடு, அது சமூகத்தின் எல்லா தரப்பினரியும் அனுசரித்து அவர்களுக்கு பிரயோசனம் அளிப்பதாக அமைய வேண்டும். அது எமது கருத்து வேறுபாடுகளை பெரிதுபடுத்தி தாக்கும் ஒரு போர்க்களமாக மாறுவதை எவரும் அனுமதிக்கக் கூடாது.   
   
Share

0 பதிவு குறித்த கருத்துக்கள்:

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்