அறிமுகம்
அறிஞர் சித்தி லெப்பை இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இணை காண்பதற்கு அரிதான ஆழுமைகளுள் ஒருவர் என்றால் அது மிகையல்ல. ஒரு தலைவர், பத்திரிகையாளர், அரசியல் போராளி, மார்க்க அறிஞர், எழுத்தாளர், சமூக சேவகி என பன்முக ஆழுமை கொண்ட சித்திளெப்பையை நிகர்த்த இன்னுமொருவரை இலங்கை வரலாற்றில் காண முடியுமா என்பது சந்தேகம்தான்.
சித்திளெப்பையின் பணியையும், அதன் முக்கியத்துவத்தையும் அவர் வாழ்ந்த காலத்து சமூக, அரசியல் பின்ன்ணிகளோடு தொடர்புபடுத்தி நோக்கினால்தான் மிகச்சரியாக புரிந்து கொள்ள முடியும். துரதிஷ்ட வசமாக வெறுமனே முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பாடு பட்டவர் என்ற அடிப்படையில் மட்டுமே சித்தி லெப்பை பொதுவாக எமது சமூகத்தளத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார். இவ்வாறு செய்வது அவர் மேற்கொண்ட மிக உன்னதமான சமூக புரட்சியை கொச்சைப்படுத்துவது போலாகும். அவரை தொடர்ந்து வந்த தலைவர்களும் அவரது கல்வி குறித்த நிலைப்பாடுகளுக்கும், செயல்பாடுகளுக்கு மட்டும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்ததும் இவ்விதம் அவரது கல்விப்பணி மாத்திரம் முக்கியத்துவப் படுத்தப்படுவதற்கு காரணமாக இருக்கலாம்.
சித்தி லெப்பையை பொருத்தவரை முஸ்லிம் சமூகத்தின் முழுமையான மாற்றத்தை அவாவினார். ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு வழி நடாத்தலாம் என்பது குறித்த ஒரு விரிந்த பார்வை அவருக்கு இருந்ததாக தெரிகிறது. அவர் எடுத்த பல தூர திருஷ்டியான தீர்மானங்கள் இதனை தெளிவாகவே படம் பிடித்துக் காட்டுகின்றன.
சித்தி லெப்பை மேற்கொண்ட போராட்டத்தை பற்றி முழுவதுமாக அறிமுகம் செய்வதற்கு இப்பத்தி இடம் தராது. ஒரு சுருக்கமான முன்னுரையாக மட்டும் இதனை கருதலாம்.
பிறப்பும் வளர்ப்பும்
சித்தி லெப்பை அரபுப்பரம்பரையில் வந்த ஒருவர். அலுத்கமயில் குடியேரியிருந்த முல்க் ரஹ்மதுல்லாஹ் என்ற அரபு வணிகரின் பேரனே சித்திளெப்பை ஆவார். சித்தி லெப்பையின் தந்தை முகம்மது லெப்பை கண்டியில் குடியேரி வியாபரம் செய்து வந்தார். சித்தி லெப்பை பிறந்த ஆண்டு 1838.
கண்டியை ஆங்கிலேயர் கைப்பற்றிய பின்னர் கண்டியில் அவர்கள் ஆரம்பித்திருந்த ஒரு ஆங்கில பாடசாலையில் சித்தி லெப்பை கல்வி பயின்றார். 1833 இல் ஆங்கில அரசாங்கம் இவரை புரொக்டராக நியமித்தது. இலங்கையரில் முதன் முதலாக புரொக்டராக நியமிக்கப் பட்டவர் இவர்தான். சித்தி லெப்பை ஆங்கிலம், அரபு, தமிழ், சிங்களம் போன்ற நான்கு மொழிகளிலும் நல்ல புலமை பெற்றிருந்தார். 1862 இல் மாவட்ட நீதிமன்ற புரொக்டராகவும், 1864இல் சுப்ரீம் நீதிமன்ற புரொக்டராகவும் நியமனம் பெற்றார். கண்டி நகர சபையில் எட்டு ஆண்டுகள் கடமை ஆற்றினார். அதன் செயல்பாடுகளில் போதிய திருப்தி இல்லாமையால், அதிலிருந்து அவர் விலகிக் கொண்டார். 1882 இல் முஸ்லிம் நேசனை ஆரம்பித்தார். 1884 இல் கொழும்பில் குடியேரினார்.
1898 இல் அவர் மறுமை பயணத்தை ஆரம்பிக்கும் வரை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சிக்காவே கழித்தார்.
சமூக சீர்திருத்தம்
சித்தி லெப்பையை மிக விரிந்த சிந்தனை படைத்ததொரு இஸ்லாமியவாதி என்பதே மிகவும் பொருத்தமானது. அவரது பன்மொழிப் புலமை, குடும்பப் பினன்ணி என்பன இதற்கு பெரிதும் துணை செய்தது. அந்தக் காலத்தில் இஸ்லாமிய உலகின் மிக முக்கிய போராளிகளாக இருந்த எகிப்தை சேர்ந்த ஜமாலுத்தீன் ஆப்கானி, இந்தியாவின் சேர் செய்யத் அஹ்மத் கான் போன்றாரின் கருத்துக்களாலும் சிந்தனைகளாலும் அவர் பெரிதும் கவரப்பட்டிருந்தார். ஆனாலும், ஸெர் செய்யத் அஹ்மத் கானின் மார்க்கத்தில் அளவுக்கதிகம் நெகிழ்ச்சியை கடை பிடிக்கும் போக்கு அவரிடம் இருக்கவில்லை.
இதற்கு மேலாக எகிப்திய சுதந்திரப் போராட்ட வீரர் அராபி பாஷா இலங்கைக்கு நாடுகடத்தப் பட்டதும், அவரது சகவாசம் சித்தி லெப்பைக்குக் கிடைத்ததும் அவரது பார்வையை விசாலமாக்க உதவின.
மார்க்க அடிப்பையில் வார்த்தெடுத்த சகல துறைகளிலும் முன்னேற்றம் கண்ட ஒரு முஸ்லிம் சமுதாயத்தை உருவாக்குவதே அவரது நோக்கமாக இருந்தது. மேற்கத்தேயக் கல்வியை புறக்கணிப்பதையும், ஆங்கிலம் கற்பதை ஹராம் என்று அப்போது கருதப்பட்டதையும் அவர் கடுமையாக எதிர்த்தார். மறு புறத்தில் மார்க்கத்தை துறந்து விட்டு மேற்குலகின் சடவாத கல்வியின் பின்னால் செல்வதையும் அவர் விரும்பவில்லை. இஸ்லாமியக் கலாசாரம் பேணப்பட்ட நிலையில் மேற்குக் கல்வி புகட்டப்பட வேண்டும் என அவர் அவாவினார். அவரது ஆசை சுமார் நூரு ஆண்டுகள் கழித்து ஜாமியா நளீமிய்யாவின் வடிவில் செயலுருப்பெற்றதாக பேராதனை பல்கலைக்ககழக சிரேஷ்ட விரிவுரையாளர் அமீன் குறிப்பிடுகிறார்.
மார்க்க ரீதியாக சமூகத்தை வழிகாட்டுவதற்கு என்றே ஞான தீபம் என்ற பத்திரிகையை துவங்கினார். அவரது முஸ்லிம் நேசன் சமூக எழுச்சியை பொதுவாகவும், முஸ்லிம் சமூகத்தின் அரசியல் போராட்டத்திற்காகவும் அவர் பயன்படுத்தினார். வேறு ஊடகங்கள் கண்டுபிடிக்கப் படாத அந்தக் காலத்தில், பத்திரிகைகள் இன்றிருப்பதை விட பலமான ஊடகங்களாக இருந்தன. அத்தகைய ஊடகங்களில் தனது தெளிவான கருத்துக்களை அனைவரும் புரிந்து கொள்ளும் மொழி நடையில் மிகத்தெளிவாக அவர் முன்வைத்தார்.
சமூகத்தின் எழுச்சி குறித்த பூரணமான, விரிந்த பார்வையை சித்தி லெப்பை பெற்றிருந்தார். இஸ்லாமிய அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமூகம் உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கம் அவரிடம் இருந்தது. அதற்கு மிக முக்கிய தடையாக முஸ்லிம் சமூகத்தில் காணப்பட்ட அறியாமையும், மற்ற சமூகங்களோடு ஒப்பிடுகையில் அதன் கல்வி, ரீதியான பின்னடைவும் இருந்தன. அந்தத் தடையை ஒழிப்பது அவரது நிகழ்ச்சி நிரலின் முதன்மை இடத்தை பெற்றிருந்தது.
இதனாலேயே, இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்காகவே உழைத்த ஒரு தலைவர் என்று கருதப்படும் அளவுக்கு சித்தி லெப்பை இலங்கை முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சியோடு இணைத்துப் பேசப்படுகிறார்.
கல்வி எழுச்சி
அறியாமையை சித்தி லெப்பை தனது முதல் எதிரியாகக் கண்டார். அவரது கல்வி எழுச்சிக்கான போராட்டம் பல்வேறு பரிமாணங்களை கொண்டது. முதலாவது ஆங்கிலம் கற்பது ஹராம் என்று பொதுவாக நிலவிய கருத்தை எதிர்த்ததோடு முஸ்லிம்கள் மேலைத்தேய கல்வியை கற்குமாரு வலியுருத்தினார். இரண்டாவது, முஸ்லிம்கள் தமது மார்க்கம் குறித்து இருந்த பிழையான நிலைப்பாடுகளையும், அறியாமையையும் மாற்றுவதற்கு அவர் பாடு பட்டார். குறிப்பாக, திண்ணைப் பள்ளிக்கூடங்களில் குர்-ஆனை வாசிப்பதற்கு மட்டும் அறைகுறையாக பயில்வதோடு தம்மை போதுமாக்கிக்கொள்ளும் போக்கை அவர் கடுமையாக எதிர்தார். மூன்றாவதாக, மேற்குக்கல்வியை எமது கலாசார அம்சங்களை பேணும் ஒரு சூழலில் கற்க வேண்டும் என வழியுருத்தினார்.
இவற்றுக்காக, அவர் முறைசார் ஒழுங்குகளையும், முறை சாரா ஒழுங்குகளையும் செய்தார்.
முறை சார் ஒழுங்களாக அவர் உருவாக்கிய பாடசாலைகளையும், அவற்றுக்கு அவரே எழுதிய இஸ்லாமிய கலாசாரத்தை பிரதிபளிக்கும் பாட நூலகள் என்பவற்றையும், முறை சாரா ஒழுங்குகளாக வளர்ந்தவர்களுக்கான இரவு நேர வகுப்புக்கள், குர்-ஆன், ஹதீஸ் போதனையை வழங்க அவர் ஏற்படுத்திய ஜமிய்யதுல் இஸ்லாஹ் என்ற அமைப்பு பத்திரிகைகளில் அவர் எழுதிய கட்டுரைகள், ஷரிஆ சட்ட நூல்கள், அறிவியல் நூல்கள் எனபவற்றைக் குறிப்பிடலாம்.
அரசியல் உரிமைப் போராட்டம்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் உள்நாட்டை சேர்ந்தவர்களின் அரசியல் பங்களிப்பு மிகவும் மட்டுப் படுத்தப்பட்ட அளவிலேயே இருந்தது. குறிப்பாக முஸ்லிம்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்லலாம். ஆயிரத்தி எண்ணூற்றி எண்பதுகளில் சட்ட மன்றத்தில் முஸ்லிம் பிரதி நிதிகள் எவரும் இருக்கவில்லை. ஒரு முஸ்லிம் பிரதிநிதி இருக்க வேண்டியதன் அவசியத்தை ‘கட்டாய விவாகப்பதிவு மசோதாவை’ சமர்ப்பித்த போதுதான் சித்தி லெப்பையும் மற்ற முஸ்லிம்களும் உணர்ந்தனர்.
விவாகப் பதிவு கட்டாயமாக்கப் படாமல் இருந்ததனால் ஏற்பட்டுக் கொண்டிருந்த பல்வேறு சமூக பிரச்சினைகளை கருத்தில் கொண்டு முஸ்லிம் சமூகத்தில் இருந்த படித்தவர்கள் விவாகப்பதிவை கட்டாயப்படுத்துமாரு கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுகொண்ட அரசாங்கம் ‘கட்டாய விவாகப்பதிவு மசோதாவை’ சட்ட மன்றத்தில் சமர்ப்பித்தது. முஸ்லிம்கள் எவரும் சட்ட மன்றத்தில் இல்லாததால், சேர் பொன்னம்பலம் ராமனாதன் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த சில சுய நலமிகளின் வேண்டுகோளுக்கு இணங்க மசோதாவை எதிர்த்து வாக்களித்தார். மட்டுமன்றி, ‘முஸ்லிம்கள் தனியான ஒரு இனத்தை சேர்ந்தவர்கள் அல்லர்: அவர்கள் சமயத்தால் முஸ்லிம்களானாலும், இனத்தால் தமிழர்களே” என்ரு குறிப்பிட்டார். இதன் மூலம், முஸ்லிம்களின் விவகாரங்களை தான் பார்த்துக்கொள்வேன், தனியானதொரு பிரதிநிதித்துவம் சட்ட மன்றத்தில் அவர்களுக்கு அவசியமில்லை என்று குறிப்பிட்டாதாக .முஸ்லிம்கள் பொருள் கொண்டனர்.
இது சித்திளெப்பையையும் முஸ்லிம்களையும் வெகுவாக சிந்திக்க வைத்தது. முஸ்லிம்களின் விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கும் போது அது குறித்து முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் அவசியம் இருக்க வேண்டும் என அவர்கள் சிந்தித்தனர்.
சட்ட நிரூபன சபையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த சித்தி லெப்பை எடுத்த முயற்சியே அவரது மிகப் பிரதான அரசியல் பங்களிப்பாக இருந்தது.
தனியான பிரதினித்துவம் தேவை எனபதையும் அவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் எவ்விதம் தெரிவு செய்யப்பட வேண்டும் எனபது குறித்த தனது நிலைப்பாடுகளை தொடர்ந்தேர்ச்சையாக வலியுருத்திக் கொண்டிருந்தார். இறுதியில் அரசு இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சட்ட நிரூபண சபையில் முஸ்லிம் பிரதிநிதித் துவத்தை ஆங்கில அரசு வழங்கியது. எனினும், தனக்கு மிகவும் சாதகமான பாரம்பரிய சிந்தனை கொண்ட ஒருவரை நியமித்தது. எனினும், சித்திலெப்பையே அப்பதவிக்கு மிகவும் பொருத்தமாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை.
தனது சமூக எழுச்சி செயல்பாடுகளுக்கு அரசின் ஆதரவை பெற்றுக் கொண்டதும் அவரது வெற்றியே...! ஜமாலுத்தீன் ஆப்கானியின் சிந்தனைகளால் கவரப்பட்டிருந்தும், அவர் எகிப்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து மேற்கொண்ட போராட்டம் போல் ஒன்றை இலங்கையில் கொண்டு செல்ல அவர் முற்படவில்லை. குறைந்த பட்சம் ஆப்கானியின் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கருத்துக்களை தனது பத்திரிகையில் எடுத்தெழுதுவதில் இருந்தும் கூட தவிர்ந்து கொண்டார். இதன் மூலம் அரசாங்கத்துடனான மோதல் போக்கு கவனமாக தவிர்க்கப்பட்டது. முஸ்லிம் சமூகம் ஆங்கிலேயர்களுடன் மோதலுக்கு செல்லும் ஒரு நிலையில் அப்போது இருக்கவில்லை. தம்மை பெருமளவில் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டிய தேவையில் இருந்தார்கள். இதற்கு அரசின் ஆதரவு மிகவும் அவசியமாக இருந்தது.
இரண்டாவதாக, மற்ற சமூகங்களும் 1848 இற்குப் பிறகு புரட்சி எதற்கும் செல்லவில்லை. அரசியல் உரிமைகளை அடைந்து கொள்வதிலேயே முனைப்புக் காட்டின. அத்தோடு, மற்ற நாடுகளை போலல்லாமல், ஓரளவு சாத்வீகமாகவே ஆங்கிலேயர்கள் நடந்து கொண்டார்கள். இவை அனைத்தும் சேர்ந்து ஆங்கில அரசோடு மோதிக் கொள்ளாத ஒரு போக்கை கடை பிடிக்க வைத்தது. இது அவரின் ஆழ்ந்த அரசியல் முதிச்சியை காண்பிக்கிறது.
எழுத்துப் பணி
தனது போராட்டத்திற்கான் ஆயுதமாக எழுத்தைத்தான் சித்தி லெப்பை தெரிவு செய்தார். முஸ்லிம் நேசன், அசன்பே சரித்திரம் என்ற நாவலை வெளியிட்டார். இலங்கையில் இருந்து வெளிவந்த முதல் தமிழ் நாவலாக இது கருதப்படுகிறது. இதில் சித்தி லெப்பை தான் இலங்கை முஸ்லிம் சமூகத்திடம் உருவாக்க எதிர்பார்க்கும் பண்புக்கூறுகளை விளக்குவதாக பேராசிரியர் அமீன் அபிப்பிராயப்படுகிறார்.
அஸ்ராருல் ஆலம், சுரூதுஸ்ஸலாத் என இரு நூலகளையும் வெளியிட்டார். அஸ்ராருல் ஆலம் ஒரு முஸ்லிமிடம் காணப்பட வேண்டிய பண்புக்கூறுகளை குறித்துக் கதைக்கிறது. சுரூதுஸ் ஸலாத் தொழுகை சட்டங்கள் குறித்து விளக்குகிறது. இதுதவிர, முஸ்லிம் பாடசாலைகளின் உருவாக்கத்தோடு அவற்றுக்கு தேவையான நூல்கள் பலவற்றை இஸ்லாமிய கலாசாரத்தோடு இயைந்து செல்லும் வகையில் எழுதினார்.
கடைசியாக...
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இணை காண்பதற்க்றிதான பெரும் பங்களிப்பை செய்து விட்டு 1898-பெப்ரவரி 5ம் நாள் மறுமைப் பயணத்தை ஆரம்பித்தார்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்).
சித்தி லெப்பை முஸ்லிம் சமூகத்தில் ஒரு முழுமையான மாற்றத்தை (Comprehensive Change) அவாவினார். அதற்காக தனது முழு வாழ்வையும் செல்வளித்தார். சித்தி லெப்பையிடம் இருந்து எமது சமூகம் கற்க வேண்டிய நிறைய பாடங்கள் உண்டு. இன்றும் பல சித்தி லெப்பைகள் எமது சமூகத்திற்கு தேவைப்படுகிறார்கள். உருவாகுவார்களா?
துணை நின்றது:
எம்.ஐ.எம். அமீன், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் அறிஞர் சித்தி லெப்பை
அலஹசனாத் வெளியீடு, 1997.
Share
2 பதிவு குறித்த கருத்துக்கள்:
நல்ல பதிவு, இவ்வாறான ஆக்கங்கள் காலத்தின் தேவையாகும், நிறைய பேருக்கு சித்தி லெப்பை பற்றிய ஆழமான அறிவு கிடையாது, எனக்கும்தான், உங்கள் பதிவு நல்ல விடயங்களை பகிர்ந்து கொண்டதனால், பல விடயங்களை நானும் அறிந்து கொண்டேன்.
pls visit:- www.farveena.blogspot.com
நாச்சியாதீவு பர்வீன்.
நன்றி உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.
இலங்கையின் சிறந்த எழுத்தாளரான உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது.
Post a Comment