பாவை என்று சொன்னான் உன்னை
தமிழ் கவிஞன்!
அடுத்தவன் பாட்டுக்கு
ஆடும் பாவையாகவே போய் விட்டாய் நீ!
நிலவுக்கு ஒப்பிட்டார்கள் உன்னை...!
உலகுக்கு ஒளி தர வேண்டிய நீயே
இருளில் வாழலாமா?
இருண்ட உலகிற்கு பந்தலை ஏந்திச் செல்ல வேண்டிய புரட்சி வீரன்
சூழ் கொள்ள வேண்டியது உன் வயிற்றில் தான்...!
நீயே
இருளில் இருந்தது கொண்டு
அவனுக்கு பந்தம் கொடுக்க என்ன செய்வாய்?
ஒரு மனிதனின் முதல்
சர்வ கலாசாலை நீ...!
உன்னை யார் தடை செய்தார்
சர்வ கலாசாலை செல்வதற்கு...!
நீ
முக்காடு அணிவதே
உன் கண்ணியத்தை பாதுகாக்க...
முக்காட்டை வலியுறுத்தும் சமூகம்
உன் கண்ணியத்தை ஏன் மறந்து போனது?
நீயும் ஆணுக்கு
சமமானவள்தான்...!
மார்க்கம் என்று நினைத்து உன்னை அடிமையாக
நினைக்கிறது இந்த முரட்டுக் கூட்டம்...!
வா...
வெளியில் வா...
உன்னை சூழப் போடப்பட்டிருக்கும்
சம்பிரதாய வெளியைத் தாண்டி...
உனக்குள்ளும் ஒரு புரட்சி வெடிக்கட்டும்
உன்னை சூழ எழுந்து நிற்கும் சம்பிரதாயச் சுவரை
அடித்து நொறுக்கட்டும்...
உன் கோபம் எரிந்து சாம்பலான
தேசத்தை கட்டி எழுப்பட்டும்...
உன் கட்டுப்பாடு
எழு வானங்களுக்கு மேழுள்ளவனுக்கு மட்டும்
எனறாகட்டும்...!
உன் பெற்றோரோ, மற்றோரோ உனக்கு
அல்லாஹ் தந்த உரிமைச் சுவரை
தாண்டாமல் இருக்கட்டும்...!
புதிய பார்வையோடு...
ஒரு புது உலகம் தேடித் பயணிக்கும்
யாத்ரீகர் கூட்டத்தில்
இனி நீயும் ஓர் அங்கம்...!
இனி ஒரு சுதந்திரக் காற்று உன்னை
வருடிச் செல்லும்...
இறைவன் விதித்த
உரிமைச் சுவரை
தாண்ட முனைவோரை
தாக்கும் புயலாய் அது மாறும்...!
Share