யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

ஜனதிபதித் தேர்தலும் நமது அரசியலும்...!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி இருபத்தி ஆறாம் திகதி என நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது மிகவும் முக்கியமான வினாவாகும். வழமை போலவே முஸ்லிம் கட்சிகள் மு.க ஐ.தே.கவோடு சேர்ந்து தேர்தலில் குதிக்கையில், மற்ற முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தலில் குதிக்கின்றன.






Share

அறிஞர் சித்தி லெப்பை: எமது வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஓர் ஆழுமை

அறிமுகம்
அறிஞர் சித்தி லெப்பை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இணை காண்பதற்கு அரிதான ஆழுமைகளுள் ஒருவர் என்றால் அது மிகையல்ல. ஒரு தலைவர், பத்திரிகையாளர், அரசியல் போராளி, மார்க்க அறிஞர், எழுத்தாளர், சமூக சேவகி என பன்முக ஆழுமை கொண்ட சித்திளெப்பையை நிகர்த்த இன்னுமொருவரை இலங்கை வரலாற்றில் காண முடியுமா என்பது சந்தேகம்தான்.

சித்திளெப்பையின் பணியையும், அதன் முக்கியத்துவத்தையும் அவர் வாழ்ந்த காலத்து சமூக, அரசியல் பின்ன்ணிகளோடு தொடர்புபடுத்தி நோக்கினால்தான் மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியும். துரதிஷ்ட வசமாக வெறுமனே முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடு பட்டவர் என்ற அடிப்படையில் மட்டுமே சித்தி லெப்பை பொதுவாக எமது சமூகத்தளத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார். இவ்வாறு செய்வது அவர் மேற்கொண்ட மிக உன்னதமான சமூக புரட்சியை கொச்சைப்படுத்துவது போலாகும். அவரை தொடர்ந்து வந்த தலைவர்களும் அவரது கல்வி குறித்த நிலைப்பாடுகளுக்கும், செயல்பாடுகளுக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததும் இவ்விதம் அவரது கல்விப்பணி மாத்திரம் முக்கியத்துவப் படுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
Share

எதிர் வரும் ஜனாதிபதித் தேர்தல்: சில அவதானங்கள்

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விரைவில் இடம்பெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகளும், வாதப்பிரதி வாதங்களும் ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சி சார்பாக தற்போதைய ஜனாதிபதியும், எதிர் கட்சிகள் சார்பாக முன்னாள் ராணுவத்தளபதியும், போரை வழி நடத்தியவருமான ஜெனெரல் சரத் பொன்சேகாவும் நிருத்தப்பட்டுள்ளனர்.

Share

புத்தாண்டு...



வறண்டு போன பாலை நிலப்பரப்பில்
சடுதியாகப் பொழிந்த சாரலின் சந்தோசத்தோடு...

Share

பல்கலைக்கழகம்



முதலாளிகளுக்கு  தொழிலாளர்களை உற்பத்தி


செய்யும் தொழிற்சாலை 


பல்கலைக்கழகம்
Share

டார்வினிசத்தை அறிவியல் நிராகரிக்கிறது...!


"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.

அதில் டார்வினிஸம் குறித்து சில குறிப்புகளை தந்து போதிய அடிப்படைகளற்ற ஒரு வாதம் அது எனச் சொன்னோம். சாள்ஸ் டார்வின் அவர்கள் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்து மேலும் சில அம்சங்களை இங்கு நோக்குவோம்.
Share

ஒரு சோகமான முடிவுரையோடு...




பைனஸ் மரங்கள் ஆடும் அசைவில்
மெல்லிய காற்று மேனியை வருடிச் செல்லும்...!
காலை நேரத்து பனிக்கூட்டம் தேகத்தை
அணைத்துக்கொள்ளும்...!

இளஞ்சூரியன் அனாயாசமாக அள்ளித்தெரிக்கும்
சூரிய கதிர்கள் ஒரு புதிய நாளை உறுதியோடு ஆரம்பிக்க வஸிய்யத் செய்யும்...!

உடற்பயிற்சிக்கான நீண்ட
அணிவகுப்பு அலுப்பைத்தரும்...!
அதட்டும் மாணவர் தலைவர் கூட்டம்
எரிச்சலை ஊட்டும்...!

ஒரு சோம்பேறி ஆசிரியர் கூட்டம்
கதையளந்து வேடிக்கை பார்க்கும்...!
இனிய குரலில் கிராத் ஒளி தூரத்து
மலையில் பட்டு எதிரொலிக்கும்...!

காலை மணி அருவலை ஊட்டும்...!
இடை வேலை நேரங்களில் கிளை பரப்பி
நிழல் தந்த அந்தப் பெயர் தெரியாத
பூ மரம் தினமும் முற்றத்தை
பெருக்கச் சொல்லி அடம் பிடிக்கும்...!

ஸ்கூல் கட் அடித்தலால் சுழலும் அந்த
தும்புக்கட்டைப் பிடி
உள்ளங்கையில் அடையாளத்தை பதித்துச் செல்லும்...!

வீட்டு வேலையை உருப்படியாகச் செய்யாததால்
முட்டங்காலில் நிற்கையில் தூசுத்தரை வெள்ளாடையில்
கையெழுத்திடும்...!

தூரத்தில் கேட்கும்  பரம்பின்
சுழற்சி  சப்தத்தில் முழுக் மண்டபமும்
 மௌன ராகம் பாடும்...!

அனைத்தும் தெரிந்த ஒரு
பழைய மாணவர் கோஷ்டி கல்லூரி எங்கும்
சுற்றித்திரியும்...!

ஒரு சோகமான முடிவுரையோடு
கல்லூரி வாழ்வு முற்றுப் பெரும்...!

இன்னொரு போராட்டமும்,
நினைவுகளை பத்தித்து
 செல்லும் வாழ்வும் அதன் பிறகு துவங்கும்...!   
Share

யுத்த பூமியின் அச்சம் சூழ்ந்த இரவைப் போன்றே...!


இரவுகள் நீண்டு செல்கின்றன...!
நாய்களின் குறைப்போசையோடு  உருவாகும் இரவு நேரத்து
வெறுமை உள்ளத்தை வாட்டி எடுக்கிறது...!
எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்றியே
விருப்பமின்றிச் செய்யும் தர்மத்தின் கஷ்டத்தோடு
விழிகளைத் தழுவுகிறது உறக்கம்...!

எதுவும் செய்வதற்கு வேலைகளற்ற
காலைப் பொழுதுகள்...!
உற்சாகமற்ற விடியல்கள்...!
அர்த்தமற்று கழிந்து செல்லும் நேரம்...!
கையாலாகாத் தனத்தை நொந்து கொண்டு
 உள்ளத்தை பிழியும் வேதனை...!


பொறுப்பற்ற சமூகத்தின் குத்தல்
மொழிகள்...!
உதவி புரியும் போர்வையில் நடக்கும்
கழுத்தறுப்புக்கள்...!
படித்த படிப்பும், விழித்த இரவுகளும்
ஒரு பெறுமானம் அற்றுப் போகும் கணங்கள்...!

கைச்செலவையும்   சொந்தப் பணத்தால்
செய்ய முடியாத கையாலாகாத்தனம்...!

தோள் கொடுக்க  வேண்டியவர்களே உதைத்துத் தள்ளும்
கஷ்டமான அனுபவங்கள்...!

 கழுத்தருப்பிற்கே காத்திருக்கும்
 கழுகுக் கூட்டங்கள்...!

நானும் ஒரு வேலையில்லாப் பட்டதாரி...!

உற்சாகத்தோடு விடியும்
ஒரு விடியலை எதிர் நோக்கிக்
காத்திருக்கிறேன்...!

அச்சம்
 சூழ்ந்த ஒரு யுத்த பூமியின் இரவைப் போல்
அதுவும் நீண்டு செல்கிறது...!                                                                                                                                                         
                                                                                                                       Share

இது யாத்திரிகைக் காலம்...!


நீங்கள் கொடுத்து வைத்தவர் ஹாஜியார்...!
வருடம், வருடம் சென்று அல்லாஹ்வின் வீட்டை
தவாப் செய்கிறீர்கள்...


பத்திரமாய் சென்று வாருங்கள்...
பட்டினியோடு கிடக்கிறேன்...
நீங்கள் திரும்பி விரும்பி வரும் போது
 உயிர் உடலோடு ஒட்டிக் கொண்டிருந்தால்
மீண்டும் சந்திக்கலாம்...
இன்ஷா அல்லாஹ்..!

Share

சம்பிரதாயச் சிறைகள் உடைந்து நொறுங்கட்டும்...!


பாவை என்று சொன்னான் உன்னை
தமிழ் கவிஞன்!
அடுத்தவன் பாட்டுக்கு
 ஆடும் பாவையாகவே போய் விட்டாய் நீ!

நிலவுக்கு ஒப்பிட்டார்கள் உன்னை...!
உலகுக்கு ஒளி தர வேண்டிய நீயே
இருளில் வாழலாமா?

இருண்ட உலகிற்கு பந்தலை ஏந்திச் செல்ல வேண்டிய  புரட்சி வீரன்
சூழ் கொள்ள வேண்டியது உன் வயிற்றில் தான்...!
நீயே
இருளில் இருந்தது கொண்டு
அவனுக்கு பந்தம் கொடுக்க என்ன செய்வாய்?

ஒரு மனிதனின் முதல்
சர்வ கலாசாலை நீ...!
உன்னை யார் தடை செய்தார்
சர்வ கலாசாலை செல்வதற்கு...!



நீ
முக்காடு அணிவதே
உன் கண்ணியத்தை பாதுகாக்க...
முக்காட்டை வலியுறுத்தும் சமூகம்
உன் கண்ணியத்தை ஏன் மறந்து போனது?
நீயும் ஆணுக்கு
சமமானவள்தான்...!
மார்க்கம் என்று நினைத்து உன்னை அடிமையாக
நினைக்கிறது இந்த முரட்டுக் கூட்டம்...!

வா...
வெளியில் வா...
உன்னை சூழப் போடப்பட்டிருக்கும்
சம்பிரதாய வெளியைத் தாண்டி...

உனக்குள்ளும் ஒரு புரட்சி வெடிக்கட்டும்
உன்னை  சூழ எழுந்து நிற்கும் சம்பிரதாயச் சுவரை
அடித்து நொறுக்கட்டும்...

உன் கோபம் எரிந்து சாம்பலான
தேசத்தை கட்டி எழுப்பட்டும்...

உன் கட்டுப்பாடு
எழு வானங்களுக்கு மேழுள்ளவனுக்கு மட்டும்
எனறாகட்டும்...!

உன் பெற்றோரோ, மற்றோரோ உனக்கு
அல்லாஹ் தந்த உரிமைச் சுவரை
தாண்டாமல் இருக்கட்டும்...!

புதிய பார்வையோடு...
ஒரு புது உலகம் தேடித் பயணிக்கும்
யாத்ரீகர் கூட்டத்தில்
இனி நீயும் ஓர் அங்கம்...!

இனி ஒரு சுதந்திரக் காற்று உன்னை
வருடிச் செல்லும்...

இறைவன் விதித்த
உரிமைச் சுவரை
தாண்ட முனைவோரை
தாக்கும் புயலாய் அது மாறும்...!
   

Share

விஞ்ஞானிகளின் மூட நம்பிக்கை...!


பரிசோதனை, அவதானம் என்பவற்றின்  மூலம் பகுத்தறிவு பூர்வமாக எதனையும் அணுகி  உண்மைகளை வெளிக்கொணர்வதே விஞ்ஞானம் என பொதுவாக கருதப்படுகிறது. உயிரியல் விஞ்ஞானமாயினும், சமூகவியல்  விஞ்ஞானமாயினும் இதுதான் அடிப்படை.
Share

நான் விரும்பி ரசிக்கும் கணங்கள் ...



விடிந்தும், விடியாத
சாம்பல் நிற
அதிகாலை பொழுதின் அமைதி...!

ஏழையின் முகத்தில் இயல்பாகத்
தோன்றும் புன்னகை...!

ஒரு மழை இருட்டு அந்திப் பொழுதில்
தூரத்து தென்னை மரத்தில் பட்டுத்தெறிக்கும்
மாலை வெயில்...!

உலகம் உறங்கி விட்ட நடு நிசியில்
இரவு நேரத்தில் நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும்
சிறிய உயிர்களின் ஓசை...!

நிஜமாக நேசிக்கும் நண்பர்களோடு
சேர்ந்திருக்கக் கிடைக்கும்
அரிதான கணங்கள்...!

என்னாலும் மற்றொருவன் பிரயோசனம்
அடைகிறான் எனும் போது
உருவாகும் ஆழ் மனத்திருப்தி ...

ஈமானிய உணர்வு உச்ச கட்டத்தை
அடையும் போது தொழும் நீண்ட இரண்டு ரகஅத்துகள்...

நீதி மறுக்கப்பட்ட ஒருவனுக்காக
குரல்  கொடுக்க
நினைக்கையில் மனதில் உருவாகும் தைரியம்...!

பிரச்சினைகள் உச்ச கட்டத்தை
அடையும் போது
உதவி புரிய முடியுமானவர்கள் கைவிட்டுச் செல்ல
உதவி புரிய முடியாதவர்கள் சொல்லும் குறைந்த பட்ச
ஆறுதல் வார்த்தைகள்...

முழுமையாக உழைத்துக் கலைத்து
செலவழித்த ஒரு நாள்
முடியும் தருவாய்...!

உள்ளம் நிறைந்த நிலையில் உறங்கும் உறக்கம்...

நீண்ட குரலில் ஒலிக்கும்
குர்-ஆன் ஓசை

மழலை மொழி பேசி கொஞ்சும் குழந்தைகளோடு
சிரித்து விளையாடும் நேரங்கள்...!

என்னை வெருத்தொதுக்கியவனுக்கே
உதவி புரிய கிடைக்கும் 
சந்தர்ப்பங்கள்...!

இலட்சியம்
 ஈடேறும் என்று ஏற்படும் நம்பிக்கை...!

 எத்தனையோ, எத்தனையோ
நான்
 விரும்பி ரசிக்கும் கணங்கள் என்  வாழ்விலும்...!

Share

திரை கிழியட்டும்...

உன் உடலோடு சேர்த்து
அறிவுக்கும் யார் சொன்னார்
திரையிடச்சொல்லி?


பாத்திமாவும் ஆயிஷாவும்
திரையிட்டுத்தான் இருந்தார்கள்...
அறிவுக்கு திரை போட எப்போது சொன்னார்கள்?

உடம்பை மட்டும் தான் நீ மறைக்க வேண்டும்
அறிவையல்ல...

உன் கால்களுக்கு விலங்கிட்ட அந்தக் கயவன் யார்?

கிழித்தெரி
உன் முகத்திரையை அல்ல...
உன் அறிவுக்கு இட்ட திரையை..

உடைத்திடு
 உன் கால்களுக்கு
விலங்கிட்டவன் கரங்களை...

மாறி விடு...


முகம்மத் நபி ஆசித்த ஒரு
புதுமைப்பெண்ணாய் நீ...

நாளை ஒரு புது உலகம்
உன் கரங்களில் தயாராகட்டும்!    Share

நினைக்க முன்பே முடிந்து விட்டது...

ஒரு மலர் மொட்டுதிர்க்கும் முன்பே
உதிர்ந்து விட்டது...
பேனா திறக்குமுன்பே மை  தீர்ந்து போனது...
சூரியன் உதிக்கும் முன்பே மறைந்து விட்டது...
மனிதன் பிறக்கும் முன்பு
கருவறையே அவனுக்கு கல்லறையாகிப்போனது...

மாறி முடியுமுன்பே குளங்கள் வற்றத்துவங்கி விட்டன...
வாசித்து முடிக்கு முன்பே ஒரு புத்தகம் மூடி வைக்கப் பட்டு விட்டது...

ஒரு உயிரை இறக்கும் முன்பே புதைத்து விட்டார்கள்
பயணி ஏறிக்கொள்ள முன்பே ரயில் புறப்பட்டு விட்டது..

கோடை துவங்கும் முன்பே பறவைகள் தாகத்தால் இறக்கத்துவங்கின...
இலையுதிர் ஆரம்பிக்க முன்பே மரங்கள் இலைகளை உதிர்த்து விட்டன...

சேவல் கூவும் முன்பே ஒரு இரவு தீர்ந்து விட்டது...
நாம் பழகும் முன்பே
பிரிந்து சிதறிப்போனோம்
அவிழ்ந்து வீழ்ந்த தஸ்பை மணிகளாய்...

கல்லூரி வாழ்வு...
நாம் நினைக்க முன்பே முடிந்து விட்டது...  
  Share

தடைச்சுவர்... 02


முதல் பகுதி
இரண்டாம் பகுதி
வந்தவன் முபீன் ஹாஜியாரின் மகனாக இருக்கலாம்.

நல்ல நிறமாக ஒரு ஐரோப்பியனை  போல் இருந்தான்.  உடைகள் யாவும் நாகரிகத்தை காட்டின. விலையுயர்ந்த ஒரு சங்க்லாசை அணிந்து நெற்றி வரை உயர்த்தி விட்டிருந்தான். அவன் அணிந்திருந்த பாதணி முகம் பார்த்து தலை சீவலாம் போல் அவ்வளவு பளபளப்பாக இருந்தது.  எங்கோ செல்வதற்கு வெளிக்கிட்டிருந்தான். அவனுக்கும் ஷெரீபின் வயது இருக்கலாம்: அல்லது   அவனை விட ஒரு சிறிது இளையவனாக இருக்கலாம்.
Share

தடைச்சுவர்... 01


தொலை பேசியில் கதைத்து முடித்த ஷெரீப், ஏமாற்றத்தோடு வைத்தான். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்தத் தனியார் கம்பனியில் நேர் முகப் பரீட்சைக்கு போய் வந்திருந்தான். அடுத்த நாளே முடிவை தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த முடிவும் வரவில்லை.

Share

சேய்மைப் பட்டுப் போகும் இதயங்கள்...

ட்ரூ... ட்ரூ... ட்ரூ...
ஆட்டோ சப்தம். சத்தார் களைப்பாக வந்து இறங்கினான்.
இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. எந்த சப்தமுமில்லை.

தூரத்தில் கேட்ட தெரு நாய்களின் குறைப்போசையும், இரவு நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும் இரவு நேரத்து உயிர்களின் சப்தமும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்த மயானமான நிசப்தம் ஒருவித பீதியையும் தந்தது.

வானத்து விண்மீன்களின் நீளமான அணிவகுப்பு. ..
இருட்டுக்குப் பயந்து கறுப்புப் போர்வை போர்த்தி உறங்கும் தூரத்து மலைகள்...
ஆழ்ந்து உறங்கும் மரங்கள்
அவை புரண்டு படுப்பதாலோ என்னவோ எழும் ஓசை
அதனோடு
சேர்ந்து வரும் மெல்லிய தென்றல்

இவற்றில் எதனையும் ரசிக்கும் நிலையில் சத்தார் இல்லை. ஆட்டோவிற்குரிய கூலியை கொடுத்து அனுப்பினான். பகல் முழுதும் உழைத்துக் களைத்த வடு அவன் முகத்தில் கையெழுத்திட்டிருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கடையை திறந்தால், இரவு பத்து மணியாகும் மூடுவதற்கு... பலசரக்குக்கடை.

கடையை மூடினால் சாமான்களை ஒழுங்கு
 படுத்துவது, அன்றைய கணக்கு வழக்குகளை பார்ப்பது, கடையை துப்புரவு செய்வது, தேவை அற்றவற்றை அகற்றுவது எல்லாம் அவன்தான். இத்தனையும் முடித்து வீடு சேர எப்படியும் பதினொன்றை மணியாகும்.

இன்றும் அப்படித்தான்...

வீட்டு மணியை அழுத்தினான். அரைத்தூக்கத்தில் மணைவி சபீனா கதவை திறக்கிறாள்.

மெதுவாக வீட்டினுள் நுழைகிறான்.

"நுஸ்ரி, இவ்வளோ நேரம் அழுதுட்டு இப்பதான் தூங்குற. சரியான இருமல், ஒரு ஜாதி காச்சல் மாதி. நாளக்காலும் மருந்து எடுக்கோணும்".

சத்தார் எதுவும் பேசவில்லை. மெதுவாக அறைக்குள் நுழைந்தான். தான் வீட்டுக்கு வந்த உடனே வீட்டு பிரச்சினை எதயாலும் பேசுறது சத்தாருக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'அடுப்படில உப்புத்தூள் முடிஞ்சதிலீந்து, பக்கத்தூட்டு காணிச் சண்ட  வர, மாப்புள வந்தோனே கதைக்காட்டி இவளுக்கு தூக்கமே வராது போலீக்குது'. சத்தாருக்கு கோபம்.

மனுஷன் காலைல ஈந்து கஷ்டப்பட்டு நொந்து போய் வாரான். இங்க வந்தோனக்கி இங்கயும் எனத்தயாலும் பிரச்சினைதான்.

சபீனா வீட்டு பிரச்சினை எதைப் பத்தி பேசினாலும், சத்தாருக்குப் பிடிக்காது. அவனும் கடைப் பிரச்சினைகளை அவளிடம் கதைக்க மாட்டான்.

இதனால், வீட்டில் அவன் பெரிதாக பேசுவதில்லை. உம்மென்று வாயை வைத்துகொள்வான். சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கி விடுவான்.

கலகலப்பாக வீட்டில் பேசிச் சிரித்த நாட்களே ஞாபகமில்லை சத்தாருக்கு. காலையில் எழுந்து, பல் துலக்கி, ஒரு டீயை குடித்து, குளித்து விட்டு கடிக்குப் போனான் என்றால், மீண்டும் நள்ளிரவில் தான், களைப்போடு திரும்பி வருவான். இதில் எங்கே அவனுக்கு கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க நேரம் இருக்கப் போகிறது?

ஒரு மௌனமான வேதனையை அவர்கள் இருவரும்  அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.



 ###
அதுவெல்லாம் இப்போது
 கனவைப் போல் இருக்கிறது. அப்போது சத்தார் தெலும்புகஹவத்தை வீதியில் வெட்டியாக சுத்திக்கொண்டிருந்தான். அவன் ஒரு வாட்ட சாட்டமான இளைஞன். அழகாக
 உடைகளை தெரிவு செய்து அணிந்து கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான். தலைமயிரை அழகாக 'கெப் கட்' வெட்டியிருந்தான். அந்த நாட்களில் அதுதான் பெஷன். சிலருக்கு 'கெப்கட்' சிரட்டையை வழித்தது போல் அசிங்கமாக இருக்கும்: அவர்களை பார்த்ததும் ஏனோ, ஆபிரிக்க காடுகளில் வாழும் வித விதமான குரங்குகள் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாது.
Share

துறைமுகம்- தோப்பில் முகம்மத் மீரானின் ஒரு சமூக நாவல்

"குமரி மாவட்டத்தில் வாழும் கடற்கரையை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும், எல்லா சமூகங்களுடனும் பொருந்திப் போவது... எழுத்தில் நாவல் முடிந்து விட்டாலும் நம்முள் நீள்கிறது..."


இது "துறைமுகம்" நாவலின் பின்னட்டை அறிமுகம்.

கதை இடம்பெற்ற காலம் சுதந்திரத்திற்கு சிறிது முற்பட்ட காலப்பிரிவு.
எல்லா சமூகத்திலும் இருக்கும் கொடுமைகள் இந்த முஸ்லிம்  சமூகத்திலும் இருக்கிறது. ஏழைகளையும், தொழிலாலர்களையும் சுரண்டும் முதலாளி வர்க்கம், மதத்தின் பெயரால் இடம்பெறும் அநீதிகள், அதிகார வர்க்கத்தின் முரட்டுத்தனம்
... இவை அனைத்து சமுதாயங்களிலும் புரையோடிப்போயுள்ள அழுக்குகள்.



மீரான் பிள்ளை, மம்மாதில், காசிம், மம்மதாஜி, பரீத் ஹாஜியார், ஈனா பீனா கூனா போன்ற பிரதான பாத்திரங்களை சூழத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. தோப்பில் முகம்மத் மீரான் தனது ஆற்றொழுக்கான நடையில் கதையை அற்புதமாக புனைந்திருக்கிறார். நாவல் முழுதும் அரபு கலந்த தமிழ் பிரதேச வழக்கு அந்த மக்கள் கூட்டத்திரளோடு எமது உணர்வலைகளை சங்கமிக்க வைக்கிறது.

இந்த கிராமத்து மக்களின் ஜீவனோபாயம் மீன்பிடி. அதை தவிர வேறு தொழிலும்  தெரியாது. தப்பித்தவறி கடல் ஏமாற்றி விட்டதென்றால், அவர்கள் பாடு அவ்வளவுதான்.


Share

கவிழும் ஓடங்கள் (02)


முதல் பகுதி
இரண்டாம் பகுதி

நள்ளிரவு பன்னிரெண்டை தாண்டி இருந்தது. உலகம் இருள் போர்வையை போர்த்திக்கொண்டு உறங்கிக் கிடந்தது. நாய்கள் குறைக்கும் சப்தமும், நரிகள் ஊழை இடும் சப்தமும், இரவு நேர உயிரினங்களின் ஓசையும் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இருந்திருந்தாற்போல் வாகனங்கள் செல்லும் ஓசை கேட்டது. வவ்வால்கள் சிறகடிப்பது கூட அந்த அமைதியில் தெளிவாகக் கேட்டது.


நாசிரின் எண்ணக் கடல் மட்டும் அமைதியின்றி  கொந்தளித்துக் கொண்டிருந்தது. ஏராளமான எண்ண  அலைகள் அவனது மனதில் ஆர்ப்பரித்துகொண்டிருந்தன. தூக்கம் வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கடந்து சென்ற சம்பவங்கள் மீண்டும், மீண்டும் அவன் நினைவில் வருவதற்கு அந்த அமைதி அவனுக்கு வழி செய்து கொண்டிருந்தது. பத்து மணியில் இருந்து முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனையும் மீறி நினைவுகள் அவன் கண் முன் தோன்றி அவனை படாதபாடு படுத்துகிறது. தூக்கத்தை சிதறச்  செய்கிறது. சிறுவர்களின் மணல் வீட்டை கடல் அடித்துச் செல்வது போல.

அவனது கனவுகளும் இப்படித் தான் சிதரப்போகிறதா?
Share

கவிழும் ஓடங்கள் (01)

அஸ்ஹர் கல்லூரி. காலை சரியாக எழு முப்பது. மாணவர்களை அமைதிப் படுத்தும் சைலன்ஸ் பெல் கம்பீரமாக ஒலித்தது. கல்லூரியின் உள் மைதானத்தில் உடற்பயிற்சிக்காக கூடியிருந்த மாணவர்கள் மத்தியில் பயங்கர அமைதி. வெள்ளை ஆடையில் மாணவர்களும், மாணவிகளும் வரிசையில் நிற்கும் அருமையான காட்சி.

காலை நேர இளம் சூரியன் தன் கிரணங்களை மெல்லப் பாய்ச்சிக் கொண்டிருந்தான். சூரினை கண்டு வெட்கப்பட்ட பனிக்கூட்டம் மெல்ல நழுவிக்கொண்டிருந்தது.

மெதுவாக தேசிய கொடியும், பாடசாலை கொடியும் ஏற்றப்படுகின்றன. கணீரென்ற இனிய குரலில் கிராத், மைதானம் எங்கும் எதிரொலிக்கிறது.

கிராத் முடிய மீண்டும் மணி ஓசை. மாணவர்கள் களைந்து செல்கிறார்கள். மாணவத் தலைவர்கள் அவர்களை வரிசையாக ஒழுங்கு படுத்தி வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். எறும்புகள் ஊர்வது போல் மாணவர் கூட்டம் மெதுவாக நகர்கிறது.

சிறிது நேரத்தில் மாணவர் கூட்டம் முற்றாக வகுப்புகளுக்கு சென்று முடிந்து விட்டது. பாடசாலை எங்கும் ஒரு வித அமைதி.


கல்லூரி நுழைவாயில் அருகில் இன்னும் ஒரு இருபத்தைந்து மாணவர்கள் அளவில் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் "லேட் கமர்ஸ்". அவர்கள் மத்தியில்தான் நாசிர் நின்று கொண்டிருந்தான். இலேசான நடுக்கம் அவனுக்கு இருக்கவே செய்தது. தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் லேட் அவன்.

அவன் நேர காலத்தோடே பாடசாலை வந்து விட்டாலும், இப்போது சில நாட்களாக அவன் தொடர்ந்தும் பிந்தி வந்து கொண்டிருந்தான். அதற்கு காரணம் சில காலமாக உணர்ந்து வந்த பாரமான அனுபவங்கள். அதனால் இரவில் நீண்ட நேரம் வரை தூக்கம் இன்றி அவதிப்பட்டான். காலையில் எழு மணி வரை இப்போதெல்லாம் தூங்கி விடுகிறான்.
Share

வேதம் ஓதும் சாத்தான்கள்...

ஏப்ரில் மாத உஷ்ணமான வெயில்  அகுரணை நகரை  சுட்டுப்பொசுக்கியது.  எதிர்ப்படும்  அனைவர் முகங்களிலும் அதன் பிரதி  பலிப்பு.  ரிப்கான்  மெதுவாக நடந்து வந்தான். அவனது நடையில் தளர்ச்சி.
நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ அற்ற முகத்தோற்றம். நெற்றியில் வாழ்கையின்
 அனுபவங்கள் கிழித்த ரேகைகள்.

ரிப்கான் மெல்ல நடந்து சுபைர்தீன் ஹாஜியாரின்  வீட்டை  நோக்கி  சென்று  கொண்டிருந்தான். காணியொன்றை விற்கும் முயற்சியில் அண்மையில் இறங்கி இருந்தான் ரிப்கான். பலரை சந்தித்தும் கதைத்தும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. கடைசியாக சுபைர்தீன் ஹாஜியாரை நாடி இருந்தான். அவர் விபரங்களை கேட்டு விட்டு, இன்று அவனை வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார்.

####
ரிப்கான்.. அவனுக்கு வயது முப்பத்தைந்தில் இருந்து நாற்பது வரை இருக்கலாம். இரண்டு பிள்ளைகள், மணைவி, பெற்றோர், இரண்டு தங்கச்சிமார் அனைவரும் அவன் ஒருவனின்  உழைப்பில்தான்  வாழ்ந்து  கொண்டிருந்தனர். அவன் ஒரு சிறிய சாதாரண கடை செய்து கொண்டிருந்தான்.
அவனது சம்பாத்தியம் இவர்கள் அனைவரையும் பட்டினியின்றி வைத்திருப்பதற்கு கூட போதவில்லை. போதாக்குறைக்கு உயர்ந்து செல்லும் வாழ்கைச்செலவு, பிள்ளைகளின் கல்விச்செலவு, பெற்றோரின் மருந்துச் செலவு, கல்யாண வயதில் இருக்கும் தங்கச்சிமார்... இவை அனைத்தும் சேர்ந்து அவனால் தாங்க முடியாத சுமைகளாக இருந்தன.

Share

என்னையும் கொஞ்சம் வாழ விடு...!

துள்ளித்திரிந்த என் இளமையை
திருடிக்கொண்டீர்கள்...
துன்பக் கேணியாக்கி என்
 வாழ்வை,
தூசுப்பட்டரையில் என்னை தூங்க வைத்தீர்கள்...
நான் தொலைத்து விட்ட  அந்த சிறுவர் பருவம்
மீண்டும் வேண்டும் எனக்கு...

உன் பூட்ஸ் கால்கள் மிதிக்கும் வெறும் துரும்பாகத்தானே
ஆகிப்போனேன்...
நானும் ஒரு மனிதன் என்று ஒரு சிறிதாவது நினைத்துப் பார்த்தாயா?...

வீழ்ந்து சிதறிய பதர்களாகிப் போனேன்...
நான் இழந்தது என்ன ஒன்றிரண்டா? அத்தனையையும்
சொல்லி விட...

வெறுமையாய் போகும் எனது நாட்கள்...
வாழவும்  இயலாத, சாகவும் இயலாத கணங்கள்...
என் கால்களை விலங்கிட்டுள்ள உன் சமூக 'விலங்குகள்'...
நாரிப்புளித்துப் போன உனதான  கௌரவங்களின்
அழுகிய வாசனை...
பொறுக்க முடியவில்லை...
மூக்கை அடைத்துக்கொகொள்கிறேன்...

நீயும் வேண்டாம்...
உன் உறவும் வேண்டாம்...
என்னை வாழ விடு...
தனியாய், அமைதியாய், எளிமையாய்
என் போக்கில்,
ஆர்ப்பாட்டமின்றி...

நீ போட்ட சமூக தரத்திற்கு என்னை
ஏற சொல்லாதே...
குற்றுயிராய் கிடக்குறேன்...
சறுக்கி விழுந்தால் செத்து விடுவேன்...

தயவு செய்து என்னை வாழ விடு...

இல்லை,
விட மாட்டாய்...

கடைசி மூச்சியை சுவாசித்து முடிக்கும் வரை...
நீ விட மாட்டாய் என்னை வாழ்வதற்கு...

ஒன்றை மட்டும் நினைவில் கொள்..
முடிவு செய்து விட்டேன்..
உயர்ந்து நிற்பேன்...
அல்லது செத்து மடிவேன்..
உனக்கு முன் கைகட்டி வாழ்ந்த அடிமை வாழ்வு போதுமெனக்கு...
       Share

உள்ளத்தால் அழுது விழிகளால் சிரிப்பவர்கள்...!

நட்சத்திரங்கள் துயில் கொள்ள செல்லும் சாமத்து ராத்திரி...
ஐந்தாவது முறையாகவும் தன் நண்பிக்கு எழுதிய காயிதத்தை சரி பார்க்கிறாள் பஸ்ரினா.

"எனதருமை தோழிக்கு... உன் கடிதம் கிடைத்தது... வாழ்வின்  வசந்தமான  திருமண  வாழ்வில்  நீ நுழையப்போகிறாய்... திருமணம் என்பது மார்க்கத்தில் பாதி என்று சொல்வார்கள். .. மரணம் மட்டும், அதற்குப் பின் சுவனத்திலும் உங்கள் காதலும், உறவும் தொடரட்டும் என பிரார்த்திக்கிறேன்.... " - வஸ்ஸலாம், உனதருமை நண்பி பஸ்ரினா.

கவனமாக மடித்து, காகித உறையுள் இட்டு  மேசையில்  கிடந்த  புத்தகத்திற்குள் பத்திரப் படுத்துகிறாள். தம்பி அய்யாஷ் நாளை கிளாஸ் போகும் போது, அவசியம் கொடுத்து அனுப்பச் சொல்ல   வேண்டும். தன் மாவனெல்லை  தோழியின்  திருமணத்திற்கு வாழ்த்துக்கூறி எழுதிய கடிதம். நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், குறைந்தது ஒரு  கடிதமாவது எழுதாமல் எப்படி இருப்பது... எத்தனை  ஆண்டு  கால  நீண்ட  நெருங்கிய நட்பு.

கடிதத்தை புத்தகத்திற்குள் வைத்ததும், ஒரு  நெடிய  பெரு  மூச்சி. கண்ணீர் ஊற்று இலேசாக கண்ணில் வட்டம் இட்டிருந்தது. கல்லூரி வாழ்வின் முடிவோடு தான் தொலைத்து விட்ட நட்புச் சொந்தங்களை  நினைக்கையில்  வெளிவரும்  வழமையான பெருமூச்சிதான். ஆனாலும்,  அந்த  பெருமூச்சிக்கும்,  கண்நீரிற்கும்  பின்னால் இன்று இருந்தது நண்பிகளல்ல. அவள்தான். இது போன்ற  கடிதங்கள்  வாழ்த்துச் செய்திகளை சுமந்து தன்னை தேடி எப்போது வரும்...?

பஸ்ரினா  ... அந்த குடும்பத்தின் மூத்த பிள்ளை... பிறந்தாலும் மூத்த பிள்ளையாக  பிறந்து விடக்கூடாது என்பார்கள் அல்லவா? அதிலும் வறுமை தலை விருத்து பேயாட்டம் ஆடும் இந்த பாவப்பட்ட ஜனங்களின் குடும்பங்களில் பிறந்து விடவே கூடாது... இப்போது என்னவென்றால் அவள் தங்கச்சி பர்வினும் திருமண பந்தலுக்கு நிற்கிறாள்.

எத்தனையோ சம்பந்தங்கள்... எதுவும் சரிப்பட்டு வருவதாக இல்லை... ஒன்று அவர்கள் எதிர்பார்த்த சீதனமும், வாய்ப்பு வசதிகளும், வெள்ளை தோலும் ஒத்து வரவில்லை.  அல்லது இவர்கள் பார்வையில் நல்ல பையனாக  அமைய வில்லை. சல்லி மட்டும் போதுமா?  அல்லா  ரசூலுக்கு  பயந்து ஈரான்டும் பாக்கோணுமே?

அவளது வயது பருவ பெண்களுக்கு உள்ள பயங்கள் அவளுக்கும் இருந்தன.  ஒரு வேலை தனக்கு  திருமண நடைபெறாமலேயே இருந்து விட்டால் என்ன செய்வது?... இப்படியே வெறுமையாய் சூரியன் உதித்து மறைவதை பார்த்துக்கொண்டே இருப்பதா?

###

விடியக்காலை ஒன்பது மணி  இருக்கலாம்...  இளம் வெயில்,  பச்சை  போர்வை  போர்த்தி வர்ணஜாலம் காட்டிக்கொண்டு இருந்த மரங்களில் பட்டுத் தெளித்தது.  ரயில்  நிலையத்தில் நண்பனை பிரிந்து செல்ல தயங்கும் நண்பனை போல், வெயில் வந்த பிறகும்  நகர மனமின்றி,  அரை  மனதோடு  மெதுமாக  நகர்ந்தது  பனிக்கூட்டம்.

சூழவும் அரண்கள் போல் நிமிர்ந்து நிற்கும் மலைகள்,  அவற்றில்  விரித்த  பசுமை  வர்ண கம்பளிகள், பெருக்கெடுத்தோடும் மகவெளி கங்கை... தெற்காசியாவின்  கிரீன்  forest என்று இதனை பிரகடனப் படுத்தி இருப்பதாக யாரோ சொல்லக்கேட்ட ஞாபகம்... அது உண்மையோ, பொய்யோ அந்த தகுதிக்கு இந்த மலையக கிராமம் முற்றிலும் தகுதியானதுதான்.

பரீனா ... இவள்தான் பஸ்ரினாவின் தாய்... காலை உணவுக்குரிய  தயாரிப்புகளை  செய்து கொண்டு இருந்தாள். அவளது அடுப்பை  போலவே,  வயிறும்  எரிந்து  கொண்டுதான் இருந்தது... கல்யான  வயசுல  ரெண்டு  கொமர  வட்ச்சிட்டு எப்பிடி எறியாம ஈக்குற?

நேற்று வந்திருந்த வரனை  சுற்றித்  தான் பரீனாவின் சிந்தனை  அலை  பாய்ந்து கொண்டு இருந்தது. வந்தது பஸ்ரிநாவுக்கல்ல. தங்கச்சி பர்வினுக்கு.  தங்கச்சிக்கு   வரன்  வருவது இது ஒன்றும் முதல் தடவை  என்றில்லை.  இதற்கு  முன்னும்  ஒன்றிரண்டு தடவை வந்தது. அதற்கு காரணம் பஸ்ரினாவை விட  பர்வின்  கொஞ்சம் நிறமாக  இருந்தது என்பதும் அவளுக்கு தெரியும். என்றாலும் இந்த முறை வந்தது சற்று  நல்லதொரு  வரன். அதை விடவும் விருப்பமில்லை. காரணம், இதை விட்டால் திரும்ப இது போல ஒன்று அமையும் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. ஆனால், மூத்தவள் இருக்க, தங்கச்சியின்  திருமணத்தை  நடத்தவும்  விருப்பமில்லை. என்ன செய்வது?  இலகுவில் ஒரு முடிவுக்கு வர அவளால்  இயலவில்லை. எப்பிடி முடிவுக்கு வாறது?  பெத்த புள்ளகல்ட வாழ்க்க பிரச்சினை எல்லையா இது? .
 ###

காலை நேரம். பஸ்ரினா வீட்டை சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தாள். ஹோல் இல் இருந்த சிறிய புத்தக ராக்கையில் சிதறிக்கிடந்த புத்தகங்களை தூசு தட்டி ஒழுங்கு படுத்தி அடுக்கினாள். வீட்டு மூலைகளில் சிலந்திகள் பின்னிய வலைகளை தும்புத்தடியால் துடைத்தெடுத்தாள்.

 ஒழுங்கின்றி இங்கொன்றும், அங்கொன்றுமாக இருந்த நாற்காலிகளை சரிப்படுத்தினாள். 
தரையை  ஒழுங்காகக்  கூட்டி பெருக்கி எடுத்தாள். ஒரு மூலைக்கு கூட்டி சேர்த்த குப்பைகளையும், தூசையும் ஒரு ஷவளால் அள்ளி டஸ்பினில்     போட்டாள். ஷவளில்  வராத எஞ்சிய மண்ணை கதவை திறந்து வெளியே தள்ளி விட்டாள்.  . கதவடியில் கிடந்த பாபிசை எடுத்து தூசு தட்டி விட்டாள். 

முற்றம் கூட்டுவது, வீட்டை பெருக்குவது என்பன பஸ்ரினா அன்றாடம் செய்யும் வேலைகள். பெரும்பாலும் இவற்றை பஸ்ரினாதான் செய்வாள். 

வீட்டை பெருக்கி முடித்தவள் முகத்தில்  படிந்த  வியர்வை  துளிகளை துடைத்துக் கொண்டால். குளித்து விட்டே காலை சாப்பாட்டை எடுத்தாள் உடம்புக்கு இதமாக இருக்கும். 

குளிக்கத் தேவையான    உடைகளோடு குளிக்க செல்ல முட்பட்டவல் "பஸ்ரினா..." என்ற குரல் கேட்டு திரும்பினாள். சமையலறை வாசலில் தாய் நின்று கொண்டிருந்தாள். 
"ஒன்னோட ஒரு விஷயம் பேசணும்..."
"என்னம்மா...?"
"வா அங்கால ரூமுக்கு போவம்"
முன்னறைக்கு ரெண்டு பேரும் வந்தார்கள்.
"என்ன விஷயம் உம்மா?" 
பரீனா   தயங்கினாள்.  பஸ்ரினாவின் கூர்மையான விழிகளும், அவள் முகத்தில் புரண்டு  விளையாடிய  கேசமும்  இணைந்து  வெளிப்படுத்திய பஸ்ரினாவின் இளமை அழகு பரீனாவை என்னவோ செய்தது. கேட்க வந்ததை கேட்காமலேயே விட்டு விட்டாள் என்ன என்று நினைத்தாள். "என்னமா என்னமோ பேச ஒனுமுண்டு சொன்னீங்க".

பஸ்ரினாவின் கேள்வியால் பரீனா சிந்தனையில் இருந்து மீண்டாள். 
"இல்ல மவள்... ஒரு சின்ன விஷயம்..."
"......"
பரீனா சொற்களை எண்ணி எண்ணி தான் பேச வேண்டி இருந்தது. பஸ்ரினாவின் கண்களை பார்த்து நேரிடையாக கேட்கும் தைரியம் இல்லை பரீனாவுக்கு... 

"இல்ல மகள் தங்கச்சிக்கு ஒரு கல்யாணம் ஒண்டு பேசி வந்தீக்கிற. நல்ல எடம்..." ஒருவாறு கேட்டுவிட்டால். பஸ்ரினாவின் கண்களை நேரடியாக சந்திக்கும் தைரியம் அவளுக்கு இல்லை. தன் மகளுக்கு ஏற்ற மருமகனை தேடி பிடிக்க முடியாத தனது கையாலாகா தனத்தை நொந்து கொண்டாள்.  தான் ஈக்க அவ தங்கச்சிக்கு கல்யாணம் நடக்குறத எந்த கொமர் விரும்புவா? 

உலகம்    தலைக்கு மேல் சுத்துறது மாதிரி இருக்குது பஸ்ரினாவுக்கு... தன் உணர்வை மறைக்கப் பார்த்தாள். கண்களில்  நிறைந்த  கண்ணீர்  காட்டி 
கொடுத்தது.

"நானும் வாப்பாவும் இதப்பத்திதான் நேத்துப் பேசின... வாப்பாக்கும் விருப்பமில்ல, ஒனக்கு முடியாம. அப்பிடி எண்டாலும், இது ஒரு நல்ல எடம். அதான் யோசிக்கிற... ஒனக்கு விருப்பமில்லாட்டி தேவல்ல".

இதற்கு மேலும் அழுகையை கட்டுப்படுத்த பஸ்ரினாவால் முடியவில்லை.
தலையணையில் முகம் புதைத்தபடி விம்மி அழத்தொடங்கினாள். அந்த அழுகை பெத்த மனதை என்னவோ செய்தது. "என்ன படச்ச  நாயனே...  ஏன்ட  புள்ளைகளுக்கு ஒரு நல்ல வாழ்கையை கொடு", வாய் திறந்து பிரார்த்தித்தாள். அந்த பிரார்த்தனை எழு வானங்களுக்கு   மேல் உள்ளவனான சகலதையும் அறிந்த இறைவனிடம் உயர்ந்து சென்றது. 

"அப்பிடி எண்டா தேவயில்ல மகள்"

"இல்ல உம்மா, தங்கச்சிட கல்யாணம் நடக்கட்டும், நல்ல இடங்கள உட்டுட்டு பொறகு கவலைப்பட்டு என்ன பிரயோசனம்"

இப்பிடி பஸ்ரினா சொன்னாலும், அவளது மனதில் எவ்வளவு  பாரம்
 இருக்கிறது என்பதை மற்றொரு பெண்ணான பரீனாவால் உணர்ந்து கொள்ள முடியாததல்ல.


"இன்னம் நாலஞ்சு மாசம் ஈக்கிது மகள்... அதுல்லுக்கு கல்யாணத்த நடத்தினால் போதுமாம். அதுக்கு மொத எங்க சரி ஒரு எடத்த பாப்போம்"

###
தங்கச்சியின் திருமணத்திற்கு ஐந்து மாதம் இருப்பதால் அதற்கு முன் பஸ்ரினாவிதற்கு ஒரு வரனை தேடிவிட வேண்டும் என்ற துடிப்பு பெற்றோருக்கு. வலை விரித்து தேடினார்கள். காலக்கூண்டுக்குள் அடைபட்டுக்கிடந்த நாள் பறவைகள் ஒவ்வொன்றாக பறந்த வண்ணம் இருந்தது. வரன் கிடைத்த பாடில்லை. 

பஸ்ரினாவுக்கு பொருத்தமே இல்லாத சில சம்பந்தங்கள் வந்தன. பஸ்ரினாவின் குணங்களுக்கு எட்டா பொறுத்தமுள்ள ஜென்மங்கள். உதறினார்கள். கிழியை வளர்த்து பூனைக்கு கொடுக்கும் தவறை ஏன் செய்ய வேண்டும்.

மார்க்க வாதிகள் கையை விரித்தார்கள். அவர்கள் பணமும், பதவியும் மட்டும் எதிர்பார்த்தார்கள்.   

சமூகத்தின் மீதான வெறுப்பு... துன்பம் வரும் போது கையை கட்டி வேடிக்கை பார்க்கவும், தவறு விட்டால் குறை சொல்லவும் மட்டும் தானே இந்த பாலாய்போன சமூகத்திற்கு தெரிந்திருக்கிறது. எத்தனை உம்மாமார் தங்க கொமர்கள், ஒரு பொடியனோட பழகுறத கண்டும் காணாம உட்டுட்றாங்க. என்னத்துக்கு? சீதனம், இந்த மாதி பிரச்சினைகள்  இருந்து தப்புறதுக்கு  தானே? இது  சரியா தவறா...  பள்ளிக்குள் குந்தி வாய் கிழிய மார்க்கம் பேசுறவங்க இத லேசா ஹராம்னு சொல்லிடலாம்... ஹராம்னு வாய் கிழிய கத்துறதால மட்டும் இதுகள மாத்திட முடியுமா?
###

இந்த இரவு  இப்பிடியே நீண்டு விடியாமலேயே இருந்து விடக்கூடாதா? நாளை என்ற ஒரு நாள் மட்டும் வராவிட்டால்... விடிந்தால் தங்கச்சி பார்வினின் திருமணம்...
தன்னோடு மண் வீடு கட்டுவது முதல், பாடசாலை போகும் வரை, காகிதக் கப்பல் செய்வது முதல், பரீட்சைக்கு படிப்பது வரை, ஒன்றாக வளர்ந்து, விளையாடி, ஒன்றில் ஒன்று கலந்துவிட்ட தன் தங்கை, மணப்பந்தலுக்கு மட்டும் தனியாகப் போகப் போகிறாள். 

புரண்டு , புரண்டு படுத்துப் பார்த்தாள். தூக்கம் கண்களை தழுவ மறுத்தது. உள்ளம் அமைதியாக  இருந்தாள் தான், உள்ளத்தை அமைதிப்படுத்தும் உறக்கம் வரும் போலும். அவள் உள்ளத்தில் வீசிக்கொண்டிருந்த புயல் காற்றில் அடி பட்டு, உறக்கம் அவளை விட்டும் சேய்மை பட்டுப்  போய்க்கொண்டு இருந்தது.

சமூகம் அவளை பற்றி  என்ன சொல்லும்... அவளிடம் எதாவது குறை இருப்பதாக நினைக்க மாட்டாதா? இல்லாவிட்டால் மூத்தவள் இருக்க ஏன் இளையவளுக்கு திருமணம் செய்ய வேண்டும்? என்று தானே சமூகம் நினைக்கும். அப்படிஎன்றால் இவளின் எதிர் காலம்... ஒரு வேலை காலம் பூராகவும், வாழாவெட்டி என்ற பட்டத்தை சுமந்து கொண்டு இருக்க வேண்டியதுதானா?

அவளது என்ன கடலில் ஆர்ப்பரித்த உணர்வலைகள்....
எப்போது உறங்கினாள்  என்று அவளுக்கு தெரியாது. விழித்தபோது சூரியன் உதித்து விட்டிருந்தான்.   

வழமை போல் முகம் கழுவி விட்டு விளக்கு மாரை எடுத்து முற்றத்திற்கு இறங்கினாள். வெளி ஓரத்தில் அண்டை வீட்டு பெண்கள் இருவர் குசுகுசுத்த குரலில் பேசியது அந்த காலை நேர இதமான மெல்லிய காற்றில்  பறந்து வந்து அவள் செவிகளில் விழுந்தது. 
"என்னவாவது ஒரு குறை இருக்கணும்... இல்லாட்டி தாதாவ  விட்டு எதுக்கு தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணி வைக்க  ஒனும்."
### 
 (ஓர் உண்மை கதையின் தழுவல்).      Share

வைரமுத்துவின் மூன்று நாவல்கள்...!

கவிஞர் வைரமுத்துவை நம்மில் பலர் ஒரு சினிமா பாடல் ஆசிரியராக மட்டும்தான் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த நாவல் ஆசிரியர் என்பது பலருக்கு தெரியாது. தனது அதிகமான வேலை பளுவுக்கு  மத்தியிலும் மூன்று தரமான சமூக நாவல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் பரிசளித்திருக்கிறார்.

அவரது சகல நாவல்களிலும் ஒரு தரமான படைப்பை வாசிக்கிறோம் என்று  எண்ணத்தோன்றும்  பக்கங்கள்.  அந்தளவு கடின  உழைப்பை  படைப்புகளின்  தரத்தையும்,  நேர்த்தியையும்  பேணுவதற்கும்,  யதார்த்த பூர்வ தன்மையை உறுதிப் படுத்தவும்,  பாத்திரங்களின்  உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தவும் செலுத்தி இருக்கிறார்.

அவரது "கள்ளிகாட்டு இதிகாசம்" சாகத்திய அகாடமி பரிசு பெற்ற நாவல். தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம் என்பன மற்ற இரண்டும். வணிக நோக்கை  தாண்டி எழுதப்பட்ட படைப்புகள் இவை (வணிக ரீதியில் பாரிய வெற்றியை ஈட்டி இருந்தாலும் கூட).


வணிக நோக்கு நாவல்கள் அடிமட்ட ரசிகனின் ரசனையை திருப்தி செய்யும்  விதத்தில் வெளிவரும். வாசகனின் மனதில் குரிப்ப்பிடத்தக்க எந்த தாக்கத்தையும்  விளைவிக்க அவை தவறி விடும். வைரமுத்து தன் நாவல்களின்  வருமானத்தை         நம்பி வாழ்பவரல்ல. அதனால் அவரது எழுத்தில் உண்மை உயிரோட்டம் இருக்கிறது. சமூக சிந்தனை இருக்கிறது. தான் எழுத்தில் வடிக்கும் சமூகத்தின் உண்மையான உணர்வுகளோடு வாசகனை சங்கமிக்க செய்து விடவேண்டும் என்ற தேட்டம்  இருக்கிறது.  அதனை அவர் ஒவ்வொரு பக்கத்திலும், வரியிலும் நிறைவு செய்து இருக்கிறார்.

 இந்த நாவல்களை படித்த போது, இன்னொரு மனிதன் வைரமுத்து என்ற பெயருக்குள் மறந்து கொண்டிருப்பதான உணர்வு தான் ஏற்படுகிறது.

"தண்ணீர் தேசம்" கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு சமூக நாவல். மீனவர்களின்  நிலையற்ற ஜீவனோபாயத்தையும், நிச்சமற்ற  வாழ்வையும்  அறிவுபூர்வமாகவும்,  உணர்வு பூர்வமாகவும் சித்தரிக்கும் நாவல். வசதி வாய்ப்புகளோடு செல்லமாக  வளர்ந்து, வாழ்கையின் கஷ்டங்கள் தெரியாமலும், அடிமட்ட மக்களின்  பிரச்சினைகளை  அறியாமலும் இருந்த தன் காதலியின் கடல் பயத்தை  போக்குவதற்காக, கடலிற்கரைக்கு வந்து  , ஒரு மீன்வப்படகில்  மீனவர்களோடு  கடலுக்கு அழைத்து செல்கிறான் ஓர் இளைஞன்.


நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்து விட, மீனவர்களும், இந்த காதல் ஜோடியும் நடுக்கடலில் தத்தளிக்கிறது.  கொண்டு  சென்ற  உணவு  தீர்கிறது.  குடிநீர்  தீர்கிறது. புயல் வேறு அடித்து அழைக்களிக்கிறது. பசியின் கொடுமை: இயற்கையின் சீற்றம்: கடன் காரன் நாள் எண்ணுவது போல், நாட்களை எண்ணி நெருங்கி வர துடிக்கும் மரணம்.

இதனை வாசிக்கும் ஒரு வாசகன் உப்புக்கதகதப்பு தன்னை அனைத்து  கொள்வதாக  நிச்சியம் உணர்வான். உணர்வை மட்டுமல்ல, அறிவியல் உண்மைகளும் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்படுவது தனிச் சிறப்பு.

மற்றொரு நாவல் கள்ளிக்காட்டு  இதிகாசம். தண்ணீர் தேசத்தில் மீன் வாசம் வீசினால் இங்கு மண் வாசம். பிறந்த மண்ணின்  மகிமையையும்,  அதன்  வாசனையோடு கலந்து விட்ட தனது ஆத்மாவின் உணர்வுகளையும், ஒரு மனிதன் தனது மண்ணை இழைக்கும் போது, அல்லது அதனை  துறந்து  மற்றொரு  பூமிக்கு  செல்லும் போதுதான் உணர்கிறான்.


ஒரு மக்கள் கூட்டத்தின் உணர்வுகளை, அந்த மண்ணின் மைந்தனால்தான்  முழுமையாக  புரிந்து கொள்ள முடியும். அதனை அடுத்தவர் புரியும் விதத்தில்  எடுத்துச் சொல்லவும் முடியும். கள்ளிக்காட்டு இதிகாசம் தன் சொந்த ஊரின் கதை என்கிறார் வைரமுத்து.

ஓர் அழகிய விவசாய கிராமம். அந்த கிராம மக்கள் ஒரு பாரிய விவசாய திட்டத்திற்காக தம் சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இதுதான்  கதைச்சுருக்கம்.


கள்ளிக்காட்டின் இதிகாசம், அந்தப்பாரிய அணைகளுக்கு  அடியில் அமிழ்ந்து கிடக்கிறது. வெளி ஒருவனின் பார்வையில் சாதாரண நிகழ்வு. ஆனால், வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பயிர் நட்டு, இரவு பகல் பாராது காவல் காத்து, கலை பிடுங்கி... இந்த உழைப்பில் வாழும் ஒரு விவசாயின் பார்வையில் இந்த நிகழ்வின்  பரிணாமம்  வேறு. பிரதேச மொழி வழக்கு நாவலின் ஒரு சிறப்பு. அத்தகைய ஒரு நடையில், வைரமுத்துவே குறிப்பிடுவது போன்று, அந்த பிரதேசத்தில் வாழ்ந்து, அதன் உணர்வுகளில் கலந்து விட்ட ஒருவனை தவிர, மற்றொருவனால் நினைத்தும் பார்க்க முடியாது.


கருவாச்சி காவியம்:... ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு, வாழ்கையில்  சொல்லொணா  துயரங்கள் கண்டு, தன் வானாழை கரைத்து விட்ட ஒரு பெண்ணின் கதை. இன்று எங்கும் இருக்கும் கருவாச்சிதான் இவளும். இந்த கருவாச்சி மதுரையை எரிக்க  வில்லை.  மெழுகாய் தன்னைத்தான் எரித்துக்கொல்கிறாள். இந்த கதை நடக்கும் கிராமிய பின்னணியில் நூலாசிரியர் நன்கு கலந்து விட்டு இருக்கின்றமை ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் புலனாகும். பிள்ளை பேற்றில் இருந்து, நாட்டு  மருத்துவம்  உள்ளடங்களாக, சுடு  காடு  வரை  கிராமிய  கலாசாரத்தின்  சகல  அம்சங்களையும்  நூலாசிரியர் வர்ணித்து செல்கிறார்.

வைரமுத்து கிராமிய பின்னணி கொண்டவர்:  கிராமத்தில் பிறந்தவர்:  கிராமத்து  மண்ணில் வளர்ந்தவர். அந்த கிராமத்து உணர்வுகள் அவருள் இன்னும் வாழ்கிறது  என்பதற்கு இந்த நாவல்கள் சான்று.

தமிழ் சினிமாவின் சமகால பாடலாசிரியர்களில் வைரமுத்து முதன்மையானவர்.  தமிழ் சினிமாக்கள் குறித்து எழும் சகல விமர்சனங்களையும் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த கவிஞர். சினிமாவுக்கு வெளியே ஒரு கிராமத்து "மனிதன்" அவருக்குள் மறைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

"தமிழில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது" என்கிறார் வைரமுத்து. இந்த
 கூற்று சிறிதும் மிகைப்படுத்தப்படதல்ல என்பதை இந்நாவல்களை வாசித்து முடியும் போது புரிந்து கொள்ளலாம்.
Share

தமிழக அரசியல் கலாசார தளங்களில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...(2)

(...முதல் பகுதியின் தொடர்ச்சி..)

கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம்
தமிழ் சினிமா தனது செல்வாக்கை ஆழமாக பதித்த மற்றொரு துறை அதன் கலாசாரமாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமா பார்க்கப் படும் இடங்களில் எல்லாம் இந்த கலாசார தாக்கம்  நன்கு அவதானிக்கப்படுகிறது. ஏன்? இலங்கையிலும் கூட.


இது ஒரு விரிவான பகுதியாக இருப்பிதால், கட்டுரையின் சுருக்கம் கருதி, தமிழ் சினிமா ஏற்படுத்திய எதிர்மையான தாக்கம் தொடர்பில்,    பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் அது எத்தகைய செல்வாக்கை செலுத்தி இருக்கிறது என்ற அம்சத்தை மட்டும் இங்கு நோக்குவோம்.

இது தொடர்பில், "Urban Women in Contemporary India" என்ற நூலில் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமணியம், மேரி பெத் ஆகியோர் முன்வைக்கும்
தரவுகள் நமது கவன ஈர்ப்புக்குரியான.   இது அகில இந்தியாவையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாக இருந்தாலும் தமிழ் நாட்டிற்கும் இது பொருத்தமானதுதான். இவ் ஆய்வு தரும் தரவுகளை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.

அண்மைய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. 1989 இல் 67,072 ஆக இருந்த பதிவு செய்யப்பட வன்முறைகள் 1993 இல் 84,000 ஆக உயர்ந்தது. 1995 இல் டெல்லி இல் மட்டும் 12,000 கற்பளிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்க அம்சம் 80%
குற்றச் செயல்கள் பதிவு செய்யப் படுவதில்லை என்பதாகும்.

பொது இடங்களில்  பெண்களை  கேலி  செய்வதும்  இந்தியாவில்  மிகப்  பரவலாக  இடம் பெறுகிறது. இவ்வாறு ஈடு படுவோரில் 30% பேர் கல்லூரி  மாணவர்கள் என்பதோடு, கல்லூரி மாணவர்கள் மத்தியில் 1997 இல் மேற்கொள்ளப்பட்டதொரு கருத்துக்கணிப்பில், 90% ஆன மாணவிகள்  தாம்  எதோ   ஒரு விதத்தில் பாலியல் தொந்தரவுகளுக்கு    ஆளாகி  இருப்பதாக  தெரிவித்துள்ளனர்.


இத்தகைய குற்றச் செயல்களின் வேகமான அதிகரிப்புக்கு  சினிமா  எவ்வாறு  காரணமாக  இருக்கிறது என்பதை பின்வருமாறு  நூலாசிரியர்கள்  விளக்குகின்றனர்.

இந்தியாவில் வருடாந்தம் சுமார் 800 படங்கள் 22 மொழிகளில் தயாராகின்றன. உலகில் மிக அதிக படங்கள் தயாராகும் இடம் இந்தியாதான். சினிமாவை பார்க்கும் நுகர்வாளர் அளவில் கூடுதலாக
இருக்கும் நாடும் இந்தியாதான். பெரும்பாலும் சமூகத்தின் சகல
தரப்பினரும் சினிமா பார்க்கின்றரனர். வருடாந்தம் 80-90 மில்லியன் பேர் சினிமா பார்க்கச் செல்கின்றனர். சிலர் மாதாந்தம் 20-30 முறை செல்வதோடு தமக்கு விருப்பமான திரைப்படத்தை பல முறை பார்வை இடுகின்றனர். இவர்களில் 5% இனர் மட்டுமே இந்திய தயாரிப்பல்லாத (பெரும்பாலும்  ஹாலிவுட்) படங்களை பார்க்கின்றனர்.

இதற்கு மேலாக, சினிமா பல்வேறு  வழிகளில்  நுகர்வாளர்களை  சென்று  அடைகின்றது. உள்ளூர் தொலைக்காட்சிகள் சினிமாவை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி  வருகின்றன.  கேபிள்  தொலைக்கட்சி  சேவையும் நம்ப முடியா வேகத்தில் வளர்ந்து வருகின்றது. 85% ஆன கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குனர்கள், தமது  சேவையை  விளம்பரப்  படுத்தும் நோக்கில், தினமும் இரண்டு படங்களை ஒளி பரப்பி வருகின்றனர். கணனிப் பாவனை, VCD க்கள், இணைய வசதி என்பன இதற்கு மேலதிகமானவை. இத்தரவுகள் சினிமா இந்தியர்  வாழ்வில்  எவ்வளவு  தூரம்  ஒன்றோடொன்று  பிண்ணிப்பினைந்துள்ளது என்பதை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகின்றன.


இந்திய வாழ்வில் சினிமாவின் ஆதிக்கத்தையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளையும் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமண்யமும், மேரி பெத்தும் பின்வருமாறு தொடர்பு படுத்துகின்றனர்.
"அதிகமாக நுகரப்படுவதால் மட்டும் சினிமா குற்றங்களை தூண்டுகிறது என்று சொல்லிவிட முடியாது. மாறாக, சினிமா மட்டுமே இந்திய கலாசாரத்தில் பாலியல் வெளிப்படையாக   பேசப்படும் ஒரே ஒரே மார்க்கமாக இருக்கிறது என்பதே எமது வாதத்தை மிகவும் வலுப்படுத்துகிறது".
மேற்சொன்ன தரவுகள் தமிழ் நாட்டு சூழலோடும் மிகவும் பொருந்திப் போகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்தியாவில் 22 மொழிகளில் மொத்தமாக  வருடாந்தம்  வெளிவரும் 800 திரைப்படங்களில் 130 படங்கள் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் படங்கள். இதைத் தவிர 1/6 சினிமா கொட்டகைகள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன(www.tamilnation.org).

வேறு    வார்த்தைகளில்  சொல்வதானால், ஒரு சராசரி இந்தியனை விட, ஒரு சராசரி தமிழன் படங்களை பார்க்கிறான்.

UNICEF, SAVE The Children என்பனவற்றின் அனுசரணையோடு இடம்பெற்ற ஓர் ஆய்வில், துணைக்கண்டத்தில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் கட்டிளமை பருவத்தினர் மத்தியில் பெருத்த செல்வாக்கை செலுத்துவதையும், அதிகாரம், பெண்களோடான உறவில் வன்முறை என்பன அவர்களிடத்தில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டு பண்ணுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.

தமிழ் நாட்டு சினிமாக்கள், குறைந்தபட்சம் இந்திய சினிமாக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் ஏற்ற்படுத்திய தாக்கம் தொடர்பில் வெளிவந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருந்த போதும், பொதுவாக சினிமாக்கள் ரசிகனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவது வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இருந்து தெரிய  வருகின்றது. ஆளுக்காள் தாக்கத்தின் பரிணாமமும், பரிமாணமும் மாறுபட்டாலும், சினிமா உளவியல் ரீதியில் மிக பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது என்னவோ பெரிய உண்மை.

ஆதலின் பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் தமிழ் சினிமாக்கள் பெரியதொரு வகி பாகத்தை வகிக்கிறது என்பதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.

தமிழ் சினிமாக்கள் கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தின் ஒரு அம்சமே இது. கட்டுரையின் சுருக்கம் கருதி, மற்ற அம்சங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்க விட்டு விடுகிறோம்.

சுருக்கமாக சொன்னால், தமிழ் சினிமா தமிழகத்தின் அரசியல், கலாசார தளத்தில் மிகப் பலமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அரசியல் வாதிகள் அரசியல் நோக்கில் சினிமாவை பயன்படுத்தினால், மறுபுறம்  வியாபார  முதலைகள்  கோடி கோடியாக  பணம் சம்பாதிக்க சினிமாவை நாடுகின்றனர். இதில் மக்கள்  ஏமாற்றப்படுகிறார்கள் என்ற உணர்வோ, எரிந்து கருகி சாம்பலாகிப் போகும்  கலாசார பெறுமானங்கள் குறித்த பிரக்ஞையோ இவர்களிடத்தில் கிஞ்சிற்றும் இல்லை.

ரசிகர்களின்  மட்டமான உணர்வுகளை தூண்டி விட்டு அதன் மூலம் தமது திரைப்படங்களுக்கு  விளம்பரம் தேடத்தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முற்படுகிறார்கள்.

அரசியல், வியாபாரம்  இந்த  இரண்டு   சக்திகளுக்கும்  இடையில்  அகப்பட்டு  தத்தளிக்கும் நிலையில்   தான் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். "ஓர் உயிரை கொள்வதை விட பண்பாட்டை கொள்வது தான் கொடுமை  என்பார்கள்.  அத்தகையதொரு கொடுமை தமக்கு எதிராக பொழுதுபோக்கு என்ற பெயரில் இடம் பெறுகிறது என்பதை உணர முடியா நிலையில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

துணை நின்றவை
  1. Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication, 2006
  2. www.tamilnation.org                   
Read More:
தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!
                     Share


அனைவருக்கும்

இனிய     


நோன்புப் 

பெருநாள் வாழ்த்துக்கள்


Eid Mubarak
Share

தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!

"தமிழ் சினிமா அதன் எழுபத்தொன்பது ஆண்டுகால வரலாற்றில், தமிழ் நாட்டின் கலாசாரத்திலும்  அரசியலிலும்  மிகவும்  தீர்மானமான  சக்தியாக  வளர்ந்து வந்துள்ளது"
(S.Thedore Baskaran, National Poltics and Entertainment Media in South India- 1880-1945, published in 1996).

பாஸ்கரன் குறிப்பிடுவது போல் தமிழகத்தின் அரசியல், கலாசார  தளங்களில் தமிழ் சினிமா பல அதிர்வுகளை ஏற்ற்படுத்தி வந்திருப்பதோடு,   அவற்றை இயக்கும் இயங்கு 
சக்தியாகவும் செயற்பட்டு வந்திருக்கிறது. தமிழ் சினிமா தமிழக அரசியலினதும், அதன் கலாசாரத்தினதும்  தவிர்க்க  இயலாத  கூறாக    மாறியுள்ளது. தமிழக அரசியலோடு  தமிழ் சினிமா கொண்டுள்ள உறவு குறித்த ஒரு சுருக்கமான முன்னுரையை வழங்குவதற்கு இக்கட்டுரை முனைகிறது.

சுதந்திரத்திற்குப்பிட்பட்ட தமிழகத்தின் அரசியலில் சினிமா துறையினர் 
அழுத்தமாக தமது செல்வாக்கை பதித்து வந்திருப்பது மிகவும் வெளிப்படையானது. அண்ணாதுரை, எம்.ஜி.ஆர, கருணாநிதி, ஜெயலலிதா என அனைவருமே சினிமா துறையை சார்ந்தவர்கள். இவர்களில் கருணாநிதியும் அண்ணாதுரையும் இன்று வரைக்கும் தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கதை எழுத்தாளர்களாக கருதப்படுகிறார்கள்.

தமது அரசியல் கருத்துக்களை மிகவும் வெற்றிகரமாக ஜனரஞ்சக மயப்படுத்த சினிமாவை இவர்கள் அனைவருமே 
மிகச் சாதூர்யமாக சினிமாவை பயன்படுத்தினார்கள். நாஸ்தீகம், ஜாதிமுறை எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இவர்களது திரைபடங்களில் முக்கிய பேசு பொருள்களாக திகழ்ந்தன.

இந்த வகையில் சிவாஜி கணேசன் நடிப்பிற்கு கருணாநிதி வசனம் எழுதிய "பராசக்தி" (1952) இன்று வரை தி.மு.கவின் அரசியல் கொள்கைகளை பறைசாற்றும் வகையில் வெளிவந்த படமாக இருப்பதாக கமல்
 ஹசன் குறிப்பிடுகிறார் (economictimes.indiatimes.com).

கமல் ஹசனுடைய திரைப்படங்களும் நாஸ்தீகத்தையும் இடது சாரி 
கருத்தியலையும் முன்வைத்தன. விஜயகாந்தும் தன்னை அரசியல் உறுதியாக நிலை நிறுத்தி கொள்ளும் பொருட்டு, தன் திரைப்படங்களை மிகவும் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். விஜயகாந்த், கார்த்திக், சரத் குமார் போன்றோர் தமக்கென்று தனித்தனிக்கட்சிகளை 
உருவாக்கிக்கொண்டுள்ளனர்.  2005  இல் உருவாக்கப்பட்ட விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் 2006 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு 10% வாக்குகளை பெற்றனர். ஒரு புதிய கட்சியாக இந்த வீதம் மிக அதிகமானது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று மூனறாவது பெரிய கட்சியாக திகழும் DMDK எதிர்காலத்தில் தி.மு.க, ஆ.தி.மு.க என்பவற்றிற்கு இணையான கட்சியாக வளர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு எதுவுமே இல்லை.

இதேவேளை, ரஜினி காந்தும் தனது அரசியல் பிரவேசம் குறித்த சமிக்ஞ்யைகளை வெளியிட்டு வருகிறார். அத்தகைய ஒரு பிரவேசம் இடம் பெரும் பட்சத்தில், தமிழக அரசியலில் ஏற்படக்கூடிய திருப்பங்கள் எத்தகையது என்பது குறித்த வாதப்பிரதி வாதம் ஒரு புறம் இருக்க, சினிமா நட்சத்திரங்களின் அரசியல் ஆதிக்கம் இன்னும் ஒரு நீண்ட காலத்திற்கு தொடரும் என்றுதான் தோன்றுகின்றது.

சினிமாவை தன் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தியவர்களில் M.G.R முதன்மையானவர். ஒரு முறை அவர் தி.மு.கவிற்கு ஒரு பெரும் தொகை நிதியை வழங்க முன் வந்த போது, அதனை வினயமாக மறுத்த தி.மு.கவின் அப்போதைய தலைவர் அண்ணாதுரை, "உன் இலட்சங்கள் எனக்கு தேவை இல்லை. உன் முகத்தை மட்டும் வந்து காட்டு. அது போதும். இலட்சங்கள் எம்மை தேடி வரும்" என்று கூறி இருந்தார். இதற்கு சிறுது காலத்தின் பின்புதான் M.G.R தி.மு.கவோடு, நேரடி அரசியலில் இணைந்தார் (economictimes.indiatimes.com).

தி.மு.க சினிமா என்ற பிரசார ஊடகத்தை மிக ஆரம்ப காலத்திலேயே மிக நேர்த்தியாக பயன்படுத்திக்கொண்டனர்.
தி.மு.கவை சேர்ந்த கதை ஆசிரியர்கள் கட்சியின் கொள்கைகளை பிரதி பலிக்கும் வகையில் M.G.R இன் 
படங்களுக்கு கதை எழுதியதாக சென்னையை தளமாக கொண்ட சினிமா விமர்சகரும், சமூக விஞ்ஞானியுமான பாண்டியன் தனது M.G.Ramachandran in Film and Politics என்ற நூலில் குறிப்பிடுகிறார். தமது கட்சியின் சின்னத்தையும், வர்ணப்படங்களின் வருகையோடு தமது கட்சியின் நிறத்தையும் திரைப்படங்களில் காட்சிப்படுத்த தி.மு.கவினர் தவறியதே இல்லை.

தாஸ் குப்தா என்பவரின் கணிப்பின் படி, M.G.R இதற்கு மட்டும் தமிழகம் முழுதும் இருபத்தேழாயிரம் ரசிகர் மன்றங்கள் இருந்ததாகவும், 
அவற்றில் ஒன்றரை மில்லியன் பேர்வரை அங்கம் வகித்ததாகவும் தெரிய
வருகிறது. இது ரஜினி காந்த், கமல் ஹசன் போன்றோருக்கு உள்ள ரசிகர்களை விட மிக மிக அதிகம்.

M.G.R ஐப்போல் தெலுங்கு நடிகர்  NTR இற்கும் இதே போன்ற ரசிகர்கள் இருந்ததாகவும், இவர்கள் இருவரினதும் வெற்றியில் ரசிகர் மன்றங்களின் பங்களிப்பை ஒரு சிறுதும் மறுப்பதற்கில்லை என ஆஷா கஸ்பேகா எழுதுகிறார் (Pop Culture In India: Media, Arts and Life Style).

சினிமாவில் நல்லவர்களாகவும், விடுதலை வீரர்களாகவும் வருவோரை நம்பி வாக்களித்து ஏமாந்து போகும் துர்பாக்கியம் தமிழகத்தில் 
இன்றுவரை தொடர்கிறது. தமிழக அரசியல் சமகால நிகழ்வுகளை பார்க்குமிடத்து, கிட்டிய எதிர்காலத்தில் இந்நிலை மாறுவதற்கான எந்த அறிகுறியும் கூட தென்படுவதாக இல்லை.

 துணை நின்றவை
  1. S.Thedore Baskaran, National Politics and Entertainment Media in South India (1880-1945).
  2. economicstime.indiatimes.com
  3. Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication,   2006.
  4. M.S.S. Pandiyan, The Image Trap: M.G.Ramachandran in Film and Politics.                                                                                         
Share

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

முன்னைய பதிவுகள்

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்