யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

வறுமைப் பிரச்சினை: மனசாட்சிகளை இன்னும் உறுத்தவில்லையா?


தினமும் பட்டினி அல்லது அதனோடு தொடர்பான நோய்களினால் 25000 பேர் கொல்லப்படுகின்றனர் என்று சொல்லும் போது இலேசான அதிர்வு மனதில் ஏற்படத்தான் செய்கிறது. ஒவ்வொரு மூன்றறை செக்கனிற்கும் ஒருவர் பட்டினியால் இறக்கின்றார். இவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம்


உண்மையில் இந்த உயிரிழப்புகளின் பின்னால் உள்ள காரணம் உலகளவில் எழுந்துள்ள உணவுப்பற்றாக்குறையல்ல. உணவைக் கொள்வனவு செய்யும் அளவுக்கு இவர்கள் வருமானம் இன்றி இருப்பதுதான். உலகளவில் எழும் மற்ற எல்லா நோய்களையும் விடவும் மிக அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பது வறுமைதான்.

"உலகளவில் 1.02 பில்லியன் மக்கள் போசனைக் குறைபாடு கொண்டவர்களாகக்  காணப்படுகின்றனர். இதன் அர்த்தம் உலக சனத்தொகையில் ஆறில் ஒரு பகுதியினர் ஆரோக்கியமான வாழ்க்கை ஒன்றையோ, வினைத்திறனான வாழ்க்கை ஒன்றையோ நடாத்தத் தேவையான அளவுக்கு உணவைப் பெற்றுக் கொள்வதில்லை என்பதுதான். பட்டினியும், போசனைக் குறைபாடும்தான் உலக சுகாதாரத்திற்கு சவலாக விளங்கும் முதன்மையான அம்சமாகும்- எயிட்ஸ், மலேரியா, காச நோய் போன்ற எதனையும் விட இதுதான் இன்றுள்ள பெரிய சவால்" என்கிறது உலக உணவுத்திட்டம்.

இயற்கை அழிவுகள், வறுமை, மோசமான விவசாயக் கட்டமைப்புக்கள் என்பன இதற்குப் பிரதான காரணமாகும் என உலக உணவுத்திட்டம் குறிப்பிடுகிறது. இதை விடவும் சென்ற பல நூற்றாண்டுகளாக நிலவிய காலனித்துவம், இந்நாடுகளின் வளங்கள் சூறையாடப்பட்டமை, அபிவிருத்தி அடைந்த நாடுகளினதும், பல்தேசிய கம்பனிகளினதும் சுய நலத்தை அடிப்படையாக வைத்த செயல்பாடுகள், ஊழல் மலிந்த அரசுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளமை, தீர்க்கப்படாமல் உள்ள உள்ளக முரண்பாடுகள் என இதற்கு நீண்ட பட்டியல் உண்டு. 

பட்டினிச் சாவை எதிர்கொள்ளாவிட்டாலும் , வெளிப்படையான பட்டினி மட்டுமன்றி மறைமுகமான பட்டினியும் உலகை ஆட்டிப் படைத்து வருகிறது. உலக சனத்தொகையில் அரைவாசிப்பேர் ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 2.5 டொலர்களை மட்டும்தான் வருமானமாகப் பெறுகிறார்கள்.

நோய்கள், உடல்-உள வளர்ச்சி பாதிப்படைதல், உழைக்கும் ஆற்றல், வினைத்திறன் என்பன குறைவடைதல் என்பன வறுமை ஏற்படுத்தும் அடுத்த பாதிப்புகள். வறுமை காரணமாக கல்வியத் துறப்பவர்கள் ஒரு புறமிருக்க, வறுமை மாணவர்களின் கல்வி அடைவுகளையும் பெறுமளவில் பாதிக்கிறது. முதலாம் மண்டல நாடுகள்- மூன்றாம் மண்டல நாடுகள் இடையிலான வித்தியாசம் மாத்திரமன்றி, ஒரே நாட்டுக்குள்ளே கூட வருமான ஏற்றத்தாழ்வுகளும் அதன் விளைவாய் உருவாகும் பிரச்சினைகளும், உதாரணமாக கல்வி அடைவுகளில் ஏற்படும் குறைபாடுகளும் முனைப்பாகத் தெரிகின்றன.

இத்தகைய சமனிலையின்மை ஒரு வகையான 'தலித்தியத்தை' எல்லா சமூகங்களிலும் உருவாக்கி விட்டுள்ளது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தலித்தியத்தின் வேலிகளை உடைத்துக் கொண்டு வெளிவருவதென்பது சராசரி மனிதர்களை பொருத்த மட்டில் இயலாத ஒன்றாகவே இருக்கிறது.
சாதாரணமாக அபிவிருத்தி அடைந்த நாடுகளில் தனிநபர் வருமானம் உயர்ந்த மட்டத்தில் இருக்கும் போதும், ஒப்பீட்டளவில் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் நிலையிலும் கூட வர்க்க முரண்பாடுகள் முனைப்பாகத் தெரிகின்றன. அத்தகைய நிலையில் குறைந்த பட்ச அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்யப்படாமல் சமூகத்தின் பெரும் பகுதி இருக்கும் நிலையில் உலக சமாதானம் என்பது எத்தகைய அச்சுருத்தலான நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஒவ்வொரு மனிதனதும் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஒரு நீதியான பங்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஒரு வினைத்திறனான பொருளாதார ஒழுங்குக்கு அரச திட்டமிடலை மட்டும் அடிப்படையாக வைத்து செய்ய முடியாது என்பதைப் போல சந்தையை அடிப்படையாகக் கொண்டு மட்டும் மேற்கொள்ளவும் முடியாது.  

தமது நாடுகளுக்கு பொருத்தமான நீதியான பொருளாதாரக் கொள்கையை வகுத்துக் கொள்ள வறிய நாடுகள் அங்கீகரிக்கப் பட வேண்டும். தமது கொள்கைக்கு சாதகமாக பொருளாதார ஒழுங்கொன்றை உருவாக்கிக் கொள்ள வறிய நாடுகளை வல்லரசுகள் நிர்ப்பந்திப்பதே மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. இது மனிதாபிமானத்தையும், ஜனநாயகத்தையும் முற்றாக குழி தோண்டிப் புதைக்கும் செயல் என்பதில் சந்தேகமில்லை.

வறுமை ஒழிப்புக்காக எடுக்கபட்ட நடவடிக்கைகள்
.நா சபை தனது மில்லேனியம் அபிவிருத்தி இலக்குகளில் முதன்மையான இடத்தை வறுமை ஒழிப்புக்கு வழங்கியுள்ளது. 2015 இற்குள் உலக வறுமையை இலிவு மட்டத்துக்கு கொண்டு வந்து விட வேண்டும் என்பது ஐ.நாவின் திட்டம். இது சாத்தியப்படுமா என்பது சந்தேகமாகனதுதான்.

நிறைய அரச சார்பற்ற நிறுவனங்களும், உலக உணவுத்திட்டம், யுனிசெஃப் உள்ளிட்ட ஐ.நா வோடு இணைந்த நிறுவனங்களும் வறுமை ஒழிப்பு தொடர்பில் தீவிரமாக செயற்பட்டு வருகின்றன. என்றாலும், வறுமை தீர்க்கப்பட முடியாத ஒன்றாகவே தொடர்ந்தும் இருந்து வருகிறது.


இதற்குப் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய காரணங்கள் சிலவற்றை இங்கு காணலாம்.


01. செவந்த நாடுகளின் பங்களிப்பு போதுமானதாக இல்லாமை: 
வறிய நாடுகளில் நிலவும் வறுமையை ஒழிப்பது தொடர்பில் செல்வந்த நாடுகளுக்கு ஒரு தார்மீகக் கடப்பாடு உண்டு. வறுமை தொடர்பில் செல்வந்த நாடுகள் மிகக் குறைந்த பங்களிப்பையே வழங்குகின்றன. வழங்கப்படும் உதவிகள் கூட சுயநல நோக்கங்கள் கலந்தவையாகத்தான் இருக்கின்றன. தமது பொருளாதார நலன்கள் குறிப்பாக ஆபிரிக்கக் கண்டத்தில் இருக்கும் வளங்களை கண்வைத்தே இத்தகைய உதவிகளும் வழங்கப்படுகின்றன. இத்தகைய உதவிகள் பிரயோசனம் தருவதற்குப் பதில் எதிர்மறை விளைவுகளையே உண்டு பண்ணுகின்றன.
02. வளங்கள் விரயமாக்கப்படல்: 
உலகின் அரைவாசிச் சனத்தொகையினரின் இரண்டு டொலரிலும் குறைந்த வருமானத்தை பெரும் போது உலக செல்வத்தில் ஒரு பெரும் தொகையினை தேவையற்ற ஆடம்பர நிகழ்வுகளுக்கும், நுகர்வுகளுக்காகவும் செலவிடப்படுகின்றது. ஆபிரிக்காவில் உண்ண உணவின்றி மனிதன் மடிந்து கொண்டிருக்கும் போது, தமது விளம்பர நோக்குக்காக கீழ்தரமான மனித உணர்வுகளை கிளரி விடும் அம்சங்களிலும், நுகர்வுக்கலாசாரத்தை வளர்ப்பதற்காகவும்  கோடிக்கணக்கான டொலர்கள் செலவிடப்படுகின்றன.
03. வினைத்திறனற்ற வளப்பயன்பாடு:

வறுமை நிலவும் நாடுகளில் பல்வேறு காரணங்களால் வளங்கள் சரியாகப்பயன்படுத்தப்பட முடியாத நிலைமை இருக்கிறது.  அரச சார்பற்ற நிறுவனங்கள் தமக்கு வரும் நிதியை வினைத்திரனாகப் பயன்படுத்துகிறதா என்ற விஷயத்திலும் அண்மைக்காலமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

04. பிரச்சினையின் மூல காரணங்கள் கருத்தில் கொள்ளப்படாத மேலோட்டமான தீர்வுத்திட்டங்கள்.

வறுமையை ஒளிக்கும் தீர்வுத்திட்டங்கள் யாவும் பிரதான பிரச்சினைகளை கருத்தில் கொள்ளாத மேலோட்டமான தீர்வுத்திட்டங்களாகவே உள்ளன. உணமையில் வல்லரசுகள், பல்தேசிய கம்பனிகளின் செயல்பாடுகள் என்பன தொடர்பில் எத்தகைய தீர்வுகளையும் இந்தத் திட்டங்கள் முன்வைக்கவிலலை.

உலக வறுமைப் பிரச்சினை அலட்டிக் கொள்ளப்படாததொரு யதார்த்தம்: நிஜம். இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப் பிரதான பிரச்சினைகளுள் ஒன்றாக வறுமை காணப்படுகிறது. ஒரே இரவில் அதைத் தீர்ப்பது முடியாத காரியம். அது ஒரு நீண்ட கால செயல்திட்டத்தை வேண்டி நிற்கிறது.

வறுமை ஒளித்தல் என்பது மனிதாபிமானத்தை விரும்பும் அனைவரினதும் கவனயீர்ப்பைப் பெறும் முக்கியமான விடயமாக அமைய வேண்டும். குறைந்த பட்சம் வீணான ஒவ்வொரு சதத்தை செலவளிக்கும் போதும் பட்டினியோடும், வறுமையோடும் போராடும் உலகின் பெரும்பகுதி மக்களின் நினைவு எமக்கு வந்தால், எமது உணர்வுகளும், மனசாட்சியும் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று கருதலாம்.

கடைசியாக தத்துவஞானி பேட்றன்ட் ரஸ்ஸல் பலஆண்டுகளுக்கு முன் எழுதிய சில வரிகளை குறிப்பிட்டு இப்பத்தயை நிறைவு செய்யலாம்:
"கடந்த பதினான்கு வருட காலத்தின் போது, அமெரிக்கா தனது விவசாயிகளின் மிகைக் கோதுமை உற்பத்தியை கொள்வனவு செய்வதற்காக 400 கோடி டொலர்களை செல்விட்டு வந்துள்ளது. வெறுமனே உலக சந்தையில் உயர் விலையை தக்க வைக்கும் நோக்குடன், அமெரிக்கா தானிய கிடங்குகளில் பல இலட்சம் தொன் கோதுமை, பார்லி, சோளம், பாலாடைக்கட்டி, வெண்ணெய் என்பன அடைத்து வைக்கப்பட்டு பாழடைந்து வருகின்றன. இப்போது பால் பண்ணை உறபத்தி பொருட்களின் விலைகள் சரிவடைவதை தடுக்கும் பொருட்டு அவர்கள் பாரிய பாலாடைக் கட்டி மற்றும் குவியல்களை உபயோகத்துக்கு பொருத்தமற்றதெனக் கூறி ஒதுக்கி வருகின்றனர்".
தற்போது நிலைமை எப்படி இருக்கிறது?
           
Share

2 பதிவு குறித்த கருத்துக்கள்:

sasi February 07, 2010 11:19 PM  

nice article. மனிதனை மனிதன் தின்னும் காலமிது. எங்கே அடுத்தவனை நினைக்கின்றார்கள்

Riza Jaufer February 07, 2010 11:22 PM  

நன்றி Sasi,
உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்