நிவ்ஸ் வீவ் பத்திரிகையின் பதுமூன்றாவது இதழ் புதுப்பொழிவுடன் வெளிவந்துள்ளது. இந்த இதழை வெளியிடும் நிகழ்வும் ஒரு வருடப்பூர்த்தியை குறிக்கும் நிகழ்வாக அக்குறனை அஸ்ஹர் கல்லூரி பிரதான மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தப் பத்திரிகை அக்குறணைப் பிரதேசத்துக்கான பத்திரிகையாக அல்லாமல் கண்டி மாவட்டத்துக்கான பத்திரிகையாக நிவ்ஸ் வீவ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பன்னிரெண்டாவது இதழ் வரை மிகவும் சரியாக உரிய காலத்துக்கு வெளிவந்து கொண்டிருந்த நிவ்ஸ் வீவ், பதிமூன்றாவது இதழை வெளியிட சிறிது காலதாமதமானாலும், இடைப்பட்ட காலத்தில் நிறைய உள்ளகச் சீராக்கங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த இடைப்பட்ட காலத்தில்தான நிவ்ஸ் சட்டத்தின் கீழ் ஒரு பத்திரிகையாக தன்னைப் பதி செய்து கொண்டது. தனது பிரதேச வீச்சை அதிகரிப்பதற்கு வேண்டிய அடிக்கட்டுமான வேலைகளில் இந்த இடைப்பட்ட காலத்தில் செய்தது.
பத்திரிகையின் உள்ளடக்கங்களும் ஒரு பிராந்தியப் பத்திரிகையின் தேவைக்கு ஏற்றபடி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பிராந்திய ரீதியான ஒரு ஊடகத்தின் தேவையை ஆசிரியர் தலையங்கம் தெளிவாகவே முன்வைக்கிறது. தேசிய பத்திரிகையில் பிராந்திய ரீதியில் முக்கியமான செய்திகளை தேசிய பத்திரிககளால் முக்கியத்துவப் படுத்த முடியாமல் இருப்பதனை விளக்கும் ஆசிரியர் தலையங்கம், ஒரு பிராந்திய ஊடகத்தின் தேவையை அழுத்திப்பேசுகிறது.
“மத்திய மாகாண முஸ்லிம்களின் கல்வி: ஒரு நோக்கு" என்ற கலாநிதி எம்.எஸ்.எம். அனஸின் கட்டுரை மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்து சில ஆய்வுகளை செய்ய முனைகிறது.
மத்திய மாகாண Chamber of Commerce உப தலைவர் ஸைனுல் ஆபிதீனின் நேர்காணலில் இந்தப் பிராந்தியத்தில் வர்த்தக ரீதியான முயற்சிகளை முன்கொண்டு செல்லலாம்; Chambers of Commerce இடமிருந்து அதற்கு வேண்டிய எத்தகைய உதவிகள் பெற்றுக்கொள்ளப்படலாம் என்பது குறித்து விளக்கமளிக்கிறார்.
இவ்வளவு காலம் அக்குறனையில் இருந்த ஆளுமைகளை மட்டும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்த "நினைவுகள்" பகுதியில், இம்முறை கண்டியில் பிறந்த அறிஞர் சித்தி லெப்பை குறித்த எனது ஆக்கம் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
“ஐடியா அபூசாலி" பகுதி இதுவரை காலம் அப்பட்டமான அக்குறனை மொழி வழக்கில் வெளிவந்து கொண்டிருந்த பகுதி. தற்போது கண்டி மாவட்டத்திற்கு பொதுவான ஒரு மொழிநடைக்கு மாறியிருப்பதாகத் தோன்றுகிறது.
பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் இரண்டு சாதனைகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. முதலாவது செங்கல் சுடும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ள அக்குறனை சேர்ந்த ரைசான் என்பவர் பற்றிய குறிப்பு. மற்றையது மத்திய மாகாண வியாபார மற்றும் கைத்தொழில் ஊக்குவிப்பு திணைக்களத்தினால நடாத்தப்படும் நடுத்தர உற்பத்தித் துறைக்கான விருதை மடவளை Haira Farms உரிமையாளர் U.M. Fazil பெற்றுக்கொண்டதை சித்தரிக்கும் புகைப்படம். இந்த இரண்டு செய்திகளும் பிராந்திய ரீதியான இரண்டு சாதனைகளை வெளிக்கொணர்கின்றன.
Person of The Month பகுதியை இலங்கை மின்சார சபை முன்னால் பணிப்பாளர் S.A.C.M. Zubair உம், Personal Profile எனப்படும் இளம் சாதனையாளர்களை வெளிக்கொணரும் பகுதியை அன்பாஸ் அன்ஸாரும் அலங்கரிக்கின்றனர். அன்பாஸ் அன்சார் ACCA சர்வதேச ரீதியான பரீட்சையில் உலகளவில் முதலிடத்தை பெற்றதாக செய்தி சொல்கிறது.
பாடசாலை அறிமுகப்பகுதியில் இம்முறையும் அக்குறனை சேர்ந்த ஒரு பாடசாலை- சாஹிரா கல்லூரி- இடம் பெறாமல் இருந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று ஒரு பிராந்தியப் பத்திரிகை என்ற உணர்வோடு வாசிக்கும் போது எண்ணத்தோன்றியது.
மாணவர் பகுதியில் இடம் பெற்றுள்ள சப்ரின் மஹ்ரூபின் 'பனி மூட்டம்' என்ற தொடர் கதையையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அதன் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது. இத்தகைய இளம் இலக்கியவாதிகளை எமது சமூகம் சரியாக வழிகாட்ட வேண்டும்.
ஒரு பிராந்தியப் பத்திரிகையாக வெற்றி பெறுவதற்கு நியூஸ் வீவ் இன்னும் சிறிது தூரம் பயணிக்க வேண்டி இருப்பதாகவே தெரிகிறது.
குறிப்பாக முழுப் பிராந்திய மக்களினதும் ஆதரவு மிகவும் முக்கியமானது. வாசகர்கள் என்றிருந்து விடுவது போதுமானதல்ல. தமது பிரதேச செய்திகளை தெரியப்படுத்துதல், தமது பிரதேச செய்திகளை சிறப்பாக எழுதுதல், மற்றும் விளம்பரங்களை வழங்குதல் என்பன மிகவும் முக்கியமானதாகும்.
ஒரு பத்திரிகையின் உருவாக்கத்திலும், அது தொடர்ந்தேச்சையாக நிலைத்திருப்பதிலும் உள்ள சிரமங்களை புரிந்து கொண்டால், நிவ்ஸ் வீவின் பணியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதே போல், நிவ்ஸ் வீவ் நிர்வாகம் எதிர் கொள்ளும் சவால்களையும் புரிந்து கொள்ள முடியும்.
அந்தக் கடின உழைப்பும், வியர்வையும் வீணாகாமல் இருப்பது, நிவ்ஸ் வீவை ஒரு பிராந்தியப் பத்திரிகையாக மாற்றுவதில் எம்மாலான சகல ஒத்துழைப்புகளையும் வழங்குவதில்தான் தங்கியுள்ளது.
கடைசியாக எனது இரண்டு பணிவான கருத்துக்களை சொல்லலாம்.
முதலாவது, இங்கு பிராந்தியம் குறித்து அதிகம் கதைப்பது பிரதேச வாத உணர்வுகளை எந்த விதத்திலும் தூண்டி விடக்கூடாது. பிரச்சினைகள் வெளிக்கொணரப்படும் நோக்கமே அல்லாமல், மற்றப்படி நாம் தேசிய நீரோட்டத்தில் இருந்து எம்மை பிரதேச ரீதியாக முடங்கி விடுவதற்கு இது வழி செய்து விடக்கூடாது.
பிரதேச ரீதியாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களில் இருந்து எம்மை கூறு போட முனையும் எந்த சக்திக்கும் இது இடம் அமைத்து விடவும் கூடாது. அவர்களை விட நாமோ, எம்மை விட அவர்களோ சிறந்தவர்கள் அல்ல: ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகள் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் என்ற உணர்வு வளர்க்கப்பட வேண்டும். மற்ற சமூகங்கள் விடயத்திலும், தேசியப் பிரச்சினைகள் விடயத்திலும் இந்த உணர்வுதான் வளர்க்கப்பட வேண்டும்.
பிரதேச ரீதியாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களில் இருந்து எம்மை கூறு போட முனையும் எந்த சக்திக்கும் இது இடம் அமைத்து விடவும் கூடாது. அவர்களை விட நாமோ, எம்மை விட அவர்களோ சிறந்தவர்கள் அல்ல: ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிகள் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் என்ற உணர்வு வளர்க்கப்பட வேண்டும். மற்ற சமூகங்கள் விடயத்திலும், தேசியப் பிரச்சினைகள் விடயத்திலும் இந்த உணர்வுதான் வளர்க்கப்பட வேண்டும்.
இரண்டாவது அம்சம், மேலே சொன்ன அம்சம் ஏற்பட்டு விடாமல் இருக்க மேற்கொள்ள முடியுமானதோர் அம்சம். மீள் பார்வை ஆசிரியர் ரவூஃப் ஸெய்ன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தது போல், தேசிய ரீதியான, சர்வதேச ரீதியான முக்கியமான அம்சங்களுக்கு ஒரு இடத்தை வழங்க வேண்டும். குறைந்த பட்சம் ஒரு பக்கத்தையாவது இவற்றுக்கு வழங்கலாம்.
இலங்கையின் தேசிய நாளிதழ்கள் மலையக தோட்டத்தொழிலாளர்கள் அனுபவிக்கும் துயர்கள் குறித்து பேசுவதற்கு சில பகுதிகளை ஒதுக்கியுள்ளன. முஸ்லிம்களால் நடத்தப்படும் "எங்கள் தேசம்" பத்திரிகை கூட 'குறிஞ்சிக்கேணி' என்ற பகுதியை மலையகத் தொழிளாலர்களின் பிரச்சினைகளை அலசுவதற்காக ஒதுக்கியுள்ளது. தேசிய பத்திரிகைகளே பிரதேச செய்திகளுக்கு இந்தளவு முக்கியத்துவம் வழங்கும் பொழுது, நிவ்ஸ் வீவ் தேசிய, சர்வதேச செய்திகளை உள்ளடக்கி வருவது அதன் தரத்தை அதிகரிக்குமே அன்றி, தனித்துவத்தைக் குறைத்து விடாது.
இறுதியாக, நிவ்ஸ் வீவ் நிறைய சாதிக்க வேண்டும் என்பதுதான் எனது பிரார்தனை, எதிர்பார்ப்பு, அவா எல்லாமே..! அதுவே உங்கள் பிரார்த்தனையாகவும் இருக்கட்டும்.
(கீழே உள்ள புகைப்படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை இடம் பெற்ற நிவ்ஸ் வீவ் பத்திரிகையின் ஒரு வருடப் பூர்த்தி விழாவின் முக்கியமான கட்டங்கள்).
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment