இலங்கை ஜனாதிபதித் தேர்தல் விரைவில் இடம்பெற உள்ள நிலையில், பிரசார நடவடிக்கைகளும், வாதப்பிரதி வாதங்களும் ஆரம்பித்து விட்டது. ஆளும் கட்சி சார்பாக தற்போதைய ஜனாதிபதியும், எதிர் கட்சிகள் சார்பாக முன்னாள் ராணுவத்தளபதியும், போரை வழி நடத்தியவருமான ஜெனெரல் சரத் பொன்சேகாவும் நிருத்தப்பட்டுள்ளனர்.
கருத்தியல் ரீதியில் எதிரெதிர் துருவங்களாக வர்ணிக்கப் படும் ஜெ.வி.பி மற்றும் ஐ.தே.க என்பன இணைந்து ஒரு பொது வேட்பாளரை நிருத்த முன்வந்தமை அரசியலில் எதுவும் அசாத்தியமானது அல்ல என்பதை நிரூபிப்பதாக
உள்ளது. போர் வெற்றியை தொடர்ந்து இடம்பெற்ற
மாகாண சபை தேர்தல்களில் தொடர் தோல்வி கண்டு துவண்டு போயிருந்த எதிர் கட்சிகளுக்கு பொன்சேகாவின் அதிரடி அரசியல் பிரவேசம் ஒரு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது. மற்றொரு கோணத்தில் நோக்கினால், பொன்சேகாவை அரசியல் அரங்கிற்கு கொண்டு வந்தமை, எதிர் கட்சிகளின் மிக சாணக்கியமான அரசியல் காய் நகர்த்தல் என்றும் சொல்லலாம்.
பொன்சேகா அரசியலில் பிரவேசிக்காமல் இருந்திருந்தால், மஹிந்தவின் வெற்றியில் எந்தவித சந்தேகமும் இருந்திருக்காது. எதிர் கட்சிகள் என்னதான் பீற்றிக் கொண்டாலும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, நாட்டு மக்கள் மத்தியில், குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் அந்தளவுக்கு தனக்கே உரிய ஒரு பிம்பத்தை உருவாக்குவதில் மஹிந்த
வெற்றி பெற்றிருக்கிரார் என்பதே உண்மை.
அந்தப் பிம்பம் மங்கிப் போகும் முன்பு, இரண்டாம் முறையாகவும் பதவிக்கு வந்து விடும் நோக்கில்தான் தேர்தல் முன் கூட்டியே நடாத்தப்படுகிறது.
போர் வெற்றியை நீண்ட காலத்துக்கு தூக்கிப்பிடித்துக் கொண்டிருக்க முடியாது என்பதை அரசாங்கம் புரிந்து வைத்திருக்கிறது. அதனால், சூட்டோடு சூடாக தேர்தலுக்கு செல்ல அரசாங்கம் விரும்புகிறது.
பொன்சேகாவின் அரசியல் பிரவேசம், போர் வெற்றியை காட்டி வாக்கு வங்கியை நிரப்பும் அரசின் திட்டத்திற்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பது வெளிப்படையானது. அதனால், தற்போது அபிவிருத்தி என்பது அரசின் பிரதான பிரசார அம்சமாக மாறியுள்ளது.
அண்மையில் நாடெங்கும் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் இதனை தெளிவாக படம் பிடித்துக்காட்டின.
உதாரணமாக, “ரட ரகின வீரோததாவ... ரட ஹதன நாயகத்வய...” (நாட்டை காக்கும் வீரம்... நாட்டை கட்டியெழுப்பும் தலைமைத்துவம்), “...தென் இதின் அபி ரட ஹதமு” (இனி
நாங்கள் நாட்டை கட்டியெழுப்புவோம்) போன்ற சுவரொட்டி வாசகங்கள் அத்தகைய உணர்வைத்தான் தந்தன. சந்தேகமின்றி இது பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தின் எதிரொலி.
இதன் பிந்திய அரசாங்கத்தின் அரசியல் பிரசாரம் அபிவிருத்தியை மையப்படுத்துவதோடு, ஒரு இராணுவத்தளபதி ஜனாதிபதியாக வருவதில் உள்ள அபாயங்களை மையப்படுத்துவதாக அமையும் என
எதிர் பார்க்கலாம். இது ஏற்கனவே ஆரம்பித்தும் விட்டது.
பொன்சேகாவை பொருத்தவரை, தானே போரை வழி நடத்தியதாகவும், கொழும்பில் ஏ.ஸி அறைகளில் அமர்ந்து அரசியல் பேசுபவர்கள் அரசியல் வெற்றிக்கு மிகச் சிறிய பங்கையே வழங்கியதாவும் தெரிவித்திருந்தார். தான் ஆட்சிக்கு வந்தால், போர் காலத்தில் ஆயுதங்கள் வாங்குவதில் இடம்பெற்ற மோசடிகளை வெளிக் கொண்டு வரப்போவதாகவும் அவர் தெரிவித்தார். போர் முனையில் உயிரை பணயம் வைத்து போராடிய வீரர்களே, போர் வெற்றிக்கு சொந்தம் கொண்டாட அருகதை உடையவர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
சிறு பான்மையினர் விடயத்தில் பொன்சேகா முன்பொரு முறை தெரிவித்த கருத்துக்கள் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பொன்சேகாவை தேர்தலில் நிருத்துவதில், எதிர் கட்சி தலைவர் ரனில் விக்ரமசிகவின் மிக அற்புதமான ராஜ தந்திரத்தை இங்கு பாராட்டாமல் இருக்க
முடியாது.
ரனில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்திற்கு அவரது கட்சிக்குள் சவால்களை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரு சூழலில், போர் வெற்றி அவரது வெற்றி வாய்பை கேள்விக் குறியாக்கும் ஒரு சூழலிலேயே இந்த தேர்தல் வருகிறது. பொன்சேகாவை தேர்தலில் நிருத்துவதன் மூலம், தான் நிச்சயமாக தோல்வி அடையும் ஒரு தேர்தலில் இருந்து மிக சாதூர்யமாக ரனில் விலகிக் கொள்கிறார்.
இதில் பொன்சேகா தோல்வியுற்றால், அது பொன்சேகாவின் தலையோடு போகும். வெற்றி பெற்றால், அடுத்த அரசாங்கத்தின் பிரமதராக ரனில் விக்ரமசிங்க மாறுவார். ஒரு கட்சிப் பின்னனி இல்லாத பொன்சேகா, ரனில் ஆட்டும் ஒரு பொம்மையாவே மாறுவார். ஐ.தே.க பிரசாரம் செய்வது போல், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை மாற்றப்படுமானால் (அவ்வாறு மாற்றப் படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு), ரனில் விக்ரமசிங்க நாட்டின் மிக முக்கியமான பதவியில் இருப்பார். பொன்சேகா தோல்வியுரும் சந்தர்ப்பத்தில், அவர் அரசியல் அரங்கில் தனிமைப்படுத்தப் படுவார்: போர் வெற்றி அதன் முக்கியத்துவத்தை இழந்திருக்கும் அடுத்த தேர்தலில் ரனில் போட்டியிடுவார்.
ரனில் விக்ரமசிங்கவின் இந்த அரசியல் சாணக்கியத்தை மெச்சாமல் இருக்க முடியாது.
எது எவ்வாரு இருப்பினும், இவர்களில் யாருக்கு வாக்களிப்பது என்பது சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த பொது மக்களுக்கு பெரும் குழப்பமாகவே இருக்கிறது.
பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதா? அல்லது மஹிந்தவுக்கு வாக்களிப்பதன் மூலம் வெளிப்படையாகவே இனவாதம் பேசிய இராணுவப்பின்னணி கொண்ட ஒருவர் ஆட்சிக்கு வருவதை தடுப்பதா?
இது இந்த நாட்டின் அனைத்து சமூகங்களும் மிகவும் தீர்க்கமாக சிந்தித்து தீர்மானிக்க வேண்டிய அம்சம். நாட்டின் எதிர்கால நலனை முன்னிருத்தியே இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.
எது எப்படியோ, யார் வெற்றி பெறுகிறார்களோ, வெல்பவர்கள் மூலம் நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதாவது நன்மை நடந்தால் அதுவே போதுமானது...!
Share
4 பதிவு குறித்த கருத்துக்கள்:
யாருக்கு வாக்களிப்பது என்று விட்டு பதிலையும் நீங்களே தந்துவிட்டீர்களே...
//பொன்சேகாவுக்கு வாக்களிப்பதன் மூலம் ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுப் புள்ளி வைப்பதா? அல்லது மஹிந்தவுக்கு வாக்களிப்பதன் மூலம் வெளிப்படையாகவே இனவாதம் பேசிய இராணுவப்பின்னணி கொண்ட ஒருவர் ஆட்சிக்கு வருவதை தடுப்பதா?//
நல்ல கருத்துக்கள்.
நன்றி அஷோக்பரன்,
உங்கள் பின்னூட்டலுக்கு நன்றி...
ஒரு சின்னத் திருத்தம்...
நான் யாருக்கும் வாக்களிக்கச் சொல்லவில்லை... இரண்டு பேருக்கு வாக்களிப்பதன் மூலமும் சாதகங்களும் இருக்கின்றன. பாதகங்களும் இருக்கின்றன.
யாருக்கு வாக்களிப்பது என்பது இன்னும் தீர்க்கமாக ஆய்வு செய்துதான் தீர்மானிக்க வேண்டும்...
மனதில் பட்ட சில விடயங்களை எழுதியிருக்கிறேன். அவ்வள்வுதான்...!
pakirvukku nanri
நன்றி சங்கர், உங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும்.
Post a Comment