ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்று யாப்புச் சீராக்கம் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில், அரசாங்கம் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. தனது கட்சிக்கு வலு சேர்க்கும் நோக்கத்தோடு முன்னெப்போதும் இல்லாத வகையில் நடிக, நடிகைகள், விளையாட்டு நட்சத்திரங்களை அபேட்சகர்களாக களம் இறக்கியுள்ளது.
பெரும் எண்ணிக்கையான வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியைத் தழுவிய பிறகு, ஜனாதிபதித் தேர்தலுக்கென்றே கூட்டுச் சேர்ந்த எதிர்க்கட்சிகள் பிளவு பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அமோக வெற்றியைப் பெறும் என்றே தற்போதைய களநிலவரத்தை நோக்கும் போது எண்ணத் தோன்றுகிறது.
தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும் என்பதை தற்போதைக்கு அறுதியிட்டுக் கூறுவது சிரமமாக இருந்தாலும், சிறுபான்மையினர் நிதானித்து, மிகவும் கவனமாக முடிவெடுத்து செயல்பட வேண்டிய ஒரு தேர்தல் இது என்ற ஒன்றை மட்டும் அறுதியிட்டுச் சொல்லலாம்.
யுத்தத்தின் முடிவோடு உருவான தீவிர தேசிய வாத அலைகள் இன்னும் ஓயவில்லை என்பதையே நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலும், ஜனாதிபதித் தேர்தலும் சொல்லிக் கொண்டுள்ளன. பொன்சேகாவின் அதிரடி அரசியல் பிரசன்னம் இந்த தேசியவாத அலையில் சிறிய பின்னடைவை மட்டுமே உண்டு பண்ணியது.
ஆளும் சுதந்திர முன்னணி ஜனாதிபதி வேட்பாளருக்கு சவாலாக தேர்தலில் குதித்த பொன்சேகாவிற்கு சிறுபான்மை சமூகத்தினர் வாக்களித்ததை காரணம் காட்டி, பெரும்பான்மையினர் சிறுபான்மையினருக்கு எதிராக வாக்களித்து அவர்களுக்கு தக்க பாடம் புகட்டி இருப்பதாக வேறு ஒரு பிரசாரத்தை சில அரசியல் வாதிகள் கொண்டு சென்றனர்.
கடந்த தேர்தலில் சிறுபான்மையினர் அரசாங்கத்தை தெளிவாகவே நிராகரித்திருந்த நிலையில், சிறுபான்மையினரை பலிவாங்கும் வகையில் அரசாங்கம் நடந்து கொள்ளலாமோ என்ற பரவலான அச்சம் வேறு இருக்கத்தான் செய்தது. மறுபுறத்தில், சர்வதேசத்துக்கு தேர்தல் முடிவுகள் வேறுவிதமான செய்தியையே சொன்னது.
எவ்வாறாயினும், பாராளுமன்றத் தேர்தலின் பின்னைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும்? மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெரும் பட்சத்தில், ஒரு புதிய அரசியல் யாப்பு அறிமுகப்படுத்தப்படுமாக இருந்தால் அது எவ்வாறு அமையும்? 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பைப் போல் அது அமையுமா? என்ற கவலைகள் இல்லாமல் இல்லை.
சர்வதேச சமூகம் இலங்கை விவகாரத்தில் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது. அமெரிக்கா, மற்றும் மேற்கு நாடுகள் ராஜபக்ஷ அரசுக்கு விரோதமான ஒரு போக்கை கடை பிடித்து வரும் போது சீனா, ரஷ்யா, ஈரான் என்பன இலங்கையின் நெருங்கிய கூட்டாளிகளாக இருக்கின்றன.
எனவே, ராஜபக்ஷ அரசுக்கு சர்வதேச அழுத்தம் பெரிதாக எதையும் செய்து விட முடியாது. இதுதான் மஹிந்தவை ஒரு 'இரும்பு மனிதராக' மாற்றி வைத்திருக்கிறது. LTTE இனருக்கு எதிரான யுத்தத்தை எந்த சர்வதேச அழுத்தமும் நிறுத்த முடியாமல் போனதும் இதனால்தான்.
எனவே, சர்வதேச அழுத்தத்தை எந்த அளவு நம்பலாம் என்பது கேள்விக் குறியானதே...! சர்வதேச ரீதியாக நாடுகள் இடையிலான வலுச் சமனிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம்.
மீண்டும் 'இரு துருவ' உலக ஒழுங்கொன்று உருவாகிக் கொண்டிருக்கும் யதார்த்ததை நாம் ஏற்க வேண்டியிருக்கிறது.
இலங்கை அரசியல் களத்தில் இடம் பெற்று வரும் மோதல் நிலை, இந்த இரண்டு துருவங்கள் இடையிலான ஒரு பனிப்போர் களமாக இலங்கை மாற்றம் அடைந்து வருவதையே காட்டுகிறது.
இந்த அரசியல் யதார்த்ததை புறம் தள்ளிவிட்டு உணர்ச்சி வசப்பட்டு எடுக்கும் எந்தவொரு முடிவும் மோசமான பின் விளைவுகளைக் கொண்டு வரும் என்பதே யதார்த்தமாகும்.
இலங்கை அரசியல் களத்தில் உடனடி ஆட்சி மாற்றம் ஒன்று தற்போதைக்கு சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. சிறுபான்மையினரும், சிங்கள் மேட்டுக் குடியினரும் நினைப்பதால் மட்டும் எந்த ஆட்சி மாற்றமும் இங்கு உருவாகி விட மாட்டாது. கிராமப்புற சிங்கள் அடித்தட்டு சமூகம்தான் அடுத்த தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கப்போகிறார்கள். அவர்களின் வாக்கு வங்கிகளை பெறும் அளவுக்கு, எதிர்க்கட்சிகள் தமது பிரசார இயந்திரத்தை கொண்டு செல்ல முடியுமா என்ற கேள்விக்கான பதிலில்தான், இலங்கையில் ஆட்சி மாற்றம் தற்போதைக்கு சாத்தியமா என்ற கேள்விக்கான பதிலும் தங்கி இருக்கிறது.
சிறுபான்மை அரசியல்வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபங்கள், சுய நலம் என்பவற்றைத் தாண்டி செயல்பட வேண்டிய தருணம் இது.
யாப்புச் சீராக்கம் ஒன்று இடம்பெறுமாக இருந்தால், அதில் நமது குரலும் பலமாக ஒலித்தால் மட்டுமே ஒரு முறையான சீராக்கம் ஒன்றை, குறைந்த பட்சம் சிறுபான்மையினருக்கு குழிபரிக்காத சீராக்கம் ஒன்று இடம்பெற முடியும். இல்லாத போது 'ஹெல உருமய' போன்ற வெளிப்படையாக இனவாதம் பேசும் கட்சிகள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலையில், 'தனிச் சிங்களச் சட்டம்' போன்ற நாட்டின் ஒற்றுமைக்கு சாவு மணி அடிக்கக்கூடிய சட்டங்கள் அமுலுக்கு வந்தாலும் வியப்பொன்றும் இல்லை.
சிறுமான்மைக் கட்சிகள் அனைத்தும் ஒன்றினைந்து குரல் கொடுப்பதன் மூலம் சட்டத்திருத்ததில் சாதகமான மாற்றங்களை கொண்டு வருவதும் அசாத்தியமானதல்ல. ஆழும் தரப்பு, எதிர்த்தரப்பு எந்த தரப்பில் இருந்தாலும் இதனை செய்யலாம். குறுகிய கட்சி நலன், அரசியல் இலாபம், சுயநலம் என்பவற்றுக்கு மேலாக சமூக நலன் அடிப்படிடையில் நமது அரசியல் வாதிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொதுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும்.
வரலாற்றின் ஒரு முக்கியமான திருப்பத்தில் நாம் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன். இதனை மிகச்சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அதற்காக பல தசாப்தங்கள் நாம் வருந்த வேண்டி வந்தாலும் வரலாம்.
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment