சூழல் தொடர்பான பிரச்சினைகள் எமது தலைமுறை எதிர்கொள்ளும் ஒரு முக்கிய சவாலாக இன்று மாறியிருக்கிறது. புவி வெப்பமடைதல், காலனிலை மாற்றம், அறிதான உயிர்கள் அழிவடைந்து வருதல் என சூழல் தொடர்பிலான பல்வேறு பிரச்சினைகளை உலகம் அனுபவித்து வருகிறது.
எதிர்கால தலைமுறைகளின் நலன் குறித்து எவ்வித கவலையும் கொள்ளாது செயல்படும் மனிதனின் பொறுப்பற்ற செயல்பாட்டினதும், தான் மட்டும் அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்று அவனது வடிகட்டிய சுயநலத்தினதும் விளைவாகவே இதனைக் கருதலாம்.
மனிதன் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நாட்களில் சூழல் சமநிலை மிக உச்ச அளவில் பேணப்பட்டு வந்தது. விஞ்ஞானம் மிகவும் குறைந்த வளர்ச்சியையே கண்டிருந்த அந்த நாட்களில் உற்பத்தி மட்டம் மிகக் குறைவாக இருந்தும் கூட, சூழல் சமநிலையில் எந்த வித குழப்பத்தையும் ஏற்படுத்தாமல், அனைவரினதும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அன்று முடிந்தது.
துரதிஷ்ட வசமாக இன்று தொழினுட்பம் அளவுக்கதிகமான உற்பத்தியை ஏற்படுத்தி இருந்தும், அந்த நடவடிக்கைகள் சூழல் சமநிலையில் பெரும் குழப்ப நிலையைத் தோற்று விட்டிருந்தும், பட்டினிச் சாவும், வறுமையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாகி இருக்கும் ஒரு நிலையையே அவதானிக்க முடிகிறது.
அப்படியானால் இந்த விஞ்ஞான வளர்ச்சியும்,. உற்பத்திப் பெருக்கமும் எதைத்தான் மனித சமூகத்திற்கு கொண்டு வந்திருக்கிறது என்ற நியாயமான கேள்வி எழத்தான் செய்கிறது.
உண்மையைச் சொல்வதானால், இந்த வளர்ச்சியை உலகின் ஒரு சிறியதொரு பகுதி மக்கள்தான் அனுபவிக்கிறார்கள். இவர்கள் இந்த வசதிகளை அனுபவிப்பதற்காக தற்போது வாழந்து கொண்டிருக்கும் மனிதர்களுடயது மட்டுமல்ல, இனித்தான் பிறக்கவிருக்கும் மனிதர்களின் நலன்களையும் அடகு வைத்து செயல்படுகிறார்கள்.
இயற்கை சூழல் மனிதர்கள் வாழ்வதற்குப் பொறுத்தமாக மிகவும் அற்புதமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சமனிலையில் ஏற்படுத்தப்படும் சிறிய மாற்றங்களும் சூழல் சமனிலையிலும், உயிர்வட்டத்திலும் பெரிய அளவிலான பிரச்சினைகளை உருவாக்குகிறது.
காபன் துணிக்கைகள் சூழலுக்கு அளவுக்கதிகம் வெளியிடப்படுவதை பெருமளவில் குறைத்தாலும் கூட, 2050 களாகும் போது இன்றிருப்பதை விட பல பாகை செல்சியஸ்கள் வெப்ப நிலை உயர்வடைவதை தடுக்க முடியாது. ஆனால், இன்றுள்ள நிலையில் காபன் துணிக்கைகளை குறைப்பது ஒரு புறமிருக்க வருடா வருடம் பல மடங்கு அதிகரித்துச் செல்வதையே அவதானிக்க முடிகிறது.
இது தொடர்பில் சர்வதேச ரீதியாக மேற்கொள்ளப்பட்ட எந்தவொரு நடவாடிக்கையும் வெற்றியளிக்கவில்லை. இதற்கான பிரதான காரணம் பெருமளவில் காபன் துணிக்கைகளையும், கழிவுகளையும் சூழலுக்கு வெளியேற்றும் நாடுகள் இது தொடர்பிலான உடன்படிக்கைகளுக்கு வருவதற்கு தயக்கம் காட்டுவதாகும். இவர்களின் இந்த செயல்பாட்டை நியாயப்படுத்த, வெப்ப நிலை சில பாகைகள் உயர்வடைவதால் பாதகம் ஒன்றும் ஏற்படப்போவதில்லை என்ற பாணியில் சில புத்திஜீவிகள் எழுதி வருவதும் குறிப்பிடத்தக்கது.
உண்மையில் எமக்குள்ள பிரதான பிரச்சினை வெப்ப நிலை அதிகரிப்பது மட்டுமல்ல; கால நிலை குழம்பியுள்ளது. இது விவசாயம் செய்பவர்களை பாதிப்பதோடு, விவசாயத்தையே நம்பி வாழும் நாடுகளை பெருமளவில் பாதித்து வருகிறது. சூழல் மாசடைதல் காரணமாக பல்வேறு நோய்கள் உருவாகி வருவதோடு நாடுகளின் தனித்துவமான உயிர்ப்பல்வகைமையையும் அது அபாயத்திற்குள்ளாக்கியுள்ளது.
வளங்கள் மிகவும் வேகமாக நுகரப்பட்டு வருவதால், காலப்போக்கில் வளங்கள் அழிவடைந்து எதிர்கால சந்ததிக்கு கிடைக்காமலேயே சென்று விடும் அபாயம் இருக்கிறது.
இந்த வேகமான வள நுகர்வு ஆசியா, ஆபிரிக்கா கண்டங்களின் வேகமான சனத்தொகை வளர்ச்சி காரணமல்ல. இன்றைய சர்வதேச ரீதியான அபிவிருத்தியின் பயனை உலக சனத்தொகையின் பெரும் பகுதியினர் அனுபவிக்கவில்லை என்பதுதான் உண்மை. இன்றைய உலகில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை மையப்படுத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவை இருக்கிறது. உலகின் அனைத்து மக்களும், அபிவிருத்தியின் பயனை அனுபவிக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர்கால சந்ததியினரும் அதனை அனுபவிக்க வேண்டும்; பூகோள உருண்டையில் வாழும் சகல உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
சூழலியல் பாதுகாப்பு என்பது கருத்திற்கொள்ளப்படாத எந்தவொரு அபிவிருத்தி நடவடிக்கையும் குறுகிய காலத்தில் சில நன்மைகளை கொண்டுவந்தாலும், நீண்ட காலத்தில் எதிர்மறை விளைவுகளையே கொண்டுவரும் என்பதையே அண்மைக்கால அனுபவங்கள் உணர்த்திக் கொண்டுள்ளன.
எமக்கு மத்தியில் உள்ள சகல வேற்றுமைகளையும் மறந்து சூழல் பாதுகாப்பு தொடர்பில் எமது குரலை பலமாக ஒலிக்கச்செய்வது இன்றைய காலத்தின் தேவையாகும் என்பதோடு, எம் அனைவரினதும் தார்மீகக் கடமையும் ஆகும்.
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment