ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் இருப்பது பதினாறு நாட்கள். தேர்தலை முன் கூட்டியே நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்த போது, மஹிந்தவின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருந்தது. யுத்த வெற்றியின் பிற்பாடு மஹிந்த தனக்கு ஏற்படுத்தி வைத்திருந்த பிம்பம் மிகவும் பலமாக இருந்தது. வரலாற்றில் நாற்பதாண்டு காலம் வட இலங்கையை ஆட்சி செய்த தமிழ் மனனனான எல்லாளனை தோற்கடித்த துட்டுகைமுனுவுக்கு அவர் ஒப்பிடப்பட்டார். சிங்கள மக்களால் இலங்கையை ஆழும் ஒரு மன்னனாகவும், ஏன் தம்மை காக்க வாக்க வந்த இறைவன் என்று சொல்பவர்கள் கூட இருந்தார்கள்.
எதிர் கட்சிகள் விரும்பியோ, வெறுத்தோ யுத்த வெற்றியை கொண்டாட வேண்டி ஏற்பட்டது. பேச்சு வார்த்தை மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று பேசி வந்தவர்கள் யுத்தத்திற்குப் பிந்தய அரசாங்கத்தின் பிரசார சூராவளியில் தடுமாறினார்கள். யுத்தத்தை அடிப்படையாக வைத்து இடம்பெற்ற மாகாண சபை தேர்தல்களில் எதிர்கட்சிகள் தோல்விக்கு மேல் தோல்வியை சந்தித்து துவண்டு போயின.
இந்த மாகாண சபை தேர்தல்கள் பொதுத் தேர்தலுக்கும், ஜனாதிபதித் தேர்தலுக்கும் செல்வதற்கான ஒத்திகையாக அப்போது பார்க்கப்பட்டது. மாகாண சபை தேர்தல் முடிவுகள் மஹிந்தவுக்கான ஆதரவில் இலேசான சரிவு இடம் பெற்று வருவதை உணர்த்தின. பெருமளவு எதிர்பார்க்கப்பட்ட மஹிந்தவின் சொந்த தென் மாகாணத்தில் இடம்பெற்ற தேர்தலில், முன்னதாக நடந்த மற்ற மாகாண சபை தேர்தல்களோடு ஒப்பிடுகையில் ஒரு இலேசான சரிவிருப்பதை அரசாங்கம் உணரத்தவறவில்லை. பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு என்பன இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம்.
இது ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்பவற்றை உடனடியாக நடாத்த வேண்டிய அவசியத்தை அரசாங்கத்திற்கு உணர்த்தியது. இந்த சந்தர்ப்பத்தில் கூட மஹிந்தவின் வெற்றியில் எவருக்கும் சந்தேகம் வரவில்லை. காரணம் யுத்த வெற்றி ஒன்றே இப்போது கூட மஹிந்தவின் வெற்றியை உறுதி செய்ய தேவையான வாக்குகளை பெற்றுக்கொள்ள போதுமாக இருந்தது. இது கட்டம் வரையிலும் கூட அரசாங்கத்தின் அரசியல் காய் நகர்த்தல்கள் மெச்சும் படியாகத்தான் இருந்தன.
எனினும் இதன் பிந்தய எதிர் கட்சிகளின் காய் நகர்த்தல் மஹிந்தவையும், அரசாங்கத்தையும் திக்குமுக்காடச் செய்து விட்டதாகவே தெரிகிறது.
மஹிந்தவின் வெற்றி நம்பிக்கைக்கு விழுந்த முதல் அடி சரத் பொன்சேகாவின் அதிரடி அரசியல் பிரவேசத்தின் வடிவில் வந்தது. அரசியல் நோக்கம் எதுவும் இல்லாமலும், அரசியல் நுணுக்கங்கள் தெரியாமலும் பல ஆண்டுகள் இராணுவத்தில் சேவையாற்றிவிட்டு, ஓய்வு பெற்ற பிறகு எங்காவது ஒரு மேலை நாடொன்றில் எஞ்சிய காலத்தை அமைதியாகக் கழிப்பதற்கு பொன்சேகா திட்டமிட்டிருந்திருக்கலாம். இல்லாவிட்டால், கனடாவில் சென்று சிறுபான்மையினரை கொச்சைப் படுத்தும் படி பேசி இருந்திருக்க மாட்டார். இனவாத அரசியல் இலங்கையில் பெருமளவில் எடுபடாது என்பதோடு, சிறுபான்மையினர் மட்டும் அன்றி பெரும்பான்மை மக்களில் பெரும் பகுதியினரே இனவாத அரசியலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, ஜனாதிபதிப்பதவியை குறி வைத்தவர் அவ்விதம் பேசி இருந்திருக்க மாட்டார்.
அப்படிப்பட்ட ஒருவரை அரசியலுக்கு அழைத்து வந்து ஜனாதிபதித் தேர்தலில் நிற்க வைத்தார்கள். பொன்செகாவே சில நாட்களுக்கு முன் ஒரு மேடையில் சொன்னது போல், அவரது அரசியல் வரலாறு வெறும் நாட்பது நாட்கள்.
பொன்சேகாவின் இந்த அரசியல் பிரவேசம் அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது உண்மை. ஆனால், அவரது பிரவேசம் அரசியல் அரங்கில் ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளை அரசு குறைத்து மதிப்பிட்டு விட்டது என்றே சொல்லலாம். பெரும்பாலான அரசியல் அவதானிகள் கூட, இது மஹிந்தவின் வாக்கு வங்கியை கணிசமாக குறைக்குமே அன்றி, தோற்க மாட்டார் என்றே அப்போதும் சொன்னார்கள். தற்போது அதையும் மீறி இருவரில் எவரும் வெற்றி பெறலாம் என்ற நிலை உருவாகி விட்டது.
இத்தகைய ஒரு நிலை உருவாகக் காரணம் பொன்சேகா தரப்பினரின் சிறப்பான காய் காய் நகர்த்தல்களும், அரசாங்கத்தின் பிழையான முடிவுகளும்தான்.!
அரசின் முதலாவது தவறு, தனது அணியில் இருந்த பொன்சேகவை பிரிந்து செல்ல விட்டமை. அதன் மூலம் போர் வெற்றிக்கு உரிமை கொண்டாடக் கூடிய ஒருவரை எதிர் முகாம் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கமே வழி செய்து கொடுத்தது. இதுதான் தவிர்க்க முடியாமலிருந்த மஹிந்தவின் வெற்றியை இன்று சந்தேகத்துக்கு இடமுள்ளதாக்கியுள்ளது. மஹிந்தவுக்கும், பொன்சேகவுக்கும் இருந்த உள்ளக முரண்பாட்டை எதிர்கட்சிகள் குறிப்பாக ஐ.தே.கட்சி தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டது.
இரண்டாவது, அளவுக்கதிகமாக பொன்சேகா மீதும், அவர் சார்ந்த கட்சிகள் மீதும் கரி பூசுவதற்கு மஹிந்த அரசு மேற்கொள்ளும் முயற்சிகள். சரியான பிரசார உத்திகளை கைக்கொள்வதற்கு அரச இயந்திரம் சாணக்கியமுடயதாக இல்லை. குறிப்பாக ஐ.தே.க சார்ந்த தனியார் பிரசார ஊடகங்களிடம் காணப்படும், ஒரு பக்கம் சார்ந்தாலும், அதனை பொது மக்கள் உணர்ந்து கொள்ளாத படி பார்த்துக்கொள்ளும் பக்குவம் அரச ஊடகங்களிடம் காணப்பட வில்லை. இதன் மூலம் மஹிந்தவின் மீதான மிக உயர்ந்த பிம்பம் மறைந்து அவரும் ஒரு தெருச்சண்டை அரசியல் செய்பவர்தான் என்ற உணர்வை தன்னை அறியாமலேயே அவர் பதித்து வருகிறார். இதன் மூலம் அவர் தனது மிக முக்கிய பலம்களில் ஒன்றை இழக்கிறார். அவர் உருவாக்கி விட்டிருந்த, தான் ஒரு உயர்ந்த தலைவர் என்ற பிம்பமே அவரது அந்தப் பலம்.
உண்மையை சொல்வதானால் போரை வழி நடத்தியது மஹிந்ததான். மஹிந்தவும் அவரது சகோதரர்களும் வெறும் சில ஆயுதத் தளபாடங்களை விநியோகிக்கும் வேலையை மட்டும் செய்யவில்லை. அதற்கு மேலும் நிறையச்செய்தார்கள். மிகச் சிறப்பாக ராஜதந்திர உறவுகளை கொண்டு போனார்கள். சீனா, பாகிஸ்தான் என்பன தாராளமாக ஆயுத உதவிகளை வழங்கின. இந்தியா L.T.T.E அழிவதை மௌனமாக அங்கீகரித்தது. L.T.T.E இன் வருமான வழிகள் மிகக்கவனமாக தடை செய்யப்பட்டன. மிக இரகசியமான புலனாய்வு வலைப்பின்னல் ஒன்றை மற்ற நாடுகளோடு ஏற்படுத்தியதன் மூலம் L.T.T.E இன் ஆயுத மார்க்கங்கள் அழிக்கப்பட்டன. இவை அனைத்தும் பொன்சேகாவின் ஆழுகைக்கு வெளியில் நடந்தவை. இவை நடக்காமல் இருந்திருந்தால் வன்னியில் இருந்து குடுமியை பிடித்த படி திரும்பி ஓடி வந்திருக்க வேண்டும், 1987 இல் நடந்தது போல்.
இவ்வளவு இருந்தும் என்ன பிரயோசனம்? வல்லரசுகளோடும், L.T.T.E யோடும் சலைக்காத மஹிந்த அரசின் ராஜதந்திரம் , ரனில் விக்ரமசிங்கவிற்கு முன் தோற்றுப்போனதா?
கசப்பாக இருந்தாலும் ஆம் என்பதே மஹிந்த தரப்பு இதில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாகும். பொன்சேகாவிற்கு எதிரான இந்த முதிர்ச்சியற்ற அரசியல் எதிர்வினைகள் தொடருமானால் அது எந்தளவு மஹிந்த குறித்த பிம்பத்தை மக்கள் மத்தியில் குறைத்துவிட்டது என்பதை தேர்தல் முடிவுகள் காண்பிக்கும். தற்போதைய தேவை மஹிந்த தனது அரசியல் பிரசார உத்திகளை மாற்றி அமைப்பதாகும். குறிப்பாக அரச ஊடகங்களை தனக்கு சாதகமாக பயன் படுத்தினாலும், அவ்வூடகங்கள் பக்கச்சார்பாக செயல்படுகின்றன என்ற உணர்வு பொது மக்களுக்கு ஏற்படக்கூடாது. அவ்வாறு ஏற்படுமாக இருந்தால், அவ்வூடகங்கள் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை குறைந்து தனியார் ஊடகங்களை நாடத் துவங்கி விடுவார்கள்.
மும்மொழிகளிலும் இயங்கும், அச்சு, இலத்திரனியல் சார்ந்த எந்த ஊடகமாக இருப்பினும் அவற்றை பார்க்கும் போது என்ன உணர்வு வருகிறது? கிளிப்பிள்ளைக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் உணர்வு வரவில்லை?
மறு புறத்தில் தனியார் ஊடகங்கள் மிகச் சிறப்பாக தமது பிரசார இயந்திரத்தை முடக்கி விட்டுள்ளன. பெரும்பாலான தனியார் ஊடகங்கள் ஐ.தே.கட்சிக்கு சொந்தாமானவை என்பது அனைவருக்கும் தெரியும். அவை பொன்சேகாவை ஆதரிக்கின்றன. ஆனால், அரச ஊடங்கங்கள் செய்வது போல் வெளிப்படையாக அல்ல. அவற்றின் அணுகுமுறை மிகவும் நுட்பமானது. பொது மக்களால் சாதாரணமாக பக்கச்சார்பு என்று புரிந்து கொள்வது கடினமானது.
சாதாரன பொது மக்களோடு கலந்து பேசிப்பார்த்த போது இந்த உணர்வைத்தான் பெறக்கிடைத்தது. எனவே, தனியார் ஊடகங்களை நடு நிலை ஊடகங்களாக அவர்கள் கருதுவதில் வியப்பொன்றும் இல்லை.
இது கண்டிப்பாக பொன்சேகாவின் தரப்புக்கு கிடைத்த வெற்றி.
உண்மையில் ஐ.தே.கட்சியின் ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தல் அமலி ஆரம்பித்த நாளில் இருந்தே மிக கவனகாக தமது பிரசார இயந்திரத்தை நகர்த்த ஆரம்பித்து விட்டன. ஊடகங்களின் பெயர்களை கூறியே சில உதாரணங்ளை சுட்டிக்காட்டுவதுதான் மிகவும் பொருத்தமாக இருக்கும். (இது குறித்து 'வலைப்பூ தர்மங்கள்' என்றோ, சட்டங்களோ இருக்கிறதா என்று தெரியாது. தயவு செய்து யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்).
குறிப்பாக தனியார் ஊடகங்கள் அரசியல் யாப்பை திருத்தி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை மாற்றி அமைப்பது தொடர்பில் விவாதங்களை ஆரம்பித்தன. மிக நுணுக்கமாக பொன்சேகாவுக்கு சாதகமான அம்சங்களை தமது செய்திகளிலும், நிகழ்ச்சிகளிலும் முக்கியத்துவப்படுத்தின. ஆனால், தாம் நடு நிலை ஊடகங்கள் என்ற வகையில் மஹிந்தவுக்கு சாதகமான அம்சங்களை ஒளி-ஒலி பரப்பவும் அவை தயங்கவில்லை.
இம்முறை முதல் முறையாக ஜனாதிபதித்தேர்தலில் வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் நிறையப் பேர் இருப்பதால், அவர்களை மிகக் கவனமாக இந்த தனியார் ஊடகங்கள் குறி வைத்தன.
வங்காள்தேசத்தில் இடம்பெறும் முக்கோண ஒரு நாள் கிரிகட் தொடரை சிரச தொலைக்காட்சி ஒளி பறப்பும் உரிமையை பெற்றுக்கொண்டதை இதில் மிக முக்கியமான நகர்வாக நான் கருதுகிறேன். ஏனெனில், இது நிறைய இளைஞர்களின் கவனத்தை சிரசவின் பக்கம் திருப்ப உதவி புரிந்திருக்கும். கிரிகட் போட்டி இடம் பெற்றுக் கொண்டிருந்தாலும் செய்திகள் எவ்வித சுருக்கமும் இன்றி நேரத்திற்கு மிகவும் 'சீரியசாக' ஒளி பரப்பாகுவதை கிரிகட் ரசிகர்கள் அவதானித்திருப்பார்கள். (பொதுவாக கிரிகட் போட்டிகள் ஒளி பரப்பாகும் நாட்களில் செய்திகள் சுருக்கி அமைக்கப்படுவதுதான் வழமை). இந்த செய்திகள் மிகக் கவன்மாக பொன்சேகாவிற்கு வாக்கு சேகரிக்கும் பிரசாரத்தை செய்கின்றன.
இவை எல்லாம் சேர்ந்து மஹிந்தவிடம் இருந்து வெற்றிக்கனி சிறிது சிறிதாக பொன்சேகாவை நோக்கிச் செல்கிறதா? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஒன்று மட்டும் நிச்சயம். மஹிந்த தனது வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் தனது பிரசார உத்தியை எதிர் கட்சிகளின் பிரசார எந்திரத்தை முறியடிக்கும் விதத்தில் அவசரமாக மாற்றி அமைக்க வேண்டும். மாற்றி அமைப்பாரா? பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கடைசியாக மஹிந்த திருப்திப்படும் படியாகவும், பொன்சேகா சிந்திக்க வேண்டிய ஒரு அம்சமும் இருக்கிறது. அது அரச ஊடகங்களின் பரந்த வலைப்பின்னல். மிகவும் பிந்தங்கிய கிராமங்களிலும் அரச ஊடகங்களின் சேவையை பெற்றுக்கொள்ள முடிகிறது. தனியார் ஊடகங்களுக்கு இது கிடையாது. அந்த மட்டில் மஹிந்த சந்தோசப்படலாம்: மறு புறத்தில் பொன்சேகா தனது கவனத்தை குவிக்க வேண்டிய பகுதி இது.
எது எப்படியோ, வரும் இருபத்தாறாம் திகதி வரை தமது பிரசாரத்தை மிகச் சரியாக கொண்டு செல்பவர்கள் தான் வெற்றி பெறப்போகிறார்கள் என்பது நிச்சயம். அடுத்த இரண்டு வாரங்களிலும் இரு வேட்பாளர்களின் பிரசார உத்திகளிலும் எத்தகைய மாற்றங்கள் உருவாகப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Share
3 பதிவு குறித்த கருத்துக்கள்:
அரசின் பிரச்சார இயந்திரமே மஹிந்தவின் வாக்கு வங்கிகளில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். அதேவேளை அரசின் தீவிர ஆதரவாளர்கள் கூட அரச ஊடகங்களை நம்புவதில்லை.. (உதாரணமாக பூச்சரம் கருத்துக்கணிப்பில் அரச ஊடகங்கட்கு கிடைத்த வாக்குகளை பாருங்கள்)
இன்னும் பொன்சேக்காவின் மீது சேறுபூசுவதை மக்கள் ரசிக்கவும் மாட்டார்கள்.
நன்றி 'என்ன கொடும சார்' உங்கள் வருகைக்கும், பின்னூட்டலுக்கும்.
தவறுதலாக உங்கள் இரண்டாவது பின்னூட்டலையும் publish செய்து விட்டு பிறகு எடுத்து விட்டேன்.
Post a Comment