யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

Showing posts with label Cinema. Show all posts
Showing posts with label Cinema. Show all posts

தமிழக அரசியல் கலாசார தளங்களில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...(2)

(...முதல் பகுதியின் தொடர்ச்சி..)

கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம்
தமிழ் சினிமா தனது செல்வாக்கை ஆழமாக பதித்த மற்றொரு துறை அதன் கலாசாரமாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமா பார்க்கப் படும் இடங்களில் எல்லாம் இந்த கலாசார தாக்கம்  நன்கு அவதானிக்கப்படுகிறது. ஏன்? இலங்கையிலும் கூட.


இது ஒரு விரிவான பகுதியாக இருப்பிதால், கட்டுரையின் சுருக்கம் கருதி, தமிழ் சினிமா ஏற்படுத்திய எதிர்மையான தாக்கம் தொடர்பில்,    பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் அது எத்தகைய செல்வாக்கை செலுத்தி இருக்கிறது என்ற அம்சத்தை மட்டும் இங்கு நோக்குவோம்.

இது தொடர்பில், "Urban Women in Contemporary India" என்ற நூலில் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமணியம், மேரி பெத் ஆகியோர் முன்வைக்கும்
தரவுகள் நமது கவன ஈர்ப்புக்குரியான.   இது அகில இந்தியாவையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாக இருந்தாலும் தமிழ் நாட்டிற்கும் இது பொருத்தமானதுதான். இவ் ஆய்வு தரும் தரவுகளை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

அண்மைய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. 1989 இல் 67,072 ஆக இருந்த பதிவு செய்யப்பட வன்முறைகள் 1993 இல் 84,000 ஆக உயர்ந்தது. 1995 இல் டெல்லி இல் மட்டும் 12,000 கற்பளிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்க அம்சம் 80%
குற்றச் செயல்கள் பதிவு செய்யப் படுவதில்லை என்பதாகும்.

பொது இடங்களில்  பெண்களை  கேலி  செய்வதும்  இந்தியாவில்  மிகப்  பரவலாக  இடம் பெறுகிறது. இவ்வாறு ஈடு படுவோரில் 30% பேர் கல்லூரி  மாணவர்கள் என்பதோடு, கல்லூரி மாணவர்கள் மத்தியில் 1997 இல் மேற்கொள்ளப்பட்டதொரு கருத்துக்கணிப்பில், 90% ஆன மாணவிகள்  தாம்  எதோ   ஒரு விதத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு    ஆளாகி  இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.


இத்தகைய குற்றச் செயல்களின் வேகமான அதிகரிப்புக்கு  சினிமா  எவ்வாறு  காரணமாக  இருக்கிறது என்பதை பின்வருமாறு  நூலாசிரியர்கள்  விளக்குகின்றனர்.

இந்தியாவில் வருடாந்தம் சுமார் 800 படங்கள் 22 மொழிகளில் தயாராகின்றன. உலகில் மிக அதிக படங்கள் தயாராகும் இடம் இந்தியாதான். சினிமாவை பார்க்கும் நுகர்வாளர் அளவில் கூடுதலாக
இருக்கும் நாடும் இந்தியாதான். பெரும்பாலும் சமூகத்தின் சகல
தரப்பினரும் சினிமா பார்க்கின்றரனர். வருடாந்தம் 80-90 மில்லியன் பேர் சினிமா பார்க்கச் செல்கின்றனர். சிலர் மாதாந்தம் 20-30 முறை செல்வதோடு தமக்கு விருப்பமான திரைப்படத்தை பல முறை பார்வை இடுகின்றனர். இவர்களில் 5% இனர் மட்டுமே இந்திய தயாரிப்பல்லாத (பெரும்பாலும்  ஹாலிவுட்) படங்களை பார்க்கின்றனர்.

இதற்கு மேலாக, சினிமா பல்வேறு  வழிகளில்  நுகர்வாளர்களை  சென்று  அடைகின்றது. உள்ளூர் தொலைக்காட்சிகள் சினிமாவை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி  வருகின்றன.  கேபிள்  தொலைக்கட்சி  சேவையும் நம்ப முடியா வேகத்தில் வளர்ந்து வருகின்றது. 85% ஆன கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குனர்கள், தமது  சேவையை  விளம்பரப்  படுத்தும் நோக்கில், தினமும் இரண்டு படங்களை ஒளி பரப்பி வருகின்றனர். கணனிப் பாவனை, VCD க்கள், இணைய வசதி என்பன இதற்கு மேலதிகமானவை. இத்தரவுகள் சினிமா இந்தியர்  வாழ்வில்  எவ்வளவு  தூரம்  ஒன்றோடொன்று  பிண்ணிப்பினைந்துள்ளது என்பதை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகின்றன.


இந்திய வாழ்வில் சினிமாவின் ஆதிக்கத்தையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளையும் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமண்யமும், மேரி பெத்தும் பின்வருமாறு தொடர்பு படுத்துகின்றனர்.
"அதிகமாக நுகரப்படுவதால் மட்டும் சினிமா குற்றங்களை தூண்டுகிறது என்று சொல்லிவிட முடியாது. மாறாக, சினிமா மட்டுமே இந்திய கலாசாரத்தில் பாலியல் வெளிப்படையாக   பேசப்படும் ஒரே ஒரே மார்க்கமாக இருக்கிறது என்பதே எமது வாதத்தை மிகவும் வலுப்படுத்துகிறது".
மேற்சொன்ன தரவுகள் தமிழ் நாட்டு சூழலோடும் மிகவும் பொருந்திப் போகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்தியாவில் 22 மொழிகளில் மொத்தமாக  வருடாந்தம்  வெளிவரும் 800 திரைப்படங்களில் 130 படங்கள் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் படங்கள். இதைத் தவிர 1/6 சினிமா கொட்டகைகள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன(www.tamilnation.org).

வேறு    வார்த்தைகளில்  சொல்வதானால், ஒரு சராசரி இந்தியனை விட, ஒரு சராசரி தமிழன் படங்களை பார்க்கிறான்.

UNICEF, SAVE The Children என்பனவற்றின் அனுசரணையோடு இடம்பெற்ற ஓர் ஆய்வில், துணைக்கண்டத்தில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் கட்டிளமை பருவத்தினர் மத்தியில் பெருத்த செல்வாக்கை செலுத்துவதையும், அதிகாரம், பெண்களோடான உறவில் வன்முறை என்பன அவர்களிடத்தில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டு பண்ணுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ் நாட்டு சினிமாக்கள், குறைந்தபட்சம் இந்திய சினிமாக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் ஏற்ற்படுத்திய தாக்கம் தொடர்பில் வெளிவந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருந்த போதும், பொதுவாக சினிமாக்கள் ரசிகனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவது வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இருந்து தெரிய  வருகின்றது. ஆளுக்காள் தாக்கத்தின் பரிணாமமும், பரிமாணமும் மாறுபட்டாலும், சினிமா உளவியல் ரீதியில் மிக பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது என்னவோ பெரிய உண்மை.

ஆதலின் பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் தமிழ் சினிமாக்கள் பெரியதொரு வகி பாகத்தை வகிக்கிறது என்பதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

தமிழ் சினிமாக்கள் கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தின் ஒரு அம்சமே இது. கட்டுரையின் சுருக்கம் கருதி, மற்ற அம்சங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்க விட்டு விடுகிறோம்.

சுருக்கமாக சொன்னால், தமிழ் சினிமா தமிழகத்தின் அரசியல், கலாசார தளத்தில் மிகப் பலமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அரசியல் வாதிகள் அரசியல் நோக்கில் சினிமாவை பயன்படுத்தினால், மறுபுறம்  வியாபார  முதலைகள்  கோடி கோடியாக  பணம் சம்பாதிக்க சினிமாவை நாடுகின்றனர். இதில் மக்கள்  ஏமாற்றப்படுகிறார்கள் என்ற உணர்வோ, எரிந்து கருகி சாம்பலாகிப் போகும்  கலாசார பெறுமானங்கள் குறித்த பிரக்ஞையோ இவர்களிடத்தில் கிஞ்சிற்றும் இல்லை.

ரசிகர்களின்  மட்டமான உணர்வுகளை தூண்டி விட்டு அதன் மூலம் தமது திரைப்படங்களுக்கு  விளம்பரம் தேடத்தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முற்படுகிறார்கள்.

அரசியல், வியாபாரம்  இந்த  இரண்டு   சக்திகளுக்கும்  இடையில்  அகப்பட்டு  தத்தளிக்கும் நிலையில்   தான் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். "ஓர் உயிரை கொள்வதை விட பண்பாட்டை கொள்வது தான் கொடுமை  என்பார்கள்.  அத்தகையதொரு கொடுமை தமக்கு எதிராக பொழுதுபோக்கு என்ற பெயரில் இடம் பெறுகிறது என்பதை உணர முடியா நிலையில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

துணை நின்றவை
  1. Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication, 2006
  2. www.tamilnation.org                   
Read More:
தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!
                     Share

தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!

"தமிழ் சினிமா அதன் எழுபத்தொன்பது ஆண்டுகால வரலாற்றில், தமிழ் நாட்டின் கலாசாரத்திலும்  அரசியலிலும்  மிகவும்  தீர்மானமான  சக்தியாக  வளர்ந்து வந்துள்ளது"
(S.Thedore Baskaran, National Poltics and Entertainment Media in South India- 1880-1945, published in 1996).

பாஸ்கரன் குறிப்பிடுவது போல் தமிழகத்தின் அரசியல், கலாசார  தளங்களில் தமிழ் சினிமா பல அதிர்வுகளை ஏற்ற்படுத்தி வந்திருப்பதோடு,   அவற்றை இயக்கும் இயங்கு 
சக்தியாகவும் செயற்பட்டு வந்திருக்கிறது. தமிழ் சினிமா தமிழக அரசியலினதும், அதன் கலாசாரத்தினதும்  தவிர்க்க  இயலாத  கூறாக    மாறியுள்ளது. தமிழக அரசியலோடு  தமிழ் சினிமா கொண்டுள்ள உறவு குறித்த ஒரு சுருக்கமான முன்னுரையை வழங்குவதற்கு இக்கட்டுரை முனைகிறது.

சுதந்திரத்திற்குப்பிட்பட்ட தமிழகத்தின் அரசியலில் சினிமா துறையினர் 
அழுத்தமாக தமது செல்வாக்கை பதித்து வந்திருப்பது மிகவும் வெளிப்படையானது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவருமே சினிமா துறையை சார்ந்தவர்கள். இவர்களில் கருணாநிதியும் அண்ணாதுரையும் இன்று வரைக்கும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கதை எழுத்தாளர்களாக கருதப்படுகிறார்கள்.

தமது அரசியல் கருத்துக்களை மிகவும் வெற்றிகரமாக ஜனரஞ்சக மயப்படுத்த சினிமாவை இவர்கள் அனைவருமே 
மிகச் சாதூர்யமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். நாஸ்தீகம், ஜாதிமுறை எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இவர்களது திரைபடங்களில் முக்கிய பேசு பொருள்களாக திகழ்ந்தன.

இந்த வகையில் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு கருணாநிதி வசனம் எழுதிய "பராசக்தி" (1952) இன்று வரை தி.மு.கவின் அரசியல் கொள்கைகளை பறைசாற்றும் வகையில் வெளிவந்த படமாக இருப்பதாக கமல்
 ஹசன் குறிப்பிடுகிறார் (economictimes.indiatimes.com).

கமல் ஹசனுடைய திரைப்படங்களும் நாஸ்தீகத்தையும் இடது சாரி 
கருத்தியலையும் முன்வைத்தன. விஜயகாந்தும் தன்னை அரசியல் உறுதியாக நிலை நிறுத்தி கொள்ளும் பொருட்டு, தன் திரைப்படங்களை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்த், கார்த்திக், சரத் குமார் போன்றோர் தமக்கென்று தனித்தனிக்கட்சிகளை 
உருவாக்கிக்கொண்டுள்ளனர்.  2005  இல் உருவாக்கப்பட்ட விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றனர். ஒரு புதிய கட்சியாக இந்த வீதம் மிக அதிகமானது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று மூனறாவது பெரிய கட்சியாக திகழும் DMDK எதிர்காலத்தில் தி.மு.க, ஆ.தி.மு.க என்பவற்றிற்கு இணையான கட்சியாக வளர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமே இல்லை.

இதேவேளை, ரஜினி காந்தும் தனது அரசியல் பிரவேசம் குறித்த சமிக்ஞ்யைகளை வெளியிட்டு வருகிறார். அத்தகைய ஒரு பிரவேசம் இடம் பெரும் பட்சத்தில், தமிழக அரசியலில் ஏற்படக்கூடிய திருப்பங்கள் எத்தகையது என்பது குறித்த வாதப்பிரதி வாதம் ஒரு புறம் இருக்க, சினிமா நட்சத்திரங்களின் அரசியல் ஆதிக்கம் இன்னும் ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்றுதான் தோன்றுகின்றது.

சினிமாவை தன் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியவர்களில் M.G.R முதன்மையானவர். ஒரு முறை அவர் தி.மு.கவிற்கு ஒரு பெரும் தொகை நிதியை வழங்க முன் வந்த போது, அதனை வினயமாக மறுத்த தி.மு.கவின் அப்போதைய தலைவர் அண்ணாதுரை, "உன் இலட்சங்கள் எனக்கு தேவை இல்லை. உன் முகத்தை மட்டும் வந்து காட்டு. அது போதும். இலட்சங்கள் எம்மை தேடி வரும்" என்று கூறி இருந்தார். இதற்கு சிறுது காலத்தின் பின்புதான் M.G.R தி.மு.கவோடு, நேரடி அரசியலில் இணைந்தார் (economictimes.indiatimes.com).

தி.மு.க சினிமா என்ற பிரசார ஊடகத்தை மிக ஆரம்ப காலத்திலேயே மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டனர்.
தி.மு.கவை சேர்ந்த கதை ஆசிரியர்கள் கட்சியின் கொள்கைகளை பிரதி பலிக்கும் வகையில் M.G.R இன் 
படங்களுக்கு கதை எழுதியதாக சென்னையை தளமாக கொண்ட சினிமா விமர்சகரும், சமூக விஞ்ஞானியுமான பாண்டியன் தனது M.G.Ramachandran in Film and Politics என்ற நூலில் குறிப்பிடுகிறார். தமது கட்சியின் சின்னத்தையும், வர்ணப்படங்களின் வருகையோடு தமது கட்சியின் நிறத்தையும் திரைப்படங்களில் காட்சிப்படுத்த தி.மு.கவினர் தவறியதே இல்லை.

தாஸ் குப்தா என்பவரின் கணிப்பின் படி, M.G.R இதற்கு மட்டும் தமிழகம் முழுதும் இருபத்தேழாயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்ததாகவும், 
அவற்றில் ஒன்றரை மில்லியன் பேர்வரை அங்கம் வகித்ததாகவும் தெரிய
வருகிறது. இது ரஜினி காந்த், கமல் ஹசன் போன்றோருக்கு உள்ள ரசிகர்களை விட மிக மிக அதிகம்.

M.G.R ஐப்போல் தெலுங்கு நடிகர்  NTR இற்கும் இதே போன்ற ரசிகர்கள் இருந்ததாகவும், இவர்கள் இருவரினதும் வெற்றியில் ரசிகர் மன்றங்களின் பங்களிப்பை ஒரு சிறுதும் மறுப்பதற்கில்லை என ஆஷா கஸ்பேகா எழுதுகிறார் (Pop Culture In India: Media, Arts and Life Style).

சினிமாவில் நல்லவர்களாகவும், விடுதலை வீரர்களாகவும் வருவோரை நம்பி வாக்களித்து ஏமாந்து போகும் துர்பாக்கியம் தமிழகத்தில் 
இன்றுவரை தொடர்கிறது. தமிழக அரசியல் சமகால நிகழ்வுகளை பார்க்குமிடத்து, கிட்டிய எதிர்காலத்தில் இந்நிலை மாறுவதற்கான எந்த அறிகுறியும் கூட தென்படுவதாக இல்லை.

 துணை நின்றவை
  1. S.Thedore Baskaran, National Politics and Entertainment Media in South India (1880-1945).
  2. economicstime.indiatimes.com
  3. Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication,   2006.
  4. M.S.S. Pandiyan, The Image Trap: M.G.Ramachandran in Film and Politics.                                                                                         
Share

மூன்றாவது பாதையில் ஈரான் சினிமா

சினிமா தனி மனிதனதும்,  சமூகத்தினதும்  சிந்தனை தளத்தில்  ஆழமான  தாக்கங்களை  ஏற்படுத்தி விடக்கூடியது. சினிமா ஏற்படுத்துகின்ற நுண்மையானதும், கூர்மையானதுமான  தாக்கம்  கலாசாரத்தின்  பல்வேறு  கூறுகளிலும்  பலமான  அதிர்வுகளை தோற்றுவித்து விடுகின்றது.

நவா காலனித்துவத்தை நம் மீது திணிக்க முயலும் ஏகாதிபத்திய பெருச்சாளிகளின் உலகமயமாக்கல், புதிய உலக ஒழுங்கு உள்ளிட்ட  கவர்ச்சிகரமான  வார்த்தைகளில்  மயங்கி, கீழைத் தேய சினிமாக்களும், நிர்வாணத்தையும், வன்முறையையும்  தமது ஆபரணங்களாக அணிந்து கொண்டுள்ளன.

பாலிவுட், கோலிவுட், சிங்கள சினிமா உள்ளிட்ட எதுவுமே இதற்கு விதி விளக்கல்ல.

இந்நிலலையில், சீரிய சமுதாயமொன்றின் உருவாக்கத்தை நாம் ஆசிப்போமாயின், எமது சினிமாக்களில் சில ஆரோகியமான மாற்றங்களை நாம் செய்தாக வேண்டும்.  இளம் சந்ததி சினிமாவுடன் இரண்டறக் கலந்து விட்ட நிலையில், அவர்களை ஆரோக்கியமான பாதையில் வலி நடாத்த இந்த மாற்றம் அவசரமானதும், அவசியமானதும் ஆகும்.

ஈரான் சினிமா இத்தகைய ஒரு தனித்துவமான சினிமா கலாசாரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஹாலிவுட் ஐப் போன்றோ, பாலிவுட் ஐப் போன்றோ, நிர்வாணத்திலும், மாயாஜால வித்தைகளிலும், யதார்த்தத்திதற்கு புறம்பான வீர தீர சாகசங்களிலும் அல்லாமல் தனக்கே
உரியதொரு தனித்துவமானதொரு பாதையை ஈரானிய  சினிமா அறிமுகம் செய்துள்ளது.

இது ஈரானிய நாகரிகத்திற்கே இருக்கின்ற ஒரு தனியான பண்பு. பல்வேறுபட்ட நாகரிகங்களோடு கலந்துறவாடிய போதிலும், தனது தனித்துவத்தை எப்போதும் போல் அது காத்து வந்து இருக்கிறது.

ஆரியர், மேற்ற்கத்தேயர், பாரசீகர் என பல்வேறு நாகரிக செல்வாகிற்கும் வரலாற்றில் ஈரான் உட்பட்டுள்ளது. இருப்பினும் தனது இஸ்லாமிய பண்பாட்டு கலாசார பெருமாங்களை அது எப்போதும் போல் பாதுகாத்து வந்திருக்கிறது. ஈரான் சினிமாவும் இதற்கு ஒரு விதி விலக்கல்ல.

மேற்க்கு சினிமாக்களிடம் இருந்து அவற்றின் தொழிநுட்ப தரம், நேர்த்தி என்பவற்றை பெற்றுக் கொண்டாலும், மேலைத்தேய பாரம்பரியத்தை போல் நிர்வாணம், வன்முறை என்பவற்றுக்குள் ஈரான் சினிமா நுழையவில்லை.

வாழ்வோடு பின்னின்ப்பிணைந்த  கருப்பொருள், யதார்த்ததோடு இயைந்து செல்லும் பாங்கு, எதனையும் மிகைப்படுத்தாத தன்மை, வாழ்வியல் யதார்த்தங்களும், கலாசார கோலமும் மிக நுண்மையாக பிரதிபளிக்கப்படுகின்மை, என்பவையே ஈரானிய சினிமாவின் தனித்துவமான சிறப்பம்சங்கள் என்று சொல்லலாம்.

தமிழ் சினிமாக்களை போல், பெண்கள், ஆட்டம், பாட்டம், கும்மாளம் என்பவைதான் சினிமா என்பதை போலல்லாமல், அதனையும் தாண்டி  இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்றே சிறந்த படைப்புகளை வெளிக்கொனரலாம்  என்பதற்கு ஈரான் சினிமாக்கள் நடைமுறை சான்றாக திகழ்கின்றன.

வன்மம் மிக்கதாகவும், நிர்வாணம் மிக்கதாகவும் மாறிவிட்ட இன்றைய உலக சினிமாக்களுக்கு முன்னால், மனித குளத்தின் ஆழமான, நுண்மையான உணர்வுகளை ஈரானிய சினிமாக்கள் மனதிற்கு இதமாக முன்வைக்கிறது.

மாஜித் மஜீதி   இனுடைய  Color of Paradise என்ற திரைப்படத்தை பாருங்கள். ஒரு கண் தெரியாத சிறுவன் அதில் கதாநாயகனாக வருகின்றான். ஒரு கண் தெரியாத சிறுவனின் உணர்வுகள் எத்தகையது, சமூக வாழ்விலும், குடும்ப அமைப்பிலும் அவன் எதிர் கொள்ளும் துயரங்கள் எத்தகையது என்பதை படம் சித்தரிக்கிறது.

எம்மை சூழ கண்தெரியாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என ஊனமுற்றவர்கள் நிறையப்பேர் வாழ்கின்றனர். எமது வாழ்கை பிரச்சினைக்கும், ஓட்டங்களுக்கும் இடையில், அவர்களது உணர்வுகள் எமக்கு புரியாமலேயே போய்விடுகின்றன. ஆனால், Color of Paradise அத்தகைய ஒரு சிறுவனின் உணர்வுகளோடு எம்மை சங்கமிக்க வைக்கிறது. கிராமியச் சூழல், வனப்பு மிக்க ஈரானின் இயற்க்கை காட்சிகள், யதார்த்தமான பாத்திரங்கள், சிறப்பான படப்பிடிப்பு, உள்ளத்திற்கு அமைதி தரும் இதமான இசை என்பவற்றின் மூலமாக எம்மை கண் தெரியாத ஒரு சிறுவனின் வண்ணமயமான உலகிற்கே எம்மை அழைத்துச் செல்கிறார் மஜித் மஜீதி.

அவரது மற்றொரு திரைப்படமான "Children of Heaven" ஒரு ஏழை குடும்பத்தை குறித்து பேசுறது. மஜிதியின் கேமரா வறுமையை
வித்தியாசமான கோணத்தில் நின்று படம் பிடிக்கிறது.

ஒரு சிறிய ஏழை குடும்பம். இரண்டு பிள்ளைகள். தங்கையின் செருப்பை அண்ணன் தொலைத்து விடுகின்றான். புதிய செருப்பொன்று வாங்க முடியாதளவு
குடும்பம் வறுமையில் வாடுகிறது. குடும்பத்தின் வறுமை நிலை குறித்து இச்சிரார்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள். எனவே, ஒரு செருப்பை அண்ணன் தங்கை இருவருமாக வைத்து சமாளிக்கிறார்கள்.

படம் நெடுகிலும், இவ் ஏழைச் சிறுவர்களின் உணர்வுகளோடு எம்மை சங்கமிக்க வைக்கிறார் மஜீதி. படத்தின் முடிவில் எத்தனயோ விடயங்களை எமக்கு சொல்லி விடுகிறார்.

ஏழைகுடும்பத்தில் பிறந்த சிறார்கள்தான் என்றாலும், அவர்களுக்கும் ஏனைய சிறார்களை போல் உணர்வுகள், கனவுகள் இருக்கவே செய்கின்றன. இவர்களது உணர்வுகளும் சமூகத்தால்
 புரிந்து  கொள்ளப்பட வேண்டும். அவர்களது கனவுகளுக்கும் பெறுமானம்
வழங்கப் பட வேண்டும். ஏழைகளாக பிறந்து விட்ட ஒரே காரணத்தால்  அவர்களை ஒதுக்கி விட முடியுமா? என மஜிதி கேட்க முனைவது போல் இருக்கிறது.

பொதுவாக ஈரான் சினிமா அனைத்திலும் போல், சமூகத்திற்கு சொல்வதற்கு  நிறைய விடயங்கள் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் ஈரானிய சினிமாக்கள் இல்லை.

இன்றைய, தமிழ் சினிமாக்களை பொறுத்த மட்டில், எந்தவிதமான உருப்படியான கருப்பொருளும் இல்லை. இலாப நோக்கில், இலாபத்தை உச்சப் படுத்துவதே, இயக்குனர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. கதாநாயகன்- கதாநாயகி, காதல், முத்தம், கட்டியணைப்பு, சில பாடல் காட்சிகள், காதலுக்கு ஆப்பு வைக்க முனையும் வில்லன், சில சண்டை காட்சிகள், காதல் வெற்றி...ரஜனி காந்த் போன்ற சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண புதுமுக நடிகர்கள்                    வரை நடிக்கின்ற எந்த ஒரு படமானாலும் , இதை விட வேறு என்ன கருப்பொருள் இருக்கிறது...?

கதாநாயகர்களுக்கும், கதாநாயகிகளுக்கும் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான
 முக்கியத்துவம் எமது இளைஞர், யுவதிகளை தவறாக வாழி நடாத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கு புறம்பான அம்சங்களை நிஜ வாழ்வில் பரிட்சித்துப்பார்க்க எமது இளைஞர்கள் முற்பட்டதன் விழைவையே இன்றைய சமூக தளத்தில் காண்கிறோம்.

ஈரான்    சினிமாக்களை போல், மாற்று சினிமாக்கள் தமிழில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. பாரசிக நாகரிகத்தினதும், இஸ்லாமிய
நாகரிகத்தினதும் கலப்பான ஈரான் சினிமாக்களில் இருந்து தமிழ் சினிமாக்கள் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.

உலகிற்கு சினிமா அறிமுகமான ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஈரான் இற்கு சினிமா வந்து விட்டது. ஈரான் இல் சினிமா அறிமுகமானத்திலிருந்து பல்வேறு கட்டங்களையும் ஈரான் சினிமா தாண்டி வந்துள்ளது.

சினிமாவின் வருகையை தொடர்ந்து , மார்க்க அறிஞர்களின் கடுமையான எதிர்ப்பை அது சம்பாதித்தது. ஈரான் கலசாரத்திற்கும், சமூக அமைப்பிற்கும், அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே அவர்கள் அதனை
பார்த்தனர்.  ஏனனில், அன்றைய சினிமா பெண்களையும், காதலையுமே மையப் படுத்தி இருந்தது.

இருந்தாலும், சினிமாவிற்கு நிலவிய அரசரினதும், அரச குடும்பத்தினதும் ஆதரவு, இத்தகைய எதிர்ப்பையும் மீறி சினிமா வளர்ச்சி பெருவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
1970 களில் தான் ஈரான் சினிமாவில் புதிய அலைகள் வீசத் தொடங்கின. ஈரான் சினிமாவில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி இத்தசாப்தத்திலேயே ஏற்பட்டது. அப்பாஸ் கியாரஸ்த்மி போன்ற முக்கிய இயக்குனர்கள் இத்தசாப்தத்தில் அறிமுகமானவர்கள்தான். எனினும்,
1978 இல் ஏற்பட்ட ஈரானிய புரட்சி நிலைமையை தலை கீழ் ஆக்கியது. ஈரானிய கலை துறையின் எதிர் காலம், இமாம் கொமேனி இனதும், அவரது மஜ்லிஸ் இனதும் கரங்களில் ஊசலாடியது.
இதுவரை காலம், வெளி வந்திருந்த பெரும்பாலான சினிமாக்கள் சராசரி சினிமாக்களை விட எந்த விதத்திலும், சிறந்ததாக இருக்கவில்லை. காதலும், பெண்களுமே இவற்றினதும் பேசு பொருட்களாக இருந்தன. இத்தகைய சினிமாக்களை அங்கீகரிப்பது,  ஷரீஆ சட்டங்களுக்கு முரணாகவும், இஸ்லாமிய சமூக அமைப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது.

எனினும், சினிமாக்கள் சமூக தளத்திலும், பண்பாட்டு, கலாசார பெறுமானங்கள் மீதும் ஏற்ற்படுத்துகின்ற ஆழமான பாதிப்புகளை இமாம் கொமைனி நன்கு உணர்ந்து இருந்தார். எனவே, ஆரம்ப கால மார்க்க அறிஞர்கள் சினிமாவை தூக்கி எரிந்ததை போல், தூக்கி எரிவது ஒரு பொருத்தமான தீர்வாக அவருககுபபடவில்லை. இதற்கான ஒரு மாற்று தீர்வு குறித்து அவர்கள் யோசிக்கலாயினர். அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை இஸ்லாமிய மயப்படுத்துவது போல், சினிமாக்களையும் இஸ்லாமிய மயப்படுத்த முடியாதா என அவர்கள் சிந்தித்தனர்.

கலைகளை இஸ்லாம் வரவேற்கிறது. ஒரு சினிமா அது சினிமா என்ற ஒரே காரணத்தினால், ஹராம் என தீர்ப்பு வழங்குவது இஸ்லாத்தின் அடிப்படையான சட்ட விதிகளுக்கே முரணானது. ஒரு சினிமா அதன் கருப்பொருள், உள்ளடக்கம் என்பவற்றை வைத்து மட்டுமே ஹராம்  என தீர்ப்பு வழங்கப்பட முடியும்.

இத்தகைய கருத்தில் இருந்த ஈரானின் தலைமை சினிமாவை அனுமதித்தது மட்டுமன்றி, பெருமளவில் ஊக்கமும் அளிக்கத் துவங்கியது. எனினும், வன்முறை, அரைகுறை ஆடைகளோடு பெண்களை காட்சிப் படுத்துவது, காதல் என்பவற்றை தடை செய்தது. இது தான் ஈரான் மாற்று சினிமாக்களின் உதயமாகும்.

இதனால், புரட்சிக்குப் பிந்தைய நிறையப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி இருந்ததை அவதானிக்கலாம். விதிவிளக்காக, சில அரசியல் காரணங்களுக்காக, இந்த வரையறையை மீறி சில திரைப் படங்கள் வெளி வந்ததை மறுப்பதற்கில்லைதான்.

இருப்பினும், பொதுவாக ஈரான் சினிமா, ஒரு தனித்துவமான சினிமா கலாசாரம் ஒன்றை உருவாக்கியது. இந்த சினிமாக்கள் தான், உலகை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதன் சர்வதேச தரத்திற்கும், கீர்த்திக்கும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அது பெற்றுக்கொண்ட, விருதுகளே போதிய சான்றாகும்.

மேற்கின் ஹாலிவுட் ஐப் போன்றோ, கிழக்கின் பாலிவுட் ஐப் போலோ அன்றி, ஒரு மூன்றாவது  பாதையிலும் பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஈரான் சினிமாக்கள் தருகின்றன.

ஹாலிவுட்   இடம், கலாசார பிச்சை கேட்டு கை ஏந்தி நிற்கும், தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் ஈரான் சினிமாக்களிடம் எப்போது பாடம் படிக்க  போகிறார்கள் என்பதே எம் முன் உள்ள கேள்வியாகும்.

(Pubslihed in Thinakkural, Sri Lankan Tamil Daily, Sunday Special Edition, 27th January 2008)
                                 
                                                                                                    Share

புகலிடம் & புரிதல் குறித்த சில குறிப்புக்கள்

இலக்கியமும் கலையும் தனி மனிதனும் சமூகத்தினதும் சிந்தனை தளத்தில்
ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடியவை. கலைகள் ஏற்படுத்துகின்ற நுண்மையானதும் கூர்மையானதுமான தாக்கம்  கலாசாரத்தின்  பல்வேறு  கூறுகளிலும்   பலமான அதிர்வுகளை ஏற்ற்படுத்தி விடுகின்றது.
குறிப்பாக சினிமாவை பொறுத்தவரை இந்நிலையை நன்கு அவதானிக்கலாம். சினிமா சமூகத் தளத்திலும், அரசியல்,  கலாசார  தளங்களிலும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து  மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள்  இதனையே  உறுதிப்படுத்துகின்றன.  இதனால் நவீன காலத்தில் சினிமா முக்கியமான ஒரு கருவியாக  இருப்பதை  காண்கிறோம்.

குறிப்பாக ஹாலிவுட் சினிமா யூதர்களால்  தமது,  பண்பாட்டு, கலாசார, அரசியல்  இலக்குகளை அடைந்து கொள்வதாற்காக திட்டமிட்டு  கையாளப்பட்டு  வருகின்றது.  முஸ்லிம்  சமூகத்தை  பொறுத்த  வரை  இத்துறையில் பாரியதொரு இடைவெளியே நிலவுகின்றது. அதிலும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்கள் பற்றி கேட்கவும் வேண்டியதில்லை.
புலமைத்துவ மட்டத்தில் இது ஓரளவு உணரப் பட்டு இருந்த போதிலும்,  நடைமுறையில்  இதைச் செயல்  படுத்துவதில்  நிறைய  தடைகளை  எதிர்  கொள்ள  வேண்டி  உள்ளது.
முஸ்லிம் இளையர்கள் சாக்கடை சினிமாவில் உழன்று  சீரழிந்து  கொண்டுள்ள  நிலையில்,  எமக்கான சினிமாவின் தேவை குறித்து சமூகம் இன்னும்  உணர்ந்து  இருப்பதாக  தெரியவில்லை. சீரழிந்த சினிமாவை மட்டும் பார்த்து பழகிப் போன  சமூகத்திற்ற்கு சினிமா என்றாலே "சீ" என்ற மனநிலை தான் தோன்றுகின்றது.  இந்நிலையில் எமக்கான ஒரு சினிமாவை ஒருவாக்கி அதனை சமூகத் தளத்திற்கு கொண்டு செல்லல் என்பது ஒரு சவாலான பணி என்பதில்  சந்தேகமில்லை.

இத்தகைய  சவால்கள் அனைத்தையும் வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை  தரும் விதத்தில் வெளிவந்துள்ளது புகல்டம் and  புரிதல். SIM நிறுவனத்தின்  வெளியீடாக  முகிதீன் ஹசன், இஸ்மாயில் முஸ்டீன், மற்றும் அஷ்-ஷெய்க் A.B.M. இத்றீஸ் ஆகியோரின்  கூட்டு  முயற்சியில்  வெளி வந்துள்ள இந்த வெளியீடு  இரண்டு  குறும்  படங்களை  உள்ளடக்கி உள்ளது.

இலங்கை முஸ்லிம் சினிமா வரலாற்றில் இதனை ஒரு புதிய புறப்பாடு என்றும் சொல்லலாம். ஏற்கனவே, TRIM ARTS போன்ற  வெளியீட்டகங்கள்  ஈரான்  சினிமாக்களுக்கு தமிழில் sub tittle வழங்கும்  முயற்சியில்     ஈடுபட்டு இருந்தாலும் புகலிடம் & புரிதல் என்பன  முற்றிலும்  இலங்கை தயாரிப்பாகவே அமைந்துள்ளது.

இரண்டு குறும்படங்களும் மிகக் குறுகிய நேரமே காட்சி தந்தாலும், அவை  முன்வைக்க  முனைகின்ற கருவும், அதனை முன்வைக்க முயலும் பாங்கும், எம்மால்  நிறையவே  சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை தருகின்றது.

தொழில் நுட்பத்  தரம், ஒளிப்பதிவு என்பன போதிய  திருப்தியை  தராவிட்டாலும் ,  கன்னி  முயற்சியே இந்தளவு இருக்கிறது என்னும் போது, இலங்கை முஸ்லிம்  சினிமாவின்   எதிர் காலம் பசுமையாக  இருப்பதாகவே  எண்ணத் தோன்றுகின்றது.

(Published in எங்கள் தேசம் (Engal Thesam):  February 1-14, 2008)                                              
          
Share

சினிமா: ஒரு கலாசார ஆயுதம்...!




கலை என்பது ஒரு சமூகத்தின் உணர்வுகளையும் விழுமியங்களையும் பறை சாற்றும் ஒரு விடயமாகும். ஒரு சமூகத்தின் பெறுமானங்களும், விழுமியங்களும் உயரிய நிலையில் இருந்து கீழ் நோக்கி வரும் பொது, அச்சமூகத்தின் கலை, இலக்கிய வடிவங்களும் ஆபாச, வக்கிர உணர்வுகளை பிரதிபலிப்பனவாக பரிணானம் பெறுகின்றன.

Share

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்