முதல் பகுதி
இரண்டாம் பகுதி
வந்தவன் முபீன் ஹாஜியாரின் மகனாக இருக்கலாம்.
நல்ல நிறமாக ஒரு ஐரோப்பியனை போல் இருந்தான். உடைகள் யாவும் நாகரிகத்தை காட்டின. விலையுயர்ந்த ஒரு சங்க்லாசை அணிந்து நெற்றி வரை உயர்த்தி விட்டிருந்தான். அவன் அணிந்திருந்த பாதணி முகம் பார்த்து தலை சீவலாம் போல் அவ்வளவு பளபளப்பாக இருந்தது. எங்கோ செல்வதற்கு வெளிக்கிட்டிருந்தான். அவனுக்கும் ஷெரீபின் வயது இருக்கலாம்: அல்லது அவனை விட ஒரு சிறிது இளையவனாக இருக்கலாம்.
"வாப்பா வந்துட்டு ஈக்கிராறு. ஒங்கள நிக்க சொன்னாரு". அவன் மரியாதையாகத்தான் பேசினாலும், அவன் பேசிய தோரணையில் ஒரு மிடுக்கு இருக்கவே செய்தது. இல்லாமல் இருக்குமா? இத்தனை கோடி சொத்துக்களின் வாரிசாயிற்றே!
"நீங்க எங்க?"
ஷெரீபை பார்த்துக் கேட்டான்.
ஏதோ சீமையிலிருந்து வாறதா நினைத்தானோ என்னவோ!
"நான் தெலும்புகஹவத்ததான்"
"ஆ ? அப்பிடியா? அப்ப... அகுரணதான்?"
இவன் படித்த படிப்பு அது இது என்று நிறைய விடயங்களை கேட்டான். ஒரு ஒப்புதலுக்காக ஷெரீபும் பதில் சொல்லி வைத்தான். அந்த உரையாடலில் அவனது மனது லயிக்கவில்லை. ஏதோ ஒரு செயற்கைத்தனம் ஒளிந்து கொண்டிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. போக வந்த பயணத்தை போய் தொலைய மாட்டானா?
என்னதான் இருந்தாலும், அவனது வாப்பாவிடம் வேலை கேட்டு வந்தவன் இவன். அவனிடத்தில் வேலை செய்யப் போகும் தொழிலாளி தானே இவன்? ஒரு சம்பளக்காரனிடம் இவனுக்கு என்ன மரியாதை இருக்கப் போகிறது? தன்னிடம் மரியாதை காட்டுவதாக காட்டுவது எல்லாம் நடிப்புதானே?
"நான் கொஞ்சம் கெண்டிக்குப் போகோணும். நீங்கோ நில்லுங்கோ. வாப்பா வந்துடுவாரு".
அவன் வராந்தாவில் இருந்து முற்றத்தில் இறங்கினான். ஒரு ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நவீன ரக காரில் ஏறிக்கொண்டான். கார் பறந்தது. அவன் செல்வதையே ஷெரீப் கண்மினி ஒட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனும் இவனை போல் ஓர் இளைஞன்தான். எந்த வேற்றுமையும் இல்லை. பரம்பரைச் சொத்துகளோடு பிறந்து விட்டதால், உல்லாசமாக இருக்கிறான். கஷ்டப்படாமலேயே அவனுக்கு எல்லாம் இருக்கிறது.
ஷெரீப் அப்படியா? சொல்லிக்கொள்ளத்தகுந்த குடும்ப
பிஸ்னஸ் எதுவும் இல்லை. சொத்துக்களும் இல்லை. அதனால் கண்ட கண்டவனிடம் எல்லாம் போய் கைகட்டி நின்று ஏச்சுப் பேச்சு கேட்க வேண்டி இருக்கிறது.
பணமும், சொத்தும் இருந்தால்தான் படித்த படிப்பும் பிரயோசனம் தரும் போலும்!
அவனை அறியாமலேயே ஒரு பெருமூச்சி வெளிப்பட்டது.
இந்த ஜொப் என்றால் சரி வராமல் இருக்க காரணம் இல்லை. குறைந்தது பதினையாயிரம் அல்லது இருபதாயிரமாவது கெடக்கிம். ஊருல்லுக்கே தொழில்ன்டு செல்ரதால சாப்பாடு, போக்குவரத்து, ரூம் செலவு எல்லாம் மிச்சம்.
அப்ப ... ஒரு ரெண்டு வருஷம் வர வேல செஞ்சா... ஒரு தொகைய செத்துடேலும். அத வச்சு ஒரு வெளி நாடு என்னவாலும் யோசிச்சா சரி. இப்போதக்கி எண்ட செலவுகளுக்கு நானே சம்பரிச்சண்டும் ஈக்கும்.
ஷெரீப் மனதுக்குள் கணக்குப் போட்டுக் கொண்டான்.
கேட் திறக்கும் சப்தம் கேட்டது.
ஷெரீப் திரும்பிப் பார்த்தான். முபீன் ஹாஜியாரின் மொண்டேரோ வளவுக்குள் கம்பீரமாக நுழைந்து ஒரு ஓரத்தில் நின்றது.
முபீன் ஹாஜியார் இரங்கி வந்தார். ஷெரீப் ஒரு மரியாதைக்காக எழுந்து நின்றான்.
"லேட் ஆக்கிட்டேனா மகன். எனக்கு சின்னொரு சோலியொண்டு வந்துட்டுது".
அவசர அவசரமாக வராந்தாவுக்கு வந்தார்.
"இல்லல்ல, அப்பிடியொண்டும் இல்ல. நான் இப்பதான் வந்த"
"உக்காருங்கோ... குஞ்சம்
இரிங்கோ, நான் வந்துடறேன்"
ஹாஜியார் உள்ளே போனார். அவர் பூசியிருந்த உயர்ரக அத்தர் வாசம் கம்மென்று வீசியது.
ஷெரீப் அவர் திரும்பி வந்து என்ன கேட்பார், என்ன பதில் சொல்வது, எப்படிச் சொல்வது என்று தன்னை தயார் படுத்திக்கொண்டு நின்றான்.
முபீன் ஹாஜியார் திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டார்.
"அப்ப சொல்லுங்கோ மகன்..."
தன் தொப்பியை சோபாவில் கலட்டி வைத்துவிட்டு, தட்டை தலையை ஒரு முறை தடவிக்கொண்டார். அவர் கண்கள் நட்சத்திரம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தன. அந்த நரைத்த முடி அவர் மீது ஒரு மரியாதையை உண்டு பண்ணியது.
முபீன் ஹாஜியார் இவனது கல்வி சம்பந்தமாக எல்லாம் விசாரித்தார்.
இந்தத் தொழிலில் இவனுக்கு இருக்கும் பொறுப்புகளை எல்லாம் எடுத்துக்கூறினார்.
"எனக்கு வேற ஆக்கள போடேலும், நான் எங்கட ஆள் ஒத்தர் ஈக்கிறது நல்லம்ண்டு பாக்குற... ஒங்கட வாப்பாவ எல்லாம் எனக்கு முந்தியே தெரியும்... ஒங்கட படிப்புக்கு நீங்க எங்கட கம்பெனில வேல செய்றது எனக்கு செரியான சந்தோசம். ஒங்களால எங்கட கம்பனியும் முன்னுக்கு போகும்"
இப்போது ஷெரீபுக்கு உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தது. ஹாஜியார் அவனது கல்வி, திறமை எல்லாம் அறிந்துதான் கூப்பிட்டிருக்கிறார். அந்த மட்டில் அவனைப் பற்றிய ஒரு உயர்ந்த அபிப்பிராயம் ஹாஜியாரிடத்தில் இருக்கிறது.
முபீன் ஹாஜியார் அவனுக்கு இருக்கின்ற பொறுப்புகள், வேலைகள் என்பவற்றை விலாவாரியாக விவரித்தார். அவர் சொன்ன ஒவ்வொன்றையும் ஷெரீப் மிக உன்னிப்பாக கவனித்து கேட்டுக்கொண்டிருந்தான்.
அனைத்தையும் பேசி முடித்து விட்டு, அவனது சம்பள விஷயம் பற்றிய பேச்சையும் ஹாஜியார் எடுத்தார்.
" செரி... அப்ப ஒங்கட பெய்மேன்ட் விஷயத்தையும் பேசி முடிச்சிக்குவோம்... நீங்க எப்பிடி மாதிரி எதிர் பாக்குற"
ஷெரீப் தயங்கினான்.
"இல்ல வெட்கப் படாம சொல்லுங்கோ... ஒங்கட செலவு அது, இதுகளெல்லாம் வெச்சு செல்லுங்கோ..., பிரச்சினைல்ல மகன்"
இப்போதும் சொல்வதற்கு சங்கடமாக
இருந்தது ஷெரீபுக்கு. இன்னுமின்னும் முபீன் ஹாஜியார் வலியுறுத்தவும் "மொத ஈந்த ஆக்களுக்கு நீங்க எப்பிடி குடுத்த..." என்று
மெல்லக்
கேட்டு வைத்தான்.
முபீன் ஹாஜியார் தொண்டையை கனைத்து இருமிக்கொண்டார்.
"இப்பிடித்தான், முந்திண்டா பூஜாபிடி சிங்கள பொடியன் ஒத்தன் தான் ஈந்த. நாங்க அவனுக்கு ஐயாய்ரம் ரூவா கொடுத்த. நீங்கண்டு செல்ரதால குஞ்சம் பாத்து யோசிக்கேலும்".
ஐயாயிரம் ரூபாவா? அதை
வைத்து என்ன செய்வது? மனுஷன் மனுஷனா வாழணும்டா? சும்மா உஷிற மட்டும் பெய்ட்டுடாம புடிச்சி வச்சுண்டா போதுமா? ஐயாய்ரம் ரூவாவ வச்சு உஷிற மட்டும் தான் புடிச்சு வச்சுக்கேலும்.
இப்போது ஏனோ அவன் சற்று முன் கண்ட முபீன் ஹாஜியாரின் மகன் அவன் மனக்கண் முன் வந்தான்.
ஹாஜியார் இவனையும் மகன் மகண்டு பேசுறாரு. அந்த அஞ்சாய்ரத்த வச்சி அவர்ட மகன் போட்டீந்த கேவலம் அந்த சங்க்லாஸ்ஸ கூட வாங்கேலா...!
பரவாயில்ல! ஏதோ இவனுக்குண்டு
செல்ரதாலே பாத்து யோசிக்கேளும்ண்டு சொன்னாரே? "பாத்து யோசிக்கிரண்டா" ஹாஜியார்ட பாசைல எவ்வளோ?
அதையும் கேட்டு விடுவதுதான் நல்லது...
இல்லாட்டி கெழடு கவ்த்துடும்.
"எவ்வளோ
மாதி தெருவலோ தெரியாதே?"
ஒன்றை நேரடியாக கேட்காமல் சுற்றிவளைத்து கேட்பதுதான் அக்குரணை கலாசாரம். அத்தோடு அதுதான் மரியாதையான முறையும். குறிப்பாக நாம் பேசும் மற்றவர் அந்தஸ்த்தில் உயர்ந்தவராக இருக்கும் போது இதுதான் மிகவும் சிறந்த முறை.
"ஒன்க்ளுக்குண்டு செல்ரதால ஆறாயிரத்தி ஐந்நூறு ரூவா தரேலும்"
அது அவருடைய கடைசி விலை போலிருந்தது. அவரது தொனியும், உடல் மொழியும் வேறு பேரம் பேசலுக்கு இடமில்லை என்பது போலிருந்தது.
அதை சரி என்று ஒப்புக்கொள்ள வேண்டும், அல்லது முடியாது என்று மறுக்க வேண்டும். இந்த சிறிய சம்பளத்தை ஒப்புக்கொள்வதற்கு இல்லை. இதை வைத்து எதுவும் செய்ய முடியாது. வேறு வருமான வழிகள் அவனுக்கு இருந்திருந்தால், 'இது ஷெரி வராது... வேற யாரயாலும் பாருங்கோ" என்று எடுத்த எடுப்பில் சொல்லி இருப்பான்.
அவன் இருந்தது பணத்தேவையில். இண்டக்கி, நாளக்கி ஒழுங்கான வேலையொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. இந்த வேலையை எடுத்தால் வேலாவெட்டி என்ற பட்டத்தை இல்லாமல் ஆக்கி விடலாம். அடுத்து அன்றாட செலவுகளுக்கும் தன் கையாலேயே செலவு செய்யலாம்.
ஆனால், ஒருத்தனுக்கு ஒ.சியில் வேலை செய்ய வேண்டுமா? ஒ.சிதானே? இவனது உழைப்பை, அறிவை, முழுமையாக உறிஞ்சிக்கொண்டு, வயிற்றை நிரப்ப மட்டும் சம்பளம் கொடுக்கிறார்கள்.
நாளை ஏதோ ஒரு கோபத்தில் கம்பனியில் இருந்து தூக்கி வீசினார்கள் என்றால், சக்கையாக இவன் வந்து விழுவான். அப்போது இவன் கையில் எதுவும் இருக்காது. திரும்பவும் பழைய குருடி கதவ திறடி என்றாகி விடும். பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்.
" நான் கொஞ்சம் யோசிச்சு, வீட்லயும் டிஸ்கெஸ் பண்ணிட்டு சொல்லவா?"
"நல்லம் மகன், நல்லா யோசிச்சு சொல்லுங்கோ, கொஞ்சம் அவசரமா சொன்னால் நல்லம், எப்ப மாதி ஒங்களுக்கு செல்லேலும்".
இவன் மனம் மாறி விடுவானோ என்ற பயம் ஹாஜியாருக்கு.
"நீங்க செலரியப் பத்தி யோசிக்க வானம், நான் பாத்துக்குறேன்".
உடனடியாக செலரியை அதிகரிக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களை ஹாஜியார் விவரித்தார். சமகாலத்தில் வியாபாரங்கள் எதிர் கொள்ளும் சவால்களை எடுத்துக் கூறினார்.
"இப்ப பிஸ்நெஸ் செய்றது அவ்வளோ லேசில்ல மகன்".
இவனுகள் பெரீஷா மாளிக
கட்றதுக்கு, கலியாணம் எடுக்குறதுக்கு நிதி நெருக்கடி ஒரு சாட்டில்ல. வேல செய்ய வாறவனுக்கு சம்பளம் கொடுக்குற நேரம் தான் அது ஒரு சாட்டு. இங்க வாழ்கை முறைய ஆடபரமாக்கி எளிமையா வாழ ஏலாமாக்கி வச்சவனுகளும் இவனுகள்தான்.
ஒத்தன் விரும்பினாலும் எளிமையா வாழ முடியாத சமூக அமைப்பு இது. அதுல சம்பளமும் ஒழுங்கா தராட்டி? ஷெரீப் பலவாறு யோசித்தான்.
பேசாமல் சரி என்று சொல்லி சேர்ந்து விடலாமா என்று கூட யோசித்தான். ஒரு பெயருக்காவது ஒரு தொழில் இருக்கிறது என்று இருக்கும்.
அந்தளவு அவனது மனது பலகீனப்பட்டிருந்தது.
"இண்டக்கி இரவுக்குள்ளுக்கு ஒரு முடிவ சொல்றேன்"
எழும்பப் போன போது, "வாப்பா" என்ற குரல் கேட்டது. முன்பு ஒலித்த அதே சங்கீத குரல். தேநீர் ஊற்றிக்கொண்டு வந்திருந்தாள். இப்போது அவளது குறுக்கீடு எரிச்சலை ஊட்டியது.
தேநீரை ஹாஜியார் எடுத்து அவனுக்குக் கொடுத்தார். அவசரமாக அதைக் குடித்து முடித்து, ஒரு ஒப்புதலுக்காக ஹாஜியாரோடு ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி விட்டு, விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான்.
தலையில் எங்கோ ஒரு மூலையில் குத்தேடுப்பது போல் ஒரு உணர்வு. கால்களை தரையில் வைத்து நடப்பது கூட அவனுக்கு கஷ்டமாக இருந்தது.
நடந்து சென்றவன் மீண்டும் ஹோடெலுக்குள் நுழைந்தான்- மற்றொரு சிகரட்டை பற்ற வைப்பதற்காக.
###
அந்த மிஸ் கோல்கள் இரண்டையும் மாறி, மாறிப் பார்த்துக் கொண்டிருந்தான் ஷெரீப். இரண்டும் முபீன் ஹாஜியாருடயது. முபீன் ஹாஜியார் எடுத்த இரு கோல்களுக்கும் அவன் பதிலளிக்கவில்லை. அவருக்கு என்ன பதில் சொல்வது என்று இன்னும் அவனுக்கு தெளிவில்லை.
அவனது சிந்தனை
அலைகள பல்வேறு திசையிலும் சிறகடித்துக்கொண்டிருந்தது. "ஆறாயிரத்து ஐந்நூறு ரூவா போதுமா மகன்?"
முபீன் ஹாஜியார் கேட்ட கேள்வி அவன் செவிகளில் இன்னும் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது.
அதை வைத்து எதுவும் செய்ய முடியாது. வயிற்றுப் பசியை மட்டும் போக்கிக்கொள்ளலாம். இது சரிப்பட்டு வராது என்று உதறி விட்டால், வேறு நல்லதொரு தொழில் அமைந்து வர எவ்வளவு காலம் ஆகும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சில போது இதை விட மோசமானதொன்றைகூட மேற்கொள்ள வேண்டி வரலாம்.
அவனது மூளை பல்வேறு திசையிலும் சிந்தித்து கொண்டிருந்தது.
இப்போது ஏனோ முபீன் ஹாஜியார், அவன் முன் வந்த அவர் மகன், கண்களை கூசச்செய்த அவர் மகள், முபீன் ஹாஜியாரின் பிரமாண்டமான வீடு,
அவரது நவீனரக வாகனங்கள் அனைத்தும் அவன் மனக்கண் முன் தோன்றி மறைந்தன.
ஒரு நீண்ட உஷ்ணமான பெருமூச்சி.
முபீன் ஹாஜியார் அளவுக்கு வசதி எல்லாம் தேவையில்லை. பணத்தையும், வசதி வாய்ப்பையும் மட்டுமே வைத்து மனிதனை மதிக்கத்தெரிந்த சமூகத்தில் குறைந்த பட்சம் மனிதன் என்ற தகுதியை அடயவாவது குறைந்த பட்ச வசதி வாய்ப்பு வேண்டாமா?
சமூகத்திற்கு எதிரான வைராக்கியம். ஆனால், எதுவும்
செய்து கொள்வதற்கு முடியாத இயலாமை.
இனி செய்வதற்கு எதுவும் இல்லை. மொபைலை அழுத்தினான். "அங்கிள், நான் வீட்ல கதைச்ச, ஒகே, நான் எப்ப வந்து சேரனும்".
கதைத்து முடித்த போது, அவன் கண்ணில் நீர் மிதந்திருந்தது. அதில் அவன் இவ்வளவு காலம் கட்டி வளர்த்த கனவுகள், இலட்சியம் அனைத்தும் அடி பட்டுப் போவது போல் தோன்றியது.
இனி அவனும் ஒரு சராசரி இளைஞன். Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment