நேற்று வெளிவந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொன்சேகா நிராகரித்துள்ளமை எத்தகைய எதிரொலிகளை இலங்கை அரசியலிலும், துணைக்கண்ட அரசியலிலும் ஏற்படுத்தப்போகிறது என்பது மிகவும் முக்கியமான அம்சமாக நோக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் பல நாடுகளில், தேர்தலைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் தேர்தலை நிராகரிப்பதாக அறிவிப்பது பல போது இடம் பெறும் ஒரு நிகழ்வுதான் என்றாலும் பொன்சேகாவின் இந்த அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நோக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.
இலங்கை அரசியலில் எதிர்கட்சி வேட்பாளரொருவர் தேர்தலை நிராகரிப்பது வெளி நாடொன்று உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கோருவதும் இதுதான் முதன் முறையாக இருக்க வேண்டும்.
இலங்கை மூன்று தசாப்த கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் மூலம் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தது. இந்தத் தேர்தலைத்தொடர்ந்து இலங்கையில் ஜனநாயகம் நிலைக்கும் என்றும், இனங்களுக்கு இடையிலான புரிதலும், சமாதானமும் உருவாகும் என்றும் அடுத்த சில ஆண்டுகளுக்குள் இலங்கை ஆசியாவின் மற்றொரு சிங்கப்பூராக மாறும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
எனவே, அத்தகைய எதிர்பார்போடு கூடிய விதத்தில் இடம் பெற்ற ஒரு தேர்தலில் முறை கேடுகள் இடம் பெற்றதாக எழும் எந்தவொரு குற்றச்சாட்டும் சீரியசாகவே நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
அத்தோடு இத்தேர்தலில் பொன்சேகா வெற்றி பெறுவார் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருந்தது. அந்நிலையில் பொன்சேகா தோல்வியைத் தழுவிய போது, அதிலும் குறிப்பாக பதினெட்டு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த போது, இந்தத் தேர்தலின் உண்மைத்தன்மை தொடர்பில் சில சந்தேகங்கள் எழுவது நியாயமானதுதான்.
வட மாகாணம் தவிர்ந்த மற்ற இடங்களில் தேர்தல் தினத்தன்று அமைதி நிலவினாலும், தேர்தலுக்கு முந்தைய அரசின் செயல்பாடுகள் குறித்து, குறிப்பாக அரச சொத்துக்களை பிரசார நடவடிக்கைகளுக்காக முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தன.
தேர்தல் முடிவுகள் வெளிவற ஆரம்பித்தோடு இந்தக் குற்றச்சாட்டு சூடு பிடிக்கத்துவங்கியது. வாக்கு மோசடி, வாக்கு எண்ணுதலில் குழறுபடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது போலவே, அரச ஊடகங்கள் ஒரு நீதியான தேர்தலை நடாத்த பெருமளவில் தடையாக இருந்ததாக பொன்சேகா தெரிவித்தார். குறிப்பாக தன்னைப் பற்றிய பிழையான கருத்துக்களை பொது மக்கள் மத்தியில் பரப்புவதற்கு அரச ஊடகங்களை அரசாங்கம் பிழையாகப் பயன்படுத்தியது என்பது பொன்சேகாவின் குற்றச்சாட்டு.
இந்த தேர்தலில் மிகப் பரவலான, ஆனால், மிக மிக சாதூர்யமான குழறுபடிகள் இடம் பெற்றுள்ளன என்றே பொன்சேகா ஆதரவாளர்கள் மிகப் பலமாக நம்புகிறார்கள். எவ்வாறாயினும், வாக்கு மோசடிகள் இடம் பெற்றது உண்மையானால், அது குறித்த தகவல்கள் இனிமேல்தான் வெளிவர வேண்டும்.
இருப்பினும், தெற்கில் (Down South) சிங்களவர்கள் செறிவாக வாழும் கிராமப்புறங்களில் மிகப்பலமான ஆதரவு மஹிந்தவுக்கு இருந்ததையும் மறுப்பதற்கில்லை. பொன்சேகா தமிழரசுக் கட்சியோடு சேர்ந்து நாட்டைக் காட்டிக் கொடுக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக அரசாங்கம் முடுக்கி விட்ட பிரச்சாரத்தை அவர்கள் அப்படியே நம்பிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. தமிழ், முஸ்லிம் பகுதிகளில் பொன்சேகா அதிகப்படியான வாக்குகளை பெற இத்ததைய ஒப்பந்தங்களே காரணம் என சில பொது மகன்கள் ஊடகங்களுக்குத் தெரிவித்த கருத்துக்களில் இருந்து இத்தகைய முடிவுக்கே வர முடிகிறது.
Down South இன் கிராமப்புறங்களில் மஹிந்தவை ஒரு ராஜாவாக, கடவுளாக அரச ஊடங்கள் சித்தரித்து விட்டிருந்த நிலையில் வாக்குகளை மீள எண்ணுதல் என்பது பொன்சேகா எதிர்பார்த்த விளைவைத் தருமா என்பது சந்தேகம்தான். அரச ஊடகங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டை அவர் அதிகமான முன்வைப்பதற்கான காரணம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்.
இதே வேளை இந்த தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சிகள் ஏற்று அங்கீகரிக்க வேண்டும் என ஐ.நா. செயளர் பான் கீ மூன் அறிக்கை விட்டுள்ள நிலையில், இதை அரசாங்கத்தரப்பு தனக்கு சாதகமாக பயன்படுத்த முனைந்தாலும், இதை ஒரு மேலோட்டமான அறிக்கை என்றே கருத வேண்டியுள்ளது. களம் இன்னும் சூடாக மாறும் போது ஐ.நா வேறு விதமான அறிக்கைகளை விட வேண்டி வரலாம்.
தேர்தல் முடிவு தொடர்பில் இந்தியாவும் தனது வாழ்த்தை ஜனாதிபதிக்குத் தெரிவித்துள்ளது. இந்தியா இலங்கை உள்விவகாரத்தில் மூக்கை நுழைக்காது என்றே தெரிகிறது.
இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை அமெரிக்கா எதுவித சமிக்ஞையையும் வெளியிடாவிட்டாலும், அமெரிக்கா இலங்கை கள நிலவரங்களை மிக உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பதாக பொது விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் P.J.Crowley தெரிவித்துள்ளார். மறுபுறத்தில் சீன ஊடகங்கள் மஹிந்தவைப் புகழ்ந்து தள்ளியிருந்தன.
ஆசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததொரு இடத்தில் அதிலும் இந்திய வல்லரசுக்கு அருகாமையில் தனக்கு சாதகமானதொரு அரசாங்கம் அமைவதைத்தான் அமெரிக்கா விரும்பும். ஏற்கனவே மஹிந்தவுக்கெதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வரும் நிலையில் இலங்கையின் உள்ளக அரசியலில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கு இன்றைய நெருக்கடி ஒரு பாதையைத் திறந்துவிடக்கூடும்.
சீனாவுக்கு நெருக்கமான இடதுசாரிப்போக்குக் கொண்ட மஹிந்தவுக்கும், அமெரிக்காவுக்கு நெருக்கமான பொன்சேகாவுக்கும் இடையிலான முறுகல், இரண்டு வல்லரசுகளுக்கிடையிலான பனிப்போர் களமாக இலங்கையை மாற்றுமா?
அநேகமாக அடுத்த சில தினங்களில், சர்வதேச அரசியலில் இலங்கை விவகாரம் ஒரு முக்கிய பேசு பொருளாக மாறப்போகிறது என்றே தோன்றுகிறது.
எதுவானால், ஒளிமயமான எதிர்காலம், நம்பிக்கைக்குறிய மாற்றம் எதுவுமே நாட்டுக்கு கிடைக்காமல் போய் விடாமல் இருந்தால் சரிதான். மற்றொரு பதிவில் சந்திப்போம்.
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment