கவிஞர் வைரமுத்துவை நம்மில் பலர் ஒரு சினிமா பாடல் ஆசிரியராக மட்டும்தான் அறிந்து வைத்து இருக்கிறார்கள். அவர் ஒரு சிறந்த நாவல் ஆசிரியர் என்பது பலருக்கு தெரியாது. தனது அதிகமான வேலை பளுவுக்கு மத்தியிலும் மூன்று தரமான சமூக நாவல்களை தமிழ் இலக்கிய உலகிற்கு அவர் பரிசளித்திருக்கிறார்.
அவரது சகல நாவல்களிலும் ஒரு தரமான படைப்பை வாசிக்கிறோம் என்று எண்ணத்தோன்றும் பக்கங்கள். அந்தளவு கடின உழைப்பை படைப்புகளின் தரத்தையும், நேர்த்தியையும் பேணுவதற்கும், யதார்த்த பூர்வ தன்மையை உறுதிப் படுத்தவும், பாத்திரங்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தவும் செலுத்தி இருக்கிறார்.
அவரது "கள்ளிகாட்டு இதிகாசம்" சாகத்திய அகாடமி பரிசு பெற்ற நாவல். தண்ணீர் தேசம், கருவாச்சி காவியம் என்பன மற்ற இரண்டும். வணிக நோக்கை தாண்டி எழுதப்பட்ட படைப்புகள் இவை (வணிக ரீதியில் பாரிய வெற்றியை ஈட்டி இருந்தாலும் கூட).
வணிக நோக்கு நாவல்கள் அடிமட்ட ரசிகனின் ரசனையை திருப்தி செய்யும் விதத்தில் வெளிவரும். வாசகனின் மனதில் குரிப்ப்பிடத்தக்க எந்த தாக்கத்தையும் விளைவிக்க அவை தவறி விடும். வைரமுத்து தன் நாவல்களின் வருமானத்தை நம்பி வாழ்பவரல்ல. அதனால் அவரது எழுத்தில் உண்மை உயிரோட்டம் இருக்கிறது. சமூக சிந்தனை இருக்கிறது. தான் எழுத்தில் வடிக்கும் சமூகத்தின் உண்மையான உணர்வுகளோடு வாசகனை சங்கமிக்க செய்து விடவேண்டும் என்ற தேட்டம் இருக்கிறது. அதனை அவர் ஒவ்வொரு பக்கத்திலும், வரியிலும் நிறைவு செய்து இருக்கிறார்.
இந்த நாவல்களை படித்த போது, இன்னொரு மனிதன் வைரமுத்து என்ற பெயருக்குள் மறந்து கொண்டிருப்பதான உணர்வு தான் ஏற்படுகிறது.
"தண்ணீர் தேசம்" கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு சமூக நாவல். மீனவர்களின் நிலையற்ற ஜீவனோபாயத்தையும், நிச்சமற்ற வாழ்வையும் அறிவுபூர்வமாகவும், உணர்வு பூர்வமாகவும் சித்தரிக்கும் நாவல். வசதி வாய்ப்புகளோடு செல்லமாக வளர்ந்து, வாழ்கையின் கஷ்டங்கள் தெரியாமலும், அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை அறியாமலும் இருந்த தன் காதலியின் கடல் பயத்தை போக்குவதற்காக, கடலிற்கரைக்கு வந்து , ஒரு மீன்வப்படகில் மீனவர்களோடு கடலுக்கு அழைத்து செல்கிறான் ஓர் இளைஞன்.
நடுக்கடலில் படகின் இயந்திரம் பழுதடைந்து விட, மீனவர்களும், இந்த காதல் ஜோடியும் நடுக்கடலில் தத்தளிக்கிறது. கொண்டு சென்ற உணவு தீர்கிறது. குடிநீர் தீர்கிறது. புயல் வேறு அடித்து அழைக்களிக்கிறது. பசியின் கொடுமை: இயற்கையின் சீற்றம்: கடன் காரன் நாள் எண்ணுவது போல், நாட்களை எண்ணி நெருங்கி வர துடிக்கும் மரணம்.
இதனை வாசிக்கும் ஒரு வாசகன் உப்புக்கதகதப்பு தன்னை அனைத்து கொள்வதாக நிச்சியம் உணர்வான். உணர்வை மட்டுமல்ல, அறிவியல் உண்மைகளும் ஆங்காங்கு சுட்டிக்காட்டப்படுவது தனிச் சிறப்பு.
மற்றொரு நாவல் கள்ளிக்காட்டு இதிகாசம். தண்ணீர் தேசத்தில் மீன் வாசம் வீசினால் இங்கு மண் வாசம். பிறந்த மண்ணின் மகிமையையும், அதன் வாசனையோடு கலந்து விட்ட தனது ஆத்மாவின் உணர்வுகளையும், ஒரு மனிதன் தனது மண்ணை இழைக்கும் போது, அல்லது அதனை துறந்து மற்றொரு பூமிக்கு செல்லும் போதுதான் உணர்கிறான்.
ஒரு மக்கள் கூட்டத்தின் உணர்வுகளை, அந்த மண்ணின் மைந்தனால்தான் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். அதனை அடுத்தவர் புரியும் விதத்தில் எடுத்துச் சொல்லவும் முடியும். கள்ளிக்காட்டு இதிகாசம் தன் சொந்த ஊரின் கதை என்கிறார் வைரமுத்து.
ஓர் அழகிய விவசாய கிராமம். அந்த கிராம மக்கள் ஒரு பாரிய விவசாய திட்டத்திற்காக தம் சொந்த ஊரை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். இதுதான் கதைச்சுருக்கம்.
கள்ளிக்காட்டின் இதிகாசம், அந்தப்பாரிய அணைகளுக்கு அடியில் அமிழ்ந்து கிடக்கிறது. வெளி ஒருவனின் பார்வையில் சாதாரண நிகழ்வு. ஆனால், வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து, பயிர் நட்டு, இரவு பகல் பாராது காவல் காத்து, கலை பிடுங்கி... இந்த உழைப்பில் வாழும் ஒரு விவசாயின் பார்வையில் இந்த நிகழ்வின் பரிணாமம் வேறு. பிரதேச மொழி வழக்கு நாவலின் ஒரு சிறப்பு. அத்தகைய ஒரு நடையில், வைரமுத்துவே குறிப்பிடுவது போன்று, அந்த பிரதேசத்தில் வாழ்ந்து, அதன் உணர்வுகளில் கலந்து விட்ட ஒருவனை தவிர, மற்றொருவனால் நினைத்தும் பார்க்க முடியாது.
கருவாச்சி காவியம்:... ஓர் ஆணால் ஏமாற்றப்பட்டு, வாழ்கையில் சொல்லொணா துயரங்கள் கண்டு, தன் வானாழை கரைத்து விட்ட ஒரு பெண்ணின் கதை. இன்று எங்கும் இருக்கும் கருவாச்சிதான் இவளும். இந்த கருவாச்சி மதுரையை எரிக்க வில்லை. மெழுகாய் தன்னைத்தான் எரித்துக்கொல்கிறாள். இந்த கதை நடக்கும் கிராமிய பின்னணியில் நூலாசிரியர் நன்கு கலந்து விட்டு இருக்கின்றமை ஒவ்வொரு பக்கத்தை புரட்டும் போதும் புலனாகும். பிள்ளை பேற்றில் இருந்து, நாட்டு மருத்துவம் உள்ளடங்களாக, சுடு காடு வரை கிராமிய கலாசாரத்தின் சகல அம்சங்களையும் நூலாசிரியர் வர்ணித்து செல்கிறார்.
வைரமுத்து கிராமிய பின்னணி கொண்டவர்: கிராமத்தில் பிறந்தவர்: கிராமத்து மண்ணில் வளர்ந்தவர். அந்த கிராமத்து உணர்வுகள் அவருள் இன்னும் வாழ்கிறது என்பதற்கு இந்த நாவல்கள் சான்று.
தமிழ் சினிமாவின் சமகால பாடலாசிரியர்களில் வைரமுத்து முதன்மையானவர். தமிழ் சினிமாக்கள் குறித்து எழும் சகல விமர்சனங்களையும் தாண்டி அவர் ஒரு மிகச்சிறந்த கவிஞர். சினிமாவுக்கு வெளியே ஒரு கிராமத்து "மனிதன்" அவருக்குள் மறைத்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது.
"தமிழில் சிலப்பதிகாரமும், மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. 'கள்ளிக்காட்டு இதிகாசம்', 'கருவாச்சி காவியம்' இரண்டும் என்னளவில் இரட்டைக்காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது" என்கிறார் வைரமுத்து. இந்த
கூற்று சிறிதும் மிகைப்படுத்தப்படதல்ல என்பதை இந்நாவல்களை வாசித்து முடியும் போது புரிந்து கொள்ளலாம்.
Share
1 பதிவு குறித்த கருத்துக்கள்:
kuppai novels
Post a Comment