இலங்கை அரசியலில் மிகவும் முக்கியமான காலப்பகுதிகளில் இன்றைய காலப்பகுதியும் ஒன்று. ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் அடுத்த ஆறாண்டு காலத்துக்கு இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போகின்றவை. மஹிந்தவும், பொன்சேகாவும் இயல்பில் பெரிய வேற்றுமைகள் கொண்டவர்கள் இல்லையாயினும், ஆட்சிக்கட்டிலில் யார் அமரப்போகின்றார்கள் எனபது அடுத்த ஆறு வருட காலத்துக்கு நாட்டு மக்களின் தலை விதியை கண்டிப்பாக தீர்மானிக்கும்..
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் நிலைப்பாடுகளை பொறுத்த வரை கண்டிப்பாக இஸ்லாமிய அரசியலின் கூறுகளை அவை பிரதிபலிக்க வேண்டும். ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை பொறுத்த வரை, ஒரு பெரும்பான்மை முஸ்லிம் நாட்டின் அரசியல் போராட்ட ஒழுங்கில் இருந்து அது நிச்சயம் வேறுபட்டிருக்கும்.
சிறுபான்மை நாடொன்றில் கல்வித்துறை, பொருளாதாரத்துறை போன்ற வற்றை இஸ்லாமிய மயப்படுத்துவது சாத்தியமில்லை. ஆனால், தமது அரசியல் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், தமது இருப்பு, அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்திக்கொள்வதற்குமான ஒரு அரசியலை மேற்கொள்ளலாம். மிக முக்கியமாக பிரதான நீரோட்டத்தில் கலந்து, மிக முக்கியமான தீர்மானங்களில் பங்கெடுத்து, இஸ்லாமிய ஷரீஆவின் முக்கிய இலக்குகளின் ஒன்றாகிய நீதியை நிலைநாட்டல் தொடர்பில் தமது பங்களிப்பை வழங்குவது இஸ்லாமிய அரசியல் சிந்தனை சிறுபான்மை நாடொன்றில் எதிர்பார்க்கும் மிக முக்கியமான ஒரு அம்சமாகும். நீதி, சகோதரத்துவம் உள்ளிட்ட இஸ்லாத்தின் அகிலத்துவ ரீதியான பண்புகள், இடத்தால், காலத்தால் வேறுபடுவதில்லை என்ற அடிப்படையிலேயே இதனை நோக்கலாம்.
இஸ்லாமிய அரசியல் குறித்து மிக அதிகமாக கதைக்கப்பட்டாலும் அவை முஸ்லிம் பெரும்பான்மை சமூகங்களுக்கு பொருத்தமானவையாகவே உள்ளன. சிறுபான்மை நாட்டின் அரசியல் பிக்ஹ் தொடர்பில் போதியதொரு தெளிவு நமது சமூகத்தில் காணப்படவில்லை. அரசியலை தமது மார்க்க ரீதியான அம்சங்களில் இருந்து விலகிய ஒன்றாகவே சமூகம் கொள்கின்றது. இஸ்லாம் சமூகம் சார்ந்ததாகவும், சமூக நலனை மையப்படுத்துவதாக இருந்தும், முஸ்லிம்கள் அரசியலில் ஈடுபடுவதை நன்மை தரக்கூடிய ஒன்றாக கருதவில்லை. வெறுமனே பள்ளி வாயல்களுக்குள் அமர்ந்து தொழுவதையும், தியானிப்பதையும் மட்டுமே மார்க்கம் எனக்கருதுகிறார்கள். சமூகத்தின் சகல அம்சங்களிலும் தமது பங்களிப்பை புரிய வேண்டிய பள்ளிவாயலின் வகிபாகத்தை மறந்து போகிறார்கள்.
இதன் ஒட்டு மொத்தமான விளைவு நமது அரசியல், சுயநலம் கொண்ட சில தலைமைகளிடம் மட்டும் விடப்பட்டமை. இதன் மூலம் எமது எதிரகாலத்தையும்,, இருப்பையும் நாம் நம்பாத சிலரிடம் நாம் அடகு வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.
ஜனநாயகத் தேர்தல்கள், சிறுபான்மை சமூகங்கள் தமது உரிமைகள் குறித்த பேரம்பேசலில் ஈடுபடும் மகத்தான சந்தர்ப்பத்தை வழங்குகிறது. இந்த பேரம்பேசும் வலிமையை எந்தளவு நாம் பயன்படுத்தி இருக்கின்றோம் எனபது நாம் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும். உண்மையை சொல்வதாக இருந்தால், அஷ்ரஃபின் அரசியல் பிரசன்னத்தை தொடர்ந்து வந்த காலத்தில் சிறுதுகாலம் முஸ்லிம் காங்கிரஸ் இந்த பேரம் சக்தியை பெற்றிருந்தது. அஷரஃபின் மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் சிதறிப் போன போது இந்த சக்தியும் சிதறிப்போனது.
எமது பேரம்பேசும் சக்தியை நாம் இழந்தமைக்கு உள்ளக ரீதியான எமது பலவீனமே பெருமளவில் காரணமாக இருந்தது. குறிப்பாக உறுதியான இஸ்லாமிய அரசியல் சிந்தனையின் மீது எமது அரசியல் வழி முறை உருவாக்கப்பட்டிருக்கவில்லை. பெரும்பான்மை சமூகங்களை பொறுத்தவரை அவற்றுக்கு தமது அரசியல் வழிமுறையை செப்பனிட்டுக் கொள்ள அவசியமான கருத்தியல் பின்னனிகள் இருந்தன.
எமது அரசியல் தலைமைகளுக்கு இஸ்லாம் தனது கருத்தியல் பின்புலத்தை வழங்கி இருக்க வேண்டும். துரதிஷ்வசமாக நமது அரசியல் தலமைகள் பிஸ்மில் சொல்லி துவங்கி, சலவாத்தோடு முடிக்கும் ஒரு சம்பிரதாய பூர்வ மதத்தை மட்டுமே விளங்கி இருந்தார்கள். அவர்கள் விளங்கி இருந்த இஸ்லாம் பள்ளிக்குள் சுருங்கிய, சில சடங்குகளோடு முடங்கிப் போகும் ஒன்றாகவே இருந்தது. அதற்கு மேல் அரசியல் போராட்டத்தில் அதற்கு இடம் இருக்கவில்லை. இஸ்லாத்திற்கும், அரசியலுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு சம்பந்தமாக இவர்கள் அறிந்திருப்பதெல்லாம் சில முஸ்லிம் நாடுகளில் காணப்படும் சில தீவிரவாத அமைப்புகளின் பெயர்களை மட்டுமே!
எமது அரசியல் தலைமைகளுக்கு இஸ்லாம் தனது கருத்தியல் பின்புலத்தை வழங்கி இருக்க வேண்டும். துரதிஷ்வசமாக நமது அரசியல் தலமைகள் பிஸ்மில் சொல்லி துவங்கி, சலவாத்தோடு முடிக்கும் ஒரு சம்பிரதாய பூர்வ மதத்தை மட்டுமே விளங்கி இருந்தார்கள். அவர்கள் விளங்கி இருந்த இஸ்லாம் பள்ளிக்குள் சுருங்கிய, சில சடங்குகளோடு முடங்கிப் போகும் ஒன்றாகவே இருந்தது. அதற்கு மேல் அரசியல் போராட்டத்தில் அதற்கு இடம் இருக்கவில்லை. இஸ்லாத்திற்கும், அரசியலுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு சம்பந்தமாக இவர்கள் அறிந்திருப்பதெல்லாம் சில முஸ்லிம் நாடுகளில் காணப்படும் சில தீவிரவாத அமைப்புகளின் பெயர்களை மட்டுமே!
மறு புறத்தில் சமூகத் தலைமைகள் தாம் அரசியலை புறக்கணிப்பதன் மூலம் எத்தகைய மிகப் பாரதூரமான தவறுகளை இழக்கிறோம் என்பதை புறிந்திருக்கவில்லை.
உண்மையில், மிக அதிகமான நமது பிரச்சினைகளுக்கு வரலாற்று ரீதியான பரிமாணம் இருக்கிறது. குறிப்பாக தமிழர்களும், சிங்களவர்களும் கல்வித்துறையில் கவனம் செலுத்திய போது முஸ்லிம் சமூகம் வியாபாரத்தில் மூழ்கி இருந்தது. சித்தி லெப்பை, சேர் ராசிக் பரீட், பதியுத்தீன் மஹ்மூத் போன்றோரின் முயற்சிகள் இன்னிலையை மாற்ற ஓரளவு உதவின. ஆனால், இன்னிலை இன்னும் முழுமையாக மாறவில்லை. கல்வித்துறையில் பின்னடைந்த சமூகமாகத்தான் இன்னும் முஸ்லிம் சமூகம் இருக்கிறது. இதன் தர்க்க ரீதியான விளைவு முஸ்லிம் சமூகம் அரசியல் விழிப்புணர்ச்சியற்ற சமூகமாக மாறி விட்டமையாகும்.
நமது அரசியல் வழிமுறையில் இஸ்லாமிய மாற்று வழிமுறைகள் தோற்றம் பெறாமைக்கான காரணம் இதுதான். இது அரசியல் வாதிகளுக்கு மிகவும் வாய்ப்பாக அமைந்தது. சமூகத்தின் நலனை அடகுவைத்து அவர்கள் தமது சொந்த நலன் காக்கும் அரசியலை முன்கொண்டு சென்றார்கள்.
இந்த சுயநல அரசியலை புரிந்து கொள்வதற்கு தற்போதய ஜனாதிபதித் தேர்ததலில் முஸ்லிம் அரசியலின் நகர்வை அவதானித்தாலே புரிந்து கொள்ளலாம். எந்த வேட்பாளர் என்ன வாக்குறுதியை வழங்கினார்கள்? எந்தப் பொது வேலைத்திட்டத்தில் உடன்பட்டார்கள்? இரண்டு வேட்பாளர்களை ஆதரிப்பவர்களும் எந்த நிபந்தனையின் பேரில் மேடைகளில் அவர்களை ஆதரிக்கிறார்கள்? முஸ்லிம் கிராமங்களில் வந்து மேடை கட்டி வாய் கிழிய கத்துகிறார்கள்?
அப்படியான எந்த உறுதி மொழியும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. சிலர் தாம் நிபந்தனையற்ற ஆதரவு தெரிப்பதாக வெளிப்படையாகவே பேசி வருவதும் தெரிந்ததுதான்.
முஸ்லிம் சமூகத்தை விட்டு, ஒட்டு மொத்தமாக நாட்டு நலனுக்கு என்ன திட்டங்கள் இந்த வேட்பாளர்களிடம் இருக்கின்றன என்பதுவும் தெளிவில்லை. பிறகு எதற்கு இந்த ஆதரவு? தெரியவில்லை.
இனி மேலும் இந்த அரசியல் தலைமைகளை நம்பிப் பிரயோசனமில்லை. முஸ்லிம் சமூகத்தின் சகல இஸ்லாமிய இயக்கங்களும், மற்ற அமைப்புகளும் ஒருங்கினைந்த குடையின் கீழ் இலங்கை அரசியலின் பிரதான நீரோட்டட்தில் கலப்பற்கு முன்வர வேண்டும்.
எமக்கென தனிக் கட்சி அமைத்துத்தான் எமது அரசியலை முன்கொண்டு செல்ல வேண்டும் என்றில்லை. பிரதான கட்சிகளோடு இணைந்தும் நாம் அரசியலில் பங்கெடுக்கலாம். முக்கியமான தீர்மானங்களை எமது நாடு எடுக்கும் ஒவ்வொறு சந்தர்ப்பத்திலும் நமது குரலும் பலமாக ஒழிக்க வேண்டும். தனிமைப்பட்டதொறு சமூகமாக இல்லாமல் இந்நாட்டின் பிரதான நீரோட்டத்தில் முக்கியமான வகிபங்கை வகிப்பவர்களாக நாம் மாற வேண்டும். இந்த நாட்டின் இன்பத்திலும், துன்பத்திலும் நாமும் பங்கெடுக்க வேண்டும்.
இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் கருத்தில் எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான அம்சம் இருக்கிறது. அது நமது கல்வி ரீதியான பின்னடைவும் அறியாமையும். சித்தி லெப்பை எவ்வாறு அறியாமையை தனது முதல் எதிரியாகக் கண்டாறோ, அதே போன்று அது தற்காலத்திலும் எமக்கு முன்னால் இருக்கிறது. அறியாமை நமது அரசியலில் எந்தளவு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை ஏற்கனவே குறைப்பிட்டேன். ஒரு மாற்று அரசியல் வழிமுறையோடு இணைந்ததாக, கல்வி தொடர்பிலும், இஸ்லாமிய அறிவோடு இணைந்த வித்ததில் ஒரு கல்வி வளர்ச்சியை ஏற்படுத்துவதில் நமது கவனம் குவிக்கப்பட வேண்டும். இதுதான் இன்று நம் முன் நிற்கும் மிக அடிப்படையான கடமைகளுள் ஒன்று.
Share
3 பதிவு குறித்த கருத்துக்கள்:
தனிக்கட்சி அவசியம்.. சேர்ந்து இருக்கிறவங்களின் நிலை "நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன" என்ற மாதிரி ஆகிவிட்டது. அத்துடன் சிறுபான்மை மக்களின் நலன் பற்றி சிந்திக்கும் எந்தவொரு சிறுபான்மையின மகனையும் பெரும்பான்மை கட்சிகள் ஓரங்கட்டாமல் விடாது.
முஸ்லிம்களை பொறுத்தவரை இன்று அவர்கள் சரியான பாதையில்தான் செல்கிறார்கள். ஒரே கட்சியில்தான் இருக்கவேண்டும் என்பது சட்டமல்ல. பல கட்சி அரசியல் நிச்சயமாக அவசியம். ஒரேகட்சி என்பது யதார்த்ததை மீறியது. நபித்தோழர்களிடையேயே அரசியல் ரீதியான கருத்துவேறுபாடுகள் இருந்திருக்கும்போது, அஷ்ரபின் பின் கட்சி பிளவு பட்டுவிட்டது என்று அழுவது இயலாமை.
தக்கன பிழைக்கும்..
நன்றி 'என்ன கொடும சார்' உங்கள் வருகைக்கும் பின்னூட்டலுக்கும்.
உண்மையில் கட்சி அடிப்படையில் பிரிந்திருப்பது தவறானதல்ல. ஆனால், எமது தலைமகளின் நிலைப்பாடுகள் சமூகத்தின் நலன்களை மனதில் கொண்டுதான் எடுக்கப்படுகின்றன என்றால் சந்தோசப்பட வேண்டியதுதான்.
Post a Comment