எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி இருபத்தி ஆறாம் திகதி என நாள் குறிக்கப்பட்டுள்ள நிலையில் சிறுபான்மை மக்களின், குறிப்பாக முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடு எவ்வாறு இருக்கப் போகின்றது என்பது மிகவும் முக்கியமான வினாவாகும். வழமை போலவே முஸ்லிம் கட்சிகள் மு.க ஐ.தே.கவோடு சேர்ந்து தேர்தலில் குதிக்கையில், மற்ற முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்தோடு சேர்ந்து தேர்தலில் குதிக்கின்றன.
வழமை போலவே பரஸ்பரம் அடுத்தவர் சார்ந்துள்ள அரசியல் கட்சிகள் தொடர்பில் குற்றச் சாட்டுக்கள் பரிமாரிக்கொள்ளப்படுகின்றன. தமிழ் கட்சிகள் தொடர்பிலும் இதுதான் நிலைமை.
இரண்டு வேற்பாளர்களை பொறுத்தவரையும் இருவருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதே மிகவும் பொறுத்தமானது. ரஜபக்ஷ வெற்றி பெருவதாலோ, பொன்சேகா வெற்றி பெருவதாலோ இந்த நாட்டின் தலையெழுத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் இடம்பெறப்போவதில்லை. இவர்களில் யார் வெற்றி பெற்றாலும் நாம் பலமான அரசியல் போராட்டம் ஒன்றை கொண்டு சென்றாலே ஒழிய நமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பது சாத்தியமில்லை. ‘தக்கன பிழைக்கும்’ என்பதே இன்றைய நடைமுறை அரசியலின் எழுதப்படாத நியதியாக உள்ளது. எவரும் எமது உரிமைகளை இலேசாக தந்து விட மாட்டார்கள்.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு வாக்கு வங்கிகளை நிரப்ப நீண்ட காலத்தின் பின் தமது தொகுதிகளை திரும்பிப் பார்க்கும் நமது தலைவர்கள், ஏதோ கலீபாக்களின் ஆட்சியை மீண்டும் கொண்டு வந்து விடுவார்கள் போல் மேடைகளில் முழங்குவதை பார்த்து கரகோசம் எழுப்புவது, எமது மக்களின் அரசியல் விழிப்புணர்வற்ற நிலைமையை காட்டுகிறதா? அல்லது கையாலாகாத்தனத்தை பிரதி பலிக்கிறதா? என்பதை பகுத்தறிந்து கொள்ள முடியவில்லை.
அல்லது வெற்றுக்கோஷங்களை நம்பி வாக்களித்து ஏமாந்து போய் அரசியிலிலேயே நம்பிக்கை இழந்து போய் விட்டார்களா என்பதும் தெரிய வில்லை.
சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் ஒரு நல்ல தலைவர் இன்று அவசியப்படுகிறார். குறிப்பாக திறைசேறியை தன் சொந்த சொத்தாக கருதாத ஒரு தலைவர் அவசியப்படுகிறார். இந்த இருவருமே அதற்குத்தகுதியானவர்கள் அல்ல என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.
இலங்கையில் உள்நாட்டுப் போர் இடம்பெறாமல் இருந்திருந்தால் இன்று மலேசியா இருக்கும் இடத்தில் இலங்கை இருந்திருக்கும் என சில காலத்துக்கு முன் IMF இன் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்திருந்தார். யுத்தத்தால் வடக்குக் கிழக்கு மட்டுமே பெருமளவில் நேரடியாகப் பாதிக்கப்பட்டாலும், மற்ற பகுதிகளும் மறைமுகமாகப் பாதிக்கப்பட்டன: அபிவிருத்தி நடவடிக்கைகள் தடைப்பட்டன. மக்களின் வரிப்பணம் பெருமளவில் யுத்தத்திற்காக இறைக்கப்பட்டது.
யுத்தத்தின் நிறைவோடு ஓரளவு நம்பிக்கை எல்லா சமூகங்கள் மத்தியிலும் துளிர்த்தது. அந்த நம்பிக்கைகள் சிதரடிக்கப் படக்கூடாது. அரசியல்வாதிகள் தமது சொந்த பக்கட்டுக்களை நிரப்பும் அரசியலை கைவிட்டாலே ஒழிய இது சாத்தியமாகப் போவதில்லை.
முக்கியமாக அகதிகள் மீள் குடியேற்றம், அபிவிருத்தி, உள்ளூர் கலாசாரத்தை பாதுகாத்தல், யாப்புச் சீர்திருத்தம், சட்ட ஒழுங்கையும் நீதியையும் நிலைநாட்டல், சூழல் பாதுகாப்பு மற்றும் சமாதானமும் சகவாழ்வும் போன்ற அம்சங்களே இந்த ஜனாதிபதித் தேர்தலின் முக்கிய பேசு பொருளாக இருந்திருக்க வேண்டும்.
துரதிஷ்ட வசமாக போரை வழிநடத்தியது நீயா? நானா? என்ற சிறுபிள்ளைத்தனமான தெருச்சண்டையாக தேர்தல் பிரசாரம் மாற்றம் பெற்றிருப்பது வருத்தம் தருகிறது.
எமது தலைவர்கள் மேலே சொன்ன அம்சங்கள் தொடர்பில் தமது கோரிக்கைகளை மிகவும் பலமாக முன்வைக்க வேண்டும். வெறுமனே ஒரு இனத்திற்கான அரசியலை நாம் நடத்தக்கூடாது. எமது அரசியல் அனைத்து சமூகங்களினதும் நலன்களை பிரதிபலிக்கும் வகையில் மிக விரிந்ததாக அமைய வேண்டும். முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் ஒரு நாட்டில், இஸ்லாமிய அரசியலின் பரிமாணம் அதுவாகத்தான் அமைய முடியும்.
Share
2 பதிவு குறித்த கருத்துக்கள்:
எவருக்கும் வெற்றியை blank cheque ஆக கொடுக்காமல் இருந்தால் சரி
நன்றி உங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும்.
நீங்கள் சொன்னது போல் வெற்றியை Blank Cheque ஆகத்தான் இதுவரை காலமும் பெற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.
Post a Comment