தொலை பேசியில் கதைத்து முடித்த ஷெரீப், ஏமாற்றத்தோடு வைத்தான். கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பாகத்தான் இந்தத் தனியார் கம்பனியில் நேர் முகப் பரீட்சைக்கு போய் வந்திருந்தான். அடுத்த நாளே முடிவை தருவதாக சொல்லி இருந்தார்கள். ஆனால், ஒரு வாரம் ஆகியும் எந்த முடிவும் வரவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமை இழந்தவன், நேரடியாக தொடர்பு தொடர்பு கொண்டு விசாரிப்பது என்று முடிவெடுத்தான். அட்டகாசமாக குரலுக்கு சுருதி சேர்த்த பெண் குரல் அவனுக்கு எரிச்சலை ஊட்டியது. அவன் தகுதியாகவில்லை என்பதையும் அறிவித்தது.
அவனுக்கு ஏற்பட்ட உணர்வு கோபமா? கவலையா? எரிச்சலா? என்பதை பிரித்தறிய முடியவில்லை. அனைத்தினதும் ஒரு கலவை. "கள்ளநோல், அவநோளுக்கு தேவையான ஆகளத்தான் எடுப்பானோல்"
இன்டேர்வீக்களை சந்திப்பதும் தகுதி இல்லை என்று செய்தி வருவதும் பழகிப்போன விடயங்கள். இப்படியே எவ்வளவு காலம் கடக்கபோகிறதோ?
"குடும்பப் பின்னணி பாக்குறான். படிச்ச ஸ்கூல பாக்குறான். இதெல்லாம் ஒழுங்கா ஈந்தா இந்த நாய்கல்ட எவன் போபோறான்'
இப்படியே தொழில் கிடைக்காமல் போய், முப்பது வயசுல ஒழுங்கான தொழில் கெடச்சி, முப்பத்தஞ்சி வயசுல கல்யாணம் முடிச்சு, நாப்பது வயசுல வாப்பவாகி, கெழவநாகிநத்துக்குப் பொரவ் புள்ள வளத்து...."
அவன் வயது இளைஞர்களுக்கு இருந்த இயல்பான பயங்கள் அவனுக்கும் இருந்தன. 'எவ்வளோ நாளக்கி உம்மா வாப்பாட செலவுல ஈக்கிற? இவ்வளவு காலம் ஈன்தது போதாவா?' அவன் உள்ளத்திலும் இலேசான வேதனை.
இப்போதெல்லாம் வெளியில் போதுவது கூட கஷ்டமாக இருந்தது.
'என்ன செய்ற இப்ப?' என்று ஒருவன் கேட்பான். 'இன்னம் ஜொப் கெடக்கல்லயா?' என்று ஏதோ பெரிய அக்கறை இருப்பதுபோல் மற்றொருவன் விசாரிப்பான். பெரிய, பெரிய ஐடியா என்று நினைத்து உருப்படாத யோசனைகளை எல்லாம் சொல்வான்.
இவன் தலையெழுத்து அவற்றை எல்லாம் கவனமாக தலையாட்டி கேட்டுக் கொண்டிருப்பது.
ச்சே...
இதனால் முடிந்தளவு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். குடும்பத்திற்கு அவன் மேல் இருந்த எதிர் பார்ப்பு வேறு அவனை மிகவும் சங்கடப் படுத்தியது.
ஒரு பஸ் செலவை கூட தன் சொந்த செலவில் செய்து கொள்ள லாயக்கில்லாதவன் இவன். அதைக்கூட உம்மாவிடம் தான் கேட்டு வங்க வேண்டும். தோளுக்கு மேல் வளர்ந்து இன்னும் சில்லறைகளுக்கு கூடவா உம்மாவிடம் தங்கியிருப்பது...
கொறஞ்சது இந்த அன்றாட செலவுகளுக்காலும், என்னவாலும் செய்யோணும்டூ பாத்தா, ஒரு ஒழுங்கான தொழில் அமயிதில்ல. பரவாயில்ல, என்ன தொழில் சரி செய்வோம் அப்பிடின்டு பாத்தா பாலா போன குடும்ப கௌரவம் உடுகுதில்ல.
பல்வேறு திசையிலும் சிந்தனையை செலுத்தி
யோசித்தான். கட்டிலில் சாய்ந்து கூரையை நோட்டம் விட்டான். எதுவும் சிந்தையில் தட்டுப் படுவதாக இல்லை. கடிகாரத்தை பார்த்தான். பிற்பகல் இரண்டு மணியை காட்டியது.
காலையில் இருந்து இந்த அறையில்தான் முடங்கிக் கிடக்கிறான். என்ன செய்வது? எங்கு போவது? எதுவும் புரியாத வேதனை. படித்து விட்டு தொழில் இன்றி, சூரியன் உதித்ததும் சுறுசுறுப்பாக இயங்கி, கருமங்களை நிறைவு செய்வதற்கு என்று எந்தக் கருமமும் இன்றி வெறுமையாக அப்படியே அந்திப் படுவதில் இருக்கின்ற துயரமும், வேதனையும் சொல்லும் தரமன்று. அதனை வேலை இல்லாமல் திண்டாடி துன்பப் பட்ட ஒருவனால்தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
திருமணமாகாமல் தனக்கு எவனாவது ஒருத்தன் வாழ்வு தர மாட்டானா என ஏங்கித் தவிக்கும் ஒரு முதிர் கன்னியின் உணர்வும், படித்து விட்டு வேலை இன்றி முடங்கிக் கிடக்கும் ஒரு இளைஞனின் உணர்வும் வேறு பட்டதல்ல. முன்னயவள் வாழா வெட்டி என பெயர் எடுக்கிறாள். பின்னயவன் வேழாவெட்டி ஆகிறான்.
இத்தனை காலம் கனவுகள் தாங்கி, சிரமப்பட்டு, தூக்கம் விழித்து படித்த படிப்பு ஒரு பெறுமானம் அற்று போகும் கணங்கள் இதயத்தில் ஏற்படுத்தும் வழி சொல்லும் தரமானதல்ல.
ஷெரீப் கூரையை பார்த்தபடி கட்டிலில் சாய்ந்து சிந்தனையில் திளைத்துக் கிடந்தான்.
அவனுடன் படித்தவர்கள் சம வயதில் உள்ளவர்கள் எவரும் ஊரில் இல்லை. ஆளுக்கொரு பக்கம் சிதறிபோய் விட்டார்கள். ஒவ்வொருத்தருக்கும் அவரவர் வாழ்க்கை போராட்டம்.
கடைசியாக மூன்று தொழில்களுக்கு விண்ணப்பம் போட்டிருந்தான். அந்த தொழில்களாவது சரிப்பட்டு வராவிட்டால்?
சிந்திக்கும் ஆற்றல் முடமாகிப்போய் இருந்தது. அளவுக்கதிகம் பிரச்சினைகள் சூழ்ந்து வரும் போது, ஒருவன் பைத்தியக்காரனாகி விடுவது இயல்புதானே!
யோசித்த வண்ணமே மெதுவாக உறங்கிப் போனான்!
####
ஷெரீப் அந்த ஹோட்டல் மேல்மாடியிலிருந்து மெதுவாக கீழிறங்கி வந்தான். கையை நன்கு சவரம் போட்டு கழுவிக்கொண்டான். குடித்த சிகரட்டின் வாசம் விளங்காமல் இருக்க ஒரு ஹெக்ஸ் டொபியை வாயில் போட்டுக் கொண்டான். இந்தப் பிரயத்தனங்களையும் தாண்டி சிகரட் குடித்திருப்பதை காட்டும் அடையாளமாக அந்த வாசம் இன்னும் வீசிக்கொண்டுதான் இருந்தது.
மிக அண்மையில் தான் அவனுக்கு சிகரட் குடிக்கும் பழக்கமே ஏற்பட்டிருந்தது. அவன் உயர் கல்வியை தொடரும் காலங்களில் அவன் நண்பர்கள் அவன் முன் அமர்ந்து மது அருந்துவார்கள்: சிகரட் குடிப்பார்கள். இவன் கையால் தொடக்கூட மாட்டான்.
அண்மைக்காலமாக அவன் உணர்ந்து வந்த அழுத்தத்தை குறைக்க சிகரட் உதவும் என நம்பியதால்தான் அவன் அதற்கு பழகி விட்டிருந்தான்.
ஹோட்டலில் இருந்து மெதுவாக வெளிப்பட்டு வந்தான். வெயில் கடுமையாக இருந்தது. இருந்தாலும், மழை மேகங்கள் இலேசாக அக்குரனையை வட்டம் இட்டிருந்தன. அந்திபட மழை பெய்யும் போல் இருந்தது.
மெதுவாக பாதையில் நடந்தான் ஷெரீப். அவனது மனதில் இலேசான சிந்தனை ரேகைகள். முபீன் ஹாஜியார் அவனை சந்திக்க வருமாறு அழைத்திருந்தார். அவனது ஒரு வேலை விஷயமாகத்தான். அவனது படிப்புக்கு அவ்வளவு பொருத்தமில்லாத தொழில்தான். ஆனாலும், ஓரளவு பெரிய கம்பனி என்பதால் எந்த வேலையானாலும் பரவாயில்லை, பிறகு எதையாவது செய்து கொள்ளலாம் என்று நினைத்தான்.
என்றாலும் மனதில் ஒரு உற்சாகமில்லை. வேறு வழி இல்லாததால்தான் இங்கெல்லாம் போகிறோம் என்ற உணர்வு சதாவும் இருந்து கொண்டே இருந்தது.
இதோ முபீன் ஹாஜியாரின் வீடு முன்னால் நிற்கிறது.
இரண்டு மாடி ஆடம்பர வீடு. பழைய கோட்டைகளின் வடிவத்தில் தற்போது கட்டுகிறார்களே, அந்த மாதிரி அழகான வீடு. முற்றம் எங்கும் புல் வளர்த்து அளவாக வெட்டி இருந்தார்கள். வாகனங்கள் செல்லவும், அவற்றை நிறுத்தவும் பொருத்தமான விதத்தில் சிறு பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இங்கொன்றும் அங்கொன்றுமாக நடப்பட்டிருந்த பூச்செடிகளில் நானாவித வர்ணங்களில் பூக்கள் மலந்து ஜொலித்தன. பைனஸ் மரங்கள் வீசிய குளிர்ந்த மெல்லிய காற்று உடலை குளிர வைத்தது.
மெதுவாக அந்த வளவுக்குள் நுழைந்த ஷெரீப் காலிங் பெல்லை அழுத்தினான்.
"யாரு?" ஓர் இள நங்கையின் குரல் சங்கீதமாக ஒலித்தது. "ஆ... முபீன் ஹாஜியார் ஈகிராரா?"
"ஆ.... இல்லை... "
அந்த குரல் ஒலித்து அதன் எதிரொலி பரவி முடிவதற்குள், ஷேரீபிற்கு
முன் கதவு திறந்து கொண்டது. அந்த சங்கீத குரலின்
சொந்தக்காரி ஓர் எழில் இளவரசியாக அவனுக்கு முன் நின்றிருந்தாள். ஒரு கணம் ஷெரீப் திகைத்தான். அவன் கண்கள் கூசின. இத்தனை அழகானதொரு இள நங்கையா? இன்னும் ஒரு
தடவை அவளை பார்க்கலாமா?
ச்சே... இதுக்கெல்லாம் இவனுக்கு என்ன தகுதி... அவனே வேறு வழியில்லாமல் அவள் வாப்பாவிடம் ஒரு இரண்டாந்தர வேலை கேட்டு வந்திருக்கிறான். இங்க வர்றதுக்கு அவன் கொடுத்த பச செலவு கூட அவன் சம்பரிச்சதில்ல... அதற்குள் ஒரு
காதல் வேறயா? மண்ணாங்கட்டி...
சில வினாடிகளுக்குள் நிதானித்து, தடுமாறிய தனது மனதை கட்டுப்படுத்திக்கொண்டான்.
"ஹாஜியார்... ஒரு ஜொப் விஷயமா இந்த டைமுக்கு வீட்ல ஈக்கிரண்டு வரச்சொன்னார்...". இப்போது அவனது குரலில் ஒரு கம்பீரம் இருந்தது. அவன் பேசிய தோரணை அவளுக்கும் அவன் மீது ஒரு மரியாதையை ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
"கொஞ்சம் நில்லுங்கோ... அப்பிடிண்டா வாப்பா வருவாவாய்க்கும்... கோல் பண்ணி கேக்குறேன், உக்காருங்கோ". வெளி
வராந்தாவில் போடப்பட்டிருந்த சோபாவை
காட்டிவிட்டு போய்விட்டாள். ஏனோ அவள் போனது அவனுக்கு ஒரு வித வருத்தத்தை தந்தது. அதுக்குல்லுக்கு எப்பிடி சொந்தம் பாராட்ட தொடங்கிட்டுது மனம்? ச்சே...
ஷெரீபுக்கு ஏதோ தயக்கமாக இருந்தது
. அந்த இடத்தின் ஆடம்பரம் அவனுக்கு ஒரு இனம் புரியாத அஸௌகரியத்தை தந்தது.எந்த பெரிய சப்தங்களும் இல்லை. அந்த ஏரியா முழுவதுமே இதைப் போன்ற பெரிய பெரிய வீடுகள்தான் எழுந்து நின்றன. அந்த பகுதியை சூழ்ந்திருந்த அமைதி, ஒரு வித மரியாதையை அங்கு வாழ்பவர்கள் மீது ஏற்படுத்தியது. கூடவே தான்
ஒரு அற்பன் என்ற உணர்வையும் தந்தது.
ச்சே... யார் சொன்னார்? ஏன் இந்த மாதிரி நினைப்பெல்லாம் வருகிறது? இவனுக்கும் ஒரு ஒழுங்கான தொழில் கிடைத்து, நல்ல சம்பளம் கிடைக்கும் போது பார்க்கலாம்.
சிந்தனை வயப்பட்டிருந்த ஷெரீப் யாரோ வரும் ஓசை கேட்கவே மீண்டும் தன் நினைவுக்குத் திரும்பினான். முபீன் ஹாஜியாரின் மகளாக இருக்கக் கூடாத என்ற சின்ன ஆசையும் மெல்ல எட்டிப் பார்க்கவே, மெல்லத் திரும்பினான் ஷெரீப்.
(இரண்டாவது பகுதியை வாசிப்பதற்கு...) Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment