"விஞ்ஞானிகளின் மூடநம்பிக்கை" என்ற எமது முன்னைய கட்டுரை ஒன்றில் நிறைய விஞ்ஞான உண்மைகள் என்று நாம் கருதுபவை அனைத்தும் உண்மையிலேயே ஆழமான அடித்தளத்தை கொண்டவையல்ல, பல போது அதிகார வர்க்கத்தின் அபிலாசைகளை திருப்திப் படுத்தும் ஒரு மறைமுக அரசியல் அந்த விஞ்ஞான கருத்துக்களின் பின்னணியில் இருக்கின்றன எனக் குறிப்பிட்டிருந்தோம்.
அதில் டார்வினிஸம் குறித்து சில குறிப்புகளை தந்து போதிய அடிப்படைகளற்ற ஒரு வாதம் அது எனச் சொன்னோம். சாள்ஸ் டார்வின் அவர்கள் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்து மேலும் சில அம்சங்களை இங்கு நோக்குவோம்.
சார்ள்ஸ் டார்வின் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் தான் முன்வைத்த பரிணாம வளர்ச்சி குறித்த சிந்தனையின் மூலம் உயிரியல் விஞ்ஞானத் துறையில் மட்டுமல்ல, வரலாற்று ஓட்டத்திலேயே குறிப்பிடத் தக்க மாற்றங்களை உண்டு பண்ணினார்.
அவரது கொள்கை உயிரினங்களின் தோற்றம் குறித்து உலகளவில் உள்ள கல்லூரிகளிலும், பல்கலைகழகங்களிலும் கற்பிக்கப் படுகின்ற ஒரே கொள்கையாகவும் காணப்படுகின்றது.
பெரும்பான்மையாக நம்பப் படுவதாலோ, பிரதான நீரோட்ட மீடியாக்களில் முக்கியத்துவப் படுத்தப் படுவதாலோ எந்தவொரு உண்மையும் பொய்யாகவோ, எந்தவொரு பொய்யும் உண்மையாகவோ மாறுவதில்லை. இந்த மாயைகள் அனைத்தையும் தாண்டி, பகுத்தறிவு ரீதியாக ஒரு அம்சத்தை மிகச் சரியாக பகுத்தாராய்வதன் மூலம் உண்மைகளை கண்டறிவதுதான் விஞ்ஞானம் என்பதை புரிந்துகொண்டால், எங்கோ ஒரு முலையில் உறங்கிக் கிடக்கும் உண்மைகளை கண்டறியலாம். உண்மையானதொரு அறிவியல் வாதியின் வேலையும் அதுதான்.
சார்ள்ஸ் டார்வின் தனது புரட்சிகரமான நூலான "The Origin of Species" என்ற நூலில் முன்வைக்கும் வாதங்களை பின்வருமாறு தொகுத்து நோக்கலாம்.
ஆரம்பத்தில் மிகச்சிக்கலான அமைப்பில் பூமியில் உயிர்கள் தோற்றம் பெற்றன. அவை தமக்கு மத்தியில் எப்போதும் வாழ்தலுக்கான போட்டியில் ஈடு பட்டிருந்ததால் சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை அவற்றுக்கு இருந்தன. அவ்வாறு மாற்றிக்கொள்ள முடியுமானவை பிழைத்தன. இயலாதவை அழிந்து போயின. இவ்வாறு கடும் போட்டியில் தனது இருப்பை பாதுகாத்துக் கொள்ள முடியுமாக இருந்த உயிர்களை, இயற்கை தேர்வின் மூலம் தெரிவுசெய்யப் பட்ட உயிர்கள் என டார்வின் வர்ணித்தார். இவ்வாறு மில்லயன் கணக்கான ஆண்டுகள் இடம் பெற்று வருவதால் உயிர்கள் இன்றுள்ள சிக்கலான அமைப்பை பெற்றன. காலப்போக்கில் வித்தியாசமான சூழல் காரணிகளுக்கு ஏற்ப வித்தியாசமான உயிர்களாகவும் அவை பரிணாமம் அடைந்தன.
டார்வின் தனது நூலில் குறிப்பிட்ட வாதத்தின் சாராம்சம் இதுதான். டார்வின் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில் இன்றிருக்கின்ற விஞ்ஞான தொழிநுட்ப வசதிகள் இருக்கவில்லை. மிக எளிய பரிசோதனை உபகரணங்களைத்தான் டார்வின் தனது பரிசோதனைகளுக்கு பயன்படுத்தினார். உயிர்களின் மிக சிக்கலான உடலயியல் கூறுகளை மிக இலகுவாக அவற்றால் கண்டறிய முடியவில்லை. அன்றைய காலப் பிரிவில் இன்று கண்டறியப்பட்டுள்ள விஞ்ஞான உண்மைகளில் மிகவும் ஒரு சிறிய பகுதியே கண்டறியப்பட்டிருந்தது. அதனால், டார்வின் தனது கொள்கையை மிகவும் பலகீனமான அடித்தளத்தின் மீது கட்டியெழுப்ப அது வாய்ப்பாக இருந்து விட்டது.
அவர் தனது H.M.S.Beagle என்ற கப்பலில் செய்த சுற்றுப்பிரயாணத்தின் மூலமும், மற்றும் சில அனுபவங்களின் மூலமும் பெற்ற சில சிந்தனைகளை மையப் படுத்தியாக மட்டுமே அதனை கருத முடிகிறது.
டார்வினிசம் குறித்த ஆய்வில் நீண்ட காலம் ஈடு பட்டு இது தொடர்பில் பல அறிய படைப்புகளை வழங்கியவர்களில் ஹாருன் யஹ்யா என்ற துருக்கி அறிஞர் முதன்மையானவர். தனது எழுத்துகளுக்காக பல முறை சிறை வாசமும் அனுபவித்திருக்கிறார். டார்வினசம் குறித்து தனது படைப்புகள் ஊடாக எண்ணற்ற கேள்விகளை எழுப்புகிறார் ஹாருன் யஹ்யா. அவரது படைப்புகளை http://www.harunyahya.com/ என்ற இணைய தளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கிக்கொள்ளலாம்.
இப்பத்தியில் டார்வினிசம் குறித்து ஹாருன் யஹ்யா முன்வைக்கும் சில கேள்விகளை மட்டும் இங்கு தொகுத்து நோக்கலாம்.
முதல் உயிரின் தோற்றம்
ஒரே மூதாதையரில் இருந்து படிப்படியாக உயிர்கள் பரிணாமம் பெற்றது என ஏற்றுக்கொண்டாலும், உலகில் தோன்றிய மிக எளிமையான அந்த முதல் உயிர் எவ்வாறு ஒருவானது என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து டார்வின் ஒன்றும் குறிப்பிடவில்லை.
டார்வின் வாழ்ந்த காலத்தில் உயிரினங்கள் மிக எளிமையான கட்டமைப்புக் கொண்டவை என நம்பப்பட்டன. பழைய உணவுப் பதார்த்தங்களில் இருந்து சிறிய உயிரினங்கள் தானாகவே உருவாக முடியும் என நம்பப்பட்டு வந்தது. அவ்வாறே பக்டீரியாக்கள் உயிரற்ற பண்டங்களில் இருந்து தானாகவே உருவாக முடியும் என பரவலாக நம்பப்பட்டது.
இத்தகைய ஒரு பின்னணியில் டார்வின் தனது கொள்கையை வடிவமைத் தமையால் முதல் உயிரினம் எவ்வாறு தோற்றம் பெற்றது என்ற கேள்விக்கு பதில் தர வேண்டிய தேவை அவருக்கு இருக்கவில்லை. எனினும் இன்று பரிணாம வளர்ச்சி குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான கேள்வியாக இது இருக்கிறது.
பரம்பரை அலகுகள் கடத்தப்படல்
பரம்பரை அலகுகள் எவ்வாறு சந்ததிக்கு சந்ததி கடத்தப்படுகிறது என்பது டார்வின் வாழ்ந்த காலத்தில் சரிவரப் புரியப்பட்டிருக்கவில்லை. இரத்தம் மூலமே அவை கடத்தப் படுவதாக பரவலாக நம்பப்பட்டது. இந்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்தே டார்வின் தனது கொள்கையை உருவாக்கினார். இயற்கை தேர்வை பரிணாம வளர்ச்சியோடு தொடர்பு படுத்த டார்வின் முற்பட்டார்.
வெளிச் சூழலில் இருந்து பெற்றுக்கொள்ளப் படும் இயல்புகள் பரம்பரை இயல்பாக கடத்தப்பட மாட்டாது என்பது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மை. ஆனால், அவ்வாறு கடத்தப்படும் என டார்வின் நம்பியதுதான் டார்வினின் முதல் தவறாக இருந்தது.
எனினும், இதற்கு சிறிது காலத்திற்குப் பிறகு கிரகர் மெண்டல் என்ற பாதிரி கண்டறிந்த பரம்பரை இயல்புகள் குறித்த ஆய்வு முடிவுகள் இதனை பிழை என நிறுவின. இவ்வாய்வு பரம்பரை ஆய்வுகள் சில மாறாத விதிகளின் மூலம் கடத்தப் படுவதாக நிறுவியது. அந்த விதிகளின் படி, உயிர்களின் தன்மைகள் பொதுப்படையாக மாறாத்தன்மை கொண்டதாகத்தான் இருந்தது.
மெண்டலின் சிந்தனைகள் டார்வினின் சிந்தனைகளை எதிர்த்தன.
இந்த ஆய்வுகள் டார்வினிசத்தின் அடிப்படைகளையே தகர்த்தெரிவதாக அமைந்திருந்தது. இந்த கருத்தியல் சிக்கல்களை கருத்தில் கொண்டு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பக்கூருகளில் நியோ-டார்விநிசம் முன்வைக்கப்படுகிறது. இந்த நியோ- டார்வினிஸ்டுகள் கூர்ப்பின் அடிப்படையாக பரிணாம வளர்ச்சி இடம்பெறுவதாக வாதிட்டனர். கூர்ப்பு என்பது சூழலியல் காரணிகளால் DNA எனப்படும் பரம்பரை இயல்புகளே மாறுவதாக இவர்கள் வாதிட வேண்டி ஏற்பட்டது.
சுவட்டு ஆதாரங்கள்
டார்வினசம் குறித்து மிக ஆழமான சந்தேகங்களை எழுப்பும் விதத்தில் அமைந்துள்ளது சுவட்டு ஆதாரங்கள். டார்வின் தனது நூலில் சுவட்டு ஆதாரங்கள் தனது கொள்கையை மெய்ப்படுத்தும் எனக் குறிப்பிட்டிருந்தார். எனினும், இன்று வரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள சகல சுவட்டு ஆதாரங்களும் டார்விநிசத்தின் அடிப்படைகளையே கேள்விக்குற்படுத்தும் விதத்தில்தான் அமைந்துள்ளன. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த உயிர்களின் சுவடுகளை ஆராய்ந்த போது அவை இன்று வாழ்கின்ற உயிர்களில் இருந்து ஒரு சிறிதும் வேறுபட்டிருக்கவில்லை என்பது தெளிவானது.
அதே போன்று பரிநாமத்தொடரில் இரண்டு உயிர்களுக்கு இடையில் வாழ்ந்த உயிர்களின் சுவடுகளும் கண்டறியப்படவில்லை. இதனை டார்வினும் ஏற்றுக்கொண்டிருந்தார். ஆனால், தொடர்ந்துவரும் ஆய்வுகளில் அவை கண்டறியப்படும் எனக்குறிப்பிட்டார். எனினும் இருநூராண்டுகால ஆராய்ச்சிகளின் பின்னும் இன்னும் எதுவும் கண்டறியப்படவில்லை.
டார்வின் தனது கொள்கையை மெய்ப்படுத்த முன்வைத்த மிகப்பலமான ஆதாரம் இங்கு வலுவிழந்து போகிறது.
இயற்கை தேர்வு
வாழ்க்கை தேவைகளுக்காக கடும் போட்டியில் உயிர்கள் ஈடுபட்டிருப்பதும், இயற்கை தேர்வும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் மிக முக்கியமாக வர்ணிக்கப்பட்டது.
இதனை புரிந்து கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட எந்த ஆதாரமும் இயற்கை தேர்வு எவ்விதம் ஒரு புது உயிரினத்தின் தோற்றத்துக்கு வழிவகுக்கும் என்பதை புரிந்து கொள்ள போதுமானதாக இல்லை.
எனவே நியோ- டார்வினிஸ்டுகள் கூர்ப்பை இயற்கை தேர்வோடு சேர்க்க வேண்டி ஏற்பட்டது.
இருப்புக்கான போராட்டம்
தனது இருப்புக்காக உயிர்கள் எப்போதும் கடும் போட்டியில் ஈடு பட்டிருக்கிறது என்று சொல்வதை கூட முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு இல்லை என்கிறார் ஹாருன் யஹ்யா. உயிர்கள் கிடைக்கக் கூடிய உணவுக்கு ஏற்ப தமது இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தமது எண்ணிக்கையை கட்டுப் படுத்துகின்றன. இங்கு கடும் போட்டி என்பதை விட, இனப்பெருக்கத்தை கட்டுப் படுத்துவதன் மூலமே அவை பெருமளவில் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகின்றன.
சில உயிர்கள் தமது மற்ற அங்கத்தவர்களுக்காக தியாகங்கள் கூட செய்வது தெரிய வந்துள்ளது.
உதாரணமாக, வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சில பற்றீரியாக்கள் மற்ற பாக்டீரியாக்களுக்கு அவை பரவாமல் இருக்க தம்மைத்தாமே அழித்துக் கொள்கின்றன.
எனவே, முழுமையான வாழ்தலுக்கான போராட்டம் என்பது அர்த்தம் அற்றுப் போகிறது என்கிறார் ஹாருன் யஹ்யா.
பரிசோதனை, அவதானம் என்பவற்றின் ஊடான முடிவுகள்
சார்ள்ஸ் டார்வினும் அவர் வழி வந்த அறிஞர்களும் பரிசோதனை ரீதியாக டார்விநிசத்தை நிரூபிக்க தவறி விட்டனர்.
இதனை மிக மெதுவாகத்தான் மாற்றங்கள் இடம் பெறுகிறது எனக் கூறி தட்டிக் கழித்து விட முடியாது. ஒரு மனிதனின் வாழ்வுக்குள், சில நாட்களே வாழும் பல உயிர்களின் பல ஆயிரக்கணக்கான தலைமுறைகள் வாழ்ந்து முடிந்து விடுகின்றன. அவற்றில் எதிலும் இயற்கை தேர்வு மூலம் ஒரு புது உயிர் தோன்றுவது அவதானிக்கப் படவில்லை.
முடிவாக...
மேலே சொன்ன காரணங்களால் டார்விநிஸம் தனது இடத்தை முழுமையாக இழக்கிறது. இந்த பலகீனங்கள் காரணமாகத்தான் நியோ- டார்விநிஸம் முன்வைக்கப் படுகிறது. இவர்களின் கருத்தில் பரிணாம வளர்ச்சியில் இயற்கை தேர்வோடு, கூர்ப்பும் சேர்ந்துதான் புதிய உயிரினங்களை தோற்று விக்க முடியும் என நம்பினர்.
கூர்ப்பை பரம்பரை இயல்புகளில் ஏற்படும், அடுத்த பரம்பரைக்கு கடத்தப்பட முடியுமான இயல்பு மாற்றங்கள் என இவர்கள் குறிப்பிட்டனர்.
நியோ- டார்விநிஸம் பேசுபவர்களில் பலர் டார்வினின் அடிப்படையான சிந்தனைகளில் இருந்து மிகவும் விலகியும் சென்றுள்ளனர்.
சுருக்கமாகச் சொன்னால், நியோ- டார்விநிசத்தின் தோற்றம் டார்விநிசத்தின் பெறுமானத்தை இழைக்கச் செய்கிறது என்றால், மறு புறத்தில் நியோ- டார்விநிச வாதிகள் டார்விநிசத்தில் இருந்து விலகிச் செல்வது அதனை மேலும் பெறுமானம் இழக்கச் செய்கிறது.
கூர்புக்கொள்கை குறித்தும், அதன் ஆழ, அகலங்கள் குறித்தும் மற்றொரு சந்தர்ப்பத்தில் அலசுவோம்.
தற்போதைக்கு சார்ள்ஸ் டார்வின் முன்வைத்த சிந்தனைகளை விஞ்ஞானம் நிராகரித்து விட்டது என்பதை புரிந்து கொண்டால் போதுமானது. நாம் முன்பு சொன்னது போல் மிகவும் சிரமத்தோடு அதிகார வர்க்கத்தின் உட்ச பட்ச பிரயத்தனத்தோடுதான் டார்விநிஸம் இன்னும் உயிர் வாழ்கிறது. பிரசார ஊடகங்களின் மாய வலையில் சிக்காமல் இருந்தால் எம்மை யாரும் ஏமாற்ற முடியாது. இல்லாவிட்டால், ஹோளிவூடில் மட்டும் சாத்தியமான அம்சங்களை விஞ்ஞானம் என்ற பெயரில் எம்மை நம்பச் செய்து விடுவார்கள். Share
11 பதிவு குறித்த கருத்துக்கள்:
அறிவியல் டார்வின் தியரி வழி தான் செல்கிறது. எந்த ஒரு சிறந்த உயிரியல் ஆய்வுக்கூடமும் அந்த சிந்தை வழி தான் பயணிக்கிறது.
சந்தேகம் இருந்தால் உலகப்புகழ் பெற்ற உயிரியல் அறிஞர் கட்டுரைகள் படியுங்கள்.
அரைகுறை அறிவு வேண்டாம். அதை வலைத்தளத்திலும் பரப்ப வேண்டாம்.
யாத்ரிகன்,
டார்வினிசத்தை அறிவியல் ரீதியாக மேம்படுத்துவதோ, உயிரின் தோற்றத்தை, தொடர்ச்சியை அறிவியலின் அடிப்படையில் தேடிக்கண்டுபிடித்து உலகுக்கு வழங்குவதோ அல்லாமல், உங்கள் பதிவின் முழுமுதல் நோக்கம்,
"கடவுள் பக்டீரியாவை பக்டீரியாவாகவும், டைனோசரை டைனோசராகவும், மனிதரை மனிதராகவும் ஆதியில் படைத்தார். அவை இன்று வரை கடவுளால் அழிக்கப்பட்டவை போக எஞ்சியவை எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கின்றன"
என்பதுதான்.
டார்வினிசம் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றமை அறிவியலின் அற்புதமான இயல்பு.
முன்னைய கண்டுபிடிப்புக்களை மறுத்தும், வளர்த்தும் புதிய கண்டுபிடிப்புக்களுக்கு இடம் கொடுப்பது. ஆய்வு ரீதியாக, விஞ்ஞான முறைகளூடு உண்மைகளை அறிய முயற்சிப்பது.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்டு, பின் வந்தவர்களால் நினைவிலிருந்தவற்றைத் தொகுத்து எழுதப்பட்ட ஒரு நூலை கண்மூடித்தனமாக நம்பி அதனைக் காவித்திரிவதல்ல.
கடவுள் ஏழு நாளில் உலகைப்படைத்திருந்தால் தற்போது கிடைக்கும் பன்னங்களின், டைனோசர்களின் எச்சங்களோடு அதே வயதொத்த மனித எச்சங்கள் கிடைக்க வேண்டுமே? ஏன் கிடைப்பதில்லை?
டார்வினிசம் அவர்காலத்தில் இருந்தது போலவே இன்றும் இருக்க வேண்டும் என்பது அறிவியலுக்கே முரணானது. ஆனால் டார்வினிசத்தை வளர்த்தெடுக்கும் அறிவியலாளர்கள், கடவுள் இன்றுள்ளதைப்போலவே உயிர்கள் அனைத்தையும் முன்பொருபோது சில நாட்களில் படைத்து முடித்தார் என்று கண்டறிந்திருக்கிறார்களா என்பதை சற்று தேடிச்சொல்லுங்கள்.
//ஒரே மூதாதையரில் இருந்து படிப்படியாக உயிர்கள் பரிணாமம் பெற்றது என ஏற்றுக்கொண்டாலும், உலகில் தோன்றிய மிக எளிமையான அந்த முதல் உயிர் எவ்வாறு ஒருவானது என்ற கேள்வி எழுகிறது.//
எளிமையான முதல் உயிரி என்ற கதைக்கே உங்கள் நம்பிக்கையில் இடமில்லாதபோது பிறகென்ன இந்த வாதம்?
கடவுள் மனிதரை மனிதராகவே படைத்தார். முதலுயிரியைப்படைத்து அல்லது பெருவெடிப்பை உருவாக்கி பின்னர் உயிர்களைப் பரிணாமமடைய விடவில்லை.
Richard Dawkins பற்றிய தளங்களில் அவர் உரைகள் உள்ளன. உங்களின் எல்லா கேள்விகளின் பதிலும் உள்ளன. வலிந்து கடவுள் கதையை திணிக்க வேண்டாம். இந்த பூ சுற்றலை நம்பி நாடே விமொசனமில்லாமல் நாறி கொண்டு உள்ளது. மேலும் இந்த நாட்டை பின்னோக்கி செல்ல விடாதீர்கள்.
அருமையான அறிவியல் தகவல்களை இலகுவில் புரியும்படி சொல்லியுள்ளீர்கள். நன்றி
டார்வினின் முகமூடி கிழிகிறது...
பரிணாம வளர்ச்சி வெளியிடப்பட்ட நாள் முதல், அது சண்டைகள், யுத்தங்கள், நன்னடத்தை அழிதல் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை. அதனால் இந்த விடயத்தை பற்றி நன்கு தெளிவாக அறிந்து கொள்வதுடன் இதற்கு எதிராக அறிவார்ந்த யுத்தத்தை மேற்கொள்வதை பற்றி மிகவும் அத்தியவசியமான ஒன்றாகும்.
நாத்திக சிந்தனையின் அடிப்படையில் உலகை பார்பதால் உண்டாகும் நோய்களான காட்டுமிராண்டித்தனம், அன்பின்மை மற்றும் சுயநலம் போன்றவற்றிலிருந்து மனித இனத்தை காப்பாற்ற வேண்டும். ஏனெனில் நாத்திக சிந்தாந்தம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் மாத்திரமே சார்ந்துள்ளது.
இந்த சிந்தனையின் பிழைகள் பலமுறை முழுமையான விஞ்ஞான ஆதாரங்களை கொண்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிறுபிள்ளைதனமான பிரச்சார உத்திகள் மற்றும் பல்வேறு பொய்களை கொண்டு அவை அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கின்றன. பெரும்பாலான மக்கள் அதை நிராகரித்து விட்டனர்....
பல மில்லியன் ஆண்டுகளாக இருந்துவரும் உயிரினங்களின் படிமங்கள் பரிணாமவாதிகளின் கூற்றுகளை நிராகரிக்கின்றன. http://www.living-fossils.com/
.....அவர்களுடைய (விரோதமான) பேச்சு உம்மை சஞ்சலப்படுத்த வேண்டாம்¢ ஏனெனில் நிச்சயமாக அனைத்து (வல்லமையும்) கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியது¢ அவனே (யாவற்றையும்) செவியுறுபவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான். (குர்ஆன் 10:65)
Gifariz,
//நாத்திக சிந்தனையின் அடிப்படையில் உலகை பார்பதால் உண்டாகும் நோய்களான காட்டுமிராண்டித்தனம், அன்பின்மை மற்றும் சுயநலம் //
இவை அனைத்தும் ஆத்திகத்தின் நோய்களே அன்றி, மதவாதிகளின் நோய்களே அன்றி நாத்திகத்தினுடையதல்ல.
மதங்களின் பெயராலும் கடவுளின் பெயராலுமே இந்த உலகில் அநியாயங்களும் அக்கிரமங்களும் சித்திரவதைகளும் நடந்தேறியுள்ளன.
யூத மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்காய் போராடிய புரட்சிக்காரன் ஜீசஸ் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டான்.
அதே ஜீசஸ் இன் போதனைகளின், பரலோகத்திலிருக்கும் பிதாஇன் பெயரால் திருச்சபைகள் மொத்த ஐரோப்பாவை இருளில் மூழ்கடித்து மக்களை அடக்கி ஆண்டு நாசமறுத்தன.
பின்னர் சிலுவை யுத்தங்கள் உலக மக்களின் உயிர் குடித்தன.
கிறிஸ்தவத்தின் பெயரால் நாடுகள் பிடிக்கப்பட்டு மதம் மாற்றப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டன.
கிழக்கே இந்துமதத்தின் பெயரால் பிராமணீயம் உயர்த்திப்பிடிக்கப்பட்டு, கடவுள் காலிலிருந்து படைத்த சூத்திரர்கள் பயங்கர வன்முறையின் கீழ் அடக்கியாளபட்டனர்.
சிவனா விஷ்ணுவா என்ற சண்டையில் தென்னிந்தியா இரத்தக்களரியாக்கப்பட்டது.
பிறகு அன்பையும் மனிதாபிமானத்தையும் போதித்த நாத்திகமதங்களான சமணத்தையும் பவுத்தத்தையும் சிவனை முழுமுதல் கடவுளாகக்கொண்ட சைவம் மனிதப்படுகொலைகளால் எதிர்கொண்டது. ஆயிரக்கணக்கில் சமணரும் பவுத்தரும் கடவுளின் பெயரால் கொன்று குவிக்கப்பட்டனர்.
குஜராத்தில் முஸ்லிம்கள் மீதான படுகொலைகளைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் கடவுளை நம்பும் இந்துத்துவாக்களே.
ஆப்கானிஸ்தானில் படு கேவலமான பிற்போக்குத்தனங்களில் மக்களை மூழ்கடித்து வளர்ச்சியையும், மனிதாபிமானத்தையும் குழி தோண்டிப்புதைத்தவர்கள் அல்லாவை நம்பும் இஸ்லாமிய, ஆத்திக தலிபான்களே.
மதத்தின் பெயராலேயே யூதர்கள் பாலஸ்தீனத்தை தினம் தினம் கொலை செய்கிறார்கள்.
ஆனால் நன்றாக நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்,
இன்று குஜராத் போல தமிழ் நாட்டில் இந்து-முஸ்லிம் முரண்பாடு இல்லாமற்போனதென்றால், அது தந்தை பெரியாரின் நாத்திக இயக்கத்தால் மட்டுமே. கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து அவர்களின் விடுதலைக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தவர்கள் நாத்திகத் திராவிட இயக்கத்தோழர்களும் நாத்திகக் கம்யூனிஸ்ட் கட்சித்தோழர்களுமே.
இலங்கையில் கடவுள்களின் பக்தர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடக்கி ஆண்டு, அந்தக்கடவுளையே பார்க்க விடாமல் செய்துகொண்டிருந்த நேரம், அந்த மக்களுக்காக போராடி அந்த மக்களுக்கு கோயில் கதவுகளைத் திறந்துவிட்டவர்கள் நாத்திகக் கம்யூனிஸ்ட்டுக்களே.
கடவுளின் பெயரால் , கடவுள் அமைத்த உலகம் என்ற பொய்யைச்சொல்லிச் சுரண்டிக்கொழுத்துக்கொண்டிருந்த பண்ணையார்களையும் முதலாளிகளையும் முகத்திரை கிழித்து அம்பலப்படுத்தி மக்கள் அனைவரையும் சுரண்டலற்ற உலகுக்கு அழைத்துச்செல்லப்புரட்சி செய்தது நாத்திகக் கம்யூனிஸ்ட் இயக்கமே.
சுரண்டிக்கொழுப்பதற்கு மாற்றாகப் பொதுவுடமைப்பொருளாதாரத்தை முன்வைத்தது நாத்திகத்தன்மையுள்ள மார்க்சியச் சித்தாந்தமே.
இன்றும் பெண்களைச் சாட்சி சொல்ல அனுமதிக்காததும், காட்டுமிராண்டித்தனமான தண்டனைகளை வழங்குவதும், மூடத்தனத்துள் மக்களை மூழ்கடித்து வைத்திருப்பதும் இஸ்லாம் மதவாதிகளே.
இந்த உலகை காலில் போட்டு மிதிக்க நினைத்த ஹிட்லரும் முசோல்னியும் தீவிரமான கடவுள் நம்பிக்கையாளர்கள். அவர்களிடமிருந்து உலகைக்காத்த சோவியத் யூனியனு ஸ்டாலினும் இறைமறுப்பாளர்கள்.
மதவாதிகளலாலும், கடவுள் நம்பிக்கையின் பெயராலும் மதங்களாலுமே சுயநலமும், முரண்பாடுகளும் இரத்தக்களரியும் அடக்குமுறைகளும் இந்த உலகில் நிலவிவருகின்றனவே அன்றி, நாத்திகத்தின் பெயரால் அல்ல. பிற்போக்குத்தனங்களுக்கெதிராகப் போராடுவதும், மக்களுக்காக தியாகங்கள் செய்வதும் தான் பெரும்பாலும் நாத்திக இயக்கங்களாக இருக்கின்றன.
கடவுள் நம்பிக்கையாளர்கள் சொர்க்கம் போகிற சுயநலத்தில் இருப்பவர்கள். நாத்திகர்கள் தாம்தான் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் கடவுள் இல்லை என்ற உணர்வில் பொதுநலத்தோடு வழ்பவர்கள்.
Richard Dawkinson உடைய இந்த இரண்டு வீடியோக்களையும் ஒரு முறை பார்வை இடுங்கள். உலகப் புகழ் பூத்த விஞ்ஞானி ஒரு சின்னக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாமல் தடுமாறுகிறார்.
http://www.youtube.com/watch?v=zaKryi3605g&NR=1
http://www.youtube.com/watch?v=K0F1RtT9dZ8
கடவுள் எத்தனை தரம் மனிதரைப்படைத்தார்?
ஏபிரகாமிய மதங்களின் படிக் கடவுள் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார். பிறகு அவர்கள் புணர்ந்து சந்ததி பெருக்கி இன்றுள்ள அத்தனை மனிதர்களும் உருவானார்கள்.
பிறகு இடையில் ஒருக்கால் கடவுள் இறங்கி வந்து மனிதர்கள் சிலரைப் படைக்கவில்லை.
அப்படியானால், ஆபிரிக்கக் கறுப்பின மக்கள், சீன மக்கள், இந்தியமக்கள், வெள்ளைத்தோல் மக்கள், அராபியர், எஸ்கிமோவர் எல்லாம் எப்படி உருவானார்கள்?
மரபணு ரீதியான மிகத்தெளிவான மாற்றங்கள் கொண்ட இந்த மனித வகையினங்கள் எவ்வாறு உருவாகின?
மூளைச்செயற்பாடு வித்தியாசமான (down syndrome என்கிறோமல்லவா) பிள்ளைகள் எப்படி பிறக்கின்றனர்?
ஒவ்வொரு முறையும் விந்தும் முட்டையும் சேரும் போது கடவுள் வந்து மரபணுக்களில் மாற்றங்களை உருவாக்கி விடுகிறாரா?
அல்லது "மாறல்" (Mutation) இயல்பாய் நடக்கிறதா?
மன்னியுங்கள் உங்கள் பதிவோடு ஒத்துப் போக முடியவில்லை
தங்கள் பக்கத்தை என் எழுத்தால் நிரப்பும் உத்தேசமின்மையால் என் வலைப்பூவில் சில விளக்கங்களை பதிந்துள்ளேன். தயவு செய்து பாருங்கள் உங்களுக்கு எதிர் கருத்து இருப்பின் பின்னூட்டமிடுங்கள்.
http://sridharshan.blogspot.com/2009/11/blog-post_14.html
Post a Comment