"குமரி மாவட்டத்தில் வாழும் கடற்கரையை ஒட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும், எல்லா சமூகங்களுடனும் பொருந்திப் போவது... எழுத்தில் நாவல் முடிந்து விட்டாலும் நம்முள் நீள்கிறது..."
இது "துறைமுகம்" நாவலின் பின்னட்டை அறிமுகம்.
கதை இடம்பெற்ற காலம் சுதந்திரத்திற்கு சிறிது முற்பட்ட காலப்பிரிவு.
எல்லா சமூகத்திலும் இருக்கும் கொடுமைகள் இந்த முஸ்லிம் சமூகத்திலும் இருக்கிறது. ஏழைகளையும், தொழிலாலர்களையும் சுரண்டும் முதலாளி வர்க்கம், மதத்தின் பெயரால் இடம்பெறும் அநீதிகள், அதிகார வர்க்கத்தின் முரட்டுத்தனம்
... இவை அனைத்து சமுதாயங்களிலும் புரையோடிப்போயுள்ள அழுக்குகள்.
இந்த கிராமத்து மக்களின் ஜீவனோபாயம் மீன்பிடி. அதை தவிர வேறு தொழிலும் தெரியாது. தப்பித்தவறி கடல் ஏமாற்றி விட்டதென்றால், அவர்கள் பாடு அவ்வளவுதான்.
மீரான் பிள்ளை ஒரு சம்பை கட்டும் வியாபாரி. நெத்தலி, கருவாடு என்பவற்றை பொதி செய்து, கொழும்பிலும், தூத்துக்குடியிலும் இருக்கின்ற ஈனா பீனா கூனாவின் கடைக்கு அனுப்பி வைப்பது அவரது தொழில். சரக்கு போய்ச்சேர முன், விலை சரிந்து விட்டதாகவும், மலபாரிலிருந்து ஏராளமான சரக்குகள் வந்து இறங்கியதாலேயே விலை குறைந்தகவும் செய்தி வரும். மீரான் பிள்ளைக்கு ஈனா பீனா கூனா எழுதும் கணக்குகளில் அபார நம்பிக்கை. ஒரு கண்ணியமிக்க ஹாஜியார் பொய்சொல்ல முடியும் என்றோ, தன்னை ஏமாற்ற முடியும் என்றோ கனவில் கூட அவரால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. தனக்கு அல்லாஹ் விதித்தது அவ்வளவு தான் என்றே மீரான் பிள்ளை நம்பினார்.
வியாபாரத்தில் இலாப நட்டம் சகஜம் தான்... அதற்காக நட்டமே வந்து கொண்டிருந்தால்...? கையில் இருந்த முதல் கரைந்து, மணைவியின் நகைகள் செட்டியார் கடைக்கு சென்று கடனாளியாகிறார். கடைசியில் தனது சகல சொத்துக்களையும், இவ்வளவு காலம் வெயிலுக்கு காயாமலும், மழைக்கு நனையாமலும் காத்து தலைக்கு மேல் உயர்ந்து நின்ற வீட்டையும் இழக்கிறார் மீரான் பிள்ளை.
மீரான்பிள்ளை மட்டுமல்ல. சம்பை வியாபாரம் செய்வோர் அனைவருமே இதேபோலத்தான் நஷ்டம் அடைகிறார்கள். முதலாளி வர்க்கம் எல்லா சமூகங்களிலும் போல், அடித்தட்டு வர்க்கத்தின் குருதியை உறிஞ்சி அட்டைகளாய் வாழும் நியதி இந்த கடலோரக்கிராமத்திலும் இருப்பதை நாவலாசிரியர் சிறப்பாக படம் பிடித்துக்காட்டுகிறார்.
முதலாளிகள் ஒரு புறம் சமூகத்தின் உழைப்பை ஒரு புறம் சுரண்டி வாழும் அட்டைகளாக இருந்தால், மறு புறம் மதத்தின் பெயரால் சமூகத்தை அறியாமை இருளில் வாழ வைத்து அவர்களை தமது இஷ்டத்திற்கு ஆடச்செய்ய முனைகிறது அதிகார வர்க்கங்கள்.
'ஒரு பாமரனின் பக்தி ஆபத்தானது' என்று சொல்வார்கள். இந்த கூற்றுக்கு பின்னால் உள்ள ஞானத்தை புரிந்த கொள்ள நீங்கள் எங்கும் போக வேண்டியதில்லை. உங்களை சுற்றியுள்ள சமூகத்தை பார்த்தாலே இலேசாக புரிந்து கொள்ளலாம். ஒரு கோடிபதி, ஒரு ஏழையிடம் எளிமையாக வாழ்வதன் சிறப்பை எடுத்துக்கூறுகிறான். அதை வாய் பிளந்து கேட்க எத்தனையோ ஏழைகள் இருக்கிறார்கள் என்பது கொடுமையிலும், கொடுமையல்லவா?
இந்த நாவலிலும் இதற்கு சமாந்தரமான நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. முடி வைக்க கூடாது: அனைவரும் மொட்டை அடிக்க வேண்டும்: தவறி முடி வைத்தால், ஊர் விலக்கு: ஆங்கிலம் படிக்க கூடாது: கல்வி கற்கக் கூடாது: பத்திரிக்கை வாசிக்கக் கூடாது. இப்படி எண்ணற்ற முட்டாள்தனமான மார்க்க கட்டுப்பாடுகள். எதை வைத்து இந்த கட்டுப்பாடு? இவை எந்த புனித கிரந்தத்தில் சொல்லப்படுகின்றன? சொல்லும் லெப்பை மாருக்கும் தெரியாது. கேட்கும் பாமரர்களுக்கும் தெரியாது.
இப்படியான அறியாமைகளை தட்டிக் கேட்கும் இளைஞனாக காசிம் என்ற ஓரளவு படித்த இளைஞன் சித்தரிக்கப்படுகிறான். அவன் சொல்லும் கருத்துக்களை புரிந்து கொள்ளும் அளவு அந்த ஊர் மக்கள் இன்னும் முன்னேறவில்லை. ஊர் விளக்கப் படுகிறான். பிரித்தானியாவுக்கு எதிரான சுதந்திர போருக்கான இயக்கத்தில் தன்னை ஈடு படுத்திக்கொண்டவன், இறுதியில் மாட்டி கொள்கிறான். அவனது கனவுகள் எதுவும் நிஜமாகவில்லை. சிறை செல்கிறான். திரும்பி வருவானா என்பது தெரியாது.
மறு புறத்தில், பொருளாதார அநீதிகளின் சொந்தக்காரர் ஈ.பூனா.கூனா ஹஜ் செய்து விட்டு ஊர் திரும்பும் போது, ஊர் மக்களிடம் வரி அறவிட்டு, அசத்தலான வரவேற்று அழிக்கப்படுகிறது. அன்று பிறந்த பாலகன் போல் அவர் திரும்பி வருகிறார் அல்லவா?
மம்மாதிளின் குழ்ந்தை மரணித்ததும், மவ்லூத் கொடுக்க வசதியில்லாதவர், எந்த அநீதியை செய்து விட்டிருந்தாலும், அவன் மரணித்த பிற்பாடு மவ்லூத் கொடுப்பாதால் அல்லா அவரை மன்னித்து விடுவானா? அவர் குழந்தை எந்த பாவவும் அறியாதது; அதற்கு மவ்லூத் கொடுக்காவிட்டால், அல்லாஹ் தன்னை குற்றம் பிடிக்கமாட்டான் என்று நினைப்பது ஆழ் மனதை அப்படியே தொடுகிறது.
ஆனவிலங்கு என்ற நாவிதன் பாத்திரம், மதத்தை சொந்த இலாபத்திற்கு பயன்படுத்துவோரை நையாண்டி செய்வதாக இருக்கிறது. ஆண்களின் தலையில் முடி வைக்கக் கூடாது என்ற மார்க்கக் கட்டளை காரணமாக அவன் தொழில் நன்கு செழிக்கிறது.
நாவலின் முடிவிலும் இவர்கள் வாழ்வில் எந்த மாற்றமுமில்லை. சடுதியான மாற்றங்கள் எங்கும் இடம் பெறுவதில்லை. யதார்த்தை அப்படியே நாவல் படுத்தி இருக்கிறார் தோப்பில் முகம்மத் மீரான்.
நாவலில் கையாளப்படும் அரபு கலந்த பிரதேச வழக்கு, முஸ்லிம் அல்லாத ஒரு வாசகனுக்கு சில அசவ்கரியங்களை ஏற்படுத்தும்
என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், பிரதேச வழக்குப் பாவனை இன்றி அந்த மக்களின் உண்மையான உணர்வுகளோடு வாசகனை சங்கமிக்கச் செய்து விட முடியாது என்பதே நிதர்சனம்.
கடைசியாக சொல்வதானால், இது முஸ்லிம் சமூகத்தை மட்டுமே குறிக்கும் ஒரு நாவல் அல்ல. இது எல்லா சமூகங்களினதும் வாழ்கைபோக்கையும் பிரதிபலிக்கும் ஒன்றுதான்.
அனைவரும் அவசியம் படித்திருக்க வேண்டிய ஒரு நாவல். நாவலை வாசித்து முடித்த ஒரு சிறந்த படைப்பொன்றை வாசித்தோம் என்ற மனத்திருப்தியை தந்தது.
(பி.கு: அண்மையில் தோப்பில் முகம்மத் மீரான் மீள்பார்வை சஞ்சிகைக்கு கொடுத்த உள்ளத்தை தொடும் நேர் காணலை பார்வையிட இங்கே க்ளிக் செய்யுங்கள்). Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment