இன்று வெளியிடப்பட்ட இலங்கை ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை எதிர்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். வாக்கெண்ணும் பணிகளில் கணிசமானளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் ஆணையாளருக்கு எழுதிய கடிதத்தில் இந்த முடிவை ஏற்றுக்கொள்வதற்கு இல்லை என்றும், சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தாம் எடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரச உடமைகளை தேர்தல் பிரசாரத்துக்காக முறையற்ற விதத்தில் பாவித்தமை, இடம் பெயர்ந்த தமிழ் சமூகத்தை வாக்களிக்க விடாமல் தடுத்தமை, தன்னை தாக்கும் விதத்தில் அரச ஊடகங்களை பயன்படுத்தியமை போன்றவற்றை அவர் பிரதான குற்றச்சாட்டாக முன்வைத்துள்ளார்.
வடக்குப் பகுதியைப் பொறுத்தவரை மிகக் குறைந்தளவு வாக்குகளே பதிவாகி இருப்பதோடு அவை பெருமளவில் பொன்சேகாவிற்கே அளிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் 63% வாக்குகள் பொன்சேகாவுக்கும், 23% ராஜபக்ஷவுக்கும் அளிக்கப்பட்டுள்ளன. இருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகள் வெறும் 25% மாத்திரமே. இடைத்தங்கள் முகாம்களில் இருப்போர் வாக்களிக்க வசதி செய்து கொடுக்காமல் இருந்ததை, தான் வெற்றி பெறுவதைத் தடுத்த மஹிந்த அரசு மேற்கொண்ட சதி என பொன்சேகா கருதுகிறார்.
வாக்கு மோசடிகள் இடம் பெற்றதாக குற்றம் சுமத்திய பொன்சேகா தேர்தல் முடிவுகள் முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
பொன்சேகா தங்கியிருக்கும் ஹோட்டல் சுற்றிவர படையினரால் சுற்றி வலைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக்காகவே அவர்கள் குவிக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், பொன்சேகா புரட்சி ஒன்றில் ஈடுபடலாம் என்ற அரசு அச்சம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
வெளிநாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டும் என பொன்சேகா கோரியிருக்கும் நிலையிலும், மேற்குலகு யுத்த காலத்தில் இலங்கையில் யுத்தக் குற்றங்கள் இடம் பெற்றதாக குற்றம் சுமத்தி வரும் நிலையிலும் மேற்குலகின் இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் பொன்சேகாவின் கோரிககை எத்தகைய மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை அடுத்து வரும் தினங்கள் தீர்மானிக்கும். அனேகமாக மஹிந்த ராஜபக்ஷ ராஜீய மட்டத்திலான பலமான விமர்சனங்களை எதிர்கொள்ள எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஜனாதிபதித் தேர்தல் முடிந்த கையோடு, மற்றொரு பலமான சவால் இலங்கை அதிபருக்கு தற்போது ஆரம்பித்துள்ளது என்பது மட்டும் நிச்சயம்.
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment