ட்ரூ... ட்ரூ... ட்ரூ...
ஆட்டோ சப்தம். சத்தார் களைப்பாக வந்து இறங்கினான்.
இரவு பதினொன்றரை மணி இருக்கலாம். ஊரெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. எந்த சப்தமுமில்லை.
தூரத்தில் கேட்ட தெரு நாய்களின் குறைப்போசையும், இரவு நேரத்தில் மட்டுமே சஞ்சரிக்கும் இரவு நேரத்து உயிர்களின் சப்தமும் தவிர வேறு எந்த சப்தமும் இல்லை. அந்த மயானமான நிசப்தம் ஒருவித பீதியையும் தந்தது.
வானத்து விண்மீன்களின் நீளமான அணிவகுப்பு. ..
இருட்டுக்குப் பயந்து கறுப்புப் போர்வை போர்த்தி உறங்கும் தூரத்து மலைகள்...
ஆழ்ந்து உறங்கும் மரங்கள்
அவை புரண்டு படுப்பதாலோ என்னவோ எழும் ஓசை
அதனோடு
சேர்ந்து வரும் மெல்லிய தென்றல்
இவற்றில் எதனையும் ரசிக்கும் நிலையில் சத்தார் இல்லை. ஆட்டோவிற்குரிய கூலியை கொடுத்து அனுப்பினான். பகல் முழுதும் உழைத்துக் களைத்த வடு அவன் முகத்தில் கையெழுத்திட்டிருந்தது. காலையில் ஒன்பது மணிக்கு கடையை திறந்தால், இரவு பத்து மணியாகும் மூடுவதற்கு... பலசரக்குக்கடை.
கடையை மூடினால் சாமான்களை ஒழுங்கு
படுத்துவது, அன்றைய கணக்கு வழக்குகளை பார்ப்பது, கடையை துப்புரவு செய்வது, தேவை அற்றவற்றை அகற்றுவது எல்லாம் அவன்தான். இத்தனையும் முடித்து வீடு சேர எப்படியும் பதினொன்றை மணியாகும்.
இன்றும் அப்படித்தான்...
வீட்டு மணியை அழுத்தினான். அரைத்தூக்கத்தில் மணைவி சபீனா கதவை திறக்கிறாள்.
மெதுவாக வீட்டினுள் நுழைகிறான்.
"நுஸ்ரி, இவ்வளோ நேரம் அழுதுட்டு இப்பதான் தூங்குற. சரியான இருமல், ஒரு ஜாதி காச்சல் மாதி. நாளக்காலும் மருந்து எடுக்கோணும்".
சத்தார் எதுவும் பேசவில்லை. மெதுவாக அறைக்குள் நுழைந்தான். தான் வீட்டுக்கு வந்த உடனே வீட்டு பிரச்சினை எதயாலும் பேசுறது சத்தாருக்குப் பிடிக்கவே பிடிக்காது. 'அடுப்படில உப்புத்தூள் முடிஞ்சதிலீந்து, பக்கத்தூட்டு காணிச் சண்ட வர, மாப்புள வந்தோனே கதைக்காட்டி இவளுக்கு தூக்கமே வராது போலீக்குது'. சத்தாருக்கு கோபம்.
மனுஷன் காலைல ஈந்து கஷ்டப்பட்டு நொந்து போய் வாரான். இங்க வந்தோனக்கி இங்கயும் எனத்தயாலும் பிரச்சினைதான்.
சபீனா வீட்டு பிரச்சினை எதைப் பத்தி பேசினாலும், சத்தாருக்குப் பிடிக்காது. அவனும் கடைப் பிரச்சினைகளை அவளிடம் கதைக்க மாட்டான்.
இதனால், வீட்டில் அவன் பெரிதாக பேசுவதில்லை. உம்மென்று வாயை வைத்துகொள்வான். சாப்பிட்டு விட்டு அப்படியே தூங்கி விடுவான்.
கலகலப்பாக வீட்டில் பேசிச் சிரித்த நாட்களே ஞாபகமில்லை சத்தாருக்கு. காலையில் எழுந்து, பல் துலக்கி, ஒரு டீயை குடித்து, குளித்து விட்டு கடிக்குப் போனான் என்றால், மீண்டும் நள்ளிரவில் தான், களைப்போடு திரும்பி வருவான். இதில் எங்கே அவனுக்கு கலகலப்பாகவும், சந்தோஷமாகவும் இருக்க நேரம் இருக்கப் போகிறது?
ஒரு மௌனமான வேதனையை அவர்கள் இருவரும் அனுபவித்துக்கொண்டிருந்தார்கள்.
###
அதுவெல்லாம் இப்போது
கனவைப் போல் இருக்கிறது. அப்போது சத்தார் தெலும்புகஹவத்தை வீதியில் வெட்டியாக சுத்திக்கொண்டிருந்தான். அவன் ஒரு வாட்ட சாட்டமான இளைஞன். அழகாக
உடைகளை தெரிவு செய்து அணிந்து கொள்வதில் அவனுக்கு நிகர் அவன்தான். தலைமயிரை அழகாக 'கெப் கட்' வெட்டியிருந்தான். அந்த நாட்களில் அதுதான் பெஷன். சிலருக்கு 'கெப்கட்' சிரட்டையை வழித்தது போல் அசிங்கமாக இருக்கும்: அவர்களை பார்த்ததும் ஏனோ, ஆபிரிக்க காடுகளில் வாழும் வித விதமான குரங்குகள் ஞாபகம் வருவது தவிர்க்க முடியாது.
'கெப்கட்' ஒழுங்காக அமைவது ஒரு சிலருக்குத்தான். அதில் சத்தாரும் ஒருவன்.
அப்போதெல்லாம் தன் மோட்டார் சைக்கிளில் சத்தார் ஏறினான் என்றால் அதன் கலையே தனி... தெலும்புகஹவத்தையில் சத்தாரை தெரியாதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம். ஓரளவு வசதியான வீட்டுப்பிள்ளை ஆதலால், வெட்டியாக சுத்தினாலும், அதனை யாரும் அலட்டவில்லை. 'வாப்பாவின் கடைக்குப் போனால், எல்லாப் பொறுப்புகளும் தானே வந்து விடப் போகிறது'.
சத்தாரின் நண்பன் ஒருவன் தெலும்புகஹவத்தை வீதியில் ஒரு தேநீர் கடை வைத்திருந்தான். அதை ஒரு சிறிய ஹோட்டல் என்றும் சொல்லலாம். அதன் முன்னால் ஒரு பெஞ்சும், அதன் மேல் ஒரு கரம் போர்டும் இருக்கும். எதையாவது கொரித்துக் கொண்டு, அல்லது குடித்துக் கொண்டு அங்கு உட்கார்ந்து சில இளைஞர்கள் எப்போது பார்த்தாலும் கரம் விளையாடிக்கொண்டு இருப்பார்கள். விளையாட்டின் நடுவே
விஜயின் லேட்டஸ்ட் படம், முந்தநாள் கிரிக்கட் மெட்சில் ஜயசூரியவின் அசத்தலான ஆட்டம் என்று ஏகப்பட்ட விடயங்களை அளசிக்கொள்வார்கள். நண்பனும் போதாதென்று லேட்டஸ்ட் பாட்டுகளை முழக்கி விடுவான். லேட்டஸ்ட் பாட்டுகள் ரிலீசாகி சில நாட்கள் உள்ளாகவே அவற்றின் கசட்டுகளை எப்படியாவது தேடி எடுத்து விடுவான்.
அதனால் அந்த தேநீர் கடைக்கி அமோகமான வியாபாரம். கிட்டத்தட்ட தெழும்புகஹவத்தை இளைஞர்களின் மத்திய நிலையம் அது.
சத்தாரும் தன் பைக்கில் அடிக்கடி அங்கு வருவது வழக்கம். கொஞ்சம் கரம் விளையாடுவது, அரட்டை அடிப்பது, ஏதாவது குடிப்பது...
அப்படி அந்த தேநீர் கடையில் வைத்துத்தான் சபீனாவோடு பழக்கம் ஏற்பட்டது. வெள்ளை முக்காடோடு பாடசாலை உடை உடுத்தி காலை நேரங்களில் சிலபோது அவள் அங்கு வருவாள். பாடசாலைக்குப்போக, அங்குதான் அவள் காலைச்சாப்பாடு வாங்குவாள். எப்போதும் அங்கு வரமாட்டாள். சில போது வீட்டிலேயே சாப்பாட்டை எடுத்துக்கொண்டு தெழும்புகஹவத்தை லொறியில் ஏறி போய் விடுவாள்.
தெழும்புக்ஹவத்தையில் இருந்து அக்குரணை நகருக்கு வாருவதற்கு பஸ்கள் ஒன்றும் இல்லை: லொரிகள்தான். குன்றும் குழியுமான பாதையில் குழுங்கிக்குழுங்கி வந்து சேர வேண்டும். ஹயர்கள் போய் வெற்றியாக திரும்பும் ஆட்டோக்களிலும் ஏறிக்கொள்ளலாம். இந்த இரண்டும் இல்லாவிட்டால் கால்நடைதான்.
அப்படி சபீனா வரும் போதுதான், அவளோடு சத்தாருக்குப் பழக்கம் ஏற்பட்டது. சபீனாவை காண்பது அதுதான் முதல் தடவை என்றில்லை. சிறு வயதில் அவளோடு விளையாடி இருக்கிறான். தூத்தி அடி, கள்ளன் பொலிஸ், சுண்டாட்டி, எறச்சி முள், கண்கட்டி, நொண்டி, தொரத்தி, ஒளிச்சி, அப்பண்டா, சீசா அப்பண்டா, குஞ்சூடு... இப்படி ஏகப்பட்ட விளையாட்டுக்கள்.
ஸ்கூலில் கூட அவளை கண்டிருக்கிறாள். அவள் கீழ் வகுப்பில் படித்துகொண்டிருந்தாள். ஆனால், இப்போது அவளை பார்த்த பார்வையில் வித்தியாசம் இருந்தது. அவளது பார்வையில் நாணம் இருந்தது. இலேசாக புன்னகையில் ஆரம்பித்து... (இதற்கு பிறகு நமக்கு நன்கு பழகிப்போன கதை).
அவர்களது காதலுக்கு எதிர்ப்பு அப்படி இப்படி என்று ஒன்றும் இல்லை. வாப்பாவின் கடையில் சத்தார் செட்டில் ஆக, வசதி குறைவான பெண்வீட்டார் பச்சை கோடி காட்ட திருமணம் இனிதே நடந்தது.
இனி அவள் அவனுக்கு சொந்தம். அவன் அவளுக்கு சொந்தம்.
எத்தனை இனிமை?
ஆம். அது இனிமையாகத்தான் இருந்திருக்க வேண்டும்: உயிருக்கு உயிராக நேசிப்பாதாக சொல்லிக்கொண்ட இரு இருதயங்கள் திருமண பந்தத்தில் இணைக்கிறதென்றால் , அது இனிமையாகத்தானே இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த மகிழ்ச்சி இருக்கவில்லை. ஏதோ ஒரு தெளிவற்ற நெருடல். அந்த இரண்டு இதயங்களும் வர வர சேய்மை பட்டுத்தான் போய்க் கொண்டிருந்தன.
###
சத்தார் கண்ணை கசக்கிக் கொண்டு மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு எழுந்தான். கடிகாரத்தை பார்த்தான். எட்டு முப்பதை காட்டியது. கண்ணை கசக்கிக் கொண்டான். வழமையாக நீண்ட நேரம் கண் விழிப்பதால், ஒரு வித அயர்ச்சியும், உடல் அசதியும் அவனுக்கு இருந்தது. மெதுவாக அறையில் இருந்து வெளிப்பட்டான். சபீனா முற்றம் கூட்டும் சப்தம் கேட்டது. நுஸ்ரி இன்னும் எழுந்திருக்கவில்லை. தொட்டிலில் தூங்கிகொண்டிருந்தான்.
சத்தாரின் மனம் வெறுமையாக இருந்தது. இருந்திருந்து எப்போதாவது எதிலும் பிடிப்பற்ற ஒரு நிலை தோன்றுமே அப்படி ஒரு நிலை சத்தாருக்கு.
எத்தனை கஷ்டப்பட்டும் ஒரு சந்தோசமில்லை.
கல்யாணத்திற்கு பிறகு வாப்பா திடீரென்று மௌத்தாக, தனியாக கடையை நடத்திக்கொள்ள தெரியாமல் கடை நஷ்டமாக, இருந்தவற்றை விற்று, சுருட்டி ஆராங்கட்டையில் ஒரு பலசரக்கு கடையை திறந்தான்.
எவ்வளவு கஷ்டப்படுகிறான் அவன்? கொஞ்சம் கூட சபீனா அவனை புரிந்து கொள்கிராளில்லையே! எவ்வளவு கற்பனையோடு அவளை திருமணம் செய்து கொண்டான்.
மெதுவாக பாத்ரூமுக்குள் நுழைந்தான். டூத் பெஸ்ட் காலியாகி விட்டிருந்தது. மிகுந்த பிரயத்தனப்பட்டு கொஞ்சத்தை வெளியில் எடுத்து பல் துலக்கினான்.
மெதுவாக முகம் கழுவி விட்டு வெளியில் வந்தான். அதற்குள் சபீனா காலை உணவை தயார் செய்து வைத்திருந்தாள்.
மெதுவாக உட்கார்ந்து சாப்பிட்டான். அன்று செய்ய வேண்டிய வியாபார நடவடிக்கைகளை சுற்றித்தான் அவனது மனம் அலை பாய்ந்து கொண்டிருந்தது. ஏதாவது பேச மாட்டான என்பதை போல் சபீனா அவனையே பார்த்துக்கொண்டிருந்ததைக்கூட அவன் கவனிக்கவில்லை.
சாப்பிட்டு முடித்தவன் மளமளவென்று தண்ணீரை குடித்தான். குடித்தவன் எழுந்து வேகமாக அறைக்குள் போய்விட்டான். உடுப்புகளை மாற்றிக்கொண்டான். கண்ணாடியைப் பார்த்தான். சவரம் செய்யப்படாமல் முகத்தில் முடி எட்டி பார்த்துக்கொண்டிருந்தது. சவரம் செய்ய வேண்டுமே என்ற எண்ணம் கூட அவனுக்கு தோன்றவில்லை. முடியை மட்டும் இலேசாக வாரிக்கொண்டான்.
மெதுவாக வெளியே வந்தான். சபீனா வாசலில் நின்றிருந்தாள்.
"நுஸ்ரிக்கு சொகமில்ல, மருந்தெடுக்கொனும்"
சத்தார் எதுவும் பேசவோ கேட்கவோ இல்லை. பேசாமல் ஐந்நூறு ரூபாய் தாளொன்றை எடுத்து நீட்டினான்.
"உம்மா யாரயாலும் கூட்டிண்டு போங்கோ, எனக்கு டைம் இல்ல"
சொன்னவன் சபீனாவின் முகத்தை
கூட பார்க்கவில்லை. புறப்பட்டுப்போய்விட்டான்.
வாசலில் நின்ற அவளது கண்கள் கலங்கி இருந்தன. மெதுவாக அறையுள் நுழைந்தாள். கட்டிலில் சாய்ந்தால். தலையணையில் முகம் புதைத்து விம்மி விம்மி அழுதாள்.
###
ஏதோ கண்ணுக்குப் புலப்படாத பொருந்துகையின்மை அவர்கள் இருவர் மத்தியிலும் இருந்தது. அது என்ன? இருவருக்கும் புரியவில்லை. பொருந்துதல் இன்மைதானா அல்லது புரிதல் இன்மையா?
உடல் அளவில்தான் அவர்களது உறவு. உள்ளத்தளவில் இருக்கவில்லை. உடல் அளவில்தான் அவர்கள் கண்ட சுகம் அனைத்தும். மானசீகமாக அது இருக்கவில்லை. உடல் ரீதியான சுகம் கூட நாளடைவில் குறைந்து கொண்டு போனது. மனசளவில் செய்மைப்பட்டுப் போய் உடலளவில் மட்டும் எப்படி சேர்ந்து இருப்பது? அவ்வப்போது தவிர்க்க இயலாமல் வரும் உடலியல் வேட்கைகளை தணிக்கத்தான் ஒருவரை ஒருவர் அணுகினார்கள். அது கூட ஒரு வித இயந்திரத்தனமாகத்தான் இருந்தது.
இருவரும் ஒருவரை ஒருவர் நேசித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அந்த அன்பு எப்படி காணாமல் போனது?
பசிக்க உணவையும், உடுத்த உடையையும், நோய் வந்தால் மருந்தையும் கொடுக்க மட்டுமா கணவன் தேவை? ஒரு அநாதை ஆசிரமத்தில்கூட இதயெல்லாம் கொடுப்பார்களே! மனைவியுடன் ஆறுதலாக பேச நேரமில்லை. அவளது தலையை ஆறுதலாக தடவிவிட நேரமில்லை. தனது பிரச்சினையை அவளுடனும், அவளது பிரச்சினையை தானும் பகிர்ந்துகொள்ள நேரமில்லை. குழந்தையுடன் கொஞ்சி விளையாட நேரமில்லை. இதுவும் ஒரு வாழ்வா?
தலையணையில் முகம் புதைத்து ஏங்கி ஏங்கி அழுதாள் சபீனா. அவளது கண்ணீரை சுமந்து தலையணையும் கனதியாகிப் போனது, அவளது மனதை போலவே!
###
வீட்டில் இருந்து புறப்பட்ட சத்தாருக்கு மனதில் மகிழ்ச்சி இல்லை. என்னவென்று புரிந்து கொள்ள முடியாத ஒரு கவலை, ஏக்கம், ஒரு குறை அவனது மனதின் ஓரத்தில் எங்கோ ஒளிந்து கொண்டிருந்தது.
வாப்பாவின் மரணமும், அதனை தொடர்ந்து ஏற்பட்ட நஷ்டமும் அவனை பெரிதாகப் பாதித்தது. துள்ளித்திரிந்து ஓரளவு சுதந்திரமாக வளர்ந்து விட்ட இளைஞன் அவன். திடீரென்று தன் சொந்தக்காலில் நிற்க வேண்டி ஏற்பட்ட போதுதான், அவன் சற்று உடைந்து போனான்.
காலையில் இருந்து மாலை வரை எப்படி மாடாய் உழைக்கிறான். அனைத்தும் யாருக்காக? சபீனாவுக்காகவும் நுஸ்ரிக்காகவும் தானே! அதனை அவள் மதிக்கிறாள் இல்லையே!
இவனது பிரச்சினைகளோடு சேர்த்து
அவளது பிரச்சினைகள் அனைத்தையும் இவன் தலையில் கொண்டு வந்து கொட்டுகிறாள். ஏதோ இவன் ஒரு இரக்கமற்ற முரடன் என்பது போல் நடந்து கொள்கிறாள். அன்றொரு நாள் 'கொஞ்சம் புள்ளயட பேசி விளையாடுங்கோ, இல்லாட்டி அதுக்கு வாப்பா யாருண்டே தெரியாம போகும்' என்றல்லவா சொன்னாள்?
புள்ளயோட இறக்கம்மில்லாதவனா இவன்? இறக்கம் இல்லாட்டி இவன் ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறான்? பிள்ளையோட விளையாடிக் கொண்டு ஈந்தா அதுக்கும், அவளுக்கும் யாரு சாப்பாடு போட்றது..?
###
ட்ரூ... ட்ரூ...
இரவு பதினொன்றரை... அதே ஆட்டோ சப்தம்...
ஆட்டோ சப்தம் கேட்டு விழிக்கிறாள் சபீனா. சத்தார் வந்து விட்டான். கதவு திறக்கிறது. சத்தார் களைப்பு மிகுதியோடு, பலசரக்கு வாசமும், வியர்வை நாற்றமும் கலந்து வீச உள்ளே நுழைகிறான். அவனது தோற்றம் அவளை என்னவோ செய்தது. அவன் எதுவும் பேசவில்லை.
இரவுணவை அருந்தினான். கட்டிலில் வந்து சாய்ந்து கொண்டாள். அவன் உணவுண்ட உணவுத்தட்டை கழுவி வைத்தவள் அறைக்குள் நுழைந்தாள். அரைக் கதவை தாளிட்டி விட்டு அவன் அருகில் வந்து கட்டிலில் படுத்துக் கொண்டாள்.
அவன் வந்து சேர்ந்த களைப்பான தோற்றம் அவளை உறுத்தியது. அவன் மார்பில் முகம் புதைத்து, அவனோட கொஞ்ச வேண்டும் என்று நினைத்தாள். அவர்கள் காதலித்த நாட்களும், அவர்கள் திருமணம் முடித்து சந்தோசமாக இருந்த ஆரம்ப நாட்களும் அவளது கண்கள் முன் வந்து நின்றன.
ஒரு நெடிய உஷ்ணமான பெருமூச்சி.
அவர்கள் மத்தியில் எரிந்து கொண்டிருந்த தீயின் உஷ்ணம் அந்தப் பெருமூச்சில் இருந்தது.
அவனுடன் பேச்சுக்கொடுக்கலாமா?
வேண்டாம். அவள் ஏன் பேச வேண்டும். 'நாளைக்கு கடக்கி போகோணும், என்ன ஏன் தொந்தரவு செய்ற' என்று எரிந்து விழுவான்.
எதுவும் பேசாமல் மறுபுறம் திரும்பி படுத்துக்கொண்டாள்.
மற்றொரு நாள் நிறைவு பெறுகிறது.
(யாவும் கற்பனை) Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment