மார்க்க ரீதியான போதிய புரிதல் இன்மையும், பாரம்பரிய மார்க்க அறிஞர்களின் போதிய ஒத்துழைப்பின்மையும் எமது கல்விப் பின்னடைவு தொடர்பிலான ஒரு காரணி என்று கடந்த ஆக்கத்தில் அடையாளப்படுத்தினோம். அதனோடு இணைந்ததாக மற்றும் சில காரணிகளை அடையாளப்படுத்துவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.
முஸ்லிம்கள் கல்வியின் அவசியம் குறித்து போதுமான விழிப்புணர்வை பெற்றிருக்கிறார்களா என்ற கேள்வியை இங்கு எழுப்புவது பொறுத்தமானதாகும். இன்று கருத்துரங்குகள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் வாயிலாக பெருமளவில் கல்வியின் அவசியம் குறித்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வூட்டப்படுகிறது. இவை போதிய பிரயோசனத்தை தருகிறதா? இளைஞர்கள் கல்வியின் அவசியம் தொடர்பில் போதிய விழிப்புணர்வை பெற்றிருக்கிறார்களா? அல்லது கல்வி தேவையற்றது என்ற சிந்தனையில்தான் இன்னும் இருக்கிறார்களா? என்ற கேள்வியைக் கேட்டுப்பார்ப்பது பொருத்தமானது.
அண்மையில் மேல் மாகாணப் பாடசாலை ஒன்றில் மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்வி சம்பந்தமான கருத்தரங்கொன்றில் தனியார் நிறுவனமொன்றின் வளவாலனாகக் கலந்து கொண்டேன். அப்போது அவர்களிடம் ஒரு கேள்வியைத் தொடுத்தேன்: “கல்வி உங்களின் அவசியத் தேவை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?”.
மிகவும் சீரியசாக அனைவரும் “ஆம்” என்று தலை அசைத்தார்கள். மீண்டும் அவர்களிடம் கேட்டேன். “உங்கள் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள். நான் ஒரு கல்வி தொடர்பிலான ஒரு நிறுவனம் ஒன்றில் இருந்து இங்கு நான் வராமல் இருந்து, இந்த கல்வி சம்பந்தமான ஒரு கருத்தரங்கில் உங்களை சந்திக்காமல், வெளியிடம் ஒன்றில் ஒரு நண்பனாக உங்களை சந்தித்து இதே கேள்வியைக் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” அனைவரும் சிரித்தார்கள். ஒரு குரும்புக்கார மாணவன் சொன்னான். “தேவையில்லை என்று சொல்வோம்”.
உண்மையில் இது ஒரு ஒற்றைச் சம்பவமாக இருந்தாலும், முஸ்லிம் சமூக இளைஞர்களின் கல்வி தொடர்பிலான பொதுப்படையான மனநிலையையே இது பிரதிபலிக்கிறது. பல்வேறு காரணங்கள் எமது இளைஞர்கள் கல்வி என்பது தேவை என்ப்தை புரிந்து கொள்வதையோ, புரிந்து கொண்டாலும் அது தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்வதையோ தடை செய்து விடுகின்றது.
சற்று வெளிப்படையாகப் பேசுவோம். நான் ஒரு வியாபார சமூகத்தை சேர்ந்தவன் என்ற வகையில் என்னைப் பொருத்த வரை, என் சமவயதுள்ளவர்களில் கல்வி ரீதியாக ஈடுபாட்டோடு உள்ளவர்கள் கல்வி ரீதியாலான ஏதொ ஒரு பின்னணி உள்ளவர்கள்; நிரந்தர வருமானம் உழைப்பவர்கள் மட்டும்தான். மற்றவர்களிடம் இந்த ஆர்வத்தை குறைவாகவே அவதானிக்க முடியும். வியாபார சமூகமாக முஸ்லிம்கள் வாழும் எல்லா இடங்களிலும் போல் இதுதான் உண்மை.
இந்த உண்மை சொல்லும் இன்னொரு செய்தி என்னவென்றால், கல்வி குறித்த ஆர்வம் கல்வி முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளைத் தாண்டியும் கூட இன்னும் அடிமட்ட முஸ்லிம் சமூகத்தை சென்று சேரவில்லை என்பதைத்தான். உண்மையைச் சொல்வதானால், சாதாரண அடிமட்ட சமூகம் புரிந்து கொள்ளும் விதத்தில், அல்லது இளைஞர்களை கல்வியின் பால் ஆர்வம் கொள்ளும் விதத்தில் கல்வியின் தேவை சரிவர முன்வைக்கப்படவில்லை என்பதே உண்மை.
கல்வி குறித்து எமது சமூகத்தில் கதைப்பவர்கள் படித்தவர்கள் மட்டுமல்ல: பரம்பரையாக கல்விப் பின்னணிகள் கொண்டவர்கள்; மட்டுமன்றி, நிரந்தர வருமானம் பெருகின்ற, ஓரளவு தரமான வாழ்க்கைத் தரத்தை அனுபவிக்கும் குடும்பங்களில் பிறந்து வளர்ந்தவர்கள். இவர்களால் நிச்சயமற்ற சூழ்னிலைகளை எப்போதும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் சாதாரண வியாபார சமூகத்தின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள முடிவதில்லை. கல்வி ரீதியில் ஆர்வம் காட்டாமல் இளைஞர்கள் இருப்பதற்குரிய நியாயமான காரணங்கள் புரிவதில்லை. கல்விப் பின்னணிகள் எதுவுமின்றி கல்வித் துறையில் கால் வைத்து முன் செல்வதில் உள்ள கஷ்டங்கள் கூட புரிவதில்லை. கல்வியில் ஆர்வம் காட்டுமாறு இளைஞர்களை தூண்டும் முறை எப்போதும் ஒரு வித குற்றம் சுமத்தும் பாங்கிலேயே அமைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாகச் சொன்னால் எமது கல்வியில் விளிப்புணர்வை ஏற்படுத்த நாம் கைக்கொள்ளும் அணுகுமுறைகள் சமூகத்தின் தேவைக்கு இசைவானதல்ல. கல்வி சம்பந்தமான சமூகப்பணிகளில் ஈடுபடுபவர்கள் தமது அணுகுமுறைகளில் சில மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் என்பதைதான் இங்கு குறிப்பிட வருகின்றேன்.
முஸ்லிம் சமூக அமைப்பு அண்மைக்காலமாக மிகத்தீவிரமான சடவாத மோகம் கொண்டதாக மாறிக்கொண்டு போகின்றது. எனது சொந்த ஊர் உள்ளிட்ட பெரிம்பாலான முஸ்லிம் கிராமங்களின் நிலை இதுதான். அனைத்துக்கும் மேலாக மனிதனை அளக்கும் அளவு கோலாகவே பணம் மாறியிருக்கிறது. ஒரு சிறந்த பாடசாலையில் தனது பிள்ளையை சேர்ப்பதாக இருந்தாலும், அங்கும் பணம்தான் வெளிப்படையாகவே தனது பணியைச் செய்கிறது. தொழிற்சந்தையிலும் பாடசாலையின் பெயரும் குடும்ப பின்னணியுமே பிரதான இடத்தைப் பிடித்துக் கொள்கிறது.
மறுபுறத்தில் சீதனப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. ஜாஹிலிய்யாக் காலத்தில் பெண் பிள்ளைகளைப் பெற்றவர்களின் மனநிலையை ஒத்த மன நிலையே இன்றைய பெற்றோர்களிடமும் இருக்கிறது. யுவதிகளின் திருமணச்செலவு, சீதனம் என்கிற பாரிய சுமைகளைத் தாண்டி அவர்களின் உயர் கல்வி என்கிற அம்சத்தைப் பற்றி யோசிக்கவும் அவர்களின் பெற்றோர்கள் தயாரில்லை. இளைஞர்களோ உயர் தரம் முடித்து விட்டால், தமது குடும்ப பாரத்தில் சிறிதாவது சுமந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றனர்.
உணமையில், இந்த மிகவும் அழுத்தம் மிக்க வாழ்க்கை முறை காரணமாக, பெருமளவில் மனோ நலன் சம்பந்தப்பட்ட நோய்கள் எமது சமூகத்தில் காணப்படுவதாக மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. இந்த அழுத்தம் உள்ள சூழலில்தான், ‘படி, படி’ என்ற அழுத்தத்தை நாமும் இளைஞர்களுக்கு கொடுக்க முனைகிறோம். உண்மையில் உயர் கல்வி என்பது மிகவும் பொறுமையையும், தீவிர உழைப்பு, தேடல் என்பவற்றையும் வேண்டி நிற்கினறது. ஆனால், எமது சூழல்நிலை அத்தகைய பொறுமைக்கு இடம் அளிப்பதாக இல்லை என்றே சொல்லலாம்.
(தொடரும்)
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment