கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவின் 33வது அமர்வில் திரையிடப்பட்ட திரைப்படம் ஃபின்னிஷ் திரைப்பட இயக்குனர் Klaus Haro இன் இயக்கத்தில் உருவான "Letters to Father Jacob” என்ற ஃபின்னிஷ் திரைப்படம். தன்னளவில் மிகவும் எளிமையான ஒரு திரைப்படமாக இருந்தாலும், மனிதர்கள் மனிதன் என்ற வகையிலும், மத ரீதியிலும் காட்டும் அன்பின் ஆழத்தை எளிமையாக சித்தரிப்பதன் மூலம் பார்வையாளனை மகிழ்ச்சிப் படுத்தும் விதமாகவும், அவனை வியப்பில் ஆழ்த்தும் விதமாகவும் அமைந்துள்ளது இத்திரைப்படம்.
துயரம், பயம், அப்பாவித்தனம், நம்பிக்கைகள், புதிர்கள், வியப்புக்கள் என படம் முழுவதுமே ஒரு மனிதத் துயரம் இழையோடியுள்ளது. படத்தின் சகல அமசங்களிலும் உள்ள மிக முக்கிய அம்சம் அதன் மிகச் சிறிய பட்ஜெட் (ஒரே இடத்தில் மூன்று நடிகர்களை சூழத்தான் பெரும்பாலும் இந்தக் கதை பின்னப்பட்டுள்ளது).
Klaus Haro தனது கமராவினால் நுண்மையான மனித உணர்வுகளை உள்ளத்தை தொடும் வண்ணம், மனதளவில் ஒரு அதிர்வை உண்டு பண்ணும் வண்ணமும் காட்சிபடுத்தி இருப்பது சிறப்பான திரைப்பட உத்தி என்றே கருதலாம்.
திரைப்படம், லெய்லா என்ற பெண் சிறைக்கைதியைக் குறித்துப் பேசுகிறது. ஆயுட்காலக் கைதியான லெய்லா, ஜேகப் என்ற வயது முதிர்ந்த கண் தெரியாத பாதிரி அனுப்பிய கடிதங்களில் கேட்டுக்கொண்ட படி, நிபந்தனை அடிப்படையில் (Parole) விடுதலையாகிறார். இவ்வாறு விடுதலையாகும் போது, லெய்லா ஜேகபின் வீட்டில் பணியாளராக வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை சிறை நிர்வாகம் விதிக்கிறது.
கடினமான, முரட்டு சுபாவம் படைத்த, நீண்ட காலத்துக்கு முன்பே மென்மையான உணர்வுகளுக்கு விடை சொல்லி பெண்மைத் தனத்தை இழந்து விட்ட பெண்ணாக லெய்லா சித்தரிக்கப்படுகிறாள். அவள் வாழ்ந்த வாழ்க்கையும், அனுபவங்களும் அவளை முழுமையாக இந்தத் தன்மை படைத்தவளாக மாற்றி விட்டிருந்தன. இவளுக்கு முற்றிலும் எதிரான பண்புகள் கொண்ட பாதிரியோடு இப்போதுதான் அவளுக்கு பழக்கம் ஏற்படுகிறது.
பாதிரியார் உணர்வு பூர்வமானவர். அடுத்தவர்களின் உணர்வுகளுக்கும், கவலைகளுக்கும் மதிப்பளிப்பவர். குறிப்பாக இறையன்பையும், மன்னிப்பையும் பெற்றுத்தரும் படியும், உதவி புரியும் படியும் அவருக்கு கடிதம் எழுதும் மனிதர்கள் மேல் இத்தகைய அனுதாபம் பெருமளவில் இருந்தது. அத்தகைய உதவிகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பிரச்சினையில்லை.
இந்த முற்றிலும் முரணான சுபாவம் கொண்ட இருவரும் பின்லாந்தின் ஒரு ஒதுக்குப் புறமான கிராமம் ஒன்றில் ஒரு பழைய வீட்டில் வசிக்கப் போகிறார்கள். அந்த ஒதுக்குப் புறக் கிராமத்தில்தான் பாதிரி கஷ்டப்படுவோர் எழுதும் கடிதங்களை வாசித்து அதற்கு பதில் எழுதிக்கொண்டு இவ்வளவு காலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
லெய்லாவுடன் கைலாகு செய்ய பாதிரி ஜேகப் தனது கையை நீட்டிய போது அவள் அவரை குரூரமாகவும், மரியாதையற்ற முறையிலும் பார்த்துக் கொண்டு, அவருடன் பேசும் முதல் வார்த்தை "நான் வீட்டு வேலைகள் செய்வதில்லை".
“கடிதங்களை வாசிக்கவும், மற்றும் அதற்குப் பதில் எழுதவும் நீ எனக்கு உதவி புரிந்தால் போதுமானது", இது பாதிரி ஜேகபின் பதில்.
கடிதங்களை வாசித்து பதிலெழுத முன்பு கண்தெரியாத அவருக்கு உதவி புரிந்து கொண்டிருந்த அவரது பக்கத்து வீட்டுக்காரர் சில தினங்களுக்கு முன் இறந்து போனதால், பதிலெழுதப்படாமல் இருந்த கடிதங்களை அவருக்கு வாசித்து காட்டுவதன் மூலம் தனது வேலையை ஆரம்பிக்கிறாள் லெய்லா. இடம் ஜேகொபின் வீட்டுத் தோட்டம். லெய்லா ஜேகொபின் அருகில் அமர்ந்து ஒரு சாதாரண மனிதன் அவர் தனக்காக பிரார்த்திக்க வேண்டும் என ஆசித்து எழுதிய கடிதத்தை வாசிக்கிறாள். கெமரா அவரின் முகக் குறிகளையும், உதட்டினதும் கண்களினதும் அசைவையும் மிக நெருக்கமாக படம் பிடிக்கிறது. வேண்டுகோள் விடுத்த மனிதர்களின் துயங்களை கேட்டு அவர்களுக்காக பிரார்த்திக்கும் அவரது முகம் சிவக்கிறது. இதனைப் பார்த்துக் கொண்டிருக்கும் லெய்லாவின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை.
அடுத்த நாள்:
தபால் காரன் வருகிறான். சிறைக் கைதியைக் கண்ட உடனே அவன் அச்சம் கொள்கிறான். லெய்லா சிறை சென்றவள் என்பது அவனுக்கு முன்பே தெரிந்து இருந்திருக்கலாம். பயத்தோடு பாதிரிக்கு வந்த கடிதங்களை அவளிடம் கையளித்து விட்டு, அவளிடம் பாதிரியைக் கொல்ல வேண்டாம் என்றும், அவர் ஒரு நல்ல மனிதர் என்றும் வேண்டிக்கொள்கிறான். இந்தப்பயம் அடுத்த நாள் கடிதங்களோடு அவனை இரவில் வரச்செய்தது. பாதிரி தென்படும் படி இல்லை. ஆனால், லெய்லா அவனை திருட வந்திருப்பதாக நினைத்து பிடித்துக் கொள்கிறாள்.
அடுத்த நாள் காலையில் எழுந்து கதவோரத்தில் கடிதத்திற்காக காத்திருக்கிறாள். தபால்காரன் அவளைக் கண்டதும் பயந்து ஓடி விடுகிறான். அடுத்த சில நாட்கள் அவள் கண்களில் அவன் படவே இல்லை. ஜேகப் கடிதங்களைக் கேட்ட போது இன்று கடிதங்கள் வரவில்லை என்கிறாள். அது ஓரளவு ஏமாற்றத்தை அவருக்கு அது தந்திருக்க வேண்டும். இருந்தாலும் வலுக்கட்டாயமாக அதை மறைத்துக் கொண்டு அவர் சொல்கிறார்: “கடிதங்கள் எந்த நாளும் வரத்தான் வேண்டும் என்றில்லை.”
இப்போது பாதிரி தன்னைத்தானே சில கேள்விகள் கேட்க ஆரம்பிக்கிறார். கடிதங்கள் வருவது நின்று போனால் இனி அவரது வேலை என்ன? இந்த பரந்து விரிந்த உலகத்தில் அவரது பங்கென்ன? அவர் மனிதர்களுக்கும், அவர்களை படைத்தவனுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்தும் ஊடகம் மாத்திரமே என்பதை அவர் உறுதியாக நம்புகிறார். அவர்களுக்காக வேண்டி இவர் இறைவனை நெருங்க முயற்சி செய்கிறார். இது தான் இவ்வளவு காலம் அவர் வாழ்ந்த வாழ்க்கை. இதை விட்டால் வேறு செய்வதற்கு என்று பணிகள் அவருக்கு இல்லை.
நான்காவது நாள் காலையில் எழுந்து ஆடைகளை அணிந்து தன்னை அலங்கரித்துக் கொள்கிறார் ஜேகப். லெய்லாவிடம் சில விருந்தாளிகள் வரவிருப்பதால் சில கோப்பைகளை மேசையில் வைக்கச்சொல்கிறார். பிறகு ஒரு திருமண சோடியின் திருமணத்தை நடாத்தி வைப்பதற்காக சேர்ச்சை நோக்கிச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து லெய்லாவும் செல்கிறாள். ஆனால், அங்கு எவரும் இல்லை. திருமண சோடியையும் காணவில்லை. வழிபட வந்தவர்களும் இல்லை. அங்கு அவரது பிரசங்கத்தை செவிமடுக்க யாரும் இல்லை என்பதை அவருக்கு அவள் எடுச்சொல்கிறாள். தன்னை வீட்டுக்கு அழைத்துச்செல்லுமாறு அவர் வேண்டுகிறார்.
ஆனால், அவள் மறுக்கிறாள். “உங்கள் மன்னிப்போ, அன்போ எனக்குத் தேவையில்லை" நேரடியாக அவள் சொல்கிறாள். அவளைப் பொருத்தவரை அவையிரண்டும் அவர் தான் உயிரோடு இருக்கிறேன் என்று உணர்வதற்காக செய்பவை. இவ்வாறு சொன்னவள், சேர்சின் கதவை கோபமாக அடைத்துவிட்டு வெளியேறுகிறாள்.
அதோடு வீடு வந்து சேறும் லெய்லா தன் உடு புடவைகள் அனைத்தையும் பார்சல் செய்து அங்கிருந்து புறப்படுவதற்கு தயாராகிறாள். தன்னை நகரிற்கு அழைத்துச் செல்ல ஒரு டெக்சியை அழைக்கிறாள். செல்ல வேண்டிய இடத்தை கேட்கிறான் வண்டிச் சாரதி. லெய்லா பதில் சொல்வதற்கு தடுமாறுகிறாள். கமரா லெய்லாவின் முகக் குறிகளையும், பதில் சொல்வதற்கு முடியாத அவளது இயலாமையையும் படம் பிடித்துக் காட்டுகிறது. அவள் எங்கே செல்வது? அவளை ஏற்று அங்கீகரிக்க யாரிருக்கிறார்கள்? அவளது வெறுமையான முகத்தை கமரா படம்பிடிக்கிறது.
வண்டியில் இருந்து நம்பிக்கைகள் அனைத்தும் இழந்து இரங்கியவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்கிறாள். ஆனால், அதற்கும் அவளுக்கு தைரியம் இல்லை. ஜேகொப் சேர்சில் இருந்து திரும்பிவருவதும், கொட்டும் மழையும் ஒரு புதிய இரவை கட்டியம் கூறும் அடையாளமாக இருக்கிறது.
கடிதங்கள் நின்று போனதன் உண்மையான விளைவை இப்பொதுதான நாம் உணர்கிறோம். பாதிரியின் உடல் நிலை பாதிப்படையத் தொடங்குகிறது. லெய்லா தபால் காரனைக் கண்டு பொய்க்காவது 'ஜேகப்புக்கு கடிதங்கள் இருக்கின்றன என்று சொல்லும் படி கட்டாயப்படுத்துவன் மூலம் இந்தப் பிரச்சினையை தீர்க்கிறாள். இது பாதிரிக்குத் தான் இன்னும் கடிதங்களை பெற்றுக்கொண்டிருக்கிறேன்: தான் படைக்கப்பட்ட நோக்கத்தை இன்னும் நிறைவு செய்து கொண்டிருக்கிறேன் என்ற நம்பிகையை ஏற்படுத்தும் என்பது அவளுக்குத் தெரியும். இதுதான் லெய்லா பாதிரியை நோக்கி உணரும் முதலாவது கடமையுணர்வும் பச்சாதாப உணர்வும். அவளது உணர்வுகள் மாற்றம் அடைந்துள்ளதனை இது காட்டுகிறது .
அடுத்த நாள் தபால்காரன் வந்து கடிதத்திற்குப் பதிலாக ஒரு சஞ்சிகையை அவளிடம் கொடுக்கிறான். தபால்காரனின் குரலைக் கேட்ட ஜேகபின் உடலில் சீவன் வருகிறது. ஒரு பணிவுள்ள சிறுவனைப் போல் லெய்லா அமர்ந்துள்ள இடத்திற்கு அவர் மெல்ல நகர்ந்து வருகிறார் கடிதங்களை வாசிப்பதற்காக.
இப்போது போலியாக கடிதத்தின் உள்ளடக்கம் ஒன்றை தயார் செய்வதற்கு அவள் முயற்சி செய்கிறாள். முடியவில்லை. சில எழுத்துக்களை கோர்வை செய்யத்தான் அவளால் முடிந்ததே தவிர, அதனை உண்மையான ஒரு கடிதம் என்று அவரை நம்ப வைக்க அவளால் முடியவில்லை.
இந்த இயலாமை அவளது சொந்தக் கதையை எழுதி அவருக்கு வாசிப்பதற்கு அவளை தூண்டியது. அவளது சிறு பிள்ளைப் பராயம் எவ்வளவு துயர்கள் நிறைந்தது என்பதை அவள் சொல்கிறாள். அவளது தாய் எவ்வாறு அவளை துன்புறுத்தினாள் என்பதை அவருக்கு அவள் எடுத்துச் சொல்கிறாள். அப்போது அதனைத் தடுக்க அவளது சகோதரி லீசா மட்டுமே இருந்தாள். லெய்லாவின் துன்பங்களிலும், துயர்களிலும் லீசாவும் பங்கெடுத்தாள். இந்தப்பின்னணிதான் அவளை கடின சுபாவம் கொண்டவளாக மாற்றி அமைத்தது. இந்தக் கட்டத்தில்தான் அவள்தான் ஒரு ஆணைப் போன்று நடந்து கொள்ள வேண்டும் என முடிவெடுக்கிறாள். ஒரு சிறுமியாக தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்கொள்வதகு தேவையான பலத்தை பெற்றுக்கொள்வதற்கு அவள் கடின முயற்சிகளை செய்திருக்கிறாள்.
ஒரு முறை தனது சகோதரியின் வீட்டுக்கு அவள் சென்ற போது அவளது கணவன் அவளை துன்புறுத்திக் கொண்டிருப்பதை காண்கிறாள். எவ்வளவு மூர்க்கமாகவும், தொடர்ச்சியாகவும் அவன் தனது மணைவியை துன்புறுத்துகிறான் என்பதை அவள் உணர்கிறாள். ஒரு வித ஆவேசம் அவளை ஆட்கொள்கிறது. அவனை கத்தியால் குத்தி கொலை செய்து விடுகிறாள். அவள் சிறை செய்யப்படுகிறாள்.
தன் சகோதரியின் திருமண வாழ்வைப் பாலாக்கியதற்கு அவள் தன்னைத்தானே நொந்து கொள்கிறாள். இதனால்தான், அவள் தனது சகோதரி அவளைப் பார்க்க வந்த போது அவளை சந்திக்கவோ அல்லது அவளது கடிதங்களுக்கு பதில் எழுதவோ விரும்பவில்லை.
தன் சகோதரியின் திருமண வாழ்வைப் பாலாக்கியதற்கு அவள் தன்னைத்தானே நொந்து கொள்கிறாள். இதனால்தான், அவள் தனது சகோதரி அவளைப் பார்க்க வந்த போது அவளை சந்திக்கவோ அல்லது அவளது கடிதங்களுக்கு பதில் எழுதவோ விரும்பவில்லை.
கடித்தத்தை வாசித்து முடிந்த பிறகு ஜேகப் கேட்கிறார்: 'கடிதம் ஒப்பமிடப் பட்டுள்ளதா?'
“ஆம், பெயர் எழுதப்பட்டுள்ளது".
“அது உன்னுடைய சொந்தக் கடிதம் லெய்லா?”
இந்த இடத்தில்தான், லெய்லாவின் சகோதரி லீசா பாதிரி ஜேகப்பிற்கு காலத்திற்கு காலம் கடிதங்கள் எழுதியிருப்பதையும், தன் சகோதரிக்காக பிரார்த்திக்குமாறு கோரியிருப்பதையும், லெய்லா குறித்து தான் எவ்வளவு துயருறுகிறேன் என்பது குறித்து எழுதியிருந்ததையும் அறிகிறோம். இதனால் தான் பாதிரி சிறை நிர்வாகத்திற்கு பல கடிதங்கள் எழுதி லெய்லாவிற்கு விடுதலை வழங்குமாறு கோரியிருந்தார்.
இப்போது ஜேகப் அவளது சகோதரியின் கடிதக் கட்டுக்களை கொண்டு அவளிடம் கொடுக்கிறாள் வாசிப்பதற்காக. அவளுக்கு கோப்பி தயாரிப்பதற்கு அவர் சமயலறை செல்கிறார். இந்தத் தருணத்தில் ஜேகப்பின் கடமை முடிந்து விட்டது என்பதை சித்தரிக்கும் விதத்தில் மேசைக்கருகாமையில் அவர் மெல்லச்சாய்கிறார்.
ஊர்வலம் ஜேகபின் இறந்த உடலை சுமந்து செல்கிறது. லெய்லா தனது பெட்டி, படுக்கைகளோடு தன் சகோதரியை நாடிச் செல்கிறாள். இப்போது எங்கே செல்கிறேன் என்ற தெளிவோடு அவள் செல்வதாக திரைப்படம் முடிகிறது.
கதையின் சுருக்கத்தை நாம் இங்கு சொன்னாலும், ஒவ்வொறு காட்சியையும் வர்ணிப்பதற்கு இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றன. படம் முழுவதும், காட்சிகளும், காட்சிபபடுத்துகைகளுமே படத்தை பெருமளவில் ஆக்கிரமித்துள்ளன. உரையாடல்கள் அதிகம் இடம் பெற வில்லை.
ஒவ்வொரு நிமிடக்காட்சியிலும் நுண்மையான மனித உணர்வுகளை, அவற்றின் பலத்தை, பலகீனத்தை, பலமாக இருந்தாலும் இலகுவில் உடைந்து விடும் அதன் தன்மையை அப்படியே பார்வையாளனுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்ற துடிப்பு இயக்குனரிடம் இருப்பதை காண முடிகிறது. அதனை அவர் முடிந்தளவு உயிர்த்துடிப்பாகவும், அறிவு பூர்வமாகவும் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொறு கட்டமும் லெய்லா ஜேகப் இருவர் குறித்தும் இன்னும் ஆழமான பரிணாமத்தை படம் தருகிறது.
படம் தான் சொல்ல வந்த செய்தியை எளிமையாகவும் ஆழமாகவும் முன்வைக்கிறது.
படத்தின் எளிமைக்கும், யதார்த்தத்திற்கும், வித்தியாசமான அதன் நோக்குக்கும் பாராட்டை முதலில் அதன் இயக்குனருக்கும், பிறகு ஜேகப்- லெய்லா இரண்டு பிரதான பாத்திரங்களையும் நடித்த நடிகர்களையும் சாறும். நடிகர் Heikki Nousiainen, பாதிரி ஜேகபின் தன்மைகள், முகக் குறிகள், மெதுவான அசைவு, கண்ணீர், கடிதம் குறித்த அவரது ஆசை என்பவற்றின் மூலம் ஜேகப் பாத்திரத்தின் உணர்வுகளோடு எம்மை முழுமையாக சங்கமிக்க வைக்கிறார். Kaarina Hazard, தனது உட்ச பட்ச திறமையை பாவித்து, லெய்லா பாத்திரத்தின் நுண்ணிய உணர்வு, கடுமை, எதிர்ப்புக்காட்டும் தன்மை, உடல் அசைவுகள், கண் அசைவுகள் என்பவற்றை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்.
மனித உணர்வுகளின் குறைபாடுகள் குறித்தும், குழந்தை வளர்ப்பு முறை எவ்வாறு சிறார்கள் மீது பெறும் செல்வாக்கை செலுத்துகிறது என்பதை மிக அழகாக படம் படம் பிடித்துக் காட்டுகிறது திரைப்படம்.
அதே போல் படம் தொட்டுச் செல்லும் இன்னொறு அம்சம் எவ்வாறு சமூக வாழ்வில் இருந்து சேர்ச் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது. லெய்லா சேர்ச்சுக்கு ஜேகபை அழைத்துச் சென்ற போது, அது வழிபடுபவர்கள் இல்லாமல் இருப்பதையும் அதன் கூறைகளால் மழை நீர் வடிவது போலவும், கிராமத்தின் ஒரு எல்லையில் அது ஒதுக்கப்பட்டிருப்பது போலவும் திரைப்படம் சித்தரிக்கிறது.
நன்றி: www.islamonline.net
சையத் அபூ முஃலா இஸ்லாம் ஒன் லைன் அரபு இணைய தளத்தில் "Culture & Arts” பகுதி editor ஆவார்.
Share
சையத் அபூ முஃலா இஸ்லாம் ஒன் லைன் அரபு இணைய தளத்தில் "Culture & Arts” பகுதி editor ஆவார்.
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment