(...முதல் பகுதியின் தொடர்ச்சி..)
கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய தாக்கம்
தமிழ் சினிமா தனது செல்வாக்கை ஆழமாக பதித்த மற்றொரு துறை அதன் கலாசாரமாகும். தமிழகத்தில் மட்டுமல்ல, தமிழ் சினிமா பார்க்கப் படும் இடங்களில் எல்லாம் இந்த கலாசார தாக்கம் நன்கு அவதானிக்கப்படுகிறது. ஏன்? இலங்கையிலும் கூட.
இது ஒரு விரிவான பகுதியாக இருப்பிதால், கட்டுரையின் சுருக்கம் கருதி, தமிழ் சினிமா ஏற்படுத்திய எதிர்மையான தாக்கம் தொடர்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் அது எத்தகைய செல்வாக்கை செலுத்தி இருக்கிறது என்ற அம்சத்தை மட்டும் இங்கு நோக்குவோம்.
இது தொடர்பில், "Urban Women in Contemporary India" என்ற நூலில் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமணியம், மேரி பெத் ஆகியோர் முன்வைக்கும்
தரவுகள் நமது கவன ஈர்ப்புக்குரியான. இது அகில இந்தியாவையும் மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வாக இருந்தாலும் தமிழ் நாட்டிற்கும் இது பொருத்தமானதுதான். இவ் ஆய்வு தரும் தரவுகளை இங்கு சுருக்கமாக நோக்குவோம்.
அண்மைய ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் ரீதியான வன்முறைகள் வேகமாக அதிகரித்துச் செல்கின்றன. 1989 இல் 67,072 ஆக இருந்த பதிவு செய்யப்பட வன்முறைகள் 1993 இல் 84,000 ஆக உயர்ந்தது. 1995 இல் டெல்லி இல் மட்டும் 12,000 கற்பளிப்புக்கள் இடம் பெற்றுள்ளன. இங்கு முக்கியமாக சுட்டிக்காட்டத்தக்க அம்சம் 80%
குற்றச் செயல்கள் பதிவு செய்யப் படுவதில்லை என்பதாகும்.
இத்தகைய குற்றச் செயல்களின் வேகமான அதிகரிப்புக்கு சினிமா எவ்வாறு காரணமாக இருக்கிறது என்பதை பின்வருமாறு நூலாசிரியர்கள் விளக்குகின்றனர்.
இந்தியாவில் வருடாந்தம் சுமார் 800 படங்கள் 22 மொழிகளில் தயாராகின்றன. உலகில் மிக அதிக படங்கள் தயாராகும் இடம் இந்தியாதான். சினிமாவை பார்க்கும் நுகர்வாளர் அளவில் கூடுதலாக
இருக்கும் நாடும் இந்தியாதான். பெரும்பாலும் சமூகத்தின் சகல
தரப்பினரும் சினிமா பார்க்கின்றரனர். வருடாந்தம் 80-90 மில்லியன் பேர் சினிமா பார்க்கச் செல்கின்றனர். சிலர் மாதாந்தம் 20-30 முறை செல்வதோடு தமக்கு விருப்பமான திரைப்படத்தை பல முறை பார்வை இடுகின்றனர். இவர்களில் 5% இனர் மட்டுமே இந்திய தயாரிப்பல்லாத (பெரும்பாலும் ஹாலிவுட்) படங்களை பார்க்கின்றனர்.
இதற்கு மேலாக, சினிமா பல்வேறு வழிகளில் நுகர்வாளர்களை சென்று அடைகின்றது. உள்ளூர் தொலைக்காட்சிகள் சினிமாவை மையப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளி பரப்பி வருகின்றன. கேபிள் தொலைக்கட்சி சேவையும் நம்ப முடியா வேகத்தில் வளர்ந்து வருகின்றது. 85% ஆன கேபிள் தொலைக்காட்சி சேவை வழங்குனர்கள், தமது சேவையை விளம்பரப் படுத்தும் நோக்கில், தினமும் இரண்டு படங்களை ஒளி பரப்பி வருகின்றனர். கணனிப் பாவனை, VCD க்கள், இணைய வசதி என்பன இதற்கு மேலதிகமானவை. இத்தரவுகள் சினிமா இந்தியர் வாழ்வில் எவ்வளவு தூரம் ஒன்றோடொன்று பிண்ணிப்பினைந்துள்ளது என்பதை தெளிவாக படம் பிடித்துக்காட்டுகின்றன.
இந்திய வாழ்வில் சினிமாவின் ஆதிக்கத்தையும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளையும் ஸ்ரீ வித்யா ராம் சுப்ரமண்யமும், மேரி பெத்தும் பின்வருமாறு தொடர்பு படுத்துகின்றனர்.
"அதிகமாக நுகரப்படுவதால் மட்டும் சினிமா குற்றங்களை தூண்டுகிறது என்று சொல்லிவிட முடியாது. மாறாக, சினிமா மட்டுமே இந்திய கலாசாரத்தில் பாலியல் வெளிப்படையாக பேசப்படும் ஒரே ஒரே மார்க்கமாக இருக்கிறது என்பதே எமது வாதத்தை மிகவும் வலுப்படுத்துகிறது".மேற்சொன்ன தரவுகள் தமிழ் நாட்டு சூழலோடும் மிகவும் பொருந்திப் போகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. இந்தியாவில் 22 மொழிகளில் மொத்தமாக வருடாந்தம் வெளிவரும் 800 திரைப்படங்களில் 130 படங்கள் தமிழ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழ் படங்கள். இதைத் தவிர 1/6 சினிமா கொட்டகைகள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன(www.tamilnation.org).
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு சராசரி இந்தியனை விட, ஒரு சராசரி தமிழன் படங்களை பார்க்கிறான்.
UNICEF, SAVE The Children என்பனவற்றின் அனுசரணையோடு இடம்பெற்ற ஓர் ஆய்வில், துணைக்கண்டத்தில் தயாரிக்கப்படும் சினிமாக்கள் கட்டிளமை பருவத்தினர் மத்தியில் பெருத்த செல்வாக்கை செலுத்துவதையும், அதிகாரம், பெண்களோடான உறவில் வன்முறை என்பன அவர்களிடத்தில் ஆழ்ந்த தாக்கத்தை உண்டு பண்ணுவதையும் வெளிப்படுத்தியுள்ளன.
தமிழ் நாட்டு சினிமாக்கள், குறைந்தபட்சம் இந்திய சினிமாக்கள், பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் ஏற்ற்படுத்திய தாக்கம் தொடர்பில் வெளிவந்த ஆய்வுகள் மிகவும் குறைவாக இருந்த போதும், பொதுவாக சினிமாக்கள் ரசிகனின் மனதில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணுவது வட அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் இருந்து தெரிய வருகின்றது. ஆளுக்காள் தாக்கத்தின் பரிணாமமும், பரிமாணமும் மாறுபட்டாலும், சினிமா உளவியல் ரீதியில் மிக பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவது என்னவோ பெரிய உண்மை.
ஆதலின் பெண்களுக்கு எதிரான வன்முறை விடயத்தில் தமிழ் சினிமாக்கள் பெரியதொரு வகி பாகத்தை வகிக்கிறது என்பதை மறுக்க எந்த நியாயமும் இல்லை.
தமிழ் சினிமாக்கள் கலாசாரத் தளத்தில் ஏற்படுத்திய எதிர்மறையான தாக்கத்தின் ஒரு அம்சமே இது. கட்டுரையின் சுருக்கம் கருதி, மற்ற அம்சங்களை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்க விட்டு விடுகிறோம்.
சுருக்கமாக சொன்னால், தமிழ் சினிமா தமிழகத்தின் அரசியல், கலாசார தளத்தில் மிகப் பலமான தாக்கத்தை உண்டு பண்ணியுள்ளது. அரசியல் வாதிகள் அரசியல் நோக்கில் சினிமாவை பயன்படுத்தினால், மறுபுறம் வியாபார முதலைகள் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க சினிமாவை நாடுகின்றனர். இதில் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்ற உணர்வோ, எரிந்து கருகி சாம்பலாகிப் போகும் கலாசார பெறுமானங்கள் குறித்த பிரக்ஞையோ இவர்களிடத்தில் கிஞ்சிற்றும் இல்லை.
ரசிகர்களின் மட்டமான உணர்வுகளை தூண்டி விட்டு அதன் மூலம் தமது திரைப்படங்களுக்கு விளம்பரம் தேடத்தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் முற்படுகிறார்கள்.
அரசியல், வியாபாரம் இந்த இரண்டு சக்திகளுக்கும் இடையில் அகப்பட்டு தத்தளிக்கும் நிலையில் தான் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள். "ஓர் உயிரை கொள்வதை விட பண்பாட்டை கொள்வது தான் கொடுமை என்பார்கள். அத்தகையதொரு கொடுமை தமக்கு எதிராக பொழுதுபோக்கு என்ற பெயரில் இடம் பெறுகிறது என்பதை உணர முடியா நிலையில் தமிழ் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
துணை நின்றவை
- Asha Kasbekar Richards, Pop Culture in India: Media, Art and Life Style, ABC-CLIO Publication, 2006
- www.tamilnation.org
தமிழக அரசியல் தளத்தில் தமிழ் சினிமா ஏற்படுத்திய அதிர்வுகள்...!
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment