இலங்கையின் அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் பெருமளவில் வியாபார சமூகத்தையும், முதலீட்டாளர்களையும் அச்சமடையச் செய்துள்ளது. குறிப்பாக நாட்டின் எதிர்கால அரசியல் ஸ்திரத்தன்மை தொடர்பிலும், தமது முதலீட்டின் பாதுகாப்பு தொடர்பிலும் இந்த அச்ச உணர்வு பெருமளவில் காணப்படுகிறது. யுத்தத்தின் நிறைவோடு உருவான இலங்கையின் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கைகளை, இந்த அரசியல் இழுபரி நிலை பெருமளவில் தகர்த்துவிட்டதாகவே தோன்றுகிறது.
சமூகத்தின் எல்லா மட்டத்தினர் மத்தியிலும் யுத்தத்தின் நிறைவோடு ஒரு புது நம்பிக்கை துளிர்த்தது. விரைவில் இலங்கை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறிவிடும் என்ற எதிர்பார்க்கைகள் இருந்தன. யுத்தம் நட்டின் பொருளாதாரத்தை பெருமளவில் பாதித்தது. யுத்தம் ஒன்று இடம் பெறாமல் இருந்திருந்தால், நாடு மலேசியாவின் தரத்தில் இருந்திருக்கும் என IMF இன் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். சுதந்திரம் கிடைத்த போது இலங்கை ஆசியாவின் செல்வந்த நாடுகளுள் ஒன்று.
மலேசியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுக்கொண்ட போது, சிங்கப்பூர் பிரதமர் கூட தான் சிங்கப்பூரை விரைவில் "சிலோனைப்" போல் மாற்றிக்காட்டுவதாக வாக்களித்தார். ஆனால், துரதிஷ்டவசமாக இன்று இலங்கை சிங்கப்பூரைப் போல் மாறுவதற்கு கனவு கொண்டு இருக்கிறது. இத்தனைக்கும் இலங்கை எல்லா வளங்களையும் நிறைவாகப் பெற்ற ஒரு நாடாகத் திகழும் போது, சிங்கப்பூர் தனது குடிநீர் தேவைக்கே கூட மலேசியாவிடம் தங்கியிருக்க வேண்டிய நிலையில் இருந்தது.
நீண்ட காலமாகவே எமது இந்த வீழ்ச்சிக்கு யுத்தத்தையும் காலனித்துவத்தையும் நாம் காரணமாகச் சொல்லி வந்திருக்கிறோம். இவை இரண்டும் எமது இன்றைய நிலைக்கு பெருமளவில் பங்களித்த காரணிகள் என்பதில் சந்தேகமில்லை. எனினும், இவை மட்டுமே காரணிகளல்ல. பிழையான பொருளாதாரத் தீர்மானங்களும், முறையற்ற நிர்வாகமுமே இன்றும் பெரும் பிரச்சினையாக இருக்கிறது. எமது அரசியல் கலாசாரம் பொருளாதாரத் தீர்மானங்கள் சுதந்திரமாக மேற்கொள்ளப்படுவதைச் சாத்தியமற்றதாக்கியுள்ளன. பொருளாதாரத்துறைசார் நிருவனங்கள் தொடர்ச்சியாக அரசியல் துறை இலாபங்களுக்காகவே பயன்படுத்தப் பட்டு வந்துள்ளன.
எனவே, ஒரு குறிப்பிடத்தக்க் பொருளாதார அபிவிருத்தி ஒன்றை காண்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே போயிற்று. எனினும், அரசியல்வாதிகள் தமது கையாலாகாத் தனத்தை மறைக்கவும், வாக்கு வங்கிகளை பாதுகாத்துக்கொள்ளவும் யுத்தத்தை கவனமாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.
இன்று வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார ஜாம்பவான்களான ரஷ்யா, சீனா, இந்தியா என்பன கூட உள்ளூர் முரண்பாடுகளை முகம் கொடுக்காமல் இல்லை. இதனைத்தாண்டியும் தமது பொருளாதாரத்தை வழுப்படுத்த இவற்றால் முடிந்தது எப்படி?
உண்மையில், இலங்கையின் அபிவிருத்திப் பாதையில் யுத்தம் ஒரு தடைக் கல்லாக இருந்தது உண்மை. எனினும், அது மட்டுமே காரணம் அல்ல.
எவ்வாறாயினும், யுத்தம் நிறைவடைந்து, புலிகள் இராணுவ ரீதியாக முற்றாக தோல்வியைத் தழுவிய பிறகு, நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குறிய பல்வேறு சாதகமான நிலைமைகள் உருவாயின. குறிப்பாக, முதலீட்டாளர்கள் பல புதிய வியாபார வாய்ப்புக்களைத் தேடலாயினர். சொந்த நாட்டிலேயே வேலை செய்ய விரும்பினாலும், நாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை இன்மையால், தொழில்களுக்காக வெளிநாடுகளை நாடிய பல தொழில் வல்லுனர்களுக்கு தமது சொந்த நாட்டிலேயே தொழில் செய்வதற்குரிய வாய்ப்பு உருவானது. மூலைசாலிகள் வெளியேற்றம் பெரும் பிரச்சினையாக இருந்த நாட்டுக்கு, இது ஒரு மிகவும் சாதகமான நிலை என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல், யுத்தத்தால் பெருமளவில் பாதிப்புற்ற சுற்றுலாத்துறை உள்ளிட்ட தொழில் துறைகள் புத்துயிர் பெறலாயின. இயற்கை வளங்களும், வரலாற்று சின்னங்களும் நிறைந்த இந்த தென்னாசிய நாட்டை காண்பதற்குறிய வாய்ப்பை சுற்றுலா பயணிகள் மீண்டும் பெற்றுக் கொண்டனர்.
அடிமட்ட விவசாய சமூகம் கூட இதன் பிறகாவது தமது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்றது.
அடிமட்ட விவசாய சமூகம் கூட இதன் பிறகாவது தமது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையைப் பெற்றது.
இந்த எல்லா சாதகமான சமிக்ஞைகளையும் அர்த்தமற்றதாக்கி விடுமோ என்ற அச்சம் கொள்ள வைக்கும் விதத்தில் அமைந்துள்ளன இலங்கையின் அண்மைக்கால நிகழ்வுகள். இந்த நிகழ்வுகள் இலங்கை ஜனநாயகம் குறித்த பலமான கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளன. குறிப்பாக பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். எழுத்தாளர்கள் தமது சொற்களை கவனமாக தேர்வு செய்ய வேண்டியுள்ளது. பலர் தமது ஆக்கங்களை சுய தணிக்கை செய்து கொள்கின்றனர். இது ஒரு ஜனநாயக நாட்டுக்கு சாதகமான அறிகுறிகளல்ல.
இலங்கை தனது ஜனநாயகப் பயணத்தில் இன்னும் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது என்பதையே இது காட்டுகிறது. இல்லாத போது எல்லாக் கனவுகளும் மீண்டும் குப்பைத் தொட்டிக்கு சென்று விடும்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னால் முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டின் எல்லா சமூகங்களையும் மைய நீரோட்ட அரசியலில் கலக்கச் செய்து ஒரு சிறப்பான எதிர்காலத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பு காத்திருக்கிறது. குறிப்பாக LTTE தோல்வி அடைந்து, தேசிய, சர்வதேச சூழ்நிலை ஒரு தனி நாட்டுக் கோரிக்கை வெற்றி அளிப்பதற்குறிய வாய்ப்பு குறைவாக இருக்கின்ற நிலையில், தமிழர்கள் ஒருங்கிணைந்த இலங்கைக்குள் ஒரு அரசியல் தீர்வைத் தேடுவதற்குறிய வாய்ப்பே அதிகம்.
இந்த சூழ்நிலையில் எல்லா சமூகங்களினதும் சம உரிமை, சம வாய்ப்பு என்பன உறுதிப் படுத்தும் விதத்தில் அரசு விவேகமாக செயல்படுமாக இருந்தால், இலங்கையின் அபிவிருத்தி என்பது ஒன்றும் நினைத்துப் பார்க்க முடியாததல்ல.
உள்ளக முரண்பாடுகளுக்குரிய இடத்தை வைத்து மேற்கொள்ளப்படும் எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் நீண்ட காலத்தில் நல்ல விளைவுகளை நாட்டுக்குக் கொண்டு வராது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றாலும் இதுதான் உண்மை.
குறிப்பாக அடுத்த பல தசாப்தங்களுக்கு நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கும் விதத்தில் அமையப்போகும் யாப்புச் சீர்திருத்ததை மேற்கொள்ளும் நோக்கில் பாராளுமனறத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை குறி வைத்து தேர்தலில் அரசாங்கம் களம் இறங்கி இருக்கும் நிலையில் இது மிகவும் முக்கியமான அம்சமாகும்.
நம்பிக்கையை எல்லோர் மனங்களிலும் விதைப்பதே இன்றுள்ள முக்கிய தேவையாக இருக்கிறது; அபிவிருத்தி தானாக உருவாகும்.
5 பதிவு குறித்த கருத்துக்கள்:
நல்ல பதிவு நண்பரே.
இலங்கை ஒரு வளம்மிக்கநாடு என்ன செய்வது ??????:::::::::::::
அன்பன் பிறேம்.
உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்..
நன்றி பிறேம் & என்ன கொடும சார்,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டல்களுக்கும்.
நல்ல பதிவு நண்பரே, இலங்கையில் அமைதி திரும்ப நான் கடவுளிடம் வேண்டுகிறேன்
நன்றி சசிகுமார்,
உங்கள் வருகை, பிரார்த்தனை, பின்னூட்டல் அனைத்திற்கும்.
Post a Comment