யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

மடோல் துவ (මඩෝල් දුව)- ஒரு சிங்கள சிறுவர் நாவல்


மடோல் துவ (මඩෝල් දුව) மார்டின் விக்ரமசிங்கவின் ஒரு சிறுவர் நாவல். ஆங்கிலத்தில் Adventure Novels என்று சொல்வார்களே...! அந்த வகையறாவுக்குள் அடக்கும் படியான ஒரு நாவல் இது. நான் ரசித்து வாசித்த நாவல்கள் வரிசையில் இந்த சிங்கள நாவலும் ஒன்று.




சிறிது காலத்துக்கு முன் என் சிங்கள அறிவை வளர்த்துக் கொள்வதற்காக நிறைய சிங்கள நாவல்கள் வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் வாசிக்கக் கிடைத்த ஒரு நாவல் இது. மடோல் துவ குறித்து தமிழ் வாசகர்களுடனும் சில அம்சங்களை பரிமாறிக்கொள்ளலாம் என நினைக்கிறேண்.

சிங்கள இலக்கியத்தின் முடிசூடா மன்னன் மார்டின் விக்ரமசிங்கவின் மிகப் புகழ் பூத்த நாவல்களில் ஒன்று இது. அறுபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன் 1947 இல் இது வெளிவந்தது.

இந்த நாவல் பிறகு 1976 இல் மார்டின் விக்ரமசிங்கவின் மறைவைத் தொடர்ந்து, இலங்கையின் முன்னனி சிங்கள திரைப்படக் இயக்குனர் ஜேம்ஸ் பீரிஸினால் சிங்கள தொடர் நாடகமாக தயாரிக்கப்பட்டு பெருத்த வரவேற்பைப் பெற்றதோடு, வணிக ரீதியிலும் பெரு வெற்றி ஈட்டியது.

கதை இடம்பெறும் இடம் மடோல் துவ தீவு (Madol Duwa Island) என்றழைக்கப்படும் கொக்கலை. கொக்கலை தென்னிலங்கையில் உளள மார்ட்டின் விக்ரமசின்கவின் பிறந்த இடம்

மடோல் துவக் கதையின் சுருக்கம் இதுதான்:

ஜின்னா, உபாலி இரண்டு சிறுவர்களும்தான் இந்த கதையின் கதாநாயகர்கள். உபாலி தன் தாயை சிறுவயதிலேயே இழந்துவிட  தந்தையின் இரண்டாம் தாரத்தால் தொந்தரவுக்குள்ளாகிறான்.

அதனை பொறுக்காத அவன், ஊர் சிறுவர்களோடு ஊர் முழுதும் சுற்றி குறும்புகளில் ஈடு படுகிறான். இதைப்பார்க்கும் தந்தை அவனைத் தூர இடமொன்றில் இருக்கும் ஒரு பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறார். பாடசாலை ஹெட் மாஸ்டரின் வீட்டில்தான் அவன் தங்குகிறான். என்றாலும், அவனது இயல்புக்கு அந்த பள்ளிக்கூடமோ, வாத்தியாரோ ஒத்து வரவில்லை.

திரும்பி ஓடி வந்து விடுகிறான். திரும்பி வந்ததற்காக அவன் தனது  தந்தையால் தண்டிக்கப்படுகிறான். இதனால் மேலும் விரக்தி அடைந்த உபாலி தன் வீட்டில் பணியாளனாகவும், தன் நண்பனாகவும் இருந்த ஜின்னாவையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடி விடுகின்றான். தூர இடமொன்றில் உள்ள ஒரு விவசாயியிடம் இருவரும் வேலைக்கமர்கிறார்கள்.

இந்த நிலையில் வனாந்தரங்கள் சூழ்ந்த தீவொன்று அருகாமையில் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அதனால் கவரப்பட்ட இருவரும் அந்த இடத்திற்கு சென்று வாழ்வதற்கு முடிவெடுக்கிறார்கள். அந்தத் தீவில் பேய் பிசாசுகள் இருப்பதான ஒரு கதை பரவலாக அடிபடுகிறது. ஆனால், அதனை பொருட்படுத்தாமல் இருவரும் தமது முதலாளி, பொடிகமராளவின் உதவியோடு அங்கு விவசாயம் செய்கிறார்கள்.

இந்தப் பேய், பிசாசு குறித்த பீதிக்குக் காரணம் வனாந்தரப் பக்கத்தில் இருந்து அடிக்கடி தெரிந்து கொண்டிருந்த வெளிச்சங்கள்தான். இதனால் அந்தப் பக்கம் எவறும் தலை வைத்தே படுப்பதில்லை. இந்த வெளிச்சத்தை இவர்களும் கவனிக்கிறார்கள். பேய், பிசாசு குறித்த கதைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு அதன் உண்மைத்தனமையை அறியும் நோக்கோடு இருவரும் அந்த வெளிச்சத்தை பின் தொடர்ந்து செல்கிறார்கள். சட்ட விரோதச் செயல்களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப சில விஷமிகள் செய்யும் சில்மிஷம் அது என்று அவர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.

புஞ்சிமஹத்தயா என்பவரும் பிறகு இவர்களோடு இணைந்து இவர்களின் விவசாய முயற்சிகளுக்கு உதவி புரிகிறார்.

தன் தந்தை நோய்வாய்ப்பட்டிருப்பதாக கேள்விப்பட்டு தன் வீடு திரும்புகிறான் உபாலி. சிறிய தாய்க்கும், சகோதரனுக்கும் உதவிகள் புரிகின்றான்.

அரச காணியில் பயிர்செய்கையில் ஈடு படுவது தொடர்பில் சில சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்த பிறகு மடோல் துவவுக்கு மீண்டும் திரும்புகிறான். அது தற்போது ஒரு புகழ் பெற்ற இடமாக மாறுகிறது.
இதுதான் Madol Duwa Island என்று அழைக்கப்படும் கொக்கலை சுற்றுலாத் தளம். உள்நாட்டில் இருந்தும் வெளி நாடுகளில் இருந்தும் இதனை அவதானிக்க நிறைய உல்லாசப்பிரயாணிகள் இங்கு வருகிறார்கள். மார்டின் விக்ரமசிங்கவின் சொந்த இடம் இதற்கு அருகில்தான் இருக்கிறது. கதை உண்மையானதா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்கவும் வாய்ப்புண்டு.

தமிழிலும், ஆங்கிலத்திலும் நாவல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பை இதுவரை நான் கண்டதில்லை. சந்தையில் இருக்கிறதா என்றும் தெரியாது.
மடோல் துவவின் வெற்றிக்கு காரணம் மார்டின் விக்கிரமசிங்கவின் எளிமையான அதே நேரம் இயல்பான, நடைமுறையில் இருந்து பிரளாத அவரது கதை சொல்லும் பாங்கு என்றுதான் சொல்ல வேண்டும்.

எந்தவொரு இலக்கியமும் ஒரு சமூகத்தின் கலாசாரத்தின், மனிதாபிமானத்தின் மூச்சோடு சங்கமிக்கச் செய்யும் இயல்பு கொண்டது. இந்த நாவலும் அத்தகைய பின்னணியை கொண்டிருக்கிறது. இந்த நாவலும் சிங்கள சமூகத்தின் உணர்வுகள், கலாசாரம் என்பவற்றோடு எம்மைக் ஒனறிணையச் செய்கிறது.  

அதிலும் குறிப்பாக பிரித்தானிய ஆதிக்கம் இலங்கையில் நிலவிய ஒரு காலப்பிரிவில், தேசிய கலாசாரம் என்பது இரண்டாம் தரமாக்கப் பட்டிருந்த நிலையில் தேசிய கலாசாரத்தை குறிப்பாக சிங்கள கலாசாரத்தை அண்டிச் செல்லும் அவரது ஆக்கங்கள் பெருமளவில் கவனயீர்ப்பைப் பெற்றமை வியப்பொன்றுமில்லை.

மடோல் துவயில் மட்டுமல்ல, மார்டின் விக்ரமசிங்கவின் எல்லா நாவல்களிலும் போல் இந்த எளிமை, யதார்த்தத்தை அவதானிக்க முடியும். கம்பெரலிய, கலியுகய போன்றன இதற்கு சிறந்த உதாரணங்கள்.

கடைசியாக சொல்வதாக இருந்தால், இதை வாசித்த போது ஒரு சிறுவர் நாவலை வாசிக்கிறோம் என்ற உணர்வே வரவில்லை என்பதுதான் மிகவும் குறிப்பிட்டுச்சொல்லக்கூடிய அம்சம். சிறுவர்களை இலக்காக கொண்ட நாவலாக இருந்தாலும் அனைவரும் வாசிக்கும் படியான நாவல் இது. ஏராளமான சிறுவர்கள் நாவலாகவும், நாடகமாகவும் மடோல் துவவை வாசித்தும், பார்த்தும் ரசித்திருக்கிறார்கள். இனியும் வாசிக்கப்படும்: ரசிக்கப்படும்.

Share

3 பதிவு குறித்த கருத்துக்கள்:

கனவுகளின் காதலன் February 12, 2010 6:05 PM  

நண்பரே,

சிறப்பான முயற்சி, அருமையான ஆக்கம். நிறைய சிங்கள நூல்களை அறியத்தருவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

EKSAAR February 12, 2010 6:44 PM  

மடுல் துவ இன் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்திருக்கிறேன். தொய்வற்று செல்லும் கதை..

இதேபோல் சிங்கள இலக்கியங்களை அடிக்கடி பகிரவேண்டும். கருத்து பகிர்வினூடான சமாதானத்திற்கு நீங்கள் உதவுவதாகவும் அது இருக்கும்

Riza Jaufer February 12, 2010 9:46 PM  

நன்றி 'கனவுகளின் காதலன்',
நன்றி 'என்ன கொடும சார்',

இலக்கியங்கள் ஒரு சமூகத்தின் உணர்வுகளோடு சங்கமிக்க வைக்கும் ஒரு ஊடகம். இலக்கியங்கள் அதிகம் படிக்கப்படுவது சமூகங்கள் இடையிலான புரிந்துணர்வுக்கு வழிவகுக்கும்.

முடிந்தளவு இது போன்ற இலக்கியங்களை பகிர்வதற்கு முயற்சி செய்கிறேன்.

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்