பரிசோதனை, அவதானம் என்பவற்றின் மூலம் பகுத்தறிவு பூர்வமாக எதனையும் அணுகி உண்மைகளை வெளிக்கொணர்வதே விஞ்ஞானம் என பொதுவாக கருதப்படுகிறது. உயிரியல் விஞ்ஞானமாயினும், சமூகவியல் விஞ்ஞானமாயினும் இதுதான் அடிப்படை.
பரிசோதனை, அவதானம் என்பவற்றின் அடியாக உருவாகும் பகுத்தறிவு சார் அணுகுமுறை எப்போதும் சரியாகத்தான் இருக்கும் என்றில்லை. பல போது அவை விஞ்ஞானிகளின் சொந்த கருத்துக்களாலும், உணர்வுகளாலும், அவர்கள் சார்ந்த அமைப்புக்களின் கருத்துக்களாலும் தாக்கமுருகின்றன. பரிசோதனைக்குத் தோதுவான வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் போதும், விஞ்ஞானிகளின் அறிவு மட்டமும் விஞ்ஞான ஆய்வுகளை பாதிக்கிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் விஞ்ஞான ஆய்வுகள் மிகச் சரியான முடிவுகளை தருவதற்கு தவறி விடுகின்றன.
பரிசோதனை, அவதானம் உள்ளிட்ட அம்சங்கள் இரசாயனவியல், பௌதிகவியல் என்பவற்றுக்கு பொருத்தமாக இருந்தாலும், மற்ற விஞ்ஞானத்துறைகளுக்கு இது பொருத்தமானதல்ல. இதனால் இந்த பொதுவான வரைவிலக்கணத்தை
விமர்சிக்கும் Journal of Theoratics என்ற சஞ்சிகை, விஞ்ஞானம் என்பதற்கு பின்வரும் வரைவிலக்கணமே மிகச்சரியானது என வாதிடுகின்றது.
பிரபஞ்சத்தின் தன்மைகளை முழுமையாகவோ, பகுதியாகவோ புரிந்து கொள்வதற்கும், விளக்குவதற்கும் முற்படும் ஒரு ஆய்வுப்பகுதி (Editorial, Journal of Theoratics, August- September Issue, 1999)
பரிசோதனை, அவதானம் என்பவற்றின் முழுமையாக சகல துறைகளிலும் முடிவுகளை காண்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில்கொண்டே இந்த வரை விலக்கணம் முன்வைக்கப் படுகின்றது.
விஞ்ஞான ஆய்வுகளில் இருக்கின்ற இந்த நடை முறை பிரச்சினைகள்
காரணமாக பல கொள்கைகளும், அனுமானங்களும் கூட விஞ்ஞானமாக கருதப்படும் அபாயம் இருக்கின்றது.
இத்தகைய முடிவுகள் பின் வந்த விஞ்ஞானகளால் கேள்விக்குட்படுத்தப்படுகின்றன. சில போது விஞ்ஞானத்தின் அடிநாதமாக கருதப்பட்ட பல அடிப்படைகள்கூட ஆட்டம் காண்கின்றன. புதிய கொள்கைகளும், அடிப்படைகளும் உருவாகின்றன.
விஞ்ஞானிகளின் உணர்ச்சிகள், சொந்த நம்பிக்கைகள், அவர்கள் சார்ந்த அமைப்புக்களின் கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வை பாதிப்பதாக சொன்னோம். அதே போன்று விஞ்ஞான ஆய்வுகளையும், பொதுவாக பொதுமக்கள் மத்தியில் பரப்பப் படுகின்ற 'விஞ்ஞான' கருத்துக்களை பாதிக்கும் இன்னொரு அம்சம், அரசியலும், அதிகார பீடத்தில் வீற்றிருக்கும் சக்திகளுமாகும். உண்மை எது என்பதை விடவும், தமது நிலைப்பாடுகளுக்கு சாதகமான கருத்து எது என்பதே இங்கு முக்கியமாக இருக்கிறது.
இன்று மேற்குலகில் கருத்துச் சுதந்திரத்திற்கு மிக உயர்ந்த பட்ச பெறுமானம் வழங்கப் பட்டிருப்பதாக ஒருவர் வாதிடலாம். பத்திரிகைச் சுதந்திரம் ஒரு திருப்திகரமான மட்டத்தில் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், ஆய்வு ரீதியான சுதந்திரம் எந்த மட்டத்தில் இருக்கிறது என்பது மிக முக்கியமான அம்சம்.
தான் விரும்பிய எந்தக்கோணத்தில் வேண்டுமானாலும் ஆய்வு செய்வதற்கும், அதனை வெளியிடுவதற்கும், அனைவருக்கும் சம சந்தர்ப்பமும், வாய்ப்பும் வழங்கப்பட்டிருக்கிறதா என்பது மிக முக்கியமான அம்சம். மேலோட்டமான பார்வையில் இதற்கான பதில் 'ஆம்' என்பது போன்ற ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டாலும், சற்று ஆழ்ந்து சிந்தித்தால் இதற்கான பதில் எதிர் மறையானதே என்பதை புரியலாம்.
ஒரு கருத்து பிரபலமாக இருப்பதால் மட்டும் அது உண்மையாகி விடாது. ஒரு விஞ்ஞானக் கருத்து உலகளவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு பிரசார ஊடகங்களும், அரசியல் பக்க பலமும் பெருமளவில் துணை நிற்கின்றன. இந்த பக்கபலம் உண்மையை மையப்படுத்தி அல்ல, பலபோது நுண்மையான அரசியலே இதன் பின்னணியில் நிலவுகின்றது.
மனிதர்கள் பெருமளவில் சுதந்திரமாக சிந்திப்பவர்களாக மாறியிருக்கும் இந்தக்காலத்திலும், அறிவியலில் முன்னணியில் இருப்பதாகக் கருதப்படும் நாடுகளில் கூட , மனிதர்கள் பிரதான நீரோட்ட பிரசார ஊடகங்கள் கட்டமைக்கின்ற மாயைகளின் வலையில் இருந்து வெளிவரவில்லை.
இங்கு மாயைகள் உருவாக்கப் படுவது மதங்களின் பெயரால் அல்ல. மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிந்து சகல அம்சங்களையும் அறிவியலின் பார்வையில் வியாக்கியானம் கூற முற்படுவாதாக கருதப்படும் விஞ்ஞானத்தின் பெயரால். இங்கு மக்களை ஏமாற்றுவது விஞ்ஞானப்பூசாரிகள்.
மத்திய கால ஐரோப்பாவில் இருந்த நிலையும் இதிலிருந்து வேறுபட்டதல்ல. அன்று கிரிஸ்தவக் கோவில் கிறிஸ்தவத்தின் போதனைகளோடு முரண்பட்டு நின்ற சுதந்திர ஆய்வை தடை செய்தது. அன்றைய கிறிஸ்தவக் கோவிலும் சமூகத்தை மூட நம்பிக்கைகளின் பிடியில்தான் வைத்திருக்க முற்பட்டது. ஆனாலும், அதனை அது விஞ்ஞானத்தின் பெயரால் செய்யவில்லை; மதத்தின் பெயரால்தான் செய்தது.
ஆனாலும், இன்று இதே அம்சம் விஞ்ஞானத்தின் பெயராலேயே நடப்பத்துதான் வேடிக்கை.
சுருக்கமாகச் சொன்னால், ஆய்வுகளில் முடிவுகள், அவற்றில் எது சரி, எது பிழை என்பதை தீர்மானிப்பது பிரசார ஊடகங்களாகவோ, அதிகார வர்க்கமாகவோ இருக்கக் கூடாது. விஞ்ஞானிகள் முன்வைக்கும் ஆதாரங்களின் வளுவைப் பொறுத்தே அதனை தீர்மானிக்க வேண்டும்.
குறைந்த பட்சம், ஊடகங்கள் தாம் சார்ந்திருக்கின்ற கருத்துக்கு முரணான கருத்தை ஒரு விஞ்ஞான கருத்தாகவாவது ஏற்க வேண்டும். இன்று பெரும்பாலான ஊடகங்கள் செய்கின்ற கைங்கர்யம் யாதெனில், தாம் சார்ந்த கருத்தை மட்டுமே முடிந்த முடிவாக காட்டி, அதற்கு முரணானவற்றை, அவற்றுக்கு என்னதான் வலுவான ஆதாரம் இருந்தாலும், அவை முழுக்க முழுக்க மூட நம்பிக்கைகள் என்ற கருத்தை முன்வைத்து விடுகின்றன. இதற்கான பின்னணி இவை தெளிவான அரசியல் பின்னணியோடு இயங்குவதே...!
இந்த பொதுவான நியதி விஞ்ஞானத்தின் குறிப்பிட்டதொரு துறைக்கு மட்டும் உரியதொரு பண்பல்ல. சகல விஞ்ஞான துறைகளிலும் புரையோடிபோயுள்ள ஒன்று.
இதனால்தான் ஆய்வுத்துறையில் போதிய கருத்துச் சுதந்திரம் மேற்குலகில் இல்லை என்று சொன்னோம்.
ஒரே ஒரு உதாரணத்தோடு இப்பத்தியை நிறைவு செய்யலாம்.
சார்ல்ஸ் டார்வினின் பரிணாம வாதம் இந்த வகையில் எமது கவன ஈர்ப்பை பெற வேண்டிய ஒரு முதன்மையான கொள்கை.
சடவாத சிந்தனைக்கு அடித்தளம் போல் இது அமைத்திருந்ததால், தமக்குள் இருந்த கருத்தியல் முரண்பாடுகளை தாண்டி அனைவர் மத்தியிலும் பெருமளவில் பிரபல்யம் பெற்றது.
ஓர் உயிரியல் குறித்த கோட்பாடாக இது முன்வைக்கப் பட்டாலும், மனிதனையும் ஒரு விலங்காக இக்கொள்கை கருதியதால், சமூகவியலிலும் இக்கொள்கையை பிரயோகிக்க முற்பட்டனர். 'பலமுள்ளது பிழைக்கும்' என்ற அம்சத்தை சமூகவியலில் பிரயோகித்ததில் எத்தகைய எதிர் மறையான அம்சங்கள் உருவானது என்பது தனி அம்சம்.
டாவிநிஸம் அதிகார வர்க்கத்தின் தேவைகளை திருப்தி செய்யும் விதத்தில் அமைந்திருந்ததால், அதன் கோட்பாடுகள், புலமைத்துவ மட்டத்தில் அதற்கெதிராக எழுப்பப் பட முடியுமாக இருந்த பல்வேறு கேள்விகளையும் தாண்டி பெருமளவில் கவன ஈர்ப்பை பெற்றது.
கிட்டத்தட்ட உலகின் எல்லா நாடுகளிலும் போல் உயிர்கள் பூமியில் தோன்றியதை விளக்கும் கொள்கையாக டார்வின் முன்வைத்த கூர்ப்புக்கொள்கையே பாடசாலைகளிலும், கல்லூரிகளிலும் கற்பிக்கப்படுகிறது. அதற்கு முரணான எந்தக்கொல்கையும் எதுவித அடிப்படையும் அற்ற வரட்டுவாதம் என கற்பிக்கப்படுகிறோம்.
"theory of evolution" இற்கு மாற்றாக முன்வைக்கப்படும் "intelligent design" போன்ற கொள்கைகள் உண்மையில் எதுவித அடிப்படையும் அற்ற வறட்டு வாதமா? எமது பாடத்திட்டங்களின் படி வறட்டு வாதம். மறு புறத்தில், டார்வினிசம் குறித்து எழுப்பப்பட்டு வரும் ஆழமான கேள்விகள் குறித்து நாம் எதுவும் அறிவூட்டப்படுவதில்லை. இந்த கல்வி முறையில் ஒரு மறைமுக அரசியல் நிரல் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இதை விட ஒரு சிறந்த உதாரணம் தேவையில்லை.
டார்வின் மறைந்து இரு நூறு ஆண்டுகள் கழிந்தும், அவர் கருத்து ரீதியாக முன்வைத்த எந்த ஒன்றையும் பரிசோதனை ரீதியாக நிரூபிக்க முடியவில்லை என்பது மற்றொரு அம்சம். டார்வின் மறைந்த பிற்பாடு இன்று வரை கிடைத்த ஆதாரங்கள், கூர்ப்புக்கொள்கை என்பதை அர்த்தம் அற்றதொன்றாக்கும் வகையிலேயே அமைந்துள்ளன. டார்வினின் வாதங்களுக்கு எதிரான புலமைத்துவ வாதங்கள் குறித்து மற்றொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்.
சுருக்கமாக சொல்வதாக இருந்தால், டார்விநிஸம் என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கொள்கையல்ல, அது குறித்து நிறையக் கேள்விகள் எழுப்பப் பட்டு வருகின்றன என்பதே உண்மை.
டார்வின் முன்வைத்த கூர்ப்புக்கொள்கை, மேற்குலகு, விஞ்ஞானக் கருத்துகளாக இருந்தாலும் தனது இருப்புக்கும், நிலைப்பாடுகளுக்கும் சாதகமான அம்சங்களை மட்டுமே ஏற்றுக்கொள்கின்றது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம். இது சகல விஞ்ஞானத் துறைகளுக்கும் பொதுவான ஓரம்சம்.
இந்த வகையில் சுதந்திரமான ஆய்வை மேற்கொள்வோரின் குரல் வலையை நசுக்கும் விதத்தில் மேற்குலகு இரண்டு வழிமுறைகளை கையாள்கின்றது.
- மாற்றுக் கருத்துக்கள் குறித்த எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கும் விதத்தில் செயல்படும் சமூக ஒழுங்குகளை உருவாக்குதல். இதில் தொடர்பூடகங்கள், கல்வித்திட்டம் என்பவை முக்கியமானவை.
- மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும் படைப்புகளை தடை செய்தல்
இதில் முதல் அணுகு முறையே மிகவும் பலமானது என்பதில் சந்தேகமில்லை. கருத்துச் சுதந்திரம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்வதாகக் காட்டிக்கொண்டே, மறுபுறம் இதனையும் செய்யலாம்.
இந்த அறிவியல் அயோக்கியத்தனம் சகல துறைகளுக்கும் பொதுவானது என்பதை சொல்ல வேண்டியதில்லை.
பாடத்திட்டத்திலும், மீடியாக்களிலும் சகல கருத்து முகாமை சேர்தவர்களுக்கும் சம சந்தர்ப்பம் வழங்கப் படும் ஒரு நிலை மேற்கு ஜனநாயகத்தில் என்றாவது உருவானால், அன்று மேற்குலகில் கருத்துச் சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்று கருதலாம்.
இவ்வித அறிவியல் அயோக்கியத்தனம் இடம் பெறும் ஒரு பூலோக உலகில், விஞ்ஞானம் அதன் உண்மையான பெறுமானத்தை வழங்க முடியாது. இன்று அன்றாட வாழ்வில் நாம் நம்பும் அறிவியல் கருத்துக்கள் பல, எடுகோள்களை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரவர்க்கத்திற்கு விருப்பமான கருத்துக்களாகத்தான் இருக்கின்றன. ஆனால், உண்மை எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கிடக்கிறது.
Share
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
நல்லா சொல்லீருக்கீங்க!
Post a Comment