அன்று வெயில் கடினமாக இருந்தது. மார்ச் மாதத்து மிகவும் உஷ்னமான வெயில் அது. மைதானமெங்கும் கல்லூரி மாணவர்கள் சிதறிக்கிடந்தார்கள். அவர்கள் அந்த பாடசாலையில், சில நாட்களில் நடைபெற இருக்கும் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் பயிற்சிக்காகக் கூடியவர்கள்.
மைதானத்தில் இருந்து யூசுப் மிகவும் வாடிய முகத்துடன் வந்து கொண்டிருந்தான். அவனது முகத்தில் மகிழ்ச்சி இல்லை. கவலையும், வேர்வையும் அவனது முகத்தில் குடி கொண்டிருந்தன. அன்று பயிற்சி நேரத்தில் உயர்தர வகுப்பு மாணவர்கள் சிலருடன் ஏற்பட்ட மனக்கசப்புத்தான் அதற்குக் காரணமாக இருக்க வேண்டும். அத்தோடு இன்று அவனது விளையாட்டு அடைவிலும் அவனுக்கு திருப்தியில்லை.
சின்ன வயதில் இருந்தே விளையாட்டில் மிகவும் சீரியசானவன் அவன். இம்முறையும் எப்படியும் சில சாதனைகளை செய்து விட வேண்டும். வலய மட்டம், மாகாண மட்டம், அகில இலங்கை மட்டம் வரை செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு இருந்தது. யாரிடமும் சொல்லா விட்டாலும், ஒலிம்பிக்கில் கலந்து பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆவல் கூட அவனுக்கு இலேசாக இருக்கத்தான் செய்தது.
அதற்குக் காரணம் சிறு வயதில் இருந்தே அவனது ஆள் மனதில் பதிந்து விட்டிருந்த ஒரு கருத்தாக இருக்கலாம். அவனது வாப்பா அடிக்கடி சொல்வார் : “எதை செய்தாலும் மகன், அத ஆகச் சிறப்பா செய்ற ஆக்களத்தான் அல்லாஹ் விரும்புறான். ஒரு வேலைய செஞ்சா ஒழுங்கா செய்ய சொல்லி எங்கட நபி சொல்லி இருக்குராங்க. சொர்க்கம் வேணும்டு கேக்குரண்டாலும் , அல்லாஹ்ட ஆக உயர்ந்த சொர்க்கமான பிரதௌசத் தா எண்டுதான் நபி கேக்க செல்லி ஈக்கிராகோ".
அதற்குக் காரணம் சிறு வயதில் இருந்தே அவனது ஆள் மனதில் பதிந்து விட்டிருந்த ஒரு கருத்தாக இருக்கலாம். அவனது வாப்பா அடிக்கடி சொல்வார் : “எதை செய்தாலும் மகன், அத ஆகச் சிறப்பா செய்ற ஆக்களத்தான் அல்லாஹ் விரும்புறான். ஒரு வேலைய செஞ்சா ஒழுங்கா செய்ய சொல்லி எங்கட நபி சொல்லி இருக்குராங்க. சொர்க்கம் வேணும்டு கேக்குரண்டாலும் , அல்லாஹ்ட ஆக உயர்ந்த சொர்க்கமான பிரதௌசத் தா எண்டுதான் நபி கேக்க செல்லி ஈக்கிராகோ".
அப்படி யோசித்த ஒருவன் தனது விளையாட்டில் இலேசான திருப்தியின்மை ஏற்படும் போது நிம்மதி அற்றுப் போவது இயல்புதானே..!
மைதானத்தில் இருந்து புறப்பட்டு அக்குறனை பிரதான வீதிக்கு வந்து விட்டான்.
பஸ் தரிப்பிடம் மாணவர்களாலும், மாணவிகளாலும் நிரம்பி வழிந்தது. முன்னரே புறப்பட்டு வந்திருந்த அவனது நண்பர்களும் தரிப்பிடத்தில் இருந்தார்கள். அவர்களின் சிரிப்பில் கலந்து கொள்ளும் மூட் அவனுக்கு இல்லை. இருந்தாலும் ஒரு ஒப்புக்காக அவர்களது சிரிப்பில் அவனும் கலந்து கொண்டான்.
“மச்சான், நீ அந்திக்கி வருவயா?”
“ஓ... மச்சான்... கொஞ்சம் ப்ரக்டிஸ் ஆகோனும்டா?”
“ஒங்கட ஹௌஸ்ல யாருடா தௌசன் மீட்டர் ஓட்ர?”
“…................................”
“…................................”
“…................................”
அன்றைய விளையாட்டுப் பயிற்சி குறித்த கதைகள். சுவாரஷ்யங்கள். சிரிப்புக்கள். கிண்டல்கள். சற்று முன் அவன் உணர்ந்து கொண்டிருந்த அழுத்தத்தை இந்த மகிழ்ச்சியான சூழல் ஓரளவு குறைத்தாலும், இந்த உரையாடல்களில் யூசுபால் முழுமையாக லயிக்க முடியவில்லை. அவசரமாக வீடு சென்று பாடசாலை உடையை மாற்றிக் கொண்டு பகலுணவை சாப்பிட்டு விட்டு, லுஹர் தொழுகையை முடித்து விட்டு, திரும்பி வந்து மீண்டும் பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஆவலே அவனுக்கு மிகைத்திருந்தது.
மெல்ல ஆடி அசைந்து தனக்கு எந்தக் கவலையும் இல்லை என்ற படி வரும் அகுறனை- கண்டி பஸ் வண்டி கூட்டத்தை கண்டதும் முக்கி முனகி வேகமாக வந்து நிற்கவும், நண்பர் கூட்டம் ஏறி பின் சீட்டில் அமர்ந்து கொண்டது.
###
வீட்டில் உம்மா எடுத்து வைத்திருந்த பகல் சாப்பாட்டை அவசர அவசரமாகச் சாப்பிட்டான் யூசுஃப். அவன் வீட்டில் இருந்தாலும், சாப்பிட்டுக் கொண்டிருந்தாலும் அவனது மனது பாடசாலை மைதானத்தைச் சுற்றித்தான் வலம் வந்து கொண்டிருந்தது. அவசரமாகப் போக வேண்டும். கடினமாக ப்ரக்டிஸ் செய்ய வேண்டும்.
சாப்பிட்டு முடித்தவன் கையைக் கழுவி பிங்கானையும் கழுவி வைத்தான். அவசரமாக விளையாடுவதற்கு பொறுத்தமான இருக்கமில்லாத ஆடையொன்றையும் அணிந்து கொண்டான். வெளிக் கிளம்பி உம்மாவிடம் சொல்லி விடை பெற்றுக்கொள்வதற்கு வீட்டின் பின் பக்கமாகச் சென்றான்.
“உம்மா நான் குஞ்சம் ஸ்சூல்க்கு போய்ட்டு வாரேன்” .
“மறுகா யே மகன் ஸ்கூலுக்கு...?”
“ஸ்போர்ட் ப்ரக்ட்ஸ்மா"
“இந்தா மகன், காமிலா சாச்சிட புள்ளக்கி சொகமில்லயாம். கொஞ்சம் அங்கின என்ன உட்டுட்டு பெய்த்துடு வாப்பா.”
“தெலும்பாத்தக்கி பெய்டுட்டு நான் திரும்பி வரோனுமா? திரும்ப ஒங்கள கூட்டின்டு வாரத்துக்கு திரும்ப வரவும் வேணும்".
“இல்லாட்டி ப்ரக்டிசுக்கு நாளைக்கு போ வாப்பா. இன்டக்கி ஐனக்கி பெய்த்துட்டு வருவோம். காமிலா சாச்சி என்னத்தண்டாலும் ஓடி வந்துட்ர. இப்ப நாங்க போகாட்டி சருல்ல.”
“ஏலா? நான் இண்டக்கி கட்டாயம் போகோணும். வேறொரு நாளைக்கு காமிலா சாச்சிட ஊட்டுக்குப் போம்.”
கோபத்தோடு சொன்னவன் வேறு எந்தப் பதிலையும் எதிர்பாராமல் சென்று விட்டான்.
அவன் உம்மா அவன் சென்று மறையும் வரை கூப்பிட்ட படியே இருந்தார். அவன் திரும்பிப் பார்க்கக்கூட இலலை. குறைந்த பட்சம் ஒரு முறை திரும்பி வந்து பேசிவிட்டு போவோமா என்று நினைத்தாலும், அவன் கடைசி வரை திரும்பிப்பார்க்கவே இலலை.
அவன் உம்மா அவன் சென்று மறையும் வரை கூப்பிட்ட படியே இருந்தார். அவன் திரும்பிப் பார்க்கக்கூட இலலை. குறைந்த பட்சம் ஒரு முறை திரும்பி வந்து பேசிவிட்டு போவோமா என்று நினைத்தாலும், அவன் கடைசி வரை திரும்பிப்பார்க்கவே இலலை.
###
மைதானத்துக்கு வந்ததில் இருந்து யூசுபுக்கு உம்மாவிடம் பேசிவிட்டு வந்த முறை இலேசாக உறுத்திக் கொண்டே இருந்தது. அப்படி பேசி விட்டு வந்திருக்கக் கூடாது என்று மீண்டும் மீண்டும் அவனது மனது அவனுக்கு அறிவுறுத்திக்கொண்டிருந்தது. ப்ரக்டிஸ் செய்வதற்கு போதிய கால அவகாசம் இருக்கிறது. இன்னும் மூன்று வாரம் இருக்கிறது ஸ்போர்ட்ஸ் மீட்டுக்கு. அதோடு இன்று ஒரு நாள் ப்ரக்டிஸ் செய்யாவிட்டால் எதுவும் குறைந்து போய் விடாது.
உம்மாவை கூட்டிப்போய் காமிலா சாச்சியின் வீட்டில் விடுவது மட்டுமல்ல், கண்டிப்பாக காமிலா சாச்சியின் பிள்ளையை போய் இவனும் பார்த்திருக்க வேண்டும். சுகமில்லை என்றால் என்ன காரணத்தினால் சுகமில்லை என்று கூட குறைந்த பட்சம் இவன் கேட்கவில்லை.
உம்மாவை கூட்டிப்போய் காமிலா சாச்சியின் வீட்டில் விடுவது மட்டுமல்ல், கண்டிப்பாக காமிலா சாச்சியின் பிள்ளையை போய் இவனும் பார்த்திருக்க வேண்டும். சுகமில்லை என்றால் என்ன காரணத்தினால் சுகமில்லை என்று கூட குறைந்த பட்சம் இவன் கேட்கவில்லை.
தீவிரமாக பயிற்சி செய்து அவன் அந்த நினைவை மறக்கப்பார்த்தாலும் அவனால் முடியவில்லை.
####
ஓட்டப்பந்தயப் போட்டிக்கான பயிற்சி அது. நடுவர் விசிலை ஊதியதுதான் தாமதம். யூசுஃப் மின்னல் வேகத்தில் பறந்தான். அவனுடன் போட்டி போடுபவர்களும் அவனுக்கு சலைத்தவர்கள் இல்லாவிட்டாலும், அவனோடு போட்டி போட சற்று திணறுவதை காண முடிந்தது. மைதானத்தில் இருந்த அனைவர் கவனமும் அவன் திசையில் தான் இருந்தது. இன்னும் சில மீட்டர் தூரம். எல்லையை யூசுஃப் தாண்டி இருப்பான். சென்ற வேகத்தில் அவனது கால்கள் இலேசாக மாட்டிப்பட ஓடு பாதையில் இருந்து விலகி வெளியே சென்று விழ ஒரு சிறிய கல்லில் தட்டுப்படுவதை மற்றவர்கள் கண்டார்கள்.
விழுந்தவன் அப்படியே மயங்கி விழுந்தான். இரத்தப் பெருக்கு இலேசாக வந்து கொண்டிருந்தது. மைதானத்தில் இருந்த எவருமே எதிர் பாராத ஒன்று நடந்துவிட்டது. யூசுஃபின் இல்லத்தலைவர்கள் வேகமாக ஓடி வந்து அவனை தூக்கி எடுத்தார்கள். மைதானத்தில் இருந்த சில ஆசிரியர்களும் ஓடி வந்தார்கள். மாணவர் கூட்டம் ஒன்று சுற்றி வளைத்துக்கொண்டது.
அதன் பிறகு என்ன நடந்தது என்று யூசுஃப்ஃபுக்குத் தெரியாது. மீண்டும் விழித்துப் பார்த்த போது ஸியா வைத்திய சாலைக் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தான்.
###
ஸியா வைத்தியசாலை.
மனித வாழ்வின் யதார்த்தத்தைப் பறைசாற்றும் வண்ணம் துயரத்தின் வடிவாக காட்சி தந்தது.
தொண்டையை புறட்டும் ஆஸ்பத்திரிகளுக்கே உரித்தான வாசம். அங்கும் இங்கும் நடமாடும் சிங்கள தாதி மார். வாசலில் படுத்துறங்கும் ஆஸ்பத்திரி நாய். சிகிச்சைக்காக அழைத்து வரப்படும் நிறைமாதக் கற்பிணி.
இவற்றை விரும்பியோ, வெறுத்தோ அவதானித்துக் கொண்டு சிந்தனை ரேகைகள் முகத்தில் படர அமைதியாக அமர்ந்திருந்தனர் யூசுபின் பெற்றோர். சரூக் ஆசிரியர்தான் சற்று முன்னர் தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டு யூசுஃப் விழுந்து காயமடைந்த செய்தியை அவனது பெற்றோருக்குத் தெரிவித்திருந்தனர்.
இவர்களும் என்னவோ, ஏதோ என்று பதறித்துடித்த படி ஓடி வந்திருந்தனர்.
தற்போதுதான் டாக்டர் உள்ளே நுழைந்ததால், அவர் வெளியே வரும் வரை இருவரும் காத்திருந்தார்கள், உயிரைக் கையில் பிடித்தபடி.
###
“பயப்பட்ரதுக்கு எதுவும் இல்லை. அதிக நேரம் தொடர்ந்து பயிற்சி செய்ததால ஏற்பட்ட சக்தி இழப்பாலதான் பையன் மயக்கம் வந்து விழுந்திருக்கிறான். மத்தப்படி உள் காயம் எதுவும் இருக்கிறதா தெரியல்ல. தேவைண்டு சொன்னா ஸ்கேன் ஒன்னு பண்ணிக்கலாம்... மத்தப் படி கல்லுக் குத்தினதால ஏற்பட்ட வெளிக் காயத்துலதான் ரத்தம் போயிருக்கு. பயப்புற்றமாதிரி எதுவும் இல்ல. இந்த வயசுப் பிள்ளைகள் இப்படித்தான் அடிக்கடி இப்படி ஏதாவது நடக்குறது தான். அதுக்கெல்லாம் பயப்புடக்கூடாது" தனக்குத் தெரிந்த அறைகுறைத் தமிழில் டொக்டர் பரணவிதான பரிவோடு சொல்லி விட்டுப் போனார்.
யூசுஃப் கட்டிலில் சாய்ந்திருந்தான். தன் தாயைப் பார்க்க வெட்கமாக இருந்தது அவனுக்கு. அதே நேரம் எதிர்பாராமல் நடந்த இந்தச் சிறிய விபத்து அவனை ஓரளவு பாதித்தும் விட்டிருந்தது. கண்களில் மறைத்த இலேசான கண்ணீருடன் தன் தாயை நிமிர்ந்து பார்த்தான். பகல் ஏற்பட்ட மனக்கசப்பின் ஒரு சிறு அடையாளம் கூட தாயின் கண்களில் இல்லை.
அந்தக் கண்களில் தெரிந்த நேசமும் பரிவும், ஆயிரம் ஒலிம்பிக் பதக்கங்களை விட பெறுமதியாக அவனுக்கு அப்போது தெரிந்தது.
(யாவும் கற்பனை).
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment