யாத்ரிகன்

"உங்கள் மனசாட்சியின் குரல்..."

அல்லாஹ் யாருக்குச் சொந்தம்?



அண்மையில் "The Herald” என்ற மலேசியாவின் கிறிஸ்த்தவ மிஷ்னெரிப் பத்திரிகையொன்று அல்லாஹ் என்ற சொல்லை இறைவனைக் குறிக்க பயன்படுத்தியதால் ஏற்பட்ட சர்ச்சையில், கிறிஸ்தவர்களும் 'அல்லாஹ்' என்ற சொல்லைப் பயன்படுத்தலாம் என அந்நாட்டின் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரச்சினைகளும் தெரிந்ததுதான். இந்தப் பிரச்சினை தொடர்பாக சில அம்சங்களை இங்கு பரிமாரிக் கொள்ள
விரும்புகின்றோம்.






முதலாவதாக, இந்த தீர்ப்பைத்தொடர்ந்து கிறிஸ்த்தவக் கோவில்கள் எறிக்கப்பட்டமை போன்ற அம்சங்கள் எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ளமுடியாதவை. எந்த ஒரு பிரச்சினைக்கும் வன்முறை ஒரு தீர்வல்ல. இந்த முதிர்ச்சியற்ற எதிர்வினை நடவடிக்கை மலேசிய முஸ்லிம்களை மட்டுமன்றி, பொதுப்படையாக முஸ்லிம்கள் குறித்தும் ஒரு பிழையான பிம்பத்தை உருவாக்க வழி சமைத்துள்ளது ஒரு பெரிய உண்மை. இந்தப் பிரச்சினையின் பின்னணி தெரியாதவர்கள் இந்த பிரச்சினையை நக்கலாக பார்ப்பதற்கும் இது வழி செய்துள்ளது.


மலேசிய நீதிமன்றம் இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைக்கு முரணான ஒரு அம்சத்தை தீர்ப்பாக வழங்கவில்லை. “அல்லாஹ் முஸ்லிம்களின் மட்டும் இறைவனல்லன், முழுப் பிரபஞ்சத்தினதும் இறைவன் அவன் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை. இஸ்லாத்திற்கு முந்தைய உருவ வழிபாட்டைப் பற்றி குறிப்பிடும் அல்-குர்-ஆன் பின்வருமாறு சொல்கிறது:



வானம் பூமியை படைத்தவன் யார் என்று அவர்களிடம் கேட்டால் அவர்கள் அல்லாஹ் என்று சொல்வார்கள்" (சூறா அல்-பகரா).


இஸ்லாம் அன்று அரபு சமூகத்திற்கு ஒரு புது இறைவனை அறிமுகம் செய்யவில்லை. ஆப்ரஹாம் அவர்கள் போதித்த மதத்தில் ஏற்பட்டிருந்த சில மாறுதல்களை துப்பரவு செய்தது மட்டுமே இஸ்லாம் செய்த வேலை. இன்றும் கூட அரபுக் கிறிஸ்தவர்களும், யூதர்களும் கர்த்தரை அல்லாஹ் என்றுதான் அழைக்கிறார்கள்.


கொள்கை அடிப்படையில் கிறிஸ்தவர்கள் 'அல்லாஹ்' என்ற பதத்தை பயன்படுத்துவது பிரச்சினைக்குரிய ஒன்றாக இருக்கவில்லை. பிரச்சினை நடமுறை சார்ந்தது. ஏனெனில், தமது ஐங்காலத்தொழுகைகளில் பதினேழு முறை குறைந்த பட்சம் அவசியம் ஓத வேண்டிய குர்-ஆனின் முதலாவது அத்தியமான "சூரா பாத்திஹா" என்ற அத்தியாயம் இப்படி ஆரம்பிக்கிறது.


எல்லாப் புகழும் அகிலங்களின் இரட்சகனான அல்லாஹ்வுக்கே உரியது" (சூறா அல்-பாதிஹா: 01)



தெளிவாக மனிதர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பிரபஞ்ச ரீதியான இரட்சகனாக அல்லாஹ்வை குர்-ஆன் பிரகடனப்படுத்துகிறது. அவ்வாறு பிரகடனப்படுத்திய பிறகு அல்லாஹ் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடை போடுவது அல்-குர்-ஆனை மீறிச் செல்வதாகும்.


மட்டுமன்றி, கிறிஸ்த்தவர்களையும், யூதர்களையும் குறிக்க முன்னைய வேதம் அருளப்பட்டவர்கள் என்று பொருள்படும் 'அஹ்லுல் கிதாப்' என்ற பதத்தை குர்-ஆன் பயன்படுத்துகிறது. அல்- குர்-ஆனின் ஒரு சில வசனங்கள் 'வேதம் அருளப்பட்டவர்களை' ஒரே இறைவனை வணங்குபவர்கள் என்ற அடிப்படையில் ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வருமாறு அல்-குர்-ஆன் அழைக்கிறது (சூரா ஆல இம்ரான்: 64) . எனவே, மலேசிய நீதிமன்றத்தின் தீர்ப்பு இஸ்லாத்திற்கு ஏற்புடையதே...! கொள்கையளவில் மலேசியக் கிறிஸ்த்தவர்கள் மட்டுமல்ல, உலகின் யார் வேண்டுமானாலும் பிரபஞ்சத்தின் இரட்சகனை 'அல்லாஹ்' என்ற பெயர் கொண்டு அழைக்கலாம். அந்த சுதந்திரத்தில் எவருக்கும் தடை போட முடியாது.


இதனால்தான், மலேசிய இஸ்லாமியக் கட்சியான பான்-மலேசியன் இஸ்லாமியக் கட்சி இந்த தீர்ப்பை ஆதரித்ததோடு வரவேற்கவும் செய்தது. முஸ்லிம்களும் கிறிஸ்த்தவர்களும் தமது நம்பிக்கைகளில் உள்ள ஒன்றுமைகளூடாக தமது ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும் எனவும் அறிவித்தது

அதேபோல், இதேகருத்தை ஆதரிப்பதோடு, கிறிஸ்த்தவ ஆலயங்கள் எறிக்கப்பட்டதை கண்டித்து மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹீமும் கடுமையான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.          


கொள்கையளவில் இப்படி இருக்க ஏன் இது சர்ச்சையை ஏற்படுத்தியது? என்ற கேள்வி எழலாம். பிரச்சினைக்கான காரணம் இந்த அடிப்படைக் கொள்கை குறித்த அறியாமை ஒரு புறமாகவும், இந்தப் பிரச்சினைக்கு பின்னணியில் இருக்கும் நோக்கம் குறித்த சந்தேகங்கள் மறுபுறத்திலும் பிரச்சினைக்கு தூபம் இட்டன என்று சொல்வதே பொறுத்தமானது.



சந்தேகங்கள்தான் பிரச்சினைக்கு பெருமளவில் காரணமாக அமைந்தாலும், முஸ்லிம் சமூகத்தின் ஒரு சாரார் அல்லாஹ் என்று தாம் மட்டுமே அழைக்க முடியும் என்று கருதியமையும் பிரச்சினைக்குத் தூபம் இட்டது என்பதை மறுக்க முடியாது.


மற்றொரு காரணம் அல்லாஹ் என்ற வார்த்தை அவமானப்படுத்தப்படலாம் என்ற அச்சம்.

அல்லாஹ் என்ற வார்த்தையை கிறிஸ்த்தவக் கோவில் கண்ணியமாகவே பயன்படுத்தும் என்பது உறுதியாக இருந்தாலும், அதனை சில சுய நலமிகள் பிழையாக பயன்படுத்தலாம் என்ற அச்சம் இருந்தது. குறிப்பாக கிறிஸ்தவத்தின் புனித சின்னங்களான சிலுவை போன்றவற்றை ஆடைகள், அலங்காரப் பொருள்களென்பவற்றில் அவற்றை அவமதிக்கும் விதமாக பயன்படுத்தப் பட்டு வருகின்றன. இயேசுநாதரைக்கூட இவர்கள் அவமதிக்கத் தயங்கவில்லை.


இந்நிலையில், கிறிஸ்த்தவத்தை அவமதிக்கும் போர்வையில் அல்லாஹ் என்ற வார்த்தையையும் பயன்படுத்தலாமோ என்ற அச்சமும் இல்லாமல் இல்லை.

பிரச்சினைக்குத் தூபமிட்ட மிகவும் முக்கியமான காரணி கிறிஸ்த்தவ மயமாக்கல் தொடர்பிலான அம்சங்கள் இந்தப் பிரச்சினையின் பின்னணியில் இருக்கலாம் என்ற கவலைதான். குறிப்பாக, சபாஹ், சரவாக் ஆகிய இரண்டு மாகாணங்களிலும் முஸ்லிம்களின் இஸ்லாமிய அறிவு மிகைக் குறைந்த மட்டத்தில் இருக்கின்றது
மலேசிய பாஷையையே இங்கு இரண்டு சமூகத்தினரும் பேசுகின்றனர். கலாசாரக் கலப்பு இருக்கிறது. இதனால்,  பைபில் பிரதியிலும், கிறிஸ்த்தவக் கோவிலின் வெளியீடுகளிலும் அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்துவது ஒரு வித மயக்கத்தை சாதாரண மக்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.  

இதன் விளைவாக மதமாற்றங்களும் அண்மைக் காலங்களில் இடம் பெற்றுள்ளன. இதன் விளைவாக இந்தப் பிரச்சினை மிஷனெரி நோக்கங்களுடன் சம்பத்தப் பட்டதாக இருக்கலாம் என சில முஸ்லிம் அமைப்புக்கள் சந்தேகிக்கின்றன.  

அரபி மொழியை தாய் மொழியாக கொள்ளாத போது, சேர்ச்சின் வெளியீடுகள் அரபு மொழியில் வெளிவராத் போது ஏன் 'அல்லாஹ்' என்ற சொல்லை இறைவனைக் குறிக்க பயன்படுத்த வேண்டும்? பயன்படுத்தினாலும், முஸ்லிம்களைப் போல் அரபியல்லாத அனைத்துக் கிறிஸ்த்தவர்களும் ஏன் அல்லாஹ் என்ற பிரயோகத்தை பயன்படுத்துவதில்லை? இவ்வாறு பல கேள்விகளை இவர்கள் எழுப்புகின்றனர்.


எது எவ்வாறு இருப்பினும் மலேசியாவின் முஸ்லிம் சமூகத்தலைமைகள் பிரச்சினையை உரிய முறையில் அணுகத் தவறி விட்டார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.


வணக்கஸ்த்தளங்கள் மீதும், நம்பிக்கைச் சுதந்திரத்தின் மீதும் கையை வைக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் மிகக் கண்டிப்பான உத்தரவு. மிக உக்கிரமான யுத்தங்கள் இடம் பெறும் நிலைமைகளிலும் கூட இந்த உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும். வணக்கஸ்த்தளங்கள் என்ன? ஒரு மரத்தைக்கூட தேவையின்றி வெட்ட முடியாது. இந்த விடயத்தில் கோட்டை விட்டதன் மூலம் தம் மீது இழுக்கை ஏற்படுத்திக் கொள்வதற்கு வழி சமைத்தன மலேசியத் தலைமைகள்.


இரண்டாவது பிரச்சினையை நீதிமன்றம் வரை கொண்டு செல்லாமல் இருந்திருந்தால், அல்லாஹ் என்ற வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துவது தொடர்பில் சில வரையறைளை பேணுவது குறித்து ஒரு பொது உடன்பாட்டுக்கு வருவது சாத்தியமாகி இருந்திருக்கக் கூடும். நீதிமன்றம் வரை சென்றதன் மூலம் இந்த வாசல் அடைபட்டுப் போனது.



மூன்றாவது மத மாற்றம் என்பது ஒரு பெரிய சவால் என்றாலும், இவ்வாறு இரண்டு சமூகங்களும் அல்லாஹ் என்று அழைப்பது இரண்டு சமூகங்களையும் நெருங்கி வரச்செய்யும் சாதகமான நிலமையும் இருக்கின்றது என்பதை மறந்து விட்டன மலேசியத் தலைமைகள்.


மதமாற்றத்தை ஊக்குவிக்கும் அம்சங்கள் அறியாமையும், வறுமையுமே..! இந்த இரண்டு அம்சங்களையும் தமது முதல் தர எதிரியாகக் கருதி மலேசியத் தலைமைகள் செயல்பட முன்வர வேண்டும். இஸ்லாமிய அறிவு குறைந்த மட்டத்தில் இருக்கிறது என்று கூறி, அடுத்த சமூகங்களை திருத்தச் செல்ல முன்னர் எம்மை மாற்றுவது குறித்து சிந்திப்பதே மிகவும் அறிவு பூர்வமானது. கொள்கையளவில் கிறிஸ்த்தவம் என்பது இஸ்லாத்திற்கு ஒரு பெரிய சவால் அல்ல. பௌத்த, ஹிந்து சமூகங்களில் கிறிஸ்த்தவ மிஷ்னரிகள் சாதித்த அளவு முஸ்லிம் மண்ணில் அது சாதிக்கவில்லை. முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்கது முதல் தர எதிரி அறியாமையும், வறுமையுமே...!


சட்டங்களாலும், கட்டுப்பாடுகளாலும் மிகக் குறைவாகவே இன்றைய உலகில் சாதிக்க முடியும்.



இறுதியாக, மலேசியா தனது பன்மைத்துவ கலாசாரத்தை சரியாக முகாமைப்படுத்தும் பணியில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது என்றே சொல்ல வேண்டி இருக்கிறது. அதன் பன்மைத்துவக் கலாசாரத்தை சரிவர நிர்வகிக்கத் தவறும் பட்சத்தில் அதற்குப் பெறுத்த விலை கொடுக்க வேண்டி வரும் என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் சொல்லிக்கொண்டிருக்கின்றன.  

ஒரு சிறிய தவறையும் பூதாகரமாகச் சித்தரிக்கக் காத்திருக்கும் பிரசார வலைப்பின்னல்கள் முஸ்லிம்களுக்கெதிராக கங்கணங்கட்டிச் செயல்பட்டுக் கொண்டுள்ள ஒரு காலப்பிரிவில், மலேசியாவின் அண்மைக்கால பொருளாதார எழுச்சி குறித்து பொறாமை கொள்ளும் வெளிச்சக்திகள் மலேசியாவின் உள்ளக அரசியலில் தலையிடுவதற்கு இத்தகைய சந்தர்ப்பங்கள் களமமைத்துக் கொடுத்துவிடக் கூடாது என்பதே அனைவரதும் கவலையாகும்.
Share

0 பதிவு குறித்த கருத்துக்கள்:

Related Posts with Thumbnails

யாத்ரிகன் வலைதளம் பற்றி

"யாத்ரிகன்" ஒரு மாற்றுப்பார்வையை முன்வைக்கும் உங்கள் வலைதளம்: உங்கள் மன்சாட்சியின் குரல். உங்கள் நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தி உங்கள் குரலை அனைவரும் கேட்கும்படி செய்யுங்கள்.

வலைப்பூவில் தேடுவதற்கு...

Free Newsletters

Enter your email address:

Delivered by FeedBurner

இணைய உறவுகள் ...

பதிவர்கள்

My photo
Holds a Degree in Business Management and Reading for the Masters in Journalism & Mass Communication. I have nearly four years of experience in Service industry, out of which around two and half years as the Managing Editor in a Regional Newspaper.

முன்னைய பதிவுகள்

எமது வலைப்பூவுக்கு வாக்களியுங்கள்

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Face Book இல் Fan ஆகுங்கள்

எமது சொந்தங்கள்

counter

திரட்டிகள்