முஸ்லிம்களின் கல்விப் பின்னடைவு என்ற அம்சம் எமது சமூகப் புத்திசீவிகள் மத்தியில் மிகவும் அதிகமாக விவாதிக்கப்படும் ஒரு பேசு பொருளாக இன்று மாற்றம் பெற்றுள்ளது. முஸ்லிம் சமூகம் கல்வி ரீதியில் ஒப்பீட்டு ரீதியில் பிற சமூகங்களை விட மிகவும் பின்னடைவு கண்டிருப்பது பெரும்பாலும் எல்லா புத்திஜீவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அறைத்த மாவை திருப்பி அறைப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல. இந்தப் பிரச்சினை தொடர்பாக இதுவரை போதிய அளவு பேசப்படாத சில அம்சங்களை அடையாளப்படுத்தி, சில யோசனைகளை முன்வைத்து, இது தொடர்பிலான ஒரு கலந்துரையாடலை துவக்கி வைப்பதே இதன் நோக்கமாகும்.
கல்வியாளர்கள் மட்டுமே கல்விப் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் என்கிற குறுகிய, பாரம்பரிய மனப்பாங்கில் இருந்து விலகி இக்கட்டுரையை நீங்கள் வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினை என்பது வரலாற்று ரீதியான பரிணாமம் கொண்டது. முஸ்லிம் உலகில் பிற்பட்ட காலத்தில் உருவான சிந்தனை ரீதியான முடக்கம், காலனித்துவத்தின் மிக உக்கிரமான கலாசார ஏகாதிபத்தியம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதன் பின்னணியில் இருந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மைகளாகும்.
மத்திய காலத்தை தொடர்ந்து இஜ்திஹாத்தின் வாசல் மூடப்பட்டுவிட்டது என்று பரப்ப்ப்பட்ட கருத்து முஸ்லிம் உலகின் சிந்தனை தேக்கத்திற்கு வித்திட்டதோடு, இஸ்லாமிய சாம்ராச்சியம் இறுதியில் வீழ்ச்சி அடைவதற்கான பல்வேறு காரணிகளில் ஒன்றாகவும் அது அமைந்தது. இந்த தேக்க நிலை இலங்கை முஸ்லிம்களையும் பாதித்தது. மட்டுமல்லாமல், இலங்கை காலத்துவத்திற்கு உட்பட்ட பிறகு முஸ்லிம் வர்த்தக ஆதிக்கம் குறைந்து போனதால், அரபுலகோடான அவர்களது தொடர்பும் கூட மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்த்து.
அத்தகைய ஒரு நிலையிலேயே முஸ்லிம்கள் ஆங்கிலேய ஆதிக்கத்தால் கலாசார காலனித்துவத்திற்கு உட்படும் வாய்ப்பு உருவாகிக் கொண்டிருந்தது. சந்தேகமின்றி ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய கல்வி முறை கலாசார ஏகாதிபத்தியத்தின் முக்கியமானதொரு கருவியாக இருந்ததை எவரும் மறுப்பதற்கில்லை. எனினும், இதற்கெதிரான முஸ்லிம்களின் எதிர்வினைதான் முதிர்ச்சியற்றதாகவும், தூரனோக்கற்றதாகவும் இருந்தது. மேற்கத்தேயக் கல்வியை கற்பது ஹராம் என்ற சிந்தனையே முஸ்லிம்கள் மத்தியில் மிகைத்திருந்த்து. இதை மீறிப்படிப்பவர்கள் ஊர் விலக்கு செய்யப்பட்டனர்; அல்லது மார்க்கத்தின் எதிரிகளாக நோக்கப்பட்டனர்.
மேற்கத்தேய சிந்தனைகளை கருத்தியல் ரீதியில் எதிர்கொள்வதற்குரிய இஸ்லாமிய புலமைத்துவ வாதிகளை முஸ்லிம்கள் அப்போது போதியளவு பெற்றிருக்கவில்லை என்றே சொல்லலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் முன்னறைப் பகுதி வரை இதே நிலையே தொடர்ந்த்து.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் முஸ்லிம் உலகில் வீசத் தொடங்கியிருந்த நவீன இஸ்லாமிய எழுச்சியின் அலைகள் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இப்போதுதான் மாமனிதர் சித்தி லெப்பை தோன்றுகிறார். எல்லா வகையிலும் தேக்கம் உற்றிருந்த முஸ்லிம் சமூகத்தை கட்டியெழுப்ப பாடுபட்டார். ஒரு முழுமையான சமூக மாற்றம் உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு முஸ்லிம் சமூகத்தை ஒளியை நோக்கி அழைத்தார். கல்வி ரீதியாக மட்டுமன்றி, எல்லாத் துறைகளிலும் முஸ்லிம் சமூகத்தின் மீள் எழுச்சியை ஏற்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட முயற்சியாக இதனை குறிப்பிடலாம். அவை அனைத்தும் முழுமையாக வெற்றி பெற்றதா என்பது வேறு விடயம்.
தற்போதைக்கு கல்வி ரீதியிலான எழுச்சியை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். எனினும், நாம் ஏலவே குறிப்பிட்டது போன்று, முஸ்லிம் சமூகத்தின் கல்வி வீழ்ச்சி எதனோடும் தொடர்பு படாத ஒரு தனிப்பட்ட ஓர் அம்சமல்ல. முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்தமான வீழ்ச்சியின் தர்க்க ரீதியான விளைவே இது.
எனினும், பத்தொன்பதாம் நூற்றாண்டில், இலங்கை முஸ்லிம்களின் சமூக, அரசியல் பின்னணியை வைத்து நோக்குகையில் அறிவு ரீதியான ஓர் எழுச்சியே மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளியாக அமைந்ததை மறுப்பதற்கில்லை. இந்த வகையில் சித்திலெப்பையின் போராட்டம் முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கு ஓர் உயிர்த்துடிப்பான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தது.
இதன் பிற்பட்ட காலப்பகுதியில் ஒரு குறிப்பிட்த்தக்க கல்வி ரீதியிலான எழுச்சியை முஸ்லிம் சமூகத்தில் அவதானிக்கிறோம். எனினும், துரதிஷ்ட வசமாக இன்று வரை மற்ற சமூகங்களோடு ஒப்பிட்டுப் பேசக்கூடிய கல்வி எழுச்சியை காண முடியவில்லை. எமது முஸ்லிம் பாடசாலைகளின் கல்வி அடைவு மட்டம் தொடர்பிலான புள்ளி விபரங்கள் அதனையே குறிப்பிடுகின்றது.
இந்த மாற்றம் உருவாகாது இருப்பதற்கான பிரதான காரணம், சித்தி லெப்பை வாழ்ந்த காலத்து சமூக, கலாசார பின்னணிகள் இன்றும் எமது சமூகத்தில் காணப்படுகின்றமையாகும்.
குறிப்பாக கல்வியை மார்க்கக் கல்வி, உலக கல்வி என்று பிரித்து நோக்கும் போக்கு இன்னும் எமது சமூகத்தில் நிலவுகிறது. குறிப்பாக கல்வி முக்கியமில்லை, படிக்க வேண்டிய தேவையில்லை என்று பாரம்பரிய உலமாக்கள் பலர் மிம்பர் மேடைகளில் முழங்குவதை இன்றும் கூட கேட்க முடிகிறது. துரதிஷ்ட வசமாக பெரும், பெரும் கல்விமான்கள் கூட பல போது அத்தகைய குத்பாக்களை செவிமடுத்துக் கொண்டிருந்த போதிலும் கூட, எத்தகைய எதிர் வினையையும் காட்டாமல் இருப்பது ஆச்சர்யமானதுதான்.
இலங்கை முஸ்லிம் சமூகம் தொன்று தொட்டு மார்க்கத்தை அடிப்படையாக வைத்தே தன்னை அடையாளப்படுத்தி வந்துள்ளது. முஸ்லிம்களும் “தமிழர்களே” போன்ற வாதங்கள் தோல்வி அடைந்தமைக்கு காரணம் இதுதான். அந்த வகையில் மார்க்க ரீதியான அதன் ஈடுபாடும், சரியான கோட்பாடுகளும்தான் அதன் எழுச்சிக்கு எப்போதும் வலி வகுத்து வந்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களுக்குப் புறம்பாக ஒட்டு மொத்த சர்வதேச முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்த வரையிலும் கூட இதுதான் உண்மை நிலையாகும். மார்க்கத்தோடான அதன் உறவு உயிர்த்துடிப்பாக இருந்த வரை இஸ்லாமிய வரலாறு ஒரு பொற்காலத்தை அனுபவித்தது. இஸ்லாத்துடனான அதன் உறவு மங்கிப் போய், சடங்கு, சம்பிரதாயம் கொண்ட ஒரு மதமாக அது மாற்றம் அடைந்த போது, முஸ்லிம் உலகின் வீழ்ச்சியும் ஆரம்பித்து விட்டது.
எனவே, மார்க்கம் குறித்த தெளிவான புரிதலும், அதனோடான உயிர்த்துடிப்பான ஈடுபாடும் ஏற்படாத வரை முஸ்லிம் கல்வி என்பது அதன் உயரிய நிலையை எட்டுவது என்பது அறவே சாத்தியமற்றதாகவே இருக்கப் போகின்றது.
(தொடரும்)
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment