சினிமா தனி மனிதனதும், சமூகத்தினதும் சிந்தனை தளத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்தி விடக்கூடியது. சினிமா ஏற்படுத்துகின்ற நுண்மையானதும், கூர்மையானதுமான தாக்கம் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளிலும் பலமான அதிர்வுகளை தோற்றுவித்து விடுகின்றது.
நவா காலனித்துவத்தை நம் மீது திணிக்க முயலும் ஏகாதிபத்திய பெருச்சாளிகளின் உலகமயமாக்கல், புதிய உலக ஒழுங்கு உள்ளிட்ட கவர்ச்சிகரமான வார்த்தைகளில் மயங்கி, கீழைத் தேய சினிமாக்களும், நிர்வாணத்தையும், வன்முறையையும் தமது ஆபரணங்களாக அணிந்து கொண்டுள்ளன.
பாலிவுட், கோலிவுட், சிங்கள சினிமா உள்ளிட்ட எதுவுமே இதற்கு விதி விளக்கல்ல.
ஈரான் சினிமா இத்தகைய ஒரு தனித்துவமான சினிமா கலாசாரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஹாலிவுட் ஐப் போன்றோ, பாலிவுட் ஐப் போன்றோ, நிர்வாணத்திலும், மாயாஜால வித்தைகளிலும், யதார்த்தத்திதற்கு புறம்பான வீர தீர சாகசங்களிலும் அல்லாமல் தனக்கே
உரியதொரு தனித்துவமானதொரு பாதையை ஈரானிய சினிமா அறிமுகம் செய்துள்ளது.
இது ஈரானிய நாகரிகத்திற்கே இருக்கின்ற ஒரு தனியான பண்பு. பல்வேறுபட்ட நாகரிகங்களோடு கலந்துறவாடிய போதிலும், தனது தனித்துவத்தை எப்போதும் போல் அது காத்து வந்து இருக்கிறது.
ஆரியர், மேற்ற்கத்தேயர், பாரசீகர் என பல்வேறு நாகரிக செல்வாகிற்கும் வரலாற்றில் ஈரான் உட்பட்டுள்ளது. இருப்பினும் தனது இஸ்லாமிய பண்பாட்டு கலாசார பெருமாங்களை அது எப்போதும் போல் பாதுகாத்து வந்திருக்கிறது. ஈரான் சினிமாவும் இதற்கு ஒரு விதி விலக்கல்ல.
மேற்க்கு சினிமாக்களிடம் இருந்து அவற்றின் தொழிநுட்ப தரம், நேர்த்தி என்பவற்றை பெற்றுக் கொண்டாலும், மேலைத்தேய பாரம்பரியத்தை போல் நிர்வாணம், வன்முறை என்பவற்றுக்குள் ஈரான் சினிமா நுழையவில்லை.
வாழ்வோடு பின்னின்ப்பிணைந்த கருப்பொருள், யதார்த்ததோடு இயைந்து செல்லும் பாங்கு, எதனையும் மிகைப்படுத்தாத தன்மை, வாழ்வியல் யதார்த்தங்களும், கலாசார கோலமும் மிக நுண்மையாக பிரதிபளிக்கப்படுகின்மை, என்பவையே ஈரானிய சினிமாவின் தனித்துவமான சிறப்பம்சங்கள் என்று சொல்லலாம்.
தமிழ் சினிமாக்களை போல், பெண்கள், ஆட்டம், பாட்டம், கும்மாளம் என்பவைதான் சினிமா என்பதை போலல்லாமல், அதனையும் தாண்டி இஸ்லாத்தின் வரையறைக்குள் நின்றே சிறந்த படைப்புகளை வெளிக்கொனரலாம் என்பதற்கு ஈரான் சினிமாக்கள் நடைமுறை சான்றாக திகழ்கின்றன.
வன்மம் மிக்கதாகவும், நிர்வாணம் மிக்கதாகவும் மாறிவிட்ட இன்றைய உலக சினிமாக்களுக்கு முன்னால், மனித குளத்தின் ஆழமான, நுண்மையான உணர்வுகளை ஈரானிய சினிமாக்கள் மனதிற்கு இதமாக முன்வைக்கிறது.
மாஜித் மஜீதி இனுடைய Color of Paradise என்ற திரைப்படத்தை பாருங்கள். ஒரு கண் தெரியாத சிறுவன் அதில் கதாநாயகனாக வருகின்றான். ஒரு கண் தெரியாத சிறுவனின் உணர்வுகள் எத்தகையது, சமூக வாழ்விலும், குடும்ப அமைப்பிலும் அவன் எதிர் கொள்ளும் துயரங்கள் எத்தகையது என்பதை படம் சித்தரிக்கிறது.
எம்மை சூழ கண்தெரியாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள் என ஊனமுற்றவர்கள் நிறையப்பேர் வாழ்கின்றனர். எமது வாழ்கை பிரச்சினைக்கும், ஓட்டங்களுக்கும் இடையில், அவர்களது உணர்வுகள் எமக்கு புரியாமலேயே போய்விடுகின்றன. ஆனால், Color of Paradise அத்தகைய ஒரு சிறுவனின் உணர்வுகளோடு எம்மை சங்கமிக்க வைக்கிறது. கிராமியச் சூழல், வனப்பு மிக்க ஈரானின் இயற்க்கை காட்சிகள், யதார்த்தமான பாத்திரங்கள், சிறப்பான படப்பிடிப்பு, உள்ளத்திற்கு அமைதி தரும் இதமான இசை என்பவற்றின் மூலமாக எம்மை கண் தெரியாத ஒரு சிறுவனின் வண்ணமயமான உலகிற்கே எம்மை அழைத்துச் செல்கிறார் மஜித் மஜீதி.
அவரது மற்றொரு திரைப்படமான "Children of Heaven" ஒரு ஏழை குடும்பத்தை குறித்து பேசுறது. மஜிதியின் கேமரா வறுமையை
வித்தியாசமான கோணத்தில் நின்று படம் பிடிக்கிறது.
ஒரு சிறிய ஏழை குடும்பம். இரண்டு பிள்ளைகள். தங்கையின் செருப்பை அண்ணன் தொலைத்து விடுகின்றான். புதிய செருப்பொன்று வாங்க முடியாதளவு
குடும்பம் வறுமையில் வாடுகிறது. குடும்பத்தின் வறுமை நிலை குறித்து இச்சிரார்களும் நன்கு அறிந்திருக்கிறார்கள். எனவே, ஒரு செருப்பை அண்ணன் தங்கை இருவருமாக வைத்து சமாளிக்கிறார்கள்.
படம் நெடுகிலும், இவ் ஏழைச் சிறுவர்களின் உணர்வுகளோடு எம்மை சங்கமிக்க வைக்கிறார் மஜீதி. படத்தின் முடிவில் எத்தனயோ விடயங்களை எமக்கு சொல்லி விடுகிறார்.
ஏழைகுடும்பத்தில் பிறந்த சிறார்கள்தான் என்றாலும், அவர்களுக்கும் ஏனைய சிறார்களை போல் உணர்வுகள், கனவுகள் இருக்கவே செய்கின்றன. இவர்களது உணர்வுகளும் சமூகத்தால்
புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவர்களது கனவுகளுக்கும் பெறுமானம்
வழங்கப் பட வேண்டும். ஏழைகளாக பிறந்து விட்ட ஒரே காரணத்தால் அவர்களை ஒதுக்கி விட முடியுமா? என மஜிதி கேட்க முனைவது போல் இருக்கிறது.
பொதுவாக ஈரான் சினிமா அனைத்திலும் போல், சமூகத்திற்கு சொல்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன. வெறும் பொழுது போக்கு அம்சமாக மட்டும் ஈரானிய சினிமாக்கள் இல்லை.
இன்றைய, தமிழ் சினிமாக்களை பொறுத்த மட்டில், எந்தவிதமான உருப்படியான கருப்பொருளும் இல்லை. இலாப நோக்கில், இலாபத்தை உச்சப் படுத்துவதே, இயக்குனர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. கதாநாயகன்- கதாநாயகி, காதல், முத்தம், கட்டியணைப்பு, சில பாடல் காட்சிகள், காதலுக்கு ஆப்பு வைக்க முனையும் வில்லன், சில சண்டை காட்சிகள், காதல் வெற்றி...ரஜனி காந்த் போன்ற சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண புதுமுக நடிகர்கள் வரை நடிக்கின்ற எந்த ஒரு படமானாலும் , இதை விட வேறு என்ன கருப்பொருள் இருக்கிறது...?
கதாநாயகர்களுக்கும், கதாநாயகிகளுக்கும் கொடுக்கப்படும் அளவுக்கதிகமான
முக்கியத்துவம் எமது இளைஞர், யுவதிகளை தவறாக வாழி நடாத்தி இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். சினிமாவில் வரும் யதார்த்தத்திற்கு புறம்பான அம்சங்களை நிஜ வாழ்வில் பரிட்சித்துப்பார்க்க எமது இளைஞர்கள் முற்பட்டதன் விழைவையே இன்றைய சமூக தளத்தில் காண்கிறோம்.
ஈரான் சினிமாக்களை போல், மாற்று சினிமாக்கள் தமிழில் இன்னும் வளர்ச்சி பெறவில்லை. பாரசிக நாகரிகத்தினதும், இஸ்லாமிய
நாகரிகத்தினதும் கலப்பான ஈரான் சினிமாக்களில் இருந்து தமிழ் சினிமாக்கள் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கின்றன.
உலகிற்கு சினிமா அறிமுகமான ஒரு சில ஆண்டுகளுக்கு உள்ளாகவே ஈரான் இற்கு சினிமா வந்து விட்டது. ஈரான் இல் சினிமா அறிமுகமானத்திலிருந்து பல்வேறு கட்டங்களையும் ஈரான் சினிமா தாண்டி வந்துள்ளது.
சினிமாவின் வருகையை தொடர்ந்து , மார்க்க அறிஞர்களின் கடுமையான எதிர்ப்பை அது சம்பாதித்தது. ஈரான் கலசாரத்திற்கும், சமூக அமைப்பிற்கும், அச்சுறுத்தல் விடுக்கும் ஒன்றாகவே அவர்கள் அதனை
பார்த்தனர். ஏனனில், அன்றைய சினிமா பெண்களையும், காதலையுமே மையப் படுத்தி இருந்தது.
இருந்தாலும், சினிமாவிற்கு நிலவிய அரசரினதும், அரச குடும்பத்தினதும் ஆதரவு, இத்தகைய எதிர்ப்பையும் மீறி சினிமா வளர்ச்சி பெருவதற்கு வாய்ப்பாக அமைந்தது.
1970 களில் தான் ஈரான் சினிமாவில் புதிய அலைகள் வீசத் தொடங்கின. ஈரான் சினிமாவில் குறிப்பிடத் தக்க வளர்ச்சி இத்தசாப்தத்திலேயே ஏற்பட்டது. அப்பாஸ் கியாரஸ்த்மி போன்ற முக்கிய இயக்குனர்கள் இத்தசாப்தத்தில் அறிமுகமானவர்கள்தான். எனினும்,
1978 இல் ஏற்பட்ட ஈரானிய புரட்சி நிலைமையை தலை கீழ் ஆக்கியது. ஈரானிய கலை துறையின் எதிர் காலம், இமாம் கொமேனி இனதும், அவரது மஜ்லிஸ் இனதும் கரங்களில் ஊசலாடியது.
இதுவரை காலம், வெளி வந்திருந்த பெரும்பாலான சினிமாக்கள் சராசரி சினிமாக்களை விட எந்த விதத்திலும், சிறந்ததாக இருக்கவில்லை. காதலும், பெண்களுமே இவற்றினதும் பேசு பொருட்களாக இருந்தன. இத்தகைய சினிமாக்களை அங்கீகரிப்பது, ஷரீஆ சட்டங்களுக்கு முரணாகவும், இஸ்லாமிய சமூக அமைப்புக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தது.
எனினும், சினிமாக்கள் சமூக தளத்திலும், பண்பாட்டு, கலாசார பெறுமானங்கள் மீதும் ஏற்ற்படுத்துகின்ற ஆழமான பாதிப்புகளை இமாம் கொமைனி நன்கு உணர்ந்து இருந்தார். எனவே, ஆரம்ப கால மார்க்க அறிஞர்கள் சினிமாவை தூக்கி எரிந்ததை போல், தூக்கி எரிவது ஒரு பொருத்தமான தீர்வாக அவருககுபபடவில்லை. இதற்கான ஒரு மாற்று தீர்வு குறித்து அவர்கள் யோசிக்கலாயினர். அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை இஸ்லாமிய மயப்படுத்துவது போல், சினிமாக்களையும் இஸ்லாமிய மயப்படுத்த முடியாதா என அவர்கள் சிந்தித்தனர்.
கலைகளை இஸ்லாம் வரவேற்கிறது. ஒரு சினிமா அது சினிமா என்ற ஒரே காரணத்தினால், ஹராம் என தீர்ப்பு வழங்குவது இஸ்லாத்தின் அடிப்படையான சட்ட விதிகளுக்கே முரணானது. ஒரு சினிமா அதன் கருப்பொருள், உள்ளடக்கம் என்பவற்றை வைத்து மட்டுமே ஹராம் என தீர்ப்பு வழங்கப்பட முடியும்.
இத்தகைய கருத்தில் இருந்த ஈரானின் தலைமை சினிமாவை அனுமதித்தது மட்டுமன்றி, பெருமளவில் ஊக்கமும் அளிக்கத் துவங்கியது. எனினும், வன்முறை, அரைகுறை ஆடைகளோடு பெண்களை காட்சிப் படுத்துவது, காதல் என்பவற்றை தடை செய்தது. இது தான் ஈரான் மாற்று சினிமாக்களின் உதயமாகும்.
இதனால், புரட்சிக்குப் பிந்தைய நிறையப் படங்கள் சிறுவர்களை மையப்படுத்தி இருந்ததை அவதானிக்கலாம். விதிவிளக்காக, சில அரசியல் காரணங்களுக்காக, இந்த வரையறையை மீறி சில திரைப் படங்கள் வெளி வந்ததை மறுப்பதற்கில்லைதான்.
இருப்பினும், பொதுவாக ஈரான் சினிமா, ஒரு தனித்துவமான சினிமா கலாசாரம் ஒன்றை உருவாக்கியது. இந்த சினிமாக்கள் தான், உலகை ஒரு முறை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அதன் சர்வதேச தரத்திற்கும், கீர்த்திக்கும் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் அது பெற்றுக்கொண்ட, விருதுகளே போதிய சான்றாகும்.
மேற்கின் ஹாலிவுட் ஐப் போன்றோ, கிழக்கின் பாலிவுட் ஐப் போலோ அன்றி, ஒரு மூன்றாவது பாதையிலும் பயணிக்கலாம் என்ற நம்பிக்கையை ஈரான் சினிமாக்கள் தருகின்றன.
ஹாலிவுட் இடம், கலாசார பிச்சை கேட்டு கை ஏந்தி நிற்கும், தென்னிந்திய சினிமா இயக்குனர்கள் ஈரான் சினிமாக்களிடம் எப்போது பாடம் படிக்க போகிறார்கள் என்பதே எம் முன் உள்ள கேள்வியாகும்.
(Pubslihed in Thinakkural, Sri Lankan Tamil Daily, Sunday Special Edition, 27th January 2008)
Share
0 பதிவு குறித்த கருத்துக்கள்:
Post a Comment