அக்குறனையில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த நியூஸ் வீவ் பத்திரிகை தனது ஒரு வருடப்பூர்த்தியை விரைவில் கொண்டாட இருக்கிறது. மாதாந்தம் வெளி வந்து கொண்டிருந்த இந்தப்பத்திரிகையின் 13ஆவது இதழை வெளியிடும் நிகழ்வும், ஒரு வருடத்தை பூர்த்தி செய்ததை கொண்டாடும் நிகழ்வும் எதிர்வரும் 22ஆம் திகதி அக்குறனை அஸ்ஹர் கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற உள்ளது.
(நிவ்ஸ் வீவ் அங்குரார்ப்பன விழாவில் நிவ்ஸ் வீவ் குழு சார்பாக A.C. இர்பான் உரையாற்றும் காட்சி)
இலங்கை முஸ்லிம் சமூகத்தை பொறுத்தவரை மீடியாத்துறையில் ஒரு அநாதைச்சமூகம். தனது சொந்தப் பிரச்சினைகளின் உண்மையான வடிவத்தை உலகின் காதுகளுக்கு எட்டச்செய்யவும், தனது சமூக மட்டத்திற்கே உரித்தான பிரச்சினைகளை அலசவும் களமில்லாத ஒரு ஊமைச்சமூகம். இந்த வகையில் திருப்திப்படும் விதமாக நமக்கென்று இருக்கும் ஊடகங்கள் ஒரு சிலது மட்டுமே...! அவையும் கூட சிறிய அச்சு ஊடகங்கள் தான்.
அந்த வகையில் மீள்பார்வை, எங்கள் தேசம், நவமணி, அல்-ஹசனாத் என்பன குறிப்பிட்டுச் சொல்லக்கூடியன.
இந்த வரிசையில் தற்போது நிவ்ஸ்வீவும் இணைந்து கொள்கிறது.
நிவ்ஸ் வீவை பொறுத்தவரை அக்குறணையே இது வரை காலமும் அதன் களமாக இருந்தது. இதற்குப் பிந்திய காலத்தில், மத்திய மாகாணத்தை பொதுப்படையாக மையப்படுத்தி இது வெளிவரும் என்று அதன் வெளியீட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்தப் பிரதாந்திய மக்களின் இயல்புகளும், தேவை, அபிலாசைகளும் வித்தியாசமானவை. குறிப்பாக, கொழும்பு, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் இருந்து மிகவும் வித்தியாசமான சுபாவம் படைத்தவர்கள் இந்த பிராந்திய முஸ்லிம்கள். எடுத்துக் காட்டாக அக்குறனையை எடுத்துக் கொண்டால், ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட முஸ்லிம் சனத்தொகை கொண்ட ஒரு அடர்த்தியான சனத்திரள் , தனித்துவமானதொரு கலாசாரத்தை உருவாக்குவதற்கு வகை செய்துள்ளது. இந்த வேறுபட்ட கலாசாரத்தை புரிந்து கொள்ள அக்குறனையின் வித்தியாசமான தமிழைப் பார்த்தாலே போதும். அக்குறணைத் தமிழ், வடக்கு- கிழக்கு தமிழ் உச்சரிப்பைப் போன்றோ, தமிழ் நாட்டு தமிழ் உச்சரிப்பைப் போன்றோ அல்லது கொழும்பு உச்சரிப்பை போன்றோ அல்லாமல் மிகவும் வித்தியாசமான தமிழ் அது.
சூழவும் சிங்கள் சமூகங்கள் இருந்தாலும், அவற்றின் கலாசாரத் தாக்கத்துக்கு உட்படாமல் பெருமளவுக்கு தனது தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்வதில் அக்குறனை சமூகம் மற்ற ஊர்களை விட ஓரளவு வெற்றி பெற்றிருப்பது உணமை. எனவே, இவர்களின் தேவைகளும், விருப்பு வெறுப்புகளும் வித்தியாசமாக இருக்கிறது எனபதை புரிந்து கொள்ள சிரமமாக இருக்காது.
சூழவும் சிங்கள் சமூகங்கள் இருந்தாலும், அவற்றின் கலாசாரத் தாக்கத்துக்கு உட்படாமல் பெருமளவுக்கு தனது தனித்துவத்தை காப்பாற்றிக் கொள்வதில் அக்குறனை சமூகம் மற்ற ஊர்களை விட ஓரளவு வெற்றி பெற்றிருப்பது உணமை. எனவே, இவர்களின் தேவைகளும், விருப்பு வெறுப்புகளும் வித்தியாசமாக இருக்கிறது எனபதை புரிந்து கொள்ள சிரமமாக இருக்காது.
மிகவும் வளங்கள் செறிந்த இந்தக் கிராமத்தில் இருந்து இந்த நாட்டுக்கு தேவையான எத்தனை தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் உருவானார்கள் என்பது மிகவும் முக்கியமானதாகும். உண்மையில் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஊருக்குள் மட்டும் முடங்கிப் போன சில தனவந்தர்கள், தலைவர்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஏ.சி.எஸ். ஹமீத், கசாவத்தை ஆலிம் புலவர், உஸ்தாத் மன்சூர் இப்படிச் சிலர்தான் இருக்கிறார்கள், தேசிய மட்டத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்தார்கள் என்று பட்டியல் இடுவதற்கு.
உண்மையில், நிவ்ஸ் வீவ் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது, அது தொடர்ந்து செல்லும் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கவில்லை. காரணம் இதே போன்ற முயற்சியொன்றை செய்ய வேண்டும் என்ற எண்ணம், நிவ்ஸ்வீவ் வெளி வருவதற்கு முன்னர் எனக்கும் இருந்தது. பத்திரிகை என்ற வடிவத்தில் அல்ல, ஒரு சஞ்சிகை என்ற வடிவத்தில். உயர் தரப்பரீட்சை எழுதி, பாடசாலை சுவர்களை தாண்டி சமூக அரங்கில் கால் பத்திக்கும் போது எதையாவது சாதிக்கவேண்டும் என்று நினைப்பது இயல்புதானே...! நானும் அதற்கு விதி விலக்கல்ல.
துரதிஷ்டவசமாக சஞ்சிகைக் கனவு நனவாகவில்லை. நனவாகி இருந்திருந்தால், 'யாத்திரிகன்' உங்கள் கரங்களுக்கு ஒரு சஞ்சிகையாக எப்போதோ வந்திருக்கும்.
பொருளாதாரப் வளங்கள் நிறைந்த இந்த நகரத்தில் பொருளாதார ரீதியாக இத்தகைய முயற்சி ஒன்றுக்கு உதவி புரியக்கூடியவர்களோ, அத்தகைய முயற்சி ஒன்றுக்கு ஒத்துழைக்கக் கூடிய பொருத்தமானவர்களோ அப்போது எனக்குக் கிடைக்கவில்லை.
இந்த யோசனையை கைவிடுவதற்கு காரணமாக இருந்த இன்னொறு காரணி வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவாக இருக்கும் இந்த ஊரில், பொருளாதாரப் பின்னணியும் இன்றி எதை வைத்து சஞ்சிகையை முன் கொண்டு செல்லப் போகிறோம் என்ற கவலை.
மேல்படிப்புகளுக்காக தனியார் கல்லூரிகள் சொல்லும் கட்டணங்களைக் கேட்டு தலையில் கையை வைத்துக் கொண்டிருந்த காலம் அது. எனவே, அதன் பிறகான வாழ்க்கைப் போராட்டங்களோடு சஞ்சிகைக் கனவு விடை பெற்று விட்டது.
நிவ்ஸ்வீவ் வந்த பிற்பாடு, அதில் இடம் பெற்றிருந்த அக்குறனையின் முக்கியஸ்தர்கள் பலரின் செவ்விகளில் இருந்து, இந்த எண்ணம் படைத்தவர்கள் ஏற்கனவே பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை அறிய முடிந்தது.
நீண்ட காலம் பலரின் கனவாக இருந்த ஒன்றை செயல்படுத்தியதன் மூலம் சாதித்த நிவ்ஸ் வீவ் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
நீண்ட காலம் பலரின் கனவாக இருந்த ஒன்றை செயல்படுத்தியதன் மூலம் சாதித்த நிவ்ஸ் வீவ் குழுவினர் பாராட்டுக்குரியவர்கள்.
(நிவ்ஸ் வீவின் அங்குரார்பன நிகழ்வில் நிவ்ஸ்வீவ் குழுவினர்).
இது ஒரு இலாப நோக்கற்ற ஒரு முயற்சி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சமூக மட்டத்தில் நிவ்ஸ் வீவ் சாதிகக வேண்டியது இன்னும் நிறைய இருக்கறது. கல்வி, சமூக, அரசியல், சுகாதாரம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் ஒரு பரந்து பட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டமை நிவ்ஸ்வீவின் சாதனை.என்றாலும், இத்துறைகளில் முழுமையான மாற்றம் இனி மேல் தான் உருவாக வேண்டும். மட்டுமன்றி, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள், விழிப்புணர்வை மட்டுமன்றி, சமூகக் கட்டுமாணங்களையும் வேண்டி நிற்கின்றன என்பதை குறிப்பிட்டாக வேண்டும். அவை குறித்து சமூகத்தில் இருக்கும் மற்றவர்கள் யோசிக்க முடியும்.
சமூகத்தில் இதுவரை காலம் அறியப்படாதிருந்த பல ஆழுமைகளை நிவ்ஸ் வீவ் அறிமுகம் செய்து சமூக செயற்பாடுகளில் ஈடு படச் செய்திருக்கிறது. இத்தனை கல்விமான்களும், ஆழுமைகளும் இவ்வளவு காலம் எங்கு ஒழிந்திருந்தார்கள் என்று கேட்க வைத்தது நிவ்ஸ்வீவ். அதேபோல், தனித்துவமான நமது கலாசாரத்தை, மடைதிறந்து வரும் வெள்ளம் கரைத்துச் சென்று விடாமல், ஓரளவு எமது தனித்துவத்தை பாதுகாக்க நிவ்ஸ்வீவ் பங்களித்திருக்கிறது.
வாசிப்புப் பழக்கம் மிகக் குறைந்த ஒரு ஊரில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பிரதிகள் எப்படி விற்பனையாகின்றன என்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தாமல் இல்லை. பொது மக்கள் நல்ல முயற்சிகளை எப்போதும் அங்கீகரிக்கத் தயாராக இருக்கிறார்களென்பதையே இது காட்டுகிறது. இந்த பகுதி வியாபாரிகளுக்கு தமது வியாபார விளம்பரங்களை காட்சிப்படுத்த இது சிறந்த களத்தை நிச்சயம் வழங்கும்.
கடைசியாக ஒரு அம்சத்தை மட்டும் இங்கு சுட்டிக் காட்டலாம். நிவ்ஸ் வீவ் மத்திய மாகாணத்தில் இருக்கும் குறைந்த பட்சம் முஸ்லிம் சமூகத்தை மட்டுமாவது பிரதி நிதித்துவப்படுத்தும் படி மாற்றி அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு செய்வது அக்குறனைக்கு அருகில் உள்ள, பெரும்பான்மை சமூகங்கள் சூழ சிறிய முஸ்லிம் கிராமங்களில் வாழும் முஸ்லிம்கள் தாம் தனிமைப் படுத்தப்பட்டிருப்பதாக உணராமல் இருக்க வழி வகுக்கும். அதே போல் அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான குரல்களும் வலிமையாக ஒலிக்க அது வழி செய்யும். இதனை நிவ்ஸ்வீவ் நிர்வாகம் உணர்ந்து இப்பத்திரகையை ஒரு பிராந்தியப்பத்திரிகையாக மாற்றும் முயற்சியுடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
சுருக்கமாக சொல்வதானால், நிவ்ஸ் வீவ் தனது முதல் ஜனன தினத்தை எட்டுவதற்குள் செய்து விட்ட சாதனைகள் மெச்சத்தக்கவை. பாராட்டுக்குரியவை. இன்னும் சிறப்பாக அதன் சேவைகள் தொடர சமூகம் அதன் முழு ஆதரவுக் கரத்தையும் நீட்ட வேண்டும்.
பேசத்துவங்கும் முன்பே குரல் வலையை கத்தரித்து விடும் குணத்துக்கு எமது சமூகத்தில் இனியும் நம் இளம் தலைமுறை வழி வைக்கக்கூடாது.
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment