ஏப்ரில் மாத உஷ்ணமான வெயில் அகுரணை நகரை சுட்டுப்பொசுக்கியது. எதிர்ப்படும் அனைவர் முகங்களிலும் அதன் பிரதி பலிப்பு. ரிப்கான் மெதுவாக நடந்து வந்தான். அவனது நடையில் தளர்ச்சி.
நம்பிக்கையோ, எதிர்பார்ப்போ அற்ற முகத்தோற்றம். நெற்றியில் வாழ்கையின்
அனுபவங்கள் கிழித்த ரேகைகள்.ரிப்கான் மெல்ல நடந்து சுபைர்தீன் ஹாஜியாரின் வீட்டை நோக்கி சென்று கொண்டிருந்தான். காணியொன்றை விற்கும் முயற்சியில் அண்மையில் இறங்கி இருந்தான் ரிப்கான். பலரை சந்தித்தும் கதைத்தும் எதுவும் சரிப்பட்டு வரவில்லை. கடைசியாக சுபைர்தீன் ஹாஜியாரை நாடி இருந்தான். அவர் விபரங்களை கேட்டு விட்டு, இன்று அவனை வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தார்.
####
ரிப்கான்.. அவனுக்கு வயது முப்பத்தைந்தில் இருந்து நாற்பது வரை இருக்கலாம். இரண்டு பிள்ளைகள், மணைவி, பெற்றோர், இரண்டு தங்கச்சிமார் அனைவரும் அவன் ஒருவனின் உழைப்பில்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவன் ஒரு சிறிய சாதாரண கடை செய்து கொண்டிருந்தான்.
அவனது சம்பாத்தியம் இவர்கள் அனைவரையும் பட்டினியின்றி வைத்திருப்பதற்கு கூட போதவில்லை. போதாக்குறைக்கு உயர்ந்து செல்லும் வாழ்கைச்செலவு, பிள்ளைகளின் கல்விச்செலவு, பெற்றோரின் மருந்துச் செலவு, கல்யாண வயதில் இருக்கும் தங்கச்சிமார்... இவை அனைத்தும் சேர்ந்து அவனால் தாங்க முடியாத சுமைகளாக இருந்தன.
இதனால் ஒரு புது வியாபாரத்தை தேடினான். இந்த நேரத்தில்தான், சந்தர்ப்பமும் அருமையாக அமைந்து வந்தது. ஒரு வியாபார வாய்ப்பு. ஆனாலும், சில இலட்சங்கள் அதற்கு தேவை. அதற்கு எங்கு போவது? யார் கொடுப்பார்கள்? எச்ச சொஞ்சமாக இருக்கும் ஒரு சில பேர்ச்சஸ் விசாலமான ஒரே சொத்தையும் விற்பதற்கு முடிவெடுத்தான்.
இந்த வேலையாகத்தான் இன்று சுபைர்டீன் ஹாஜியாரை தேடி போவது. ஒரு வேலை மற்றவர்களை போல் சுபைர்டீன் ஹாஜியாரும் கை விரித்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை ரிப்கானை வாட்டி எடுத்தது.
###
சுபைர்டீன் ஹாஜியாரின் வீடு கம்பீரமாக நிற்கிறது. வெள்ளைப் பெயின்டில், பிரம்மாண்டமான இரண்டு மாடிக்கட்டிடம். முற்றம் முழுதும் புல் பதித்து, பூக்கன்றுகள் நட்டு அழகாக அதனை அமைத்திருந்தார்கள். சுற்றி வரவும் மதில் அமைத்து ஒரு கேட்டும் அமைத்திருந்தார்கள். அந்த வளாகத்திற்குள் நுழையும் போதே, ஒரு வகை குளிர்தன்மையை உணரும் விதமாக சிறிய மரங்கள் அமைக்கப் பட்டிருந்தன. ஒரு ஓரத்தில் சுபைர்டீன் ஹாஜியாரின் இரண்டு
நவீன ரக வாகனங்கள் அமைக்கப் பட்டிருந்தன.
ஒரு சாதாரண மனிதன் அந்த வளவுக்குள் நுழைந்தால், ஹாஜியார் மீது ஒரு மதிப்பச்சம் நிச்சயம் தோன்றும். தனது மதிப்பை சில போது அவன் அற்பமாக உணர்வான்.
ரிப்கான் அந்த நுழை வாயில் அருகில் வந்ததும், இதே உணர்வைத்தான் பெற்றான். 'நுழையலாமா? வேண்டாமா?'.
அவன் என்ன பிச்சையா கேட்டு வந்தான். தனது சொந்த சொத்தை கொடுத்து பணம் கேட்டு வந்துள்ளான்'. தைரியத்தை வரவளைத்துக்கொண்டு உள்ளே நுழைகிறான்.
கால்லிங் பெல்லை மெதுவாக அழுத்துகிறான். அதை மெதுவாக அழுத்திய விதம் கூட சுபைர் ஹாஜியார் மீதிருந்த மரியாதையை பறை சாற்றுவதாக இருந்தது. முகத்தில் இருந்த வியர்வையை, கைகுட்டையால் துடைக்கிரான்.
"யாரு?" ஒரு பெண் குரல்.
"ஆ.. ஹாஜியார் ஈக்குறாங்களா?"
"ஒ நீங்க யாரு?.. "
"நான் துனுவில ரோட் ரிப்கான், சையித் லெப்பெடெ மகன்."
"நில்லுங்கோ... பேசுறேன்..."
கதவு இன்னும் திறக்கவில்லை.
சில நிமிட மௌனம். அந்த சில நிமிடங்களில், நெஞ்சில் இலேசான நடுக்கம்.
ஒரு பெரிய ஹாஜியார சந்திக்க போற நேரம் நடுக்கம் இல்லாம ஈக்குமா? ஹாஜியார் மட்டும் ஹா'ண்டு (சரி என்று) சொல்லிடோனும்.
கதவு மெல்லத் திறக்கிறது.
சுபைர்தீன் ஹாஜியார் நின்று புன்னகைக்கிறார். பழுத்த தாடியும், கூர்மையான கண்களும் ஒரு வித மரியாதையை அவர் மீது அவனுக்கு உண்டு பண்ணின. சுமார் அறுபத்தைந்து வயது இருக்கலாம் சுபைர்தீன் ஹாஜியாருக்கு.
சலாம் சொன்னார்: முஸாபஹா செய்தார்.
"வாங்கோ... வாங்கோ... சயீத் லெப்பெடெ மகனா? நான் இப்பதான் லொகர் தொழுதுட்டு, ஹாஷிம் ஹாஜியாரை அப்பிடியே சந்திச்சிட்டு இப்பதான் வீட்டுக்கு வந்த".
அவரது வாய் நிறைந்த புன்னகை, வரவேற்பு, பேச்சில் தொனித்த கம்பீரம் குறையாத உபசரிப்பு அனைத்தும் சேர்ந்து ரிப்கானுக்கு ஒரு வித நம்பிக்கையை ஏற்படுத்தின.
"உக்காருங்கோ... உக்காருங்கோ..." ஒரு நாற்காலியை காட்டினார். எண்ணி விட்ட சில தடவைகள்தான் இப்படியான ஆடம்பர நாற்காலிகளை வாழ்கையில் அவன் கண்டே இருக்கிறான். அவற்றில் உட்காரவே கூச்சமாக இருந்தது: பழக்கமின்மையால் ஒரு வித அஸௌகர்யம் இருந்தது. அந்த நாற்காலியின் முற்பகுதியில் மெதுவாக
அமர்ந்து கொண்டான். அந்த ஆடம்பர வீட்டின் அலங்காரங்கள் ஒரு வித வெட்க உணர்வை அவனுள் தோற்று வித்தன. ஒரு சிறிது கூட அவனது வீட்டை இதனோடு ஒப்பிட முடியாது.
"எப்பிடி வாப்பா சொகமா ஈக்கிராவா? புள்ளைகள் படிக்குதுகளா? தங்கச்சிக்கு எங்கயாலும் எடம் சரி வந்துதா?" ஹாஜியார் மிகவும் கரிசனையோடு விசாரித்தார்.
"எல்லாம் ஹைரா வரும்.... அல்லாஹ்ட நாட்டம், கிருபை எல்லாம் வரக்கொள்ள எல்லாம் சரியா வரும்". சுபைர் ஹாஜியார் நம்பிக்கை ஊட்டினார். ரிப்கானின் குடும்பத்தோடு எவ்வாறெல்லாம் முன்பு சுபைர் ஹாஜியாரின் குடும்பத்துக்கு நெருங்கிய உறவு இருந்தது என்பதை சுபைர் ஹாஜியார் எடுத்து விளக்கினார்.
ரிப்கானுக்கு முழு நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. இந்தளவு கரிசனையை ஹாஜியாரிடம் இருந்து அவன் ஒரு சிறிதும் எதிர் பார்க்கவில்லை.
ஹாஜியாரின் குடும்பத்தை பற்றியும் ஒரு மரியாதைக்கு அவன் கேட்டு வைத்தான். "மகன் படிச்சு முடிஞ்சு... லண்டன்ல ஈந்து வார மாசம் வார. அவனுக்கு ஒரு கல்யாணத்தையும் முடிச்சு வச்சு, யாவாரத்தையும் அவன்ட கைல ஒப்படச்சிட்டா, அதுக்கு பொறகு இனி பள்ளி விஷயம், ஊரு விஷயத்த பாத்துண்டு, அமல் இபாதத்தொட ஈந்துடேலும்".
ஹாஜியாரின் மகன் எவ்வளவு பெரிய திறமை சாலி என ரிப்கான் நினைத்தான்.
அறிவும், கல்வியும் பணம் படைத்தவர்களின் ஏகபோக சொத்தாக மாறிவிட்ட இன்றைய உலகில் அது ஒன்றும் பெரிய விடயம் இல்லை என்பது அவனுக்கு தெரியவில்லை.
"ஒங்கட காணி விஷயம்... "
தொண்டையை கனைத்துக்கொண்டே விஷயத்திற்கு வந்தார் ஹாஜியார். ரிப்கான் அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அவர் முகத்தையே ஆவலோடு உற்று நோக்கிக் கொண்டு இருந்தான்.
"ஒங்கட கடைசி விலைய சொல்லுங்களே"
ரிப்கானுக்கு சற்று தர்ம சங்கடமாக இருந்தது. "நூர்தீன் ஹாஜியாருக்கு பேர்ச்சஸ் ஒண்டு எழுபத்தஞ்சு (ஒரு இலட்சத்தி எழுபத்தைந்தாயிரம் ரூபாய்) சொன்ன. ஹாஜியார் பாத்து தாங்கோ... ஒங்களுக்கும் நஷ்டம் இல்லாம... எனக்கும் நஷ்டம் இல்லாம"
சுபைர் ஹாஜியாரின் பார்வை எங்கோ தூரத்தில் உள்ள ஒரு பொருளை ஆய்வு செய்வது போல் சிந்தனை செய்தார். ஏதோ மனதுக்குள் கணக்குப் போடுவது போல் தெரிந்தது. நெற்றியை சுருக்கிய வண்ணம் தாடியை குடைந்து விட்டார். ரிப்கான் அவரது பதிலை எதிர் நோக்கிக் காத்திருந்தான்.
"அந்த எடத்துல அவ்வளோ போகாதே"
தான் சொன்ன விலை மிகவும் நியாயமானது என்று ரிப்கானுக்கு தெரியும்.
"இல்ல ஹாஜியார், போன மாசமும் அந்த விலைக்கு பக்கத்து காணி ஒண்ட கொடுத்தீகிராங்கோ"
அதை ஹாஜியார் காதில் போட்டுக்கொண்டது போல் தெரியவில்லை.
"நான் யோசிச்ச தொன்நூருக்கு கேக்குறதுக்கு, சரி பரவாயில்ல, ஒண்டுக்கு (ஒரு இலட்சத்துக்கு) எண்டா முடிப்போம்". ஹாஜியார் தனது விலையை சொன்னார்.
"இப்ப பிஸ்நெஸ் எல்லாம் சரியான நஷ்டம்... தொழில் செய்கிறது முந்தி மாதி லேசி இல்ல. தெரியிம் தானே ஒங்களுக்கு. அதனால மிச்சம் காணிகள் ஒண்டும் வாங்குறது இல்ல. நீங்க கேக்குறதுக்காக ஒரு மொஹப்பத்துக்கு வாங்குவோம்ண்டு பாத்த".
இப்போது ஹாஜியார் ஒரு அசல் வியாபாரியாக தோன்றினார்.
"ஒன்டுக்கேண்டா முடிப்போம். இல்லாட்டி இப்போதக்கி கஷ்டம். பொறகு பாப்போம்".
சுபைர் ஹாஜியார் முடிவாக சொல்லி விட்டார். ரிப்கானுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. இந்தளவு குறைந்த விலை கேட்பார் என்று அவன் ஒரு சிறிதும் எதிர்பார்க்க வில்லை. ரிப்கான் ஒரு
இலட்சத்தி ஐம்பதாயிரத்துக்கு வந்தான். சுபைர் ஹாஜி ஒரு சிறிதும்
நெகிழவில்லை. இப்போது முடியாதென்று போனாலும், வேறு வழியின்றி தன்னிடமே திரும்பி வருவான் என்று அவருக்குத் தெரியும். இவனைப் போல் எத்தனை பேரை தன் வாழ்வில் பார்த்திருக்கிறார்? அவசரத்தேவைகளுக்கு
காணிகளை விற்பது ஒன்றும் அவ்வளவு இலேசானதல்ல. முயலை ஏன் துரத்த வேண்டும்? அது களைத்துத் தொய்ந்து போய் தானாக அவர் காலடியில் போய் விழப்போகிறது. கொஞ்சம் விட்டுப் பிடித்தால் போகிறது.
அப்படியே வேறு ஒருவருக்கு விற்க முனைந்தாலும், உடனே அவசரமாக வாங்கி விடலாம். அவரது வீடு கம்பீரமாக நிற்கும் அந்த காணி கூட, அப்படி அரை விலையில் வாங்கியதுதான். அவரை பொறுத்தவரை இது அவரது திறமை.
மீண்டும் சுபைர் ஹாஜியார் சொன்னார்.:
"காணி இப்போதக்கி தேவல்ல. மத்த ஆக்களுக்கு ட்ரை பண்ணுங்கோ. அல்லாஹ்ட நாட்டம் உள்ளாக்களுக்கு கெடக்கிம்... நான் சொன்ன விலக்கி எண்டா, கைல ஈக்கிற காச வச்சி என்னத்தயாலும் யோசிக்க ஏழும்".
அவர் சொன்ன விதம், அவன் மறு பேச்சு பேச இடம் வைக்காத விதத்தில் இருந்தது.
ரிப்கானின் உலகம் சுழன்றது. மணைவி, பிள்ளைகள், நோய் வாய்ப்பட்டுள்ள பெற்றோர், கல்யாண வயசில் உள்ள தங்கச்சிமார், அனைவரும் அவன் மனக்கண் முன் வந்து மறைந்தனர். அவன் தலை கனத்தது. ஹாஜியாரும் கை விரித்து விட்டார். இறுதி நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.
பேசாமல் ஹாஜியார் சொன்ன விலைக்கே பேசாமல் ஒப்புக்கொண்டு விடுவோமா?
"ஹாஜியார், வாப்பாவோடையும் கொஞ்சம்
மஷூரா பண்ணிட்டு சொல்லவா?"
வாப்பாவோடு ஆலோசனை நடத்துகிறானோ, இல்லையோ பெரிய முடிவுகள் எதனையும் எடுத்த எடுப்பில் எடுத்து விடக்கூடாது என்பது அவனது அனுபவம்.
"நல்லம் மகன், நீங்க நல்லா யோசிச்சு, மஷூரா பண்ணி ஒரு முடிவ சொல்லுங்கோ. எல்லாத்துக்கும் அல்லாஹ்ட நாட்டம் ஈக்கொனும்... அல்லாஹ்ட காவல். போய்ட்டு வாங்கோ"
ரிப்கான் வெளியில் வந்த போது அவனது மனதின் உஷ்ணத்தோடு, வெயிலின் உஷ்ணமும் சேர்ந்து கொண்டது. உஷ்ணம் நரகத்தில் இருந்து வருகிறதாம். உலகத்திலும் நரகம் இருக்கிறதோ?
###
அனைவரிடமும் சொல்லியாகி விட்டது. எல்லா ஏற்பாடுகளும் செய்தாகி விட்டது. காணியை காட்டவும், ஆட்களோடு பேசவும் நடந்து, நடந்து கால்களும், செருப்பும் தேய்ந்தது மட்டும்தான் மிச்சம். இன்னும் சில நாள்களுக்குள் பணம் ஏற்பாடு செய்யத்தவறினால், புதிய வியாபார வாய்ப்பு தவறிப்போகும். அதன் பிறகு இப்படி வாய்ப்பு வரும் என்று அவனால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.
இப்போது மிகக் கடினமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை. ஒன்று, புதிய வியாபார வாய்ப்பை தவற விட வேண்டும். அல்லது அவனது ஒரே சொத்தான சில பேர்ச்சஸ் காணிகளை மிகவும் குறைந்த விலையில் விற்க வேண்டும்.
காணியை விற்று புதிய வியாபாரத்தை தொடங்கினாலும், அது எதிர் பார்த்த பிரதி பலனை தராவிட்டால்? அவன் குழம்பிப்போய் இருந்தான்.
###
"நீங்க அவசரமாக எங்களுக்கு முடிவு சொல்லோனும், நீங்க இல்லை எண்டா, எங்களுக்கு வேற ஆள சரி பாக்க ஏழும்".
புதிய வியாபாரம் சம்பந்தப்பட்ட ஆட்கள் தொடர்ந்தும் தொடர்பு கொண்டு நச்சரித்தார்கள். இதற்கு மேலும் அவர்களை காக்க வைக்க முடியாது. எதாவது முடிவை சொல்லியாக வேண்டும்.
ரிப்கான் யோசித்துக்கொண்டிருந்தான்.
உம்மாவுக்கும் சுகமில்லை. மருந்து எடுக்கவில்லை
இன்னும். பிள்ளைகளின் இரண்டு மாதத்திற்கான கிளாஸ் பீஸ்களை இன்னும் கட்டவில்லை.மின்சாரப் பட்டியல், தண்ணீர் பட்டியல், தொலை பேசிப் பட்டியல், எதுவும் கட்டப் படாமல் இருந்தன. வீட்டுத்தேவைக்கு கடனுக்கு வாங்கிய சாமான்களுக்கு இன்னும் பணம் செலுத்தவில்லை.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது. விலை குறைந்தாலும் பரவாயில்லை. சுபைர் ஹாஜியாருக்கு காணியை கொடுப்போம்.
மற்றது வருவது வரட்டும். முடிந்த முயற்சிகள் அனைத்தும் செய்தாகிவிட்டது. இதற்கு மேல் உடம்பிலும் சக்தியில்லை, மனசிலும் சக்தியில்லை. மிச்சத்தை படைச்ச ரப்பு பார்த்துக்கொள்வான்.
தீர்மானகரமாக முடிவெடுத்தான். முடிவெடுத்தவன் சுபைர் ஹாஜியாரின் வீட்டை நோக்கி நடந்தான். அவனது கடைசிச் சொத்தும் இன்னும் சில மணி நேரத்தில் சுபைர் ஹாஜியாரின் கைகளுக்கு கை மாறப் போகிறது.
அதைப் பார்த்து வானத்தில் உள்ளவனுக்கு பிடிக்கவில்லை என்பதை போலவோ என்னவோ, இடியுடன் உகைப்பு மழை மடை திறந்து பொழிந்தது.
(யாவும் கற்பனை அல்ல)
Share
2 பதிவு குறித்த கருத்துக்கள்:
good, keep it up
நன்றி சோதரா !
Post a Comment